குறள் 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
[பொருட்பால், குடியியல், இரவு]
பொருள்
இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை
இரவு - iravu n. இர-. Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள்,552).
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரத்தலும் - வேண்டுதல், பிச்சைகேட்டல்; யாசித்தலும்
ஈ-தல் - ī- 4 v. [T. ittsu, K. ī.] tr. 1. Togive to inferiors, give alms, bestow, grant;இழிந்தோர்க்குக் கொடுத்தல் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொல். சொல் 445). 2. To give;கொடுத்தல். 3. To distribute, apportion; பகிர்ந்துகொடுத்தல். 4. (Arith.) To divide; வகுத்தல் (W.) 5. To give instruction; படிப்பித்தல் ஈதலியல்பே யியம்புங் காலை (நன். 36). 6. To create,bring into existence; படைத்தல் எவ்வுயிர்களுமீந்தான (கம்பரா. அகலி 49). 7. To bring forth;ஈனுதல்.--intr. To agree, consent; நேர்தல் (பரிபா
ஈதலே - பிறருக்கு பகிர்ந்துகொடுத்தல்
போலும் - போன்றது
கரத்தல் - மறைத்தல்; கவர்தல்; கெடாதிருத்தல்; அழித்துமுதற்காரணத்தோடுஒடுக்குதல்; கெடுதல்.
கனவினும் - கனவு -கனா; உறக்கம்; மயக்கம்.
தேற்று - tēṟṟu n. தேற்று-. 1. Makingclear; தெளிவிக்கை. 2. Becoming clear; தெளிவு செஞ்சொற்பொருளின் றேற்றறிந்தேனே (சிவப்.பிரபந். நால்வர் 28). 3. See தேற்றா (பிங்.) தேற்றின்வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா. தாமவியா. 3).
தேற்றார் - அறிவிலார்; பகைவர்.
தேற்றாதார்மாட்டு - தெளிந்துக்கொள்ளாதார்
முழுப்பொருள்
இவ்வுலகில் எல்லோரும் பிறருக்கு தன் செல்வத்தை உதவகொடுத்து வாழ்வதில்லை. ஆனால் சில கொடை வள்ளல்கள் கனவிலும் கூட தன்னிடம் இருக்கும் செல்வம் தனை மறைத்து வாழ வேண்டும் என்று நினைக்கமாட்டர்கள். இவர்கள் பிறருக்கு உதவி செய்வதே மிக பெரிய பேறு என்று நினைப்பவர்கள், உணர்ந்தவர்கள். அதனால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் அத்தகைய கொடையுள்ளம் குணம் கொண்ட வள்ளல்களிடம் சென்று யாசிப்பது என்பது நாம் அவர்களுக்கு செய்யும் கொடைப்போன்றதே ஆம். ஏனெனில் அப்படி யாசிக்கும் பொழுது கொடுப்பவர் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார். அந்த மகிழ்ச்சியை அவர் அடையும் வாய்ப்பை நாம் அவரும் தருகிறோம்.
ஒப்புமை
”இரந்தோர்க் கெந்நாளும், காலம் பகராதார்” (சம்பந்தர்.சீகாழி 9)
“புயல் மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்கும் காலந் தானும்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்” (சம்பந்தார்.கழுமலம்.3)
உதாரணமாக:
யார் கொடை வள்ளல்
ஒரு அதிகாலை நேரத்தில் கிருஷ்ணர், அர்ச்சுனனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பேச்சு, மக்களுக்கு தான, தருமங்கள் செய்வது பற்றி சென்றது. அப்போது கிருஷ்ணர், கர்ணனின் கொடை தன்மை பற்றி உயர்வாக பேசிக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு கோபம் தலைக்கேறியது.
உடனே அவன், ‘பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கொடை வள்ளல் ஆகலாம்’ என்றான்.
‘ஓ.. அப்படியா?’ என்று கேட்டபடி நமுட்டுச் சிரிப்பு சிரித்த கிருஷ்ணர், அந்தப் பகுதியில் இருந்த ஒரு சாதாரண மலைக் குன்றை தங்க மலையாக மாற்றினார்.
பின்னர் அர்ச்சுனனிடம், ‘அர்ச்சுனா! இந்த தங்க மலையை, நான் உனக்கு பரிசாக அளிக்கிறேன். இந்த மலையை நீ, இன்று மாலை சூரியன் மறைவதற்குள் தானம் செய்து விட வேண்டும். அவ்வாறு செய்து விட்டால், நீதான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய வள்ளல்’ என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அர்ச்சுனன் தன்னைத் தேடி வந்தவர்களுக்கெல்லாம் அந்த தங்க மலையை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். மக்கள் வண்டி, வண்டியாக வந்து அர்ச்சுனன் கொடுத்த தானத்தை வாங்கிச் சென்றனர். காலை, மதியமாகி, அந்தி சாயும் வேளையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் அர்ச்சுன் வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தங்க மலை குறைந்தபாடில்லை. கால்வாசி மலை தான் வெட்டப்பட்டு இருந்தது.
அந்த சமயத்தில் மீண்டும் அங்கு வந்தார் கிருஷ்ணர். ‘என்னப்பா அர்ச்சுனா! நான் கொடுத்த தங்க மலை அப்படியே இருக்கிறதே! இன்னுமா நீ இதை தானம் செய்து முடிக்கவில்லை’ என்று ஏளனமாக கேட்டார் கிருஷ்ணர்.
அப்போதும் தன்னுடைய கர்வத்தை விட்டுக் கொடுக்காத அர்ச்சுனன், ‘நீங்கள் புகழ்ந்து பேசிய கர்ணனாக இருந்தால் கூட, இவ்வளவு தான் தானம் செய்து இருக்க முடியும்’ என்றான்.
‘அப்படியா..’ என்று சிரித்துக் கொண்டே கேட்ட கிருஷ்ணர், அந்த வழியாக சென்ற கர்ணனைக் கூப்பிட்டார். கர்ணன் ஓடி வந்து கிருஷ்ணரை வணங்கியபடி நின்றான். பின்னர், ‘கிருஷ்ணா! தங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்குமா?’ என்று கேட்டான்.
அதற்கு கிருஷ்ணர், ‘ஒன்றுமில்லை கர்ணா! இதோ பார்! இந்த தங்க மலையை சூரியன் மறைவதற்குள் நீ தானம் செய்ய வேண்டும். உன்னால் முடியுமா? ஏனென்றால் சூரியன் மறைவதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது. காலையில் இருந்து தானம் செய்து வரும் அர்ச்சுனனாலேயே இந்த தங்க மலையை தானம் கொடுத்து முடிக்க முடியவில்லை’ என்றார்.
கிருஷ்ணர் இவ்வாறு சொல்லி முடித்தபோது, அந்த வழியாக பரம ஏழை ஒருவர் வந்தார். அவர் கர்ணனைப் பார்த்ததும், ‘ஐயா! நானும்.. என் குடும்பமும் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறோம். இன்றைய உணவுக்காவது ஏதாவது கொடுத்தால் நான் மகிழ்வேன்’ என்றார்.
உடனே கர்ணன், ‘ஐயா..! இந்த தங்க மலையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். பின்னர் கிருஷ்ணரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
கர்ணன் சென்றதும் கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கூறினார். ‘இப்போது புரிகிறதா? யார் கொடை வள்ளல் என்று. பிறருக்கு உதவ பணம் மட்டும் இருந்தால் போதாது. அவர் களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமும், அதை செயல்படுத்த ஈகை குணமும் நம் உள்ளத்தில் உதிக்க வேண்டும். மேலும், நீ தானத்தை அளந்து கொடுத்தாய். ஆனால் கர்ணனோ, தன்னிடம் இருப்பது என்ன என்ற அளவீடே இல்லாமல் இருப்பதை அப்படியே கொடுக்கும் குணம் பெற்றவன். அதனால்தான் அவனது கொடை தன்மை சிறந்து விளங்குகிறது’ என்றார் கிருஷ்ணர்.
பி.கு: அதுமட்டுமின்றி கர்ணன் சொன்ன மற்றொன்று என்னவென்றால் இந்த தங்கம் தனை பிறருக்கும் கொடை அள்ளிக்கும் பேறு (புண்ணியம்) தனை நீங்களும் பெற்றிடுங்கள் என்று.
பரிமேலழகர் உரை
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.).
மணக்குடவர் உரை
கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
மு.வரதராசனார் உரை
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
இரந்து நிற்பார் ஈவாரே ஆவாராம் ஆம்
இனிய தந்தை வள்ளுவனார் சொல்லுகின்றார்
சிறந்து நிற்கும் இப்படியோர் சிந்தனையை
செப்புதற்கு அவரன்றி யார்தான் உண்டு
மறந்தும் தம் கனவினிலும் செல்வம் தன்னை
மறைக்காமல் வெளிப்படையாய் வாழ்வார் தம்மை
இரந்து அவர் உடன் கொடுக்கும் மாண்பதனை
எல்லோரும் உணரும் வாய்ப்பைக் கொடுக்கின்றாராம்