குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]
பொருள்
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.
கோடி - கோடுதல்- வளைதல்; நெறிதவறுதல்; நடுவுநிலைமைதவறுதல்; வெறுப்புறுதல்.
மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
செய்யின்- செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.
கோடி - கோடுதல்- வளைதல்; நெறிதவறுதல்; நடுவுநிலைமைதவறுதல்; வெறுப்புறுதல்.
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.
ஒல்லாது- பொருந்தாது ; உடன்படாது; தகாது, இயலாது, ஆற்றாது
வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.
பெயல் - பொழிகை; மழை; மழைத்துளி; மேகம்.
முழுப்பொருள்
நூல்கள் கூறியுள்ள அரச நீதி தவறி, ஒழுக்கம் தவறி, நடுவுநிலைமை தவறி ஒரு மன்னன் ஆட்சி செய்தால் அந்நாட்டின் பெருமை புகழ் செல்வம் உணவு ஆயுதங்கள் மழை ஆகியவை தவறும். மழை பொழியாமல் போனால் நாடு வறண்டு விடும். மிகுந்த துன்பம் நிலவும். அத்தகைய ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சி.
“வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, நீதி வழுவா செங்கோலுக்கொரு மழை, பத்தினிப் பெண்களுக்கொரு மழை” என்று மாதம் மும்மாரி பொழிவதற்கான காரணங்களைச் சொன்ன அறிஞர்கள், நீதிவழுவாத செங்கோலை, நடுவிலே வைத்தனர்.
கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பு, ஆசிரியமாலையினின்றும், திரிகடுகத்தினின்றும் இரண்டு மேற்கோள்களைக் காட்டுகிறது.
“கொண்மூ மழைக்கால் ஊன்றா, வளவயல் விளையா கொடுங்கோல் வேந்தன் காக்கும் நாடே” (ஆசிரியமாலை)
“கொள்பொருள்வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்… வல்லே மழை அருக்கும் கோள்” (திரி: 50)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
(இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.).
மணக்குடவர் உரை
முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
மு.வரதராசனார் உரை
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
Comments
Post a Comment