Search This Blog

Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label W - எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label W - எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; காண்க:சாமை; தினையளவு.

துணையும் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்

ஊடாமை - மனதளவில் வேற்றுமை / மாறுபாடு இல்லாது (இருத்தல் வேண்டும் )

வேண்டும் - வேண்டும்

பனைத் - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை.

துணையும் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்)

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நிறைய - நிரம்ப

வரின் - வரும்

முழுப்பொருள்
தினை என்பது மிக சிறிய அளவு உள்ள ஒரு சிறுதாணியம் ஆகும். அந்த சிறுஅளவுக்குக்கூட காதலிரடம் மன வேறுபாடு கொள்ள கூடாது. அவ்வாறு மன வேறுபாடு இல்லாது இருத்தல் வேண்டும் எப்பொழுது? தன் காதலரிடம் மிக பெரிய அளவு காமம் / காதல் / புணர்ச்சியின்பம் / அன்பு நிறைய பெற விருப்பமாயின்.

அதிக நாட்கள் கல்யாணம் "சிறந்து" நிலைக்க வேண்டுமாயின் சிறிது அளவு கூட மன வேறுபாடு இருக்க கூடாது என்பதை நாம் இங்கு கற்றுக்கொள்ளலாம். இதனால் கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது என்பது இல்லை. நெடுநாள் நிலைத்த இன்பம் வேண்டுபவர்க்கு மனிதனால் சிறுஅளவு ஊடல் / பூசல் கூடாது என்று பொருள்.

இங்கு ஊடல் என்பது மன வேறுபாடு என்பதையே கூறுகிறது என்று படுகிறது. ஏனெனில் ஊடலில் தோற்றவர் கூடலில் வெல்வார் என்று திருவள்ளுவர் ஊடலுவகையில் கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் எண்ணும்பொழுது [சிறுகதை] என்ற சிறுகதையில் எப்படி அக்கதையில் வரும் மாந்தர்கள் எண்ணும்பொழுது (சந்தேகப்பட துவங்கும் பொழுது) அவர்களுக்கிடையில் காமம் விலக துவங்குகிறது என்பதை காணலாம். அது ஒருவித நிரந்திர பிரிவின் தொடக்கம் என்றும் கூறலாம்.

அக்கதையில் அவர்கள் படுக்கையில் கூடும் நேரம் ஒரு கதையை பற்றி யோசிக்கும் துணுக்கு (snippet)
===
"அவள் வெறிகொண்டு அவனை இழுத்து அணைத்து அவன் உதடுகளை கவ்வி கடித்தாள். பற்கள் பதிந்தன. அவளுடைய அந்த வெறி மிக அரிதாகவே அவன் அறிந்தது. கைகளும் கால்களும் பரபரக்க மூச்சு சீறி ஒலிக்க ஊடே தொண்டையின் கமறல்போன்ற ஓசைகள் கலக்க அவள் மேலும் மேலும் கொந்தளிப்படைந்தபடியே சென்றாள்

பின்னர் மூச்சு சீராகிக்கொண்டிருக்க அவளுடைய உடல்மேல் அவன் குப்புறக் கிடந்தான். அவள் தோளின் வளைவில் முகம் அமைத்திருந்தான். அவள் மூச்சு அவன் தோள் மேல் பட்டுக்கொண்டிருந்தது. மென்மையான துணி ஒன்று தொட்டு அசைவதுபோல. அவன் முதுகில் அவள் கைநகங்கள் பதிந்ததன் எரிச்சல். தோளில் அவள் பற்கள் பதிந்த வலி

அவன் புரண்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். அவள் ஒருக்களித்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு, இன்னொரு கையை மடித்து ஊன்றி அதில் தலைவைத்து எழுந்து அவனை பார்த்தாள். அவள் தோள்களில் கூந்தல் விழுந்து கிடந்தது. வெறுந்தோளில் சிறு தழும்பு ஒன்று. கழுத்தில் நீல நரம்பு ஒன்று புடைத்து மெல்ல துடித்தது. ஒரு மார்பு மெத்தையில் அழுந்தியிருக்க கரிய சுருக்கங்களுடன் காம்பு கூர்ந்திருக்க இன்னொரு மார்பு வெண்ணிற மென்மையுடன் ததும்பிச் சொட்ட முற்பட்டு நின்றதுபோல் தெரிந்தது

அவன் அதை தொடப்போக அவள் தோளை விலக்கி அவனை அகற்றினாள். “அந்தக் கதையிலே எனக்கு சந்தேகம்” என்றாள்

“என்ன?”

“ரெண்டுபேரிலே யாரு முதன்முதலா எண்ணிப்பாக்க ஆரம்பிச்சது?”

“ஏன்?”

”இல்ல கேட்டேன்”

“அது கதையிலே இல்லியே”

“யாரா இருக்கும்?”

“அதை கோணச்சிகூட சொல்லிட முடியாது” என்றான்

“அந்தாள்தான்”

“இல்லை… வேணுமானா இப்டி சொல்லலாம். ஒரே செகெண்டிலே. ஒரு செக்கண்ட்டோட ஒருபக்கம் இவ மறுபக்கம் அவர். ரெண்டுபேருமே சேந்து”

”சும்மா உளறிட்டு” என்று அவள் உதட்டைச் சுழித்து அவன் கையை தட்டினாள். உருண்டு மறுபக்கம்  எழுந்தாள். முதுகில் கூந்தல் கற்றைகள் விழுந்து அலைபாய பாத்ரூமுக்குச் சென்றாள்
====
நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்’இன் வலைத்தளத்தில் கதைகள் செல்லும் பாதை- 9 - தலைகீழ் மாற்றம்  (சுட்டியைத் தட்டவும்என்ற தலைப்பில், பசை (Crazy Glue) என்ற உலக இலக்கியத்தில் இருந்து எடுக்கபட்ட ஒரு மொழிப்பெயர்ப்பு சிறுகதை பற்றி விவரிக்கிறார். அதில் கணவன் மணைவிக்குள்ளே இருக்கும் ஊடல் பற்றியும் காமம் எப்படிப் பட்ட பசை என்றும் இக்கதை கூறுவதாக விவரிக்கிறார். மேலும் கீழே.


எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர்.

சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.

நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை..

கதையின் துவக்கத்தில் புதிதாக ஒரு பசை டப்பாவை தன் வீட்டில் காணுகிறான் கணவன். அவன் மனைவியிடம் இது என்ன பசை என்று கேட்கிறான். அவள் அதைத் தொடாதே என்று சொல்கிறாள். எதற்காக இந்தப் பசை என்று மறுபடியும் கேட்கிறான் கணவன்.

இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன என்கிறாள்.

இந்தப் பதில் தான் கதையின் மையப்புள்ளி. வெற்று உரையாடலாகத் தோன்றும் இந்த வரிகளைக் கதை முடிந்தபிறகு வாசித்துப் பாருங்கள். எத்தனை முக்கியமானது என்று உணர்வீர்கள்.

இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத்தேவையில்லை. அநாவசியமாக இதை ஏன் வாங்கினாய் எனக் கணவன் கோவித்துக் கொள்கிறான். அதைக் கேட்ட மனைவி உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காக எனப் பதில் தருகிறாள்

இந்தப் பதில் வழியாக அவர்களுக்குள் நல்லுறவு இல்லை. அவள் கசப்பான அனுபவத்துடன் இருக்கிறாள் என்பது வெளிப்படுத்தபடுகிறது. அந்தக் கணவன் அவளுடன் சண்டையிட விரும்பாமல் அமைதியாகிறான்

பசை டியூப் இருந்த உறையில் ஒருவன் வீட்டின் உட்கூறையிலிருந்து  தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் படம் காணப்படுகிறது. இது போல எவரும் கூரையில் ஒட்டிக் கொள்ள முடியாது. இது வெறும் தந்திரம் என்று கணவன் சொல்கிறான்..

பின்பு வேலைக்கு நேரமாகிவிட்டது எனச் சம்பிரதாயமாக மனைவியை முத்தமிட்டுவிட்டுக் கிளம்புகிறான்.

அடுத்தப் பத்தியில் உள்ள உரையாடலில் வேறு ஒரு பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பது வெளிப்படுத்தபடுகிறது. அதில் அந்தப் பெண் ஏன் அவளுடன் இருக்கிறாய். உங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டை கூடப் போடுவதில்லை என்று சொல்கிறாள்

இந்த உரையாடல் வழியாக அவர்கள் ஒரே வீட்டிற்குள்ளாகத் தனித்தனியாக வாழ்கிறார்கள் என்பது தெளிவாக உணர்த்தபடுகிறது.

அன்றிரவு கணவன் வீடு திரும்புகிறான். வீட்டில் யாரும் இருப்பது போலவே தோன்றவில்லை. பசை டியூப் காலியாக உள்ளது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்துகிறான். அது நகரவில்லை. தரையுடன் சேர்த்து ஒட்டப்பட்டிருக்கிறத. இது போலவே ப்ரிட்ஜைத் திறக்க முடியவில்லை. அதையும் அவன் மனைவி ஒட்டியிருக்கிறாள் . அவளைப் பற்றிக் குறை சொல்ல அவளது அம்மாவிற்குத் தொலைபேசி செய்ய முயற்சிக்கிறான். அதுவும் ஒட்டப்பட்டிருக்கிறது.

திடீரென ஒரு சிரிப்புச் சப்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் வீட்டுக் கூரையில் இருந்து அவள் தொங்கிக் கொண்டிருந்தாள்.

பசை விளம்பரத்தில் இருந்த அதே காட்சி.

செருப்பில்லாமல் அவள் கால்கள் கூரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. தலைகீழாகத்தொங்கிக் கொண்டிருக்கிறாள்.

இதைக் கண்டு அதிர்ந்து போய் உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கணவன் கத்துகிறான். அவள் பதில் சொல்லாமல் சிரிக்கிறாள்.

அவளைக் கிழே இறக்கிவிடுவதற்காக முயற்சிக்கிறான். ஸ்டுல் எதையும் நகர்த்த முடியவில்ல. அகவே தடிமனான புத்தகங்களை எடுத்துப் போட்டுக் கோபுரம் போலாக்கி அவளைப் பலம் கொண்ட மட்டும் கிழே இழுக்கிறான்

தலைகீழாக அவள் தொங்கும் போது மிக அழகாகத் தோன்றுகிறாள். அவளது நீண்ட கூந்தல் வசீகரமாக ஆடுகிறது. வெண்ணிற மேலாடையின் உள்ளே செதுக்கி வைக்கபட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் அவளது மார்பகங்கள் தெரிகின்றன. அவளை வியந்து ரசிக்கிறான். .

பின்பு அவளை முத்தமிடுகிறான்.. அவளும் இணங்கி நாவோடு நாவு கவ்வ முத்தமிடுகிறாள். சட்டெனக் காலடியில் இருந்த புத்தகங்கள் சரிகின்றன. அவளது உதட்டினை கவ்வியபடியே அவன் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கதை முடிகிறது

••

கசந்த உறவை எந்தப் பசையால் ஒட்டமுடியும் என்று கதை கேள்வி எழுப்புகிறது. அதே நேரம் உறவை ஒட்டும் பசை காமம் மட்டுமே என்று அடையாளமும் காட்டுகிறது. தலைகீழான மாற்றத்தால் மட்டுமே அவர்களுக்குள் புதிய ஈர்ப்பு உருவாகிறது. இந்த மாற்றத்தை அவள் தான் ஏற்படுத்துகிறாள்.

அந்த வீட்டில் இருந்த பொருட்கள் யாவும் பசையால் ஒட்டப்பட்டுவிடுகின்றன. ஆனால் புத்தகங்கள் ஒட்டப்படவில்லை. அவற்றைக் கணவன் கையாளுகிறான். புத்தகம் ஏணி போலப் பொருளாக மாறுகிறது. அவனது படிப்பு இப்படி உருமாற வேண்டும் என்றே அவள் நினைக்கிறாள். தலைகீழாகத் தொங்கும் அவளைப் பார்க்கும் போது யாரோ ஒருத்தியை போலத் தெரிகிறாள். அவளது உடல் வசீகரமாகத் தெரிகிறது.

கதையின் கடைசிவரியில் அவன் உதட்டினை கவ்வியபடியே தொங்கிக் கொண்டிருக்கிறான். உடலின் ஒன்றிணைவு வழியாகவே உறவு வலுப்படுகிறது. காமம் குடும்ப உறவின் ஆதாரம். அதன் சீரான தன்மையே கணவன் மனைவி உறவை வலுப்படுத்துகிறது.

கதையின் முதல்வரிக்கு திரும்ப வாருங்கள்.

தொடாதே என்று அவன் மனைவி கூறுகிறாள்.

கதையின் கடைசி வரியில் அவளது உதட்டை கவ்வியபடியே கணவன் தொங்குகிறான்.

எவ்வளவு கச்சிதமாகக் கதை உருவாக்கபட்டிருக்கிறது. குறைவான சொற்களைக் கொண்டு அற்புதமான கதையை ஒரு மரச்சிற்பம் போலச் செதுக்கியிருக்கிறார் எட்கர் கிரெட்.

வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் அவள் பசை ஒன்றின் மூலம் நகரவிடாமல் செய்கிறாள். இதன் மூலம் நகர்வு எளிதானதில்லை என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறாள். பசை விளம்பரத்தை பார்த்த மாத்திரம் அது விரையம் எனக் கணவன் நினைக்கிறான். அது தான் அவளை அவன் புரிந்து வைத்துள்ள விதம். ஆனால் அவள் நிதானமாக, விசித்திரமாக, தனது எண்ணங்களைச் செயல்படுத்துகிறாள். கணவனிடம் காணப்படும் பதட்டம் அவளிடமில்லை.

இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படிப் பட்டது தான். ஆனால் தலைகீழ் மாற்றம் அவர்களுக்குள் நடப்பதேயில்லை.

சிறுகதை ஆசிரியன்  கதையில் நிறைய  சொல்லத்தேவையில்லை. குறைவான, கச்சிதமான உரையாடல்களின் வழியே கதையினை நேர்த்தியாக உருவாக்கிவிட முடியும். கனவுத்தன்மை கொண்ட இக்கதை யதார்த்தத்தை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. இது முக்கியமான உத்தி. சிறுகதை ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமிது.

இக் கதை 9 முறை குறும்படமாக்கபட்டுள்ளது. அதில் இரண்டு குறும்படங்களைப் பார்த்தேன்

கதையைப் போலக் குறும்படம் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை.

——


பசை - எட்கார் கெரட் (Etgar Keret) - தமிழில் :மாது

“அதைத் தொடாதே” என்றாள் அவள்.

“என்னது அது” என்றேன்.

“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”

“எதற்காக வாங்கினாய் அதை”

“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”

“இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத் தேவையில்லை. இதையெல்லாம் எந்தக் காரணத்துக்காக அனாவசியமாக வாங்குகிறாய் என்று தெரியவில்லை”

“உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காகத்தான்….நேரம் கழிப்பதற்க்கு”

அவளுடன் சண்டையிட எனக்கு விருப்பமில்லை. அமைதியாய் இருந்தேன். அவளும் அமைதியாய் இருந்தாள்.

“இது என்ன அவ்வளவு நல்ல பசையா?” என்றேன். பசை டப்பாவின் மேல் ஒட்டப்பட்டிருந்த படத்தைக் காட்டினாள். உட்கூறையிலிருந்து ஒருவன் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.

“எந்தப் பசையாலும் ஒருவனை அப்படிக் கூரையில் ஒட்ட வைக்க முடியாது. படத்தைத் தலைகீழாக எடுத்திருப்பார்கள். விளக்கை தரையில் வைத்து கூரையிலிருந்து தொங்குவதுபோல் காட்டியிருப்பார்கள்” என்று அவள் கையிலிருந்து பசை டப்பாவை வாங்கி உற்று நோக்கினேன். “இங்கே பார் இந்த ஜன்னலை. அதன் படுதாக்கள் மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் தொங்குவது போல் கூடக் காட்டத் தெரியவில்லை இவர்களுக்கு.” அவள் பார்க்கவில்லை.

“அட எட்டு மணி ஆகிவிட்டதே ! நான் வேலைக்குக் கிளம்பவேண்டும்” என்று கூறி என் பெட்டியை கையிலெடுத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். “நான் வர சற்று நேரமாகும் … நான் …”

“ஓவர்டைம். எனக்குத் தெரியும்.”

~oOo~

அலுவலகத்திலிருந்து அபிக்கு போன் செய்தேன் “இன்றைக்கு வர முடியாது. வீட்டிற்குச் சீக்கிரம் போக வேண்டும்”

“ஏன் ஏதாவது நடந்ததா” என்றாள் அபி.

“இல்லை….அவள் சந்தேகப் படுகிறாள் என்று தோன்றுகிறது”

நீண்ட மொளனம். மறுமுனையில் அபியின் பெருமூச்சு கேட்டது.

“ஏன் அவளுடன் இருக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை,” என்றாள் மெல்லிய குரலில். “நீங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டைகூடப் போடுவதில்லை”. சிறு இடைவெளிக்குப் பின், “புரியவில்லை..” என்று மீண்டும் இழுத்தாள்.

“அபி கொஞ்சம் இரு…யாரோ உள்ளே வருவது போல் தெரிகிறது” என்று பொய் சொன்னேன். “சரி போனை வைக்கிறேன். சத்தியமாக நாளைக்கு வருகிறேன். எல்லாவற்றையும் பற்றி அப்போது பேசலாம்”.

~oOo~

சீக்கிரமாக வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்தவாரே “ஹலோ” என்றேன். பதில் வரவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினேன். எந்த அறையிலும் அவள் இல்லை. சமையல் மேடையில் பசை ட்யூபைப் பார்த்தேன். காலியாய் இருந்தது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்தினேன். அது நகரவில்லை. மீண்டும் முயற்ச்சித்தேன். அசைவதாய்த் தெரியவில்லை. தரையுடன் சேர்ந்து ஒட்டியிருக்கிறாள். ப்ரிட்ஜை திறக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. இப்படிச் செய்ய அவளைத் தூண்டியது எது. அவள் அம்மாவிற்குப் போன் செய்வதற்காகக் கூடத்திற்குச் சென்றேன். போனின் பேசு முனையைத் தூக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். அருகிலிருந்த மேஜையை ஒரு எட்டு விட்டேன். அது துளியும் அசையவில்லை. என் கால் கிட்டத்தட்ட உடைந்ததுதான் மிச்சம்.

அப்போது அவளின் சிரிப்பைக் கேட்டேன். எனக்கு மேலிருந்து வந்தது சிரிப்பொலி. அன்னாந்து பார்த்தேன். அங்கே அவள். மேற்கூறையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். செருப்பில்லா அவளது கால்கள் மேற்கூரையில் ஒட்டியிருந்தன.

வாய் பிளந்து பேசாது நின்றேன். “என்ன…பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா” என்று மட்டுமே கேட்க முடிந்தது.

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். புவியீர்ப்பினால் பிளந்த அவள் உதடுகளிலிருந்து வந்த புன்னகை இயற்கையாய்த் தோற்றமளித்தது.

“கவலைப் படாதே உன்னைக் கீழே இறக்கி விடுகிறேன்” என்று சொல்லியவாறே அலமாரியிலிருந்து தடிமனான புத்தகங்களை அவசரமாக எடுத்தேன். என்சைக்ளோபிடியா தொகுதிகளைப் கொண்டு ஒரு கோபுரம் அமைத்து அதன் மீது தட்டுத் தடுமாறி ஏறினேன்.

விழாமல் சுதாரித்த படியே “கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோ” என்றேன். அவள் புன்னகைத்தபடி இருந்தாள். பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்தேன். ஏதும் நடக்கவில்லை. மெதுவாகக் கீழே இறங்கினேன்.

“கவலைப்படாதே…பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூட்டி வர முடியுமா என்று பார்க்கிறேன்” என்றேன்.

“சரி…எனக்கு எங்கும் போக உத்தேசமில்லை” என்று கேலியாகச் சிரித்தாள்.

நானும் சிரித்தேன். பொருத்தமற்று தலைகீழாகத் தொங்கியதில் அவள் மிக அழகாகத் தோன்றினால். அவளது நீண்ட கூந்தல் தலைகீழாக ஊஞ்சல் ஆடியது. வெள்ளை நிற மேலாடையின் உள்ளே திறம்பட வார்க்கப்பட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் தோன்றின அவளது மார்பகங்கள். அழகோ அழகு. மீண்டும் புத்தகக் குவியல் மேல் ஏறி அவளை முத்தமிட்டேன். அவளது நாக்கை என் நாக்கில் உணர்ந்தேன். என் காலின் கீழ் புத்தகங்கள் சிதறின. அந்தரத்தில் அவள் உதட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தேன்

நன்றி
சொல்வனம் இணையஇதழ்

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது

மு.வரதராசனார் உரை
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை 
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே
(அத்தியாயம் 9)
திருப்தியற்ற தாம்பத்ய உறவு
ஒருவருக்கொருவர் இணையாக துணையாக ஒருவர் தேவையை மற்றவர் கவனித்து வாழ்வதற்காகத்தான் திருமணம் என்ற ஒன்றை  செய்கிறோம். இது உடற்தேவையையும் உள்ளடக்கியதே. அன்பும் காதலும் தான் காமத்திற்கு அடித்தளமாகும் என்பதை நான் எவ்வளவு நம்புகிறேனோ அதே போல், திருப்தி இல்லாத உடலுறவும் அந்தக் காதலை அழித்து விடும் சக்தி உடையது என்பதையும் நம்புகிறேன். திருப்தி இல்லாத உடலுறவு, இல்லை உடலுறவே இல்லாத பட்சத்தில், சிறிது சிறிதாக, அன்பான கணவன் மனைவிக்கிடையே கூட ஒரு வேற்றுமைத்தன்மையை விதைத்து விடும். காமம் என்பதும் உணவைப் போல், மனிதனுக்கு ஓர் அடிப்படையான தேவை. மனதால் உடல் சேர்வதும், உடலால் மனம் நெருங்கியும் இருப்பதே ஒரு அழகான தாம்பத்திய உறவை ஏற்படுத்தும், நீட்டித்து வைக்கும். இந்த உண்மையை நாம் மறக்கலாகாது.

ஓர் ஆண் மிகவும் அன்புடையவனாகவும், மிகவும் நல்லவனாகவும் இருக்கலாம். ஆனால் உடலால் அவளை திருப்தி அடைய வைக்க இயலவில்லையெனில்? அதே போல் ஒரு பெண் மிகவும் அன்பானவளாகவும், அக்கறை எடுத்துக்கொள்பவளாகவும் இருக்கலாம். ஆனால், அவள் அவனின் உடற்தேவைகளை பூர்த்தி செய்ய ஒத்துழைக்காவிடில்?  இங்கு ஏதோ தவறு இருக்கிறது அல்லவா? ஒருவரிடமோ இல்லை இருவரிடமுமோ? காமத்தில், நமக்குப் பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என்பது குறித்து நம்மில் எத்தனை பேர் உரையாடுகிறோம்? உடலுறவின் பால், ஒவ்வாமை இல்லாதபோதும், அது குறித்து, பொதுவில் பேசாத நிலையைத்தான் நாம் கற்றுள்ளோம். நெருக்கமான உறவைக் கொள்ளல் அவசியம் என்னும் நிலையிலுள்ள கணவன்-மனைவியிடத்தும் இத்தகைய ஒவ்வாமைகள் இருக்கலாம். ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதில் ஒவ்வாது இருந்தாலும், கணவனுக்காக, அதை அவன் விரும்புகிறான் என்பதற்காக, அவனைத் திருப்தி செய்யவேண்டும் என்ற நோக்கில் மட்டும் அதைச் செய்பவளாக இருக்கலாம். அத்தகைய நிலையில் அந்தக் கணவன், அவளுக்கு  விருப்பமில்லை என்றாலும், தனக்காகவே செய்கிறாள் என்பதை அறியாதவனாக இருந்தால், நாளாக நாளாக, அவள் அச்செய்கையை மேலும் மேலும் வெறுக்க ஆரம்பிக்கிறாள். 

காமத்தின்பாலான தனது வேட்கையை ஆணிடம் வெளிப்படையாகத் தெரியப்படுத்துதல் தவறு என்னும் கருத்துடன் சில பெண்கள் உள்ளனர். அவ்வாறான வேட்கை இருந்தும் அவள், அதை வெளிக்காட்டாமல், இல்லாததுபோல் நடிக்கவேண்டியதாகிறது. அவளது கணவன் அவளிடம் மென்மேலும் இன்பத்தை நுகர்ந்து, அவள் மேலும் வெளிப்படையாக உறவில் ஈடுபட வேண்டும் என்று விரும்பலாம். ஆயினும் ஏற்கனவே பழக்கப்படுத்தப்பட்ட மூளை, அவளை அவ்வாறு வெளிப்படையாகச் செயலுறத் தடுக்கிறது. இந்த நிலையில், சில காலத்திற்குப்  பின்னர், அவளுடைய கணவன், மெல்ல அவள்பால் கொண்ட ஈடுபாட்டை இழந்து, ஒரு திருப்தியான உடலுறவிற்கு ஏங்க ஆரம்பிக்கிறான். இத்தகைய சூழல்களில், தயக்கமின்றி, உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினால், பயனுள்ளதாக அமையும். ஆயினும், காமத்தை  மறைத்து வைத்து மனம் திறந்து பேசுவது தவறு என வளர்க்கப்பட்ட விதம் நம்மை அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கிறது. 

பெரும்பாலும் ஓர் ஆண் உச்சமடையும் நேரம் தான் ஒரு பெண்ணின் வேட்கையே கிளறப்படுகிறது. ஆதலால் பெரும்பாலும் பெண்கள் கிளறப்பட்டு அவள் நிறைவு பெறாத ஒரு செயலாகவே கலவி என்பது உள்ளது. அவளை சும்மா விட்டிருந்தாலும் சுகமாகப் படுத்து உறங்கியாவது இருப்பாள். அவள் வேட்கை உச்சத்தில் இருக்கும் நேரம் பொதுவாக அவன் குறட்டை விட்டுத் தூங்கியே இருப்பான். இப்படித்தான் பெரும்பாலான கலவிகள் முடிகின்றன. அந்தப் பெண்ணின் பரிதாபகரமான நிலை குறித்துக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். எவ்வளவு வெறுக்கத்தக்க நிலையில் அவள் வாழ்வு இருக்கும்?  இதை நான் சொல்ல வேண்டுமென்று சும்மா சொல்லவில்லை.  என் சொந்த அனுபவத்திலிருந்தும் இன்னும் நான் பேசிய பல பெண்களிடமிருந்தும், படித்தும் தெரிந்து கொண்ட விஷயம் தான். இதற்கு முரணான போக்கும் நடைமுறையில் உள்ளது 

என்பதை, நான் ஒரு பெண் என்கிற முறையில் தெரிந்துகொண்ட போது திடுக்குற்றேன். இந்த நூல் குறித்து நான், எனது ஆண் நண்பர்களுள் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நண்பர் அவர் மனைவியிடம் உடலுறவு கொள்ள முனையும் போதெல்லாம், அவர் மனைவி அதற்கு உடன்படமாட்டார். இருந்தாலும், எப்போதாவது ஒருமுறை அவரது மனைவி, நண்பரிடம், தனக்கு வேண்டியதைச் செய்யச் சொல்லி, தான் உச்சத்தை அடைந்ததும், எழுந்து சென்றுவிடுவார். 

அதுநாள் வரை, அத்தகைய சூழல்கள் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்றும், ஆண்கள் எப்போதும், தங்களுக்கு வேண்டியதை, பெண்களுக்கு விருப்பமில்லை என்ற போதிலும், பெற்றே விடுவர் என்றும் தவறாக நம்பியிருந்தேன். என் நண்பரிடமிருந்து அந்த முரணான வழக்கத்தைப் பற்றி அறிந்தபோது, நான் என் அறியாமையை உணர்ந்தேன். இந்த ‘உண்மையை’ நான் வேறொரு ஆணுடன் பகிர்ந்து கொண்டபோது, அவரும், தான் அவ்வாறே பல வருடங்களாக வாழ்வதாகக் கூறினார். அவரது மனைவி அவர் அருகில் ஒவ்வொரு முறை வரும்போதும், அவருடைய உடல்ரீதியான வேட்கை தணியும் என்று நம்பினாலும், ஒருமுறையேனும் அவ்வாறு அமைந்ததில்லை என்று அந்த நண்பர் கூறினார். இவ்விருவரில் ஒருவர், தற்போது திருமண வாழ்க்கையைத் தொடரவில்லை. அடுத்தவர், அவருக்குக் குழந்தைகள் உள்ளதால், திருமண பந்தத்தைத் தொடர்கிறார்.