குறள் 214
ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
பொருள்
ஒத்த தறிவோன் - ஒத்தது அறிவான்
ஒத்தது - ஒப்பானது; தகுதியானது; உலகத்தார் அங்கீகரித்தது.
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிவோன் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்
உயிர்வாழ்தல் - உயிரோடுகூடியிருத்தல், சீவித்தல்
உயிர்வாழ்வான் - உயிர் வாழ்கின்றவர்களாக கருதப்படுவர்
மற்றையான் - மற்றவர்கள் எல்லோரும்
செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்து சுருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது.-
செத்தாருள் - செத்த பிணம் என்று (அதவாது நடமாடினாலும் செத்த பிணமே)
வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.
வைக்கப் படும்- கருதப் படும்
மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன்
உரை 1
உயிர் வாழ்தலின் அர்த்தமே பிறருக்கு உதவுவதுதான். மற்றவர் இறந்தவர்கள்.
பொல பொலவென்று பொழுது புலருகின்ற நேரம் வள்ளுவப் பெருந்தகையைக் காணச்சென்றேன். வழக்கம் போல எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகின்றார் என்று மட்டும் தெரிந்தது. பெரியவர்கள் பக்கத்தில் போய் என்ன எழுதுகின்றார்கள் என்று பார்க்கின்ற தவறை எப்படிச் செய்ய இயலும். சிறிது கழித்து அவரே என்ன நலமாக இருக்கின்றாயா என்றார். நலம்தான் என்றேன். மிகுந்த அச்சத்தோடு என்ன எழுதிக் கொண்டிருந்தீர்கள் தந்தையே என்றேன்.
இந்த ஊர்ச் சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ள சவங்களை அகர வரிசையில் எழுதிக் கொண்டிருந்தேன். என்றார். எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. மெதுவாகக் கேட்டேன். அது மருத்துவமனை நண்பர்கள் வேலையல்லவா.அதனைத் தாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்றேன்.
அவர்களுக்கு இந்த வேலையினைச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. ஆகவேதான் நான் அந்த வேலையினைச் செய்யத் தலைப் பட்டேன். என்றார்.
பெரியவர்கள் எது செய்யினும் அது சரியாகத்தானே இருக்கும்.
அந்தப் பட்டியலைப் பார்க்கலாமா என்று கேட்டேன்.
எனது கையிலே தந்தார்
பார்த்தேன். பதறிப் போனேன்.
ஆமாம் ஊரில் உயிரோடு இருக்கின்ற மிகப் பெரிய பணம் படைத்தவர்கள் வணிகர்கள் நில உடைமையாளர்கள் என்று பல பேரை சவக்கிடங்கு பட்டியலில் வள்ளுவப் பெருந்தகை எழுதியுள்ளார்.
அச்சத்தோடு அவரைப் பார்த்தேன்.
என்ன என்றார்.
தந்தையே இவர்கள் எல்லோரும் உயிரோடு உள்ளனர். இவர்களைத் தாங்கள் சவக்கிடங்கில் அடுக்கியுள்ளீர்களே என்றேன்.
ஆமாம் தாங்கள் இறந்தது தெரியாமலே இவர்கள் உயிரோடு உள்ளனர்.
இவர்கள் சவங்கள் என்று தெரியாமல் இந்த மக்களும் இவர்களைப் பார்த்துப் பயந்தும் வணங்கியும் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் சவங்கள் என்பதனை மக்களுக்கு தெரிவித்து சவக்கிடங்கிற்கு அனுப்ப உடனடியாக வேண்டிய வழி வகைகளைச் செய் என்றார்.
பேரறிஞர் என்ன சொல்ல வருகின்றார் என்று எனக்குப்புரியவில்லை.
கைகட்டி வாய் பொத்தி நின்றேன்.
வள்ளுவர் சொன்னார். இந்த ஊரிலே ஏழைக் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளி உள்ளதா. ஏழைகளுக்கென்று நல்ல மருத்துவமனை உள்ளதா. ஏழைகளின் பசி தீர்க்க வழி உள்ளதா. சமூகம் தந்துள்ள பொருளை இந்தச் சமூகத்திற்குத் தராத இந்தப் பணக்காரர்களும் வணிகர்களும் நில உடைமையாளர்களும் இன்னொரு உயிரின் துன்பம் துடைக்கும் உணர்வற்றவர்களாக இருந்தால் அவர்கள் செத்தவர்கள் தானே. பிறகேன் அவர்களை நாம் உயிரோடு உள்ள மனிதர்கள் வரிசையில் வைக்க வேண்டும்.
அடுத்தவர் துன்பம் தீர்க்க எண்ணாத அவர்களை அதனால்தான் சவக் கிடங்கிலே வைத்தேன். என்ன சொல் நான் செய்தது சரிதானே.
என்ன பதில் சொல்ல இயலும் தந்தையிடம். சரி சரி சரி என்றே சொல்லிக் கொண்டேயிருந்தேன்.
உரை 2: யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உலகில் உள்ள சடப்பொருட்கள், உயிர்ப்பொருட்கள் அனைத்தும் இறையாற்றல் என்னும் அற்புதப் பேராற்றலால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைநிலையில் அடங்கியுள்ள இருப்பு, விரைவு அறிவு எனும் முத்தன்மையும், எந்தத் தோற்றத்திலும் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision, Regularity) இவையாக அமைந்து இனிமையான முறையில் இயற்கையாக (with Natural Rhythm) இயங்கிக் கொண்டு இருப்பதை உணர்கிறோம். சடப்பொருட்களோடும் உயிர்ப் பொருட்களோடும் தினப்படி வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெற்றவன் மனிதன். சடப்பொருட்கள் தரத்திற்கேற்பவும், உயிர்ப்பொருட்களின் உணர்வுநிலை, மனநிலைகட்கேற்பவும், அவற்றோடு தொடர்பு கொள்ளக் கூடிய பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பழகிக் கொள்ளவேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எந்தப் பொருட்களின் தரம் குலையாமலும், உயிர்களுக்கு வருத்தம் நேராமலும் நுட்பத்தோடு, அவ்வவற்றோடு தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும். எந்தப் பொருளுக்கும் முறையான அணு அடுக்குகள் உள்ளன. அத்தகைய அணு அடுக்குகளான கட்டடங்களுள் காந்த ஆற்றலானது நிரம்பி ஒவ்வொரு வகையான அசைவிலும் அது தன் காந்த ஆற்றலை அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மனமாக மாறுவதுடன், உயிர் இனங்களிலே இவற்றிற்கு மேலாக இன்பம், துன்பம் என்ற உணர்வுகளைப் பெறுவதும் இயல்பு. இந்த நுட்பமான உண்மைகளை அறிந்து எந்தப் பொருளையும், உயிரினங்கள், மனிதர்கள் இவற்றையும் அந்தந்த நிலையிலும், இடங்களிலும் அவற்றின் நிலைமைக்குக் ஒத்து, உணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு கையாளவும், தொடர்பு கொள்ளவும் வேண்டும் என்பதே இக்குறளிலுள்ள உட்கருத்தாகும். மனிதனுக்கு வாழ்வில் இத்தகைய பண்பு இருக்க வேண்டும். உடலாகவும், உயிராகவும், மனமாகவும் இருக்கும் மனிதன், இத்தகைய பேரறப் பண்பாட்டோடு வாழ வேண்டும். அப்படி இல்லையானால் நடைப்பிணமாகத்தான் அவனைக் கருத நேரிடும். பிணம் என்றால் பயனற்றது என்ற ஒரு கருத்தோடு அது இருக்கும்போது மற்றவர்களுக்கு கெட்ட மணம் வீசுவதாலும், கிருமிகளை வெளியேற்றுவதாலும் சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பமே உண்டாகும். அதுபோல உயிரோடிருப்பவர்களும் பிறருக்கு உதவியின்றியும், துன்பம் விளைவித்துக் கொண்டேயும் இருந்ததால் நடைப்பிணம் என்று மதிக்கப்படுவர். ஒத்து உணர்ந்து வாழும் பண்பு இல்லாதவர்கள் நடைப்பிணமாக மதிக்கத் தக்கவர் என்று விளக்குகிறது இந்தக் குறள்.
உரை 3 : நன்றி (அம்மன் தரிசனம்)
இனி அடுத்த குறளில் அவர் சொல்லும் கருத்து மிகவும் சுவையானது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பிற உயிர்களின் இன்ப, துன்பங்களை அறிந்து கொள்வதும், அதற்கு துன்பம் நேராதபடி நடந்து கொள்வதுமே ஒத்தது அறிவதாம்.
ஒருநாள் வள்ளலாரின் சொற்பொழிவைக் கேட்பற்காக, ஓர் அன்பர், மாட்டு வண்டியை மிகவும் வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தாராம். அவருக்கு சொற்பொழிவை முழுவதும் கேட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம்.
இதை வள்ளலாரிடமே அவர் சொன்னபோது, ‘அட பாவமே! அடியேன் சொற்பொழிவிற்காக ஒரு வாயில்லா ஜீவனை ரொம்பவும் வதைத்து விட்டாயே! இத்தனை தூரம் ஓடி வந்தால் மாட்டுக்கு எப்படி மூச்சிறைக்கும்?’ என்று வருந்தி அந்த மாடுகளை அன்போடு வருடிக் கொடுத்தார். இதுதான் ஒத்தது அறிவது எனப்படுகிறது.
சக மனிதர்களின், பிற உயிர்களின் உணர்வு புரியாமல், நடந்து கொள்கிறவன், அதற்கு உபகாரமின்றி வாழ்பவன், செத்தாருள் வைத்து எண்ணத் தக்கவன் என்கிறார் அவர்.
குழந்தைத் திருடர்களை, கிட்னி திருடர்களை, ஆதாயம் கிடைக்கும் என்றால், உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய, போலி மருந்துகளை மக்கள் தலையில் கட்டும் கயவர்களை...
பலபேர் தற்கொலை செய்து கொள்வார்களே என்ற பாபத்தின் பயமில்லாத, பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடும் பைனான்சியர்களை...
எப்படி மனிதர்கள் என்று சொல்வது?
அவர்களுக்கு உணர்வு கிடையாது. பிறர் உணர்வும் புரியாது. அவர்கள் ஜடம்; ஆதலால் பிணம்.
எனக்குத் தெரிந்த தனவந்தர் ஒருவர் இறந்து போனார். அவர் வாழும் காலத்தில் எவருக்கும் சல்லிக்காசு கூட உதவியதில்லை. எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவர் என்பார்களே அந்த ஜாதி. அப்படிப் பட்டவர் இதய நோயால் இறந்து போனார்.
இதைக் கேள்விப்பட்ட போது, ஒருவர் சொன்னார், “அவருக்கு இதய நோய் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவருக்கு இதயமே இருக்க வாய்ப்பில்லையே!”
மற்றொரு நபர் அந்த கருமியின் சாவைப் பற்றி வேறுவிதமாகக் கேலி செய்தார். “அவர் இறந்து விட்டாரா? அவர் எப்போது உயிரோடு இருந்தார்?”
உயிர்க்குலத்தின் உணர்வுகளை ஒத்து உணராதவன், பிறர் துன்பம் தமக்கே வந்த துன்பம் போல் கருத முடியாதவன் எவனோ, அவனே ஒத்தது அறியாதவன். பிறர் துன்பம் தன் துன்பமாய்க் கருதி நீக்க முயலுபவன் ஒத்தது அறிகிறவன்.
இங்கே, வாழும் பலரில் ஏற்கெனவே இறந்து போனவர்கள் தாம் அதிகம்.
சிலபேர், நண்பர்களுக்கு உதவி செய்வார்கள். பண உதவி செய்தால் அதை வட்டியுடன் திரும்ப எதிர் பார்ப்பார்கள்.
ஐயாயிரம் நன்கொடை தந்தாலும், அதற்கு ஐம்பதாயிரத்துக்குரிய விளம்பரம் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள்.
பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக உபகாரம் செய்தவன், பிரதிபலன் இல்லாவிட்டால் அலுத்துக் கொள்கிறான்; அலட்டிக் கொள்கிறான்.
பிறரைத் தன்போல் மதித்து உபகாரம் செய்கிறவன்தான் உண்மையில் உபகாரம் செய்தவனாகிறான். அவனுக்கே அதற்குரிய பலனும் கிடைக்கிறது.
இனி மற்றொரு குறளைப் பார்ப்போம்.
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
உலகத்தை நேசிக்கும் பேரறிவாளனின் செல்வம் ஊருணி நீர் நிறைந்தது போல் ஊருக்குப் பயன் தரும் என்கிறது குறள்.
உலகத்தை நேசிக்கும் பேரறிவு எல்லாருக்கும் வாய்க்காது. எவன் பேரறிவு உடையவனோ அவனே உலகத்தை நேசிக்கிறான்.
சிற்றறிவு தன்னையே நேசிக்கும். தன்னையே கொண்டாடும்.
பேரறிவு என்பது, ‘சர்வம் பிரம்ம மயம்’ என்று அறிந்து கொள்ளும் அறிவுதான். அவ்வறிவுதான் தன்னைப் போல் பிறரை நேசிக்க வைக்கும்.
அசடர்களை ஆசை ஆட்டிவைக்கிறது. அறிஞர்களை கருணை இயங்க வைக்கிறது.
அந்தக் கருணைதான் ஒப்புரவின் அடிப்படையாக இருக்கிறது.
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்- அச் செயலைச் செய்யாதான் இறந்தவருள் (ஒருவனாகக்) கருதப்படுவான்.
அகலம்: நாட்டுக்கு ஒத்த செயல் - ஒப்புரவு
கருத்து: ஒப்புரவு செய்கின்றவன் உயிரோடு கூடி வாழ்கின்றவன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன்.
வள்ளுவரின் வெறுப்பின் உச்சமாக இக்குறள் ஒலிக்கிறது. “செத்தான்” என்பது, மிகவும் மரியாதைக் குறைவான சொல், இறந்தவரைக் குறிக்க. ஒப்புரவு இல்லாரை, அவ்வாறு சொல்வதன் மூலம், பிறர்குதவி செய்யும் குணமில்லாரை அவர் எவ்வாறு நினைக்கிறார் என்பதைத் தெளிவாக காட்டிவிடுகிறார்.
உலகநடைக்கு பிறருக்கு உதவி செய்து வாழும் பெருங்குணமே ஏற்றது, அவ்வாறு வாழ்கின்றவரே உயிரோடு வாழ்கின்றவர், மற்றவரெல்லாம், உயிரிருந்தும் பிணம் போன்றவரே. ஏனெனில் பிணத்துக்குத்தான் தன்முன்னர் தோன்றும் இல்லார்க்கு, அவர் முகமறிந்து உதவுதல் என்பது இயலாது. இதயத்தில் துடிப்பும், ஈரமும் உள்ளோர்க்கு அவ்வாறு பாராமுகமாய் இருத்தல் இயலாது.
வள்ளுவரைத் தவமிருந்தே பெற்றாள் நல்ல
வடிவழகில் சிறந்தோங்கும் தமிழாம் தாயாள்
அள்ளி அவர் தருகின்ற செல்வம் எல்லாம்
அப்படியே கைக் கொண்டால் வெற்றி கொள்வீர்
எள்ளி நகையாடுதற்கு இடமேயின்றி
எங்கேயும் நீரே தான் தலைமை ஏற்பீர்
உள்ளி அவர் வழி ஒன்றே உண்மை என்று
உணர்ந்தால் நீர் உலகத்தின் உயரே நிற்பீர்
பிறப்போடு இறப்பதனைக் கணக்கெடுக்கும்
பேரேடு அரசாங்கக் கையில் உண்டு
பொறுப்பாக அவர் எடுக்கும் கணக்கை நம்பி
பூமியிலே வாழ்கின்றார் மனிதரெல்லாம்
சிறப்பாக இதை விட்டு வள்ளுவனார்
செய்கின்றார் இப் பணியைத் தனி ஆளாக
கடுப்பாகிப் போயிடுவார் சிலரும் கண்டால்
கலகலத்துச் சிரிப்பீர்கள் நீங்கள் கண்டால்
உயிரோடு ஊரினிலே உயர்ந்தவராய்
உலவுகின்ற பல பேரை வள்ளுவரும்
அயராமல் சவக் கிடங்கில் வைக்கச் சொல்லி
அரசுக்கு ஆணையொன்றை அருளிச் செய்தார்
பயிருக்குள் களை போல வாழுகின்ற
பணம் படைத்தோர் மற்றவர்க்கு உதவி வாழார்
உயிரோடு இருந்தாலும் செத்தார் என்றே
உரைக்கின்றார் உறைக்கட்டும் உலகுக்கென்றே
படிப்பதற்கு உதவியின்றி தவிக்கும் ஏழ
பக்க த்திலே இருந்தும் உதவ எண்ணார்
அடி வயிற்றுப் பசியதனால் கலையிருந்தும்
அறிவிருந்தும் அழிவாரைக் காக்க எண்ணார்
கடி மணத்தைக் காணவொண்ணா ஏழ்மையிலே
கதறி நிற்கும் கன்னியர்க்கு உதவி செய்யார்
பெரியவராய்ப் பணம் கொண்டு வாழ்ந்தாரேனும்
பிணம் என்று கிடங்கினிலே வைக்கச் சொன்னார்
நன்றி (
MovingMoon)
ஒப்புர வொழுகும் எண்ணம்
.. உடையவன் அதனைப் போற்றும்
அப்பெரும் பண்பினாலே
.. அனைவரின் துன்பம் நீங்க
தப்பிலா துதவி வாழும்
.. தரத்தினால் உயர்ந்தோன் ஆவான்;
அப்படி உதவா தானை
.. அழிந்ததாய் உலகம் எண்ணும் (4)
பரிமேலழகர் உரை
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான்-உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
விளக்கம்
(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும் செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.
உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங்
கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.
மணக்குடவர் உரை
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
மு.வரதராசனார் உரை
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
Thirukkural - Management - Corporate Social Responsibility
A person is considered alive only when he is sensitive to the needs of all creations and serves them to satisfy their needs. That is why the philosophy' service before self’s is a reflection of Kural 214.
He only lives who is kin to all creation
Deem the rest dead.
If a person fails to be sensitive to the needs of other beings or lacks perceptiveness, he cannot serve them to fulfil their needs. If a person does not serve others' needs, he is considered dead. So, there is a social obligation to serve others. What is applicable to an individual is applicable to an organization as well. Let your organization serve the society to be served well in turn.