குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
[பொருட்பால், குடியியல், உழவு]
பொருள்
உழவினார் - உழவு செய்யும் விவசாயிகள்/மக்கள்
கைம்மடங்கின் - உழவுக்கு ஏர்பிடித்து, நாற்று நட்டு, களை பறித்து, கதிர் அறுத்தல் முதலிய வேலைகளுக்கு கைகளை மடக்குதல்- உழவு வேலை செய்தல்
இல்லை - இல்லாமல் போனால்
விழைவு - விருப்பம்
உம் - எதிர்மறையும்மை
விழைவதூஉம் - நாம் விருப்ப படாத
விட்டு - ஆகாசம்
விட்டேம் - ஆகாசத்தை பார்த்துக்கொண்டு
என்பார்க்கு - இருக்க வேண்டிய
நிலை - நிலை வந்துவிடும்
முழுப்பொருள்
விவசாயிகள் ஏர்பிடித்து, நாற்று நட்டு, களை பறித்து, கதிர் அறுத்து விவசாய்ம் செய்வர். அப்படி தன்னை வருத்திக்கொண்டு உழவு தொழில் செய்து இவ்வுலகிற்கே உணவு படைப்பார்கள். அப்படிபட்ட உணவையே நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணுகிறோம். நம்மை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? எதுவும் வேண்டாம் என்கிற துறவியார்கள் கூட உணவு உண்டு தான் ஆகவேண்டும்
ஆனால் அவ்விவசாயிகள் உழவு தொழிலை செய்யவில்லையென்றால் நமக்கு உணவு கிடைக்காது. உணவிற்கு வானத்தை பார்த்து தான் நாமும் ஏன் துறவிகள் கூட இருக்க வேண்டும். அந்நிலையை நாம் நினைவில் நிறுத்துக்கொள்ள வேண்டும். இல்லையே உயிர் வாழ்தல் கடினமாகி விடும்.
ஆதாலால் அந்நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது விவசாய நிலங்களை அபகரித்து வீடு கட்டுதல் கூடாது, ஆறுகளை அறுத்து மணல் வாரி தண்ணீர் பஞ்சத்திற்கு வழிவகுக்க கூடாது, நிலத்தடி நீரை ரசாயனம் கலந்து மாசு செய்ய கூடாது, மரங்களை வெட்டி மழை நீரை இல்லாமல் ஆக்க கூடாது.
உழவின் உழவோரின் சிறப்பை சொல்லும் குறள் இது.
எழுத்தாளர் ஜெயமோகன்’இன் ” அழியா இளமைகள்” கட்டுரையில் இருந்து சில வரிகள் பூனா நோக்கிச் செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு வசந்தகுமார் ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார். வண்டி நின்றது. நாஞ்சில் நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார். கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டு போல உறுமியது. நாஞ்சில்நாடன் வயலின் புதுதானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி ஊதி வாயிலிட்டு மென்றார். புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார். அவர் நான் அறிந்த எழுத்தாளன் அல்ல. அந்தச்சட்டையை உருவிப்போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்
நாஞ்சில்நாடன் வேளாண்மையைப்பற்றி சில கேள்விகளைக் கேட்பதற்குள்ளாகவே பெரியவர் பொரிந்துகொட்டித்தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான். ஆனால் வேறுவழியே இல்லை, விவசாயம் செய்தாகவேண்டும். மகன்கள் ஏன் விவசாயம் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமலில்லை. ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.
”இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது. எறும்புகளோ எலிகளோ பறவைகளோ கூட சாப்பிடலாம். விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றை எல்லாம் பட்டினி போடுவது அல்லவா?” என்றார் பெரியவர். நாஞ்சில்நாடன் கண்கலங்கிவிட்டார். அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க கேட்டுக்கொண்டே இருந்தார்.
பரிமேலழகர் உரை
உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.
விளக்கம்
(உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உழவினார் கை மடங்கின்- உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; விழைவதும் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை- மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம்.
உழவுத் தொழில் நிகழாதாயின் உணவில்லை. உணவில்லையெனின் இல்லறம் துறவறம் ஆகிய ஈரறமும் நிகழா என்பதாம். "யாவரும் விழையுமுணவும் யாந்துறந்தே மென்பார்க்கு அவ்வறத்தின்கணிற்றலுமுளவாகா." என்றுரைப்பர் பரிமேலழகர்.உணவும் யாந்துறந்தே மென்பார்க்கு உணவின்மையால் யாதொரு.கேடுமிராதாதலின், அவ்வுரை தன்முரணா யிருத்தல் காண்க. இனி, "யாதொரு பொருளின் கண்ணும் விரும்புவதனையும் விட்டேம் என்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை." என்னும் மணக்குடவ ருரையும், அங்ஙனமே தன் முரணாயிருத்தலாற் பொருந்தாதாம். 'விழைவதூஉம்' இன்னிசை யளபெடை. எனபார்க்கும் என்னும் எச்சவும்மை தொக்கது. இவ்வைந்து குறளாலும் உழவரது சிறப்புக் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை
உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை.
எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு.
மு.வ உரை
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
தமிழர்களின் அறிவுத் தந்தை வள்ளுவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேர்ந்தாற் போல் அவரை ஒரு பத்துத் தினங்கள் சந்திக்க இயலாமல் போனது. ஆவலுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் என்னை திரும்பிப் பார்க்கவே சிறிது நேரம் ஆனது.
என்ன நீண்ட நாட்களாக உன்னைக் காணவில்லையே. எங்கே போயிருந்தாய் என்றார்.
அய்யா ஒரு பெரிய துறவியைக் கண்டு வணங்கச் சென்றிருந்தேன் என்றேன்.
மிகப் பெரியவரா என்றார் வள்ளுவப் பெருந்தகை
ஆமாம் என்றேன்
எப்படி என்றார்
நான்மறைகளிலும் தேர்ந்தவர். மிகப் பெரிய ஞானி என்றேன்.
வள்ளுவர் சிரித்துக் கொண்டே அருகில் இருக்கின்ற கழனியிலே உழுது கொண்டிருந்த ஒரு
உழவரைக் காண்பித்து இவரை விடவா பெரியவர் என்றார். எனக்கோ வியப்பாயிருந்தது.
என்ன சாமி இவர் வேளாண்மைத் தொழிலாளி. அவரோ உலகஞானி. எத்தனை பெரிய பீடத்தின் குரு.எத்தனை சமூகப் பெரியவர்கள் எல்லாம் அவரின் முன்னர் பணிந்து நிற்கின்றனர். குடியரசுத் தலைவர்கள் தலைமை அமைச்சர்கள் விஞ்ஞானிகள் என்று பல தரப்பட்டவரும் அவரைத் தொழுது பணிந்து நிற்கின்றனர். நீங்கள் ஒரு வேளாண் தொழிலாளியைக் காண்பித்து இப்படிக் கேட்பது எப்படி என்றேன்.
மீண்டும் பொது மறைப் பெரியோன் கேட்டார். என் வினாவிற்கான விடையை சொல்
என்றார்.
நான் விடையளிக்க அஞ்சி நின்றேன்.
உலகச் சிந்தனைத் தந்தை வள்ளுவர் நகைத்துக் கொண்டே சொன்னார். இந்த வேளாண் தொழிலாளி ஆமாம் இந்த உழவன் தனது கையை மடக்கித் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள் உயிர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியும் கூட பசித் துன்பத்திற்கு ஆளாகி விடுவார்.
இப்போது சொல் யார் பெரியவர்.எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியா உழவரா யார் பெரியவர் என்றார்.
அவருக்கு விடையளிக்க யாரால் இயலும்
குறள் இதோ
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
துறவறத்தை வள்ளுவர் கேலி செய்யும் பாங்கு விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்கின்றார்.
குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்) வள்ளுவரை அடிக்கடி நான் சந்திக்கின்றேன்
வாய்ப்பதனை நானே தான் பெற்றும் உள்ளேன்
உள்ளு தொறும் உள்ளுதொறும் உயர்வளிக்கும்
உண்மை வழி அவர்தானே காட்டி நின்றார்
கள்ள மனம் ஒழித் தவர்தம் முன்னால் நின்றால்
கனி வழியாம் தனி வழியைக் காட்டுவாரே
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் அனைவருக்கும்
தெளிந்த வழி காட்டியவர் அவரே தானே
உலகத்தில் முதன்மை இடம் யாருக்கென்று
உழன்ற படி வள்ளுவரின் முன்னே நின்றேன்
சில கற்றுப் பல கல்லாச் சிறுவன் என்னைச்
சிரித்த படி வரவேற்றார் கேள்வி வைத்தேன்
பல கற்று உலகத்தை வென்று நின்ற
பண்டிதர்கள் பலர் உண்டு படையெடுத்து
உலகத்தை தன் குடைக் கீழ் கொண்டு வந்த
ஒன்றிரண்டு மன்னர் உண்டு மேலும் நல்ல
சிலை வடிக்கும் சிற்பி உண்டு சிந்தனையால்
செம்மாந்து நிற்கின்ற கவிஞர் உண்டு
விலையில்லாக் கலைகள் உண்டு நாட்டையாளும்
வித்தகர்கள் பல பேர்கள் உண்டு உண்டு
நிலையில்லா வாழ்விதனை விட்டு நீங்க
நினைக்கின்ற துறவியரோ நிறைய உண்டு
கல கலவென்றே சிரித்து அனைவரையும்
கையெடுத்து ஆளுகின்ற பெண்டிர் உண்டு
இவர்களிலே யார் உயர்ந்தோர் என்று ஒரு
இடக்கு மடக்கான கேள்வி கேட்டு வைத்தேன்
அவர் உடனே வயற் காட்டைக் காட்டி நின்றார்
அங்கொருவர் உழுது நின்றார் என்ன என்றேன்
தவ வேட ஞானியரும் கூட இங்கே
தடம் மாறிப் போவார்கள் உழவன் மட்டும்
அவன் கையை மடக்கித் தலைக் கீழே வைத்து
அப்படியே படுத்து விட்டால் ஒழிந்ததெல்லாம
துறந்து விட்டோம் என்பாரோ துயில் இழப்பார்
தொல் புகழின் புலவோர்கள் புகழ் இழப்பார்
இறந்து பட்டோர் புகழினிலே வாழ்வோரெல்லாம்
இரந்து நிற்போர் கூட்டத்தில் இணைந்து நிற்பார்
பரந்து பட்டுப் பாராள்வோர் பல்லிளிப்பார்
பாவியராய் அனைவருமே மாறி நிற்பார்
உழந்து நிற்கும் உழவன் அவன் இல்லையென்றால்
உலகம் இல்லை உயிர்கள் இல்லை ஒன்றும் இல்லை
குறள்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
குறட் கருத்து 3 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்) எல்லாமும் துறந்து விட்டேன் என்று சொல்லி
இருப்பாரும் தலைவர்களும் அமைச்சர்களும்
நல்லாரும் ஒழுக்கமின்றிப் பொருளைச் சேர்க்கும்
நாகரீக மற்றாரும் வாழ எண்ணி
பொல்லாத செயலெல்லாம் செய்தழியும்
பொறுப்பற்ற அரசியலார் கூட்டமெல்லாம்
செல்லாமல் அழிவார்கள் உழவர் மட்டும்
செய் தொழிலை மறந்தங்கு உறங்கச் சென்றால்