Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_082. Show all posts
Showing posts with label Athikaaram_082. Show all posts

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

 

குறள் 820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு

குறுகுதல் - குள்ளமாதல்; சிறுகுதல்; மாத்திரைகுறைதல்; அணுகுதல்.

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

மனைக் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

கெழீஇ - கெழுவு -. பொருந்த, நிறைய
கெழீஇ - நட்பாடி இருந்துவிட்டு

மன்றில் - மன்றம் -  அவை:கழகம்; வழக்குமன்றம்; ஊருக்குநடுவாயுள்ளமரத்தடிப்பொதுவிடம்; காண்க:செண்டுவெளி; வெளியிடம்; போர்க்களப்பரப்பின்நடுவிடம்; சிதம்பரம்; வீடு; பசுவின்தொழுவம்; நெடுந்தெரு; மெய்ம்மை; உறுதி; மணம்.

பழிப்பார் - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
சிலர் நம்முடன் நமது வீட்டில் நட்புறவாடுவர் பொருந்திப்பேசுவர். நம்மை நெகிழவைப்பர். (நம்மிடம் காரியமும் சாதித்துக்கொள்வர்). ஆனால் ஒரு பொதுவெளியில், பலர் கூடியுள்ள சபைதனில் நம்மை இகழுவர். எள்ளுவர். நம்மை நகைப்புக்குரிய பொருளாக சித்தரிபர். நமது செயல்களையும் எண்ணங்களையும் சிறுமை செய்வர். (நண்பர்களுடன் மட்டும் கூடிய சந்திப்புகளில் வரம்புக்குள் கேலிசெய்துகொள்வது வேறு). அத்தகையோருடன் நட்பு சிறிதாயினும் அவர்களை சீர்தூக்கிப்பார்த்து அவர்களிடம் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தீய நட்பை தவிர்த்துவிட வேண்டும். அவர்களை நம்மிடம் அணுகவிடக்கூடாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க. இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

 

குறள் 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
கனவினும் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

இன்னாது - தீது; துன்பு

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

வேறுபடுதல் - வேறாதல் - பிரிதல்; மாறுபடுதல்; மனம்மாறுபடுதல்; முன்னையதன்மைகுலைதல்; சிறப்புடையதாதல்; ஒதுக்காதல்; தனியாதல்.

வேறுபட்டார் -  வேறாய் இருப்பவர்கள்தம்

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
சிலர் நம்மிடம் நன்றாக தேனாக இனிமையாக பேசுவர். ஆனால் அவர்கள் செயல்களோ வேறு மாதிரி இருக்கும். அவர்களின் செயல்களில் நேர்மை இருக்காது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களின் செயல்கள் நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும். அத்தகையோரின் நட்பை என்றென்றும் கொள்ளாதே ஏனெனில் அத்தகைய நட்பு கனவிலும் துன்பத்தையே தரும். கனவிலும் அவர்கள் நமது நம்பிக்கையை குலைப்பார்கள்.

சொல்லும் செயலும் இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று வலியுருத்தும் குறள் இது. இது நட்புறவுகள் என்றில்லை வணிக உறவுகளுக்கும் பொருந்தும்.  நாணயம் என்பது மிக மிக அவசியம். ஆதலால் ஒருவரின் சொற்களை செயல்களை வைத்து மதிப்பிட்டு அறிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலத்திற்கும் துன்பத்திற்கு வாக்கபட்டதுப்போல் ஆகிவும்.

ஒரு நாலடியார் பாடல் இக்கருத்தையே கூறுகிறது

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் – சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. (நாலடி 127)

இப்பாடலின் கருத்து: மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாமல் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்.

மேலும், உதாரணமாக என் சொந்தவாழ்க்கையில் ஒன்றை கூறலாம். நான் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு தேடிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என்னிடம் தொலைப்பேசியில் பேசிய நபர் தேனாக பேசினார். தன்னுடன் வசிப்போர் எல்லாம் மிகவும் நல்லவர்கள். இங்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. இங்கு நாங்கள் ஐந்துப் பேர் தான் வாழ்கிறோம். உங்களைப்போல் திட்டமிட்டு வாழ்வோர் தான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம் பேசினார். ஒரு நண்பர்போல் இனிமையாக பேசினார். நண்பர் என்ற உணர்வை நம்பிக்கையை கொடுத்தார். அதை நம்பி நான் அவ்வீட்டிற்கு/அவ்வறைக்கு வாடகைக்கு சென்றேன். ஆனால் அவ்வீடோ மிக மிக அவலமாய் இருந்தது. சுத்தமென்பது எங்கும் சிறிதும் இல்லை. மொத்தம் ஏழு பேர் தங்கிக்கொண்டு இருந்தனர். ஒரே ஒரு ஒன்றிணைந்த குளியலறையும் கழிவறையும் இருந்தது. யோசித்துப்ப்பாருங்கள் ஏழு பேருக்கு ஒரு குளியலறை கழிவறைஎன்றால் எவ்வளவு அவலமாக இருக்கும் என்று. அதுவும் சுத்தம் செய்யவில்லை என்றால். மேலும், வீட்டின் வாடகை சரிசமமாக வகுக்கபடவில்லை. அவ்வீட்டில் சிறிய அறையில் இருப்போரிடம் அதிகம் வாடகை வாங்கபட்டது. இப்படி சொல்லும் செயலும் வேறுவேறாக இருந்தது. ஆனால் மற்றபடி என்னுடன் போனில் பேசிய அந்த ஒருங்கிணைப்பாளர் எப்பொழுதும் தேனாக நண்பர் போல் பேசுவார். ஆனால் அவரது செயல்களோ சற்றும் நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது. அவரை என்றும் நம்ப முடியாது. (ஆதலால் அவ்வறை விட்டு நான் அடுத்த மாதமே வெளியே வந்துவிட்டுவேன்) அத்தகையோருடன் நட்பு வைத்துக்கொள்வது மிக மிக துன்பம் தரும். கனவில் நினைத்தாலும் துன்பமே. ஆதலால் அத்தகையோருடன் உறவு வைத்துக்கொள்ளாதே. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.).

மணக்குடவர் உரை
செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

 

குறள் 817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
நகை - (வி)சிரி; பழி.

நகைத்தல் - சிரித்தல்; நிந்தித்தல், இகழ்தல்; பொருட்படுத்தாதிருத்தல்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

வகையர் - தன்மை உடையோர், செயல்கள் உடையோர்

ஆகிய -  பண்புருபு

ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

நட்பின் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

பகைவரான் - பகைவர்க்கம் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்எனஆன்மாவின்உட்பகைகளாயுள்ளஆறுகுற்றங்கள்
பகை - எதிர்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.
பகைவன் - எதிரி

பத்து - ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர் முதலியோரிடத்து உள்ள பத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில் பத்துப்பதிகம் கூடியபகுதி; சீட்டுக் கட்டில் பத்துக்குறியுள்ளசீட்டினம்.

அடுத்த - aṭutta   aTutta அடுத்த next; (with time words) the one after the coming one  
அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முழுப்பொருள்
நம்மை கண்டிக்கும் உரிமை நண்பருக்கு உண்டு. நாம் தவறு செய்தால் நம்மை உரிமையுடன் கண்டிப்பவரே நல்ல நண்பர். ஆனால் நம்மை எள்ளும் தன்மைக்கொண்ட நம்மை இகழும் தன்மைக்கொண்ட நம்மை பொருட்படுத்தாத நண்பருடன் கூடிய உறவை/நட்பை விட பகைவர் செய்யும் துன்பங்கள் பல (பத்துக்கோடி) மடங்கு மேல்.

இவை எப்படி மேலாம்? ஏனெனில் பகைவர் செய்யும் துன்பங்கள் ஒரு விதத்தில் நமது பலவீனங்களை அறிந்துக்கொண்டு அவற்றை சரி செய்துக்கொள்ள உதவும். நாமும் வலிமை அடைவோம். ஆனால் நம்மை எள்ளும் நண்பர் நம்மை இகழும் நண்பர் நம்மை பொருட்படுத்தாத நண்பர் நமது நேரத்தை விரயம் செய்கிறார் நமது மனவலிமையை குறைக்கிறார். நமது செயல்களை சிறுமை செய்கிறார். நமது மனதில் ஒரு புழுக்கத்தை உருவாக்குகிறார். ஆதலால் அத்தகைய நட்பு தீ நட்பாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.).

மணக்குடவர் உரை
நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

குறள் 815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஏமம் -  இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

சாரா - பொருந்தாத

சிறியவர் - சிறியர், சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.
புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

எய்தலின் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தாமை - எய்தாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.


முழுப்பொருள்
பயன் எதிர்பாராமல் பிறருடன் கொள்வதே நட்பாகும். எல்லா உறவுகளிலும் நல்லவையும் தீயவையும் இருக்கும். தீயவற்றிற்கு எதிராக நாம் அறத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாவலாக  கொண்டாலும் நம்முடன் பொருந்தாத கீழ்மக்களிடம் நட்பு வைத்துக்கொள்வதை விட வைத்துக்கொள்ளாமல் இருப்பதே நமக்கு நன்மை செய்யும். 

ஏனெனில் கீழ்மக்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு துன்பத்தை தரும். நாம் அவர்களுக்கு உதவிகளையும் இன்பத்தையும் கொடுத்து  இருப்போம். ஆனால் கீழ்மக்கள் நமது அறத்தையும் ஒழுக்கத்தையும் கெடுக்கும் வண்ணம் தீயவற்றை நம்மில் பழக்கப்படுத்துவர். அதற்கு சப்பைக்கட்டு கட்டி  நியாயப்படுத்தவர். அதுஅழிவிற்கான துவக்கம். ஆதலால் தீ நட்பு வேண்டாம் என்கிறார்  திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று. (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தெலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதினும் பெறாமை நன்று. இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.

மு.வரதராசனார் உரை
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

குறள் 814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அறுக்கும் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

கல் - தோண்டு; பயில்; கல்விகல்; படைக்கலம்முதலியனபயில்.

கல்லா -  கல்வி கற்காத, பயிலாத

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)

அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

தமரின் - தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

தனிமை - தனித்திருக்கும்நிலைமை; உதவியின்மை; ஒதுக்கம்; ஒப்பின்மை.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
யுத்த(போர்) பூமியில் நம்மை விட்டு நீங்கி நம் நம்பிக்கையை அறுத்து நமக்கு தோல்வியை கொடுக்கும் அறிவில்லாத குதிரையை போன்ற நண்பரிடம் நட்பு வைத்துக்கொள்வதை விட நாம் தனிமையில் இருப்பதே மேலானதாகும்(சிறப்பாகும்). உதாரணமாக நமது வீட்டில் போலீஸ் வந்தாலோ அல்லது கடன் பிரச்சனைகளில் தத்தளித்தாலோ நம்மை விட்டு ஏதாவது காரணம் சொல்லிவிட்டு ஓடும் நண்பர் தீய நண்பர். அவரைவிட்டு விலகி இருக்க வேண்டும். அதுவே நம்முடன் இருந்து பண உதவி செய்யாவிட்டாலும் ஆறுதலாக பக்கபலமாய் இருப்பார் ஆயின் அவரே நல்ல நண்பர்.

பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு, போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போன்றவர்கள், வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு, மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தல் இலராய், அவர் உயிரைப் பகைவரால் போகுதற்கு வழி செய்து, பின்னர் இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள்; இவர்கள் தம் ஊரில் நடந்து முடிந்த விழாவினைக் காட்டுவதாக தம்மகனைத் தோள்மீது சுமப்பாரோடொப்பர், என்கிறது பழமொழிப்பாடலொன்று. இப்பாடல் போர் தொடங்கியதும் தீர்த்த யாத்திரைக்கு, தாம் சார்ந்த பக்கத்தையும், தம்மோடு நட்புறவில் இருந்தவரையும் தேவையான நேரத்தில் நீங்கிய விதுரரையும், பலராமரையும் சுட்டிக்காட்டுகிறது. இனி அப்பாடல்:

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார் – போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே
கழிவிழாத் தோளேற்று வார். (பழமொழி 13)

மற்றொரு பழமொழிப்பாடலும் இக்கருத்தையொட்டியதே:

எய்ப்புழி வைப்பாம்எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு. (பழமொழி 291)

பசுமையான பொன் வளையலை உடையாய், தளர்வு வந்த இடத்து வைத்திருக்கும் பெருநிதியைக் கொண்டு, உதவி செய்வர் எனக் கருதி, நம்மால் விரும்பி நட்புக்கொள்ளப்பட்டவர், நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து, ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி, அச்சம் காரணமாக மறுப்பாராயின், அச் செய்கை, ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும் அல்லவா!

இக்குறள் கூறும் கருத்து நம்ப வைத்து நட்டாற்றில் விடுவோரைவிட நட்பென்றில்லா தனிமையே நன்றென்பதாம்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மாஅன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து. (கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.).

மணக்குடவர் உரை
தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று. இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

குறள் 813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
உறுவது - Thatwhich happens; சம்பவிப்பது. , வரற்பாலது; 2. That whichaccrues; gain; இலாபம் உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10). 

சீர்தூக்கும் - ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; வரையறுத்தல்

நட்பும் - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

பெறுவது - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

கொள்(ளு)-தல் - koḷ-   2 v. [T. konu, K.M. koḷ.] tr. 1. To seize, grasp; கையால் எடுத்துக்கொள்ளுதல் கொண்ட வாளொடும் (சீவக. 430). 2.To receive, as a gift; பெறுதல் நல்லா றெனினுங்கொளறீது (குறள், 222). 3. To buy, purchase;விலைக்கு வாங்குதல் கோதையினுங்கொள்வார் (நைடத.நகரப். 18). 4. To acquire, take possession of, occupy; உரிமையாகக் கொள்ளுதல் விடலையைக் காணவோடி . . . வீதிகொண்டார் (சீவக. 457). 5. Tomarry; விவாகம் செய்தல் தாங்கொண்ட மனையாளை(நாலடி, 3). 6. To abduct, carry off; கவர்தல் மனையாளை மாற்றார்கொள (நாலடி, 3). 7. To contain,hold; தன்னட்கொள்ளுதல். சிதரரிக் கண்கொண்டநீர் (நாலடி, 394). 8. To draw in, gather up; முகத்தல் குணகடல் கொண்டு குடகடன் முற்றி (மதுரைக்.238). 9. To learn; கற்றுக்கொள்ளுதல் கொள்ளுநர்கொள்ள (கல்லா. 11, 21). 10. To consider, think;கருதுதல். யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின்றிலம்(இலக். வி 650, உரை). 11. To regard, esteem;நன்குமதித்தல். கொளப்பட்டே மென்றெண்ணி(குறள், 699). 12. To celebrate; கொண்டாடுதல் தண்பதங் கொள்ளுந் 

கொள்வாரும் - விலைக்கு உறவு வைத்துக்கொள்ளும் பாலியல் தொழிலாளர்கள்

கள் - kaḷ   n. கள்-. [K. kaḷ.] Stealing, theft,robbery; களவு (சூடா.); மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

கள்வரும் - கள்வர் - பாசாங்குசெய்வோர்; களவு தொழில் செய்வோர்

நேர் - உடன்பாடு; உவமை; செவ்வை; நீதி; நல்லொழுக்கம்; திருந்தியதன்மை; மாறுபாடு; நீளம்; வரிசை; பாதி; நுணுக்கம்; கொடை; கதி; காண்க:நேர்விடை; தனிமை; மிகுதி; ஊர்த்துவநிலை; நிலைப்பாடு; காண்க:நேரசை; வலிமை; முன்; பிராகாரம்.

முழுப்பொருள்
ஒருவரிடம் என்ன பயன் பெறலாம் என்ன இலாபம் அடையலாம் என்று ஆராய்ந்து அணுகி உறவும் நட்பும் கொள்வாரிடம் உறவு கொள்வது என்பது எதற்கு ஒப்பு தெரியுமா? நம்மிடம் என்ன பொருளும்/பணமும் கிடைக்கும் என்று ஆராய்ந்து உடலுறவு வைத்துக்கொள்ளும் பாலியல் தொழில் செய்வோரிடமும் பிறர் பொருள்களை வஞ்சித்து களவு செய்யும் கள்வரிடமும் உறவு வைத்துக்கொள்வதற்கு சமமாகும்.

தீய நட்பைக் கூறும் அறநெறிச்சாரப் பாடல், வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குபவர்களை திருடர், தீய நட்பென்றும் கூறுகிறது. சோர்வுற்ற வழியும் எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், தாயை நிகர்வர் பெரியோர்களுக்கு. கேட்போர் மனமுருகுமாறு, வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குகின்றவர்கள், திருடரை நிகர்வர், என்பது இப்பாடலின் கருத்து. இப்பாடல்.

காய உரைத்துக் கருமஞ் சிதையாதார்
தாயரோ டொவ்வாரோ தக்கார்க்கு-வாய்பணிந்து
உள்ள முருக உரைத்துப் பொருள்கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம். (அறநெறி 47)

”பெறுவது கொள்பவர்” (நாலடி 371)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர். (நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.

மு.வரதராசனார் உரை
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

சாலமன் பாப்பையா உரை
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார்

குறள் 812
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
உறின் - உறி-தல் - uṟi-   4 v. tr. [K. uṟi.] To snuffup, sip up; உறிஞ்சுதல்

நட்டு - நடுதல் - ஊன்றுதல்; வைத்தல்; நிலைநிறுத்துதல்.

அறின் - அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

ஒரூஉம் - ஒரூஉ - ஒருவு; நீங்குகை; செய்யுளடியில்முதற்சீரிலும்மோனைமுதலியனஅமையும்தொடை.

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

இலார் -இல்லை என்றால்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

பெறினும் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

இழப்பினும் - இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.

என்? - எதற்கு ? என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
இவருடன் நட்பு கொண்டால் நமக்கு பயன் என்று (சுயநலத்துடன்) நினைத்து பழகி, (பயன் வரும் காலங்களில் அறுவடையும் செய்து) பின்பு இவருடன் இனி பழகுவதில் இனி பயனில்லை என்ற நிலையில் அவரிடம் இருந்து விலகி (அதாவது உறவில் இருந்து நீங்கி) இருப்பவரிடம் நாம் நட்புக் கொள்வதால் நாம் பெற போவது யாது? இழக்க போவது யாது? ஒன்றும் இல்லை. ஆதலால் அவருடன் நட்பென்பது தீ நட்பாகும். அப்படிப்பட்ட சுயநலவாதிகளிடம் இருந்து விலகி இருப்பதே நன்மை பயக்கும். அதுமட்டும் இன்றி நம்மிடமும் இருந்து இப்படிப்பட்ட ஒருவர் விலகி சென்றால் அதனால் நமக்கு ஒரு இழப்புமில்லை (அதுபோல அப்படிப்பட்ட சுயநலவாதிகளிடம் இருந்து நாம் பெறப்போவது எதுவும் இல்லை). அதனை நினைத்து வருந்தவேண்டாம். விடுதலை என்றே நினைத்துக்கொள்வோம்.

முன்பு நட்பாராய்தலில் நாம் நட்பு கொள்பவரை பற்றி ஆராய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஆனால் இங்கோ பயனை பற்றியும் பேசுகிறார். பார்க்க முரணாக தோன்றும். ஆனால் அப்படியில்லை. ஏனெனில் இங்கே பயன் என்று வள்ளுவர் சொல்லுவது பொருள் பயனை பற்றி. அங்கே நட்பாராய்தலில் பொருள் என சொன்னது குணங்களை பற்றி.

மேலும்: அஷோக் உரை

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு

”இலாஅர்க் கில்லைத் தமர்” (நாலடி 283)

“வாழாதார்க் கில்லைத் தமர்” (நாலடி 290)

“மாடு தானது இல்லெனின் மானுடர்
பாடு தான்செல்வா ரில்லை” (அப்பர்.கொண்டீச்சரம் 3)

“மறுமை கண்டமெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்டபின் யாவரும் யாரென விரும்பார்” (கம்ப.வருணனை.14)

“அருளுடைய யாரும்மற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை” (பழமொழி 269)

“உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்” (நாலடி 284)

“முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்” (பழமொழி 59)

“பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணின்
போற்றியென் றேற்றெழுவர்
இருள்கொள் துன்பத் தின்மை காணின்
என்னேஎன் பாரும் இல்லை” (திருவாய். 9.1:3)

“செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம் என்றுநுண் ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தா ரொருதடங் குடங்கைக் கண்ணார்” (சீவக.2535)

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே” (ஆதி உலா.136)


பரிமேலழகர் உரை
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?. மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
த போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.

சாலமன் பாப்பையா உரை
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?.

பருகுவார் போலினும் பண்பிலார்

குறள் 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பருகுதல் - குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல்.
போலினும் - தோன்றினும்
பருகுவார் போலினும்  - இன்பத்தைப் பருகுதல், நுகர்தல் போன்று இனிதாகத் தோன்றினும்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலார் - இல்லாதவர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

பெருகல் - மிகுதி
பெருகலின் - வளர்வதை விட
குன்றல் - குறைதல்; கெடுதல்விகாரம்.
இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
உடலுக்கு உபாதைகள் தரும் ஒரு உணவுப்பண்டம் உண்ண இனிமையாக இருந்தாலும் அவை நல்ல உணவு ஆகாது. அதுவும் அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லதும் அல்ல. உதாரணமாக இனிப்புகள், போதைப்பொருட்கள், கள் போன்ற போதை தரும் குடி வகைகள். இந்த உணவு வகைகள் உடலிற்கு ஆரோக்கியம் கூட்டும் குணங்கள் (பண்புகள்) அற்றவை. மாறாக உடலுக்கு காலப்போக்கில் நோயினை உண்டாக்கும்.

அதுப்போல பழகுவதற்கு இனிமையாக இருப்பினும் நல்ல பண்புகள், நல்ல குணங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், இல்லாத ஒருவரிடம் உறவு/நட்புக்கொள்வது நல்லது அல்ல (ஏனெனில் அவன் நல்ல மனிதன் அல்ல). அத்தகைய நட்பை வளர்த்துக்கொள்ளமால் குறைத்துக்கொள்வதே சிறந்தது. அதுவே ஒருவருக்கு நன்மை பயக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பருகு வன்ன காதல்” (அகநா 305:6, 399:4)
“பருகு காதலிற் பாடி ஆடினார்” (சீவக 1765)

பரிமேலழகர் உரை
[இனிப்பொறுக்கப்பட்டாத குற்றம் உடைமையின் விடற்பாலதாய நட்பு , நட்பாராய்தற்கண் சுருங்கச் சொல்லிய துணையான் அடங்காமையின் ,அதனை இரு வகைப்படுத்து இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் தீநட்புக் கூறுகின்றார்.அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு, குணத்தின் தீமை ஒற்றுமை பற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும் .]

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.).

மணக்குடவர் உரை
கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று. இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

English Meaning - As I taught a kid - Rajesh
It is best to minimize the intake of food which are good for you. Similarly it is not good to have friendship with someone who has bad qualities. It is best minimize that relationship

Even though a drink or food might be tasty to our tongue, if it is not healthy, it is better to avoid or minimize its consumption. Similarly, even if a relationship is giving some form of pleasure or good time or benefit, it is better to reduce the relationship rather than growing it. Because the losses are bigger than small insignificant gains. 

Questions that I ask to the kid
What is better to decrease than increasing? Why?
What kind of relationship is better to decrease than increasing? why?

ஒல்லும் கருமம் உடற்று

குறள் 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்
ஒல்லும் - செய்ய முடிந்த

கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

உடற்றுதல் - வருத்துதல்; சினமூட்டுதல்; போரிடுதல்; கெடுத்தல் செலுத்துதல்
உடற்றுபவர்  - கெடுப்பவர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஆடு - அசைதல்; கூத்தாடுதல் விளையாடுதல் நீராடுதல் பொருதல் சஞ்சரித்தல் முயலுதல் பிறத்தல் சொல்லுதல் செய்தல் அனுபவித்தல் புணர்தல் பூசுதல் அளைதல் தடுமாறுதல் எந்திரமுதலியவற்றில்அரைபடுதல்; விழுதல் செருக்குதல்

சொல்லாடார்  - பேச்சு

சோர் - சோர்வு; வஞ்சகம்; பகட்டு.
சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்.
சோரவிடல் - தளர்த்திவிடு

முழுப்பொருள்
நண்பர் எனப்படுபவர் நமக்கு பக்கபலமாக இருக்க வேண்டியவர். குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் தூணாக இருந்து நம்மை வழிநடத்த வேண்டியவர். முடிந்தால் உதவி செய்யவதே நட்பு. இங்கே உதவி என்பது வார்த்தைகளாலும், மனதாலும், ஊக்கத்தாலும், பொருளாலும், உடல் உழைப்பாலும் என்று தன்னால் ஏதேனும் ஒருவகையில் உதவ வேண்டும். அதுவே நல்ல நட்பாகும்.

ஆனால் நம்மால் செய்யக்கூடிய (நண்பரின் உதவியுடனோ அல்லது உதவி இல்லாமலோ) ஒரு செயலை செய்ய தடையாக இருந்து அல்லது அதனை செய்ய தடைகளை உருவாக்கும் நபருடைய உறவு/ நட்பு நமக்கு தேவையே இல்லை. அவருடனான நட்பை அவருடன் சொல்லிக்கொள்ளாமலே தளர்த்திக்கொள்ளலாம் என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக ஒரு நண்பருக்கு வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லது வெளியூருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நம்முடன் இருக்கும் நண்பர் பொறாமை குணத்தால் (வறுமையால் அல்லது நேரமின்மையால்  தன்னால்  முடியாதது அடுத்தவரும் செய்யக்கூடாது என்று எண்ணி) தன் நண்பரின் அவாவை களைக்க வஞ்சகமாக பேசி காழ்ப்பு திணித்து அந்த திட்டங்களை முறியடிப்பதுண்டு. அத்தகைய நண்பருடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. (முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' கேண்மை-ஆகும் செயலையும் ஆகாததாக்கிக் கெடுப்பவரின் நட்பை; சொல்லாடார் சோரவிடல்-அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளரவிடுக.

இனி, 'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' என்பதற்கு, தம்மால் இயலுங் கருமத்தையும் இயலாததாகக்காட்டி நடிப்பவர் என்று உரைப்பினுமாம். சோரவிடலைத் தெரிவிப்பின் ஏதேனுஞ் சூழ்ச்சி செய்து அதைத் தடுப்பராதலின், 'சொல்லாடார்' என்றும், நீண்ட காலத்தின்பின் தாமே அறிந்துகொள்ளுமாறு மெல்ல மெல்லத் தளரவிடுக என்பார் 'சோரவிடல்' என்றும், கூறினார். 'சொல்லாடார்' எதிர்மறை முற்றெச்சம். எச்சவும்மை தொக்கது.

மணக்குடவர் உரை
தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக. இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை:
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.

பேதை பெருங்கெழீஇ நட்பின்

குறள் 816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 
ஏதின்மை கோடி உறும்.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்

பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத

கெழுவு - நட்பு

பெருங்கெழீஇ - பெரு + கெழீ (கெழுவு -. பொருந்த, நிறைய) -> மிக பொருந்திய / சிறந்த

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடு நட்புச்செய்கை.

நட்பின் - நட்பு

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

அறிவுடையார் - அறிவுள்ளவர்கள்(உடன்)

ஏதின்மை - அன்னியம், பகைமை, அயலாந்தன்மை

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை

உறும் உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

கோடி உறும் - கோடி மடங்கு நன்மை பயக்கும்

முழுப்பொருள்
அறிவற்றவர்கள் /மூடர்களுடனான மிக பொருந்திய நட்பை விட அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை கோடி மடங்கு நன்று.

அதாவது அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு பல்வகை தீங்கை விளைவிக்கும். ஆனால் அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை (அன்னியத்தனம்) எந்த தீங்கும் விளைவிக்காது. ஆதலால் அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பைவிட நன்மையே.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்” (நாலடி 187)

“இழிந்த மாக்களொ டின்பம் ஆர்தலின்
உயர்ந்த மாக்களொ டுறுபகை இனிது” (பெருங் 4:4:21-2)

ஆத்திச்சூடி
பையலோடு இணங்கேல் - சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே
பேதைமை அகற்று - அறியாமையை போக்கு
சேரிடம் அறிந்து சேர் - சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் .

இணக்கம் அறிந்து இணங்கு - நற்குண நற்செய்கை உடையவர் என்பது தெரிந்து கொண்டு .

பரிமேலழகர் உரை
பேதை பெருங்கெழிஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்- அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று. 

விளக்கம் 
('கெழீஇய' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒரு தீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு' என்று பாடம் ஓதுவாரும் உளர்..) -

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதை பெருங் கெழீஇ நட்பின் - அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம்.

பேதை நட்பு பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைவிக்காமையானும், ' கோடியுறும் ' என்றார். பன்மை உயர்வு பற்றி வந்தது. ஏதின்மை' இங்கு ஏதும் அன்பின்மை. கெழி நட்பு. "ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக" என்பது நான்மணிக் கடிகை (93). கெழீஇ என்பது கெழி என்பதன் அளபெடை வடிவம். பகைவனைக் கெழீஇயிலி என்பது இலக்கிய வழக்கு (தொல். சொல். 57, இளம். உரை). பெருங்கெழீஇ நட்பு என்பது பேருழுவலன்பு என்பது போன்ற பல்சொற்றொடர். "பெருங்கழிநட்பென்று பாடமோதுவாருமுளர்." என்றார் பரிமேலழகர். அது பெருங்கெழி நட்பு என்றுமிருந்திருக்கலாம். "கெழீஇய வென்பத னிறுதிநிலை விகாரத்தாற் றொக்கது." என்று கொள்ளத் தேவையில்லை.

மணக்குடவர் உரை
அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும். இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது, 

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.