Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label கள்ளுண்ணாமை. Show all posts
Showing posts with label கள்ளுண்ணாமை. Show all posts

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

 

குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை

களித்து - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன்

என்பது -  என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

கைவிடுக - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்

நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குதல்.

ஒளித்ததூஉம் – ஒளித்த கள்ளமானது (அதாவது கள்ளுண்ணும் கள்ளம்)

ஆங்கே - ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

மிகும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்

முழுப்பொருள்
கள் உண்டு அதில் களித்து அதன் சுவை அறிந்தப்பின்பு நான் கள்ளை உண்டதேயில்லை என்று பொய்யுரைப்பதை கைவிடுக என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் நீ கள் உண்டதே தவறு, அது எப்படியோ உலகுக்கு தெரிந்துவிடும்/தெரிந்துவட்டது, இப்பொழுது கள் உண்ணவில்லை என்று பொய் உரைத்தால் உன் நெஞ்சம் அப்பொய்யை காட்டிக்கொடுத்துவிடும். ஏனெனில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா. மேலும் கள்ளின் கேடுகளை நமது உடல் காட்டிகொடுத்துவிடும். பொய் உரைப்பவன் என்னும் பெயரையும் சேர்த்து வாங்காமலாவது இருக்கலாம். 

மேலும் உண்மையை சொல்லி கள் உண்ண நெஞ்சில் திராணி இல்லை என்றால் ஏன் பொய் உரைத்து குடிக்கிறாய்? குடிக்காதே என்று கூறாமல் கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

 

குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை
உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்ணாப் - உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்;

போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

களித்தானைக் - கள்ளை உண்டு களித்திருப்போர்

கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்

உள்ளா-தல் - uḷ-ḷ-ā-   v. intr. id. +. 1.To submit; வசப்படுதல் 2. To be involved asin suffering; உட்படுதல் துன்பத்திற்குள்ளானான். 3.To become privy to an affair; உடன்படுதல் (W.)  

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

உள்ளான்கொல் -  உணர்ந்து கொள்ளமாட்டரோ?

உண்டல் - uṇṭal   n. உண்-மை. Cominginto existence; உண்டாகுகை. காட்டத்தி லங்கிவேறுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2).

உண்டதன் - கள்ளுண்டதனால் உறுகின்ற

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

முழுப்பொருள்
மதிகெட்டு உணர்வற்று கள் உண்ணுபவர் எந்நேரமும் கள் உண்ணும் (மொடா) குடிக்காரர்கள் இல்லை. அவர்கள் கண் உண்ணாத நேரத்தில் கள் உண்ணுபவர்களை காணும் பொழுது அவர்கள் படும் துன்பத்தை அவர்களிடம் இருக்கும் சோர்வை அவர்கள் வாழ்கையில் இழந்தவற்றை அவர்கள் உடல் படும் துன்பத்தை அவர்களை இவ்வூரார் இகழுவதைக் கண்டும் ஏன் திருந்தமாட்டுகிறார்கள் என்று திருவள்ளுவர் கேட்கிறார். கள் அவர்கள் மூளையை அவ்வளவு தளர்ச்சி அடைய செய்துவிட்டதா? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“கள்ளுண்போன் சோர்வின்மை பொய்” (முதுமொழி 7:3)

பரிமேலழகர் உரை
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தௌ¤ந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

 

குறள் 927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

ஒற்றி -  ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

உள்ளூர் - ஊர்நடு; சொந்தஊர்.

நகப்படுவர் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை

ஒற்றிக் - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

சாய்பவர் - சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல்.

சாய்பவர் - மயங்கியிருப்பவர்

முழுப்பொருள்
போதைப்பொருளான மதுவின, கள்ளினை மறைந்திருந்து அருந்துவோர் பிறருக்கு தெரியாது என்று நினைப்பர். ஆனால் இவன் மறைந்திருந்து உண்ணுகிறான் என்று அவன் சொந்த ஊர் மக்களுக்கு தெரிந்துவிடும். மறைந்திருந்து மது அருந்துபவனை கண்டு என்றும் ஏளனமாய் சிரிக்கும் இகழும். ஏனெனில் இப்படி மதிகேட்டு மதுவருந்துகிறானே என்று.

மறைந்திருந்து குடித்தது ஊருக்கு எப்படித் தெரியும்? முதலாவதாக கள்ளின் நாற்றம்/வாசனை. இரண்டாவதாக கள் தரும் மயக்கதால் அவனிடம் உடனடியாக தெரியும் தள்ளாடும் உடல் மொழி மாற்றங்கள் பேச்சில் தெரியும் மாற்றங்கள். மூன்றாவதாக நாளடைவில் ஏற்படும் உடலில் தெரியும் மாற்றங்கள் (உடலுக்கு வரும் உபாதைகள், முகமும் கண்ணும் இழக்கும் பொலிவு என பல மாற்றங்கள்) மற்றும் குணத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் செயலில் செயல்திறனில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கவனத்தில் தெரியும் மாற்றங்கள். இப்படி பல வழிகளில் ஊர்மக்கள் தெரிந்துக்கொள்வர்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.).

மணக்குடவர் உரை
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.

மு.வரதராசனார் உரை
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

குறள் 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்

துஞ்சினார் - உறங்கினாலும் 

செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்துசுருங்கியபனம்பழம், மிளகாய், வாழைமுதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது.

செத்தாரின் - செத்தார் -  இறந்தவர் ; மெலிந்தவர் ; 

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

நஞ்சு - விஷம்; விடம்; தீயது; குழந்தைபிறந்தபின்வெளிப்படும்தசைமுதலியன.

உண்பார் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

கள் -  மருதநிலச்சார்பு, பொய்கை, மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.;

உண்பவர் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

முழுப்பொருள்
உறங்குபவர்க்கும் இறந்தவர்க்கும் பெரிய வேறுபாடில்லை. ஏனெனில் இறந்தவராலும் ஒரு பயனும் இல்லை உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுதும் எப்பயனும் இல்லை. உறங்குவது என்றால் கண் மூடி உறங்குவது மட்டும் அல்ல. உறங்குவது என்றால் சோம்பித் திரிதல் எத்தொழிலையும் செய்யாது இருத்தல் என்றும் பொருள் கொள்ளலாம். 

உறங்கும் நிலையென்பது இறந்த நிலைக்கு சமம். உணர்ச்சியற்ற நிலை. (யோகாசனத்தில் இறுதியில் ஷவாசனா செய்வார்கள் (இறந்த நிலை) என்பதை நினைவில் கொள்ளலாம்). உறக்க நிலையில் நமது உடலின் பல பாகங்கள் செயல் இழந்தே இருக்கும். விஞ்ஞானத்தில் REM sleep என்று கூறுவார்கள். இந்த நிலையில் தசைகள் எல்லாம் செயலற்று இருக்கும். அதனை paralysis என்று கூறுவார்கள். உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது ஒருவர் தெளிவாக இருக்க மாட்டார்கள். அவர்களை சட்டென எழுப்பி உடனே ஒரு முடிவை எடுக்க சொன்னால் அவர்கள் தவறான முடிவை எடுக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர்கள் தூக்கக்கலக்கத்தில் இருந்துத் தெளிய குறைந்தபட்சம் சிறிது காலம் தேவைப்படும். 

கள் என்பதும் ஒருவித நஞ்சு. நம் இரத்தத்தில் கள் கலந்து ரத்தத்தின் அமில தன்மையை மாற்றிவிடும். ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாக மூளையையும் மற்ற அங்கங்ககளையும் செயலிழக்க செய்து அழித்துவிடும். கள் உண்பவர்களாலும் நல்ல முடிவுகளை எடுக்க முடியாது. ஆதலால் எப்பொழுதும் கள் உண்பவர்கள் நஞ்சு உண்கிறார்கள் என்றே அர்த்தம். ஆதலால் நஞ்சு உண்பவர்களும் கள் உண்பவர்களும் வேறு அல்லர். 

நஞ்சுக்கு சமமான கள்ளை உண்ணாதே என்றென்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சமென் றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தி னாரை
நஞ்சமும் கொள்வ தல்லால் நரகினை நல்கா தன்றே (கம்ப.கிட்கிந்தை 95)

பரிமேலழகர் உரை
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
இன்று சனிக்கிழமை. சாலைகளில் மக்கள் வெள்ளம் வேட்டை மிருகத்தால் துரத்தப்படுவதுபோல் விரைகிறது. அதென்னவோ சனியிரவு என்பது எங்களூர் வாரச் சம்பளத்தவர்களுக்குச் சனிபிடித்த இரவுபோல் ஆகிவிடுகிறது. 

சாலையில் நிதானமாகச் சென்றுகொண்டிருப்பவர்கள் வலது பக்க மதுக்கடையைப் பார்த்ததும் சூன்யத்திற்குக் கட்டுப்பட்டவர்போல் சடாரென்று திரும்புகின்றனர். எதிரில் வருகிறவர் அல்லது அணைந்து உடன்வந்த வாகனத்தினர் தற்காத்துத் தணிவதால் மட்டுமே ஒரு விபத்து தவிர்க்கப்படுகிறது.

நீர்க்குழாய் பொருத்துநர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். மேல்மாடியில் நெகிழித் தொட்டி நிறுவி வீட்டுக்குத் தண்ணீர் இணைப்புகள் தரவேண்டும். குழாய் விற்பனைக் கடையில்தான் அவரைப் பரிந்துரைத்தார்கள். இப்போதெல்லாம் இதுபோன்ற சிறு வேலைகளுக்கு உரிய ஆள்கள் கிடைப்பதேயில்லை. வேண்டிய பொருள்களையெல்லாம் அந்தக் கடையிலேயே வாங்கி, தானி வண்டியொன்றில் வீடு வந்து சேர்ந்தோம். சாமானங்களை இறக்கி எங்கெங்கே எப்படியெப்படிப் பொருத்துவது என்று அன்னார் யோசித்துக்கொண்டிருக்க மதியமாகிவிட்டது.

‘சாப்பாட்டுக்குப் பணம் கொடுங்க. ஐந்நூறு வேண்டும்’ என்று கேட்க ஒன்றும் பேசாமல் கொடுத்தேன். போன ஆள் போனவர்தான். காணவில்லை. குழாய் விற்ற கடைக்கு வந்து அவரின் வீடு இருக்குமிடம் கண்டுபிடித்து அருகில் சென்றால் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஆள் தலைகொள்ளாப் போதையில் இருந்தார். என்னை ‘யார் நீ ?’ என்று கேட்டார். 

பேசாமல் வந்துவிட்டேன். மறுநாள் பூனையைப்போல் வந்து சேர்ந்தார். பலரிடம் விசாரித்த வகையில் ‘இந்தப் பகுதியிலேயே பிளம்பிங் பணிக்கு இந்த ஆளை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. ஆனால் மொடாக் குடிகாரன்’ என்றார்கள். நான் என் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு ‘குடி தவிர்’ என்று போதித்தேன். கேட்டுக்கொண்டார். ஆனால், பணி முடிந்ததும் மீண்டும் கடைக்குத்தான் போகப்போகிறார். 

இவரைப்போன்று குடியால் நாசமாய்ப்போன தொழில் வித்தகர்கள் ஆயிரமாயிரம். ‘நீ என்னவாக ஆகியிருக்கத் தகுந்தவனோ, அவ்வாறு ஆகாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கும். அதில் முதலிடம் குடிப்பழக்கத்திற்கு...’ என்பது என் துணிபு. 

முன்பு நல்ல குழாய்ப்பணிக் கலைஞன் எனக்கு ஆஸ்தான பணியாளனாக இருந்தான். வேலையில் சுத்தமிருக்கும். அவனிடம் பணியை ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாக வேறு கவனத்திற்குள் திரும்பலாம். இடையில் அவனைக் காணவில்லை. அடுக்ககக் கட்டுமான நிறுவனமொன்றில் பணிக்குச் சேர்ந்துவிட்டான். அவன் தன் சம்பளமாகச் சொன்ன தொகை தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் பெறுவதற்கு நிகராக இருந்தது. வாழ்க’ என்று வாழ்த்தி அமைந்தேன். குறிப்பு : அவனுக்குக் குடிப்பழக்கம் இல்லை. 

வேறொரு சமயத்தில் குழாய்களில் படிந்த உப்பகற்ற வேண்டியிருந்தது. எங்கள் வீட்டுக் குழாய்களில் ஆறுமாதங்களுக்கொருமுறை உப்பு திரண்டுவிடும். தினத்தாளில் பெயரட்டை அளவு விளம்பரம் ஒன்றைக் கண்டேன். ‘பைப்புகளில் உப்பு அடைப்பா ? நாங்கள் நீக்கித் தருகிறோம்’ என்றிருக்கவே அழைத்தேன். 

எடுத்தவர் தாம் கேரளத்தில் இருப்பதாகச் சொன்னார். ஆனாலும் என் அன்பு அழைப்பைச் சிரமேற்கொண்டு தம்முடைய ஆள் ஒருவரை அனுப்பி வைத்து உதவுவதாகக் கூறினார். புதிது புதிதாக வரும் ஆள்கள்மீது எனக்கு நம்பிக்கையே இல்லை என்றாலும் அப்போதைக்கு வேறு வழியில்லை. ‘வரச்சொல்லுங்க’ என்றேன். வந்தவர் நாற்பதுகளில் இருந்தார். நெற்றியில் சந்தனக் குங்குமத் தீற்றல். ‘குணசீலர்போல... நம் நற்பேறு இது’ என்று மகிழ்ந்திருந்தேன். குழாயில் ஊற்றவேண்டிய அமிலக் கரைசல் மற்றும் பணிக்கருவிகளுடைய பையை ஓரமாக வைத்தார். ‘ஒரு இருநூறு ரூபாய் கொடுங்க... வேலை முடிஞ்சதும் கழிச்சிக்கலாம்’ என்றார். ஒரு மனிதனை இருநூறு ரூபாய்க்கு நம்பாமல் எப்படி ? கொடுத்தேன். 

வீட்டுச் சாலையில் இன்னும் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படவில்லை என்பதால் பிரதான இரும்புக் கதவருகில் முழங்காலளவுக் கருந்தண்ணீர் தேங்கியிருக்கும். வெளியே போனவர் வரத் தாமதமாகவே நான் யோசனைக்குள் ஆழ்ந்தேன். அரைமணி நேரம் கழித்து வந்தார். நடையில் ஒரு பின்னல் இருந்தது. ஆனால், நேராக வராமல் குழியில் தேங்கியிருந்த சாக்கடைக்குள் இறங்கி விழித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மேலேறும் முயற்சியில்

தத்தக்கா பித்தக்கா என்று முயன்றவர் ஒருகட்டத்தில் பொத்தென்று அதற்குள்ளேயே விழுந்து உட்கார்ந்துவிட்டார். இப்போது மார்பளவுத் தண்ணீரில் நீந்துகோலத்தில் காணப்பட்டார். எப்படியோ சுதாரித்து ஏறியவர் அதற்குமேல் ஒன்றும் முடியாமல் படுத்துவிட்டார். காசை வாங்கிக்கொண்டுபோய் முதல்வேலையாக மதுவுண்டு வந்திருக்கிறார். உப்படைப்பை நீக்க வந்தவர் பப்பரப்பா என்று படுத்துக்கிடக்கிறார். எல்லாரும் சேர்ந்து அவரைத் தூக்கியமர்த்தி பத்துக்குடம் தண்ணீரை மேலே ஊற்றி விதியை நொந்தபடி அவரைக் குளிப்பாட்டித் தெளிவித்து அனுப்பினோம்.

திருவள்ளுவர் ‘கள்ளுண்ணாமை’ என்ற அதிகாரத்தில் கடுமையாகக் கடிந்து எழுதியிருக்கிறார். ‘செத்த பிணம்’ என்று அவர்களை அழைக்கிறார். குடிப்பவர்கள் தங்களைத் தவணை முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்’ என்று சுந்தர ராமசாமி எழுதியது நினைவுக்கு வருகிறது. சமூகத் தீங்குகள் அனைத்திற்கும் ஆணிவேர் என்று குடிப்பழக்கத்தைச் சொல்ல வேண்டும். மதியை மயங்கச் செய்யும் மது மனித குலத்திற்கு விரோதமானது. 

தமிழ்நாடெங்கும் மது ஆறாக ஓடுகிறது. தனியொருவனுக்குத் தன்மீது கட்டுப்பாடு இல்லை. குடும்பங்கள் கடன்களில் தத்தளிக்கின்றன. கள்ளொழிக்க ஒருவழியும் புலப்படவில்லை. மதுவடிமை மனநோயாளிகளால் நிறைந்திருக்கிறது இந்நாடு.
‘கள்ளுண்பவர்கள் சோம்பித் தூங்குகின்றவர்களையும் செத்துப் பிணமானவர்களை விடவும் வேறல்லர். எப்பொழுதும் கள் குடிப்பவர்கள் நஞ்சு உண்பர்கள்தாம்.’ 
 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 

English Meaning - As I taught a kid - Rajesh
The people who are always sleeping, lethargic, not doing any work are no different from dead people because both are useless for anything. People who drink alcohol and other intoxicating beverages/drinks/narcotic drugs can be always considered as consuming poison because the drinks/drugs changes the chemicals in our blood and neurological systems thereby keeping one in a sleeping/lethargic state. It only harms the body. It doesn't do any good to the body.

Questions that I ask to the kid
Who is no different from a dead person? 
What is considered as drinking poison? 

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

அறியாமை - அறியாத்தன்மை; மடமை

உடைத்தே - உடைத்து - உடையது; இருக்கும்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கொடுத்து - கொடுத்தல் - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

அறியாமை -  அறியாத்தன்மை; மடமை

கொளல் - அதனை கொள்ள வேண்டும்

முழுப்பொருள்
கள் உண்டால் அதன் விளைவாக துன்பத்தையும் பெரியோர் இகழ்ச்சியையும் மதி குறைதலையும் அறியாத அறிவை உடையவர் கள்ளினை விலை கொடுத்து வாங்கி பருகினால் அவர்கள் உண்மையான பேதைமையை வாங்கிக்கொள்ளுகிறார்கள் என்று அர்த்தம். அதாவது கள் அறிவை வளர்க்காது அறியாமை வளர்த்தெடுக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

மு.வரதராசனார் உரை
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

குறள் 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
ஈன்(னு)-தல் - īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).

ஈன்றாள் - īṉṟāḷ   n. id. Mother; தாய் ஈன்றாள் பசிகாண்பா னாயினும் (குறள், 656).

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.

இன்னாது - தீது; துன்பு

இன்னாதால் - துன்பத்தால்

என் -  என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மற்றுச் - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

முகத்துக் - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

களி - மகிழ்ச்சி; கள்முதலியனஅருந்திக்களிக்கை; தேன்; கள்; கட்குடியன்; உள்ளச்செருக்கு; யானைமதம்; குழைவு; குழம்பு; மாவாற்கிண்டியகளி; கஞ்சி; வண்டல்; உலோகநீர்; களிமண்.

முழுப்பொருள்
ஒருவனை ஈன்ற தாய் தனது பிள்ளை செய்யும் பல குற்றங்களை பொறுத்துக்கொள்வார். ஆனால் பிள்ளை (தனக்கு தானே செய்துக்கொள்ளும் தீங்கான) கள் உண்டால் தாயின் மனமும் முகமும் துன்பத்தால் வாடும்/ தேயும். மன்னிக்கும் குணம் உள்ள தாயே கள் உண்ணுவதை ஏற்காதபொழுது தவறுகளையும் குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளாத சான்றோர் பெருமக்கள் எப்படி கள் உண்ணுவதை ஏற்றுக்கொள்வர்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்? (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

மு.வரதராசனார் உரை
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.

உண்ணற்க கள்ளை உணில்உண்க

குறள் 922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
உண்ணுதல் -உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

அற்கு - aṟku 

கிறேன், அற்கினேன், வேன், அற்க, v. n. To be permanent, to remain, endure, நிலைக்க.

உண்ணற்க - என்றும் எப்பொழுதும் உண்ணாதே ; உட்கொள்ளாத

கள்ளை - கள்  - கள்ளு, மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

உணில் - அப்படி (சொல்வதையும் மீறி) உண்டால்

உண்க - நீ அனுபவிப்பாய்

சான்றோரான் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்

எண்ணப்பட - எண்ணத்தில் , மதிப்பில்

வேண்டுதல் -  விரும்புதல்

வேண்டாதார் - விரும்பாதவராய்

முழுப்பொருள்
கள் என்னும் மதுவை உண்ணாதே என்கிறார் திருவள்ளுவர். அற்கு என்றால் நிலைத்து (எப்பொழுதும்) என்று பொருள். அற்க என்றால் என்றென்றும் வேண்டாம். ஆதலால் கள்ளினை என்றென்றும் ஒருபொழுதும் உண்ண வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர்.

அப்படி சொன்னவற்றையும் மீறி உண்டால், இதனையும் அறிந்துகொள்க (இந்த செய்தியையும் உண்க). அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவர்களாகிய சான்றோர்கள் அறிஞர்கள், கற்றோர்கள் உன் மீது கொண்ட நம்பிக்கையை மதிப்பை இழப்பாய், அவர்கள் எண்ணங்களில் நினைப்புகளில் நீ வேண்டாதவனாகிவிடுவாய். அவர்களின் பழக்கம் ஞானம் கிடைக்காது.

அப்படி சான்றோர்கள் நினைக்காவிட்டால் விரும்பாவிட்டால் என்ன? சான்றோர் உதவியின்றி நம்மால் வாழ்வில் முன்னேற முடியாது. குட்டையை போன்று தேங்கி துர்நாற்றம் அடித்து வீணாவோம். வீடுபேறு பெற சான்றோரின் பழக்கம் அவசியம்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'.

மணக்குடவர் உரை
கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.

மு.வரதராசனார் உரை
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

உட்கப் படாஅர் ஒளியிழப்பர்

குறள் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
உட்கண் - அறிவு, ஞானம்

உட்கப் படாஅர் - பகைவரால் அஞ்சபடார்; மதிக்கபடார்

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.

இழப்பர் - இழப்பார்கள்

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

கள்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை, பொய்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

கொண்டு - கொள், குறித்து

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஒழுகுவார் - நடந்துக்கொள்வோர்

முழுப்பொருள்
கள் உண்டால் உடம்பு மட்டும் இன்றி உள்ளம் அறிவு சிந்தனை ஆகியவற்றையும் சிதைத்துவிடும். ஆதலால் எக்காலத்திலும் கள் மீது இச்சை கொண்டு அதில் வேட்கையுடன் இருக்கும் அரசரை (தன் நாட்டு மக்கள் மட்டும் அல்ல) பகைவர் கூட அஞ்சமாட்டார்கள் மதிக்க மாட்டார்கள். அத்தகைய அரசன் தான் எய்திய அறிவினையும், ஞானத்தையும், பெருமையும், புகழையும், மாண்பையும், நன்மதிப்பையும், வெற்றிகளையும் இழப்பான். 

பி.கு: இக்குறள் கள் என்னும் மதுவிற்கு மட்டும் அல்ல. எவன் ஒருவன் ஒரு பொருள் மீது மோகம் கொண்டு அதில் எக்காலமும் போதை மயக்கம் கொண்டு இருக்கிறானோ அவன் தன்னுடைய மதிப்பை இழப்பான். உதாரணமாக சோம்பல் போன்றவற்றில் போதைக்கொண்டு எச்செயலும் செய்யாது இருந்தால் அவன் இதுவரை ஈன்ற எல்ல புகழையும் பொருளையும் நன்மதிப்பையும் இழப்பான்.

இவ்வாறு குடியைக் கெடுக்கும் குடியைப் பற்றி, அறநெறிச் சாரப்பாடல் சொல்லி, அதை விட்டொழிக்க வலியுறுத்துகிறது.

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையார் என்று உரைக்கும் தேசும் – களியென்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவையெல்லாம்,
விட்டொழியும் வேறாய் விரைந்து. (அறநெறி.144)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி, ஒழுக்கமும் உணர்வும் அழிதற்கண் அவ்வரைவில் மகளிரோடு ஒப்பதாய கள்ளினை உண்ணாமையது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறுகின்றர்.]

கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை 
பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

மு.வரதராசனார் உரை
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

சாலமன் பாப்பையா உரை
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

களித்தானைக் காரணம் காட்டுதல்

குறள் 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
களி - மகிழ்ச்சி; கள்முதலியனஅருந்திக்களிக்கை; தேன்; கள்; கட்குடியன்; உள்ளச்செருக்கு; யானைமதம்; குழைவு; குழம்பு; மாவாற்கிண்டியகளி; கஞ்சி; வண்டல்; உலோகநீர்; களிமண்.
களித்தானைக் -

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

காட்டுதல்- காண்பித்தல், அறிவித்தல், நிரூபித்தல், நினைப்பூட்டுதல், பிரதிபலிக்கச்செய்தல், உண்டாக்குதல்

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

நீர்க் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

குளி - குளித்தல்; முத்துக்குளி.
குளித்தானைத்
தீத் - காயச்செய்தல், காந்தவைத்தல், பயிர்முதலியன கருகச்செய்தல்
துரீ - நெசவுப்பாவாற்றி (நெய்வார்குச்சு)
இயற்று - பாத்திரம்

முழுப்பொருள்
கள் (மது)  உண்டு மகிழ்ச்சி கொள்ளுபவனிடம் வெறிக்கொள்ளுபவனிடம் நீ குடிக்காதே, அது உன் உடம்புக்கு நல்லது அல்ல என்று காரணங்கள் கூறி அவனுக்கு அறிவுரை சொல்வது என்பது நீருக்குள்ளே (ஆறுக்கு உள்ளே, கடலுக்கு உள்ளே, ஏரிக்குள்ளே, கிணற்றுக்குள்ளே) குளிக்கும் நபரை தீப்பந்தம் வைத்துக்கொண்டு தேடுவது போலாகும். இத்தகைய கீழ்மக்களுக்கு வெளிச்சமே தெரியாது. இவர்கள் வெளிச்சம் புகாத இருளில் உள்ளார்கள்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தௌ¤வித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தௌ¤வித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு வெறித்தவனை இது தகாதென்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைக் தீத்துரீஇய அற்று- நீர்க்குள் முழுகினவனை விளக்கொளியால் தேடிப்பார்த்தலை யொக்கும்.

விளக்கொளி நீருட் செல்லாது போன்று ஏதுரை கட்குடியன் மனத்துட் செல்லா தென்பதாம். களித்தானைக்காட்டுதல் என்பது களித்தானுக்குக் காட்டுதல் என்று பொருள்கொள்ளின் வேற்றுமை மயக்கமும் , களித்தானைக் காணச் செய்தல் என்று பொருள் கொள்ளின் வேற்றுமையியல்பும் , ஆம். இங்ஙனமே 'அவளைக் காட்டென்றானோ' என்னுங் கலித்தொகைத் தொடருங் கொள்ளப்படும் (72). 'கீழ்நீர'் இலக்கணப்போலி. 'துரீஇ' இன்னிசையளபெடை. இக்குறளால் அடிப்பட்ட கட்குடியனைத் திருத்த முடியாமை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.

மு.வரதராசனார் உரை
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

நாணென்னும் நல்லாள்

குறள் 924
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
[பொருட்பால், நட்பியல்,கள்ளுண்ணாமை]

பொருள்
நாண் பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாணம் எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல் 

நாணுதல் வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

என்னும் -  என்கிற குணத்தினை (உடைய); யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

நல்லாள் - குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர்.

புறம் வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

கொடுத்தல் ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

புறங்கொடுத்தல் - தோற்றோடுதல், புறங்காட்டுதல்.

கள் - மருதநிலச்சார்பு, பொய்கை, மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

என்னும் - என்கிற;  யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்
பேணாமாக்கள் - அகதிகள்.பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் (மணி. 28, 223).

பேணா - பேணக்கூடாத; விரும்பக்கக்கூட கூடாத

பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.
குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு
குற்றத்தார்- குற்றம் செய்தவர் 
பெரும்குற்றத்தார்க்கு - பெரும் குற்றம் செய்பவர்



முழுப்பொருள்
நாணம் என்பது ஒரு கெட்டச் செயலை எதிர்க்கொள்ளாமல் வெட்கப்பட்டு பின்வாங்கும் ஒரு கூச்ச உணர்வு. அத்தகைய குணத்தை கொண்ட ஒரு பெண் நல்ல பெண் ஆவாள். 

கள் உண்ணுவது என்றென்பது சான்றோர்கள், மேன்மக்கள் ஏன் உலகத்தார் யாவரும் இகழும் (கள்ளை காணுவதற்கே அஞ்சும்) ஒரு செயலாகும். கள்ளுண்ணுவது என்பது ஒழுக்கக் கேட்டை மட்டுமன்றி உயிர்க் கேட்டையும் உண்டாக்கும் / விளைவிக்கும். ஆகையால் கள்ளுண்டல் ஒரு மாபெரும் குற்றமாகும். ஆதலால் கள் உண்ணுவதில் இருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும். ஆதலால் தான் பேணா என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

அத்தகைய பெருங்குற்றமான கள்ளுண்டல் செயலை செய்யும் ஒருவரை பெற்ற தாய்க் கூட வெறுப்பாள். நாணம் கொண்ட ஒரு நல்ல பெண் ஒருவர் கள்ளுண்டல் செய்தால் விரும்பமாட்டாள். ஆதலால் கள்ளுண்ணும் நபரை அன்னியமாக கருதி அவரிடம் இருந்து விலகிச் செல்வாள். கள்ளுண்டல் அறத்திற்கு எதிரானது. ஆதலால் புறங்கொடுக்கும் என்று கூறினார் திருவள்ளுவர். 

மற்றொன்று, கள்ளுண்டலை எதிர்க்காதவள் நல்லாள் ஆக மாட்டாள் என்றும் பொருட்கொள்ளவேண்டும்.

ஆகையால் கணவன்மார்களுக்கு ஊற்றிக்கொடுக்கும் பெண்கள் நல்லாள் ஆக மாட்டார்கள்.

பி.கு: "சில்லுன்னு ஒரு காதல்" படத்துல ஜோதிகா சூர்யாவுக்கு அளவா ஊத்திக் கொடுப்பதெல்லாம் ரொம்ப தப்பு (என்கிறார் திருவள்ளுவர்). :)

 


ஒப்புமை
”காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர
நாணாது சென்று நடுங உரைத்தாங்கு” (கலி.115:2-3)

பரிமெலழகர் உரை 
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு . கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். 

விளக்கம் 
(காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும், பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு- கள்ளுண்டல் ஆகிய பழித்தற்குரிய பெருங் குற்றத்தைச் செய்தவர்க்கு; நாண் என்னும் நல்லாள் புறம் கொடுக்கும் - நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள்.

பெற்ற தாய்க்கும் வெறுப்பை விளைத்தலின் 'பேணா' என்றும், ஒழுக்கக் கேட்டை மட்டுமன்றி உயிர்க் கேட்டையும் உண்டாக்குதலின் 'பெருங்குற்றம்' என்றும் , கள் வெறியர் மானத்தை அறவே இழந்து விடுதலின் 'நாண்.......புறங்கொடுக்கும்' என்றும், கூறினார். 'நல்லாள்' என்பது அழகுபற்றிப் பெண்ணிற் கொருபெயர். 'நல்லபிள்ளை' என்னும் உலக வழக்கையும், மைப்படு மழைக்கணல்லார் (சீவக.2881) என்னும் செய்யுள் வழக்கையும், நோக்குக.நாண் மென்மைக் குணமாதலின் பெண்ணாக வுருவகித்தார். "பெண்பாலாக்கியது வடமொழி முறைமைபற்றி" என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. 'கள்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் கள்ளுண்டல் ஒளியிழத்தற்குக் கரணியமென்று கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது. 

மு.வ உரை
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

Long Term Effects of Alcohol - Refer Wiki (click it)

Alcohol's Effects on the Body (Courtesy: NIAAA.NIH.GOV - National Institute on AlcohoL Abuse and Alcoholism)
Drinking too much – on a single occasion or over time – can take a serious toll on your health.  Here’s how alcohol can affect your body:

Brain:
Alcohol interferes with the brain’s communication pathways, and can affect the way the brain looks and works. These disruptions can change mood and behavior, and make it harder to think clearly and move with coordination.  

Heart:
Drinking a lot over a long time or too much on a single occasion can damage the heart, causing problems including:

- Cardiomyopathy – Stretching and drooping of heart muscle
- Arrhythmias – Irregular heart beat
- Stroke
- High blood pressure  
- Research also shows that drinking moderate amounts of alcohol may protect healthy adults from developing coronary heart disease.

Liver:
Heavy drinking takes a toll on the liver, and can lead to a variety of problems and liver inflammations including:

- Steatosis, or fatty liver
- Alcoholic hepatitis
- Fibrosis
- Cirrhosis
- Pancreas:

Alcohol causes the pancreas to produce toxic substances that can eventually lead to pancreatitis, a dangerous inflammation and swelling of the blood vessels in the pancreas that prevents proper digestion. 

Cancer:
Drinking too much alcohol can increase your risk of developing certain cancers, including cancers of the:

- Mouth
- Esophagus
- Throat
- Liver
- Breast

Immune System:
Drinking too much can weaken your immune system, making your body a much easier target for disease.  Chronic drinkers are more liable to contract diseases like pneumonia and tuberculosis than people who do not drink too much.  Drinking a lot on a single occasion slows your body’s ability to ward off infections – even up to 24 hours after getting drunk.

Note for Pregnant Women: 
Fetal alcohol exposure occurs when a woman drinks while pregnant.  No amount of alcohol is safe for pregnant women to drink. Nevertheless, data from prenatal clinics and postnatal studies suggest that 20 to 30 percent of women do drink at some time during pregnancy.