“நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு” என குரு சொன்னதையே தானும் உரைத்தாள்
பார்வதி பாய் தோலுறையிட்ட சிறிய டச்சு நாற்காலியில் அமர்ந்தாள். “ராமா உன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. நான் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை” என்றாள்.
“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார் ராமவர்மா.
“நான் நீ வழக்கம்போல சங்கீதத்தில் மூழ்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றார்கள். உன் உடல்நிலை எப்போதுமே மோசமாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் பார்வதி பாய். “நான் உன்னை வந்து பார்ப்பதே உனக்குப் பிடிக்கவில்லை. சென்றமுறை வந்தபோது மிகவும் கொந்தளித்துவிட்டாய். ஆகவே நான் வராமலிருந்தேன்…”
ராமவர்மா கட்டில்மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டார்.
“மிகமிக மெலிந்துவிட்டாய். உன் கைகளும் கால்களும் சுள்ளிபோலிருக்கின்றன” என்று பார்வதி பாய் சொன்னாள். “நான் உன்னை அப்படியே விட்டிருக்கக்கூடாது…”
“நீங்கள் கவலைப்படவேண்டாம் இளையம்மை.”
“நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்? நான் என் அக்கச்சிக்கு கொடுத்த வாக்கு… அக்கச்சி என்னை மன்னிக்கமாட்டார்”
“அக்கச்சி அக்கச்சி… வேறு பேச்சே இல்லையா? உங்கள் வாழ்க்கையே உங்கள் அக்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்தானா?”
நிதானமாக “ஆம், அந்த வாக்குறுதி மட்டும்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள். “ஆகவேதான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தேன். என் ரத்தத்தில் இருந்து அவர்கள் பிறந்தால் அதிகார ஆசை கொண்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்டேன். வைத்தியர்களிடம் கேட்டு குழந்தையில்லாமல் ஆக்கிக்கொண்டேன். ராகவ வர்மா கோயில்தம்புரானுக்கும் இது தெரியும். திசைதிரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கடையும் என்று என் ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.”
“வெறும் இலக்கு, அவ்வளவுதானா வாழ்க்கை?”
“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”
“அவ்வளவுதான் வாழ்க்கை என்றால் அதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. அதை ஏன் வாழ்ந்து தொலைக்கவேண்டும்?” என்று தலைகுனிந்து ராமவர்மா முணுமுணுத்தார்.
“சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”
“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது”
“என்ன பேச்சு இது? உன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அரசர்கள் பொதுவாக பட்டத்திற்கு வரும் வயது இது…” என்றாள் பார்வதி பாய்.
“எனக்கு சலித்துவிட்டது. பதினேழு ஆண்டுகள் இந்த கூண்டுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருக்கிறேன்… நேற்று நினைத்துக்கொண்டேன், என் சிறகுகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இப்போது இந்தக்கூண்டை திறந்துவிட்டால்கூட என்னால் பறக்கமுடியாது”
“இந்தமாதிரிப் பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். எல்லார் மனதிலும் ஊக்கமும் சோர்வும் நம்பிக்கையும் கசப்பும் விதைகளாக உள்ளன. அதில் நமக்கு வேண்டியதை பேசிப்பேசி வளர்த்துக்கொள்கிறோம். உன்னுடைய சோர்வையையும் கசப்பையும் வளர்த்துக்கொள்வதை தவிர வேறென்ன பயன்?”
“இளையம்மை, நான் இந்த பதினேழு வருடங்களில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா?”
“அது உன்னுடைய சிக்கல்… நீ ஒரு நாட்டின் அரசன். அந்தக் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் அத்தனை மகிழ்ச்சிகளும் உன்னைத் தேடி வந்திருக்கும். உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்யவில்லை. ஆகவே ஒவ்வொன்றும் சிக்கலாகி உன்னை சுற்றிக்கொண்டன.”
“நான் என் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் ரெஸிடென்ட் கல்லன் என்னை போற்றி மடிமேல் வைத்து கொஞ்சியிருப்பாரா?”
“இல்லை, நீ அவரை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பாய்” என்று பார்வதி பாய் சொன்னாள். “அரசாட்சி என்பது ஒரு போர், ஒரு விளையாட்டு. அதில் எதிரிகள் உண்டு. நம் ஆட்டத்தை தீர்மானிப்பவர்கள் எதிரிகள்தான்.”
ராம வர்மா தலையை பொறுமையின்றி அசைத்தார்.
“நான் என் அக்கச்சியிடமிருந்து இந்த நாட்டின் ரீஜண்ட் மகாராணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது பதிமூன்று. அன்று இங்கே ரெஸிடெண்டாக இருந்தவர் கர்னல் மன்றோ… இன்றுகூட திருவிதாங்கூரில் அவர் பெயரைச் சொன்னால் அச்சமும் வெறுப்பும் பக்தியும் கலந்து உருவாகிறது. அவர் பத்து கர்னல் கல்லன்களுக்கு சமம்” என்று பார்வதிபாய் தொடர்ந்தாள்.
“கர்னல் மெக்காலே வேலுத்தம்பி தளவாயை ஒடுக்கியவர். அவருக்கு திறமை போதவில்லை என்று சொல்லி மலபாரில் இருந்து கர்னல் மன்றோவை இங்கே அனுப்பினார்கள். அவரை இங்கே இரும்புச்செக்கு என்று சொல்வார்கள். திருவிதாங்கூரை பிழிந்து கடைசித்துளிவரை கொண்டு செல்வதற்காகவே கம்பெனி அவரை அனுப்பியது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானை வென்று மைசூரை ஆட்சிசெய்தவர் அவர். மராத்தா போர்களில் பங்கெடுத்தவர். ரெஸிடென்ட் கல்லன் அவருடன் ஒப்பிடுகையில் ஒரு வயதால் குழம்பிப்போன கிழவர் மட்டும்தான்.
“என் அக்கச்சியின் காலத்திலேயே கர்னல் மன்றோ நேரடியாகவே திருவிதாங்கூரின் திவானாக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கு என் அக்கச்சி மன்றாடி விண்ணப்பிப்பதாக ஒரு கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டார். நான் ரீஜண்ட் ஆக வந்தபோது அவர்தான் ரெஸிடென்டும் திவானும் எல்லாமே… பாப்பு ராவ் என்று ஒரு அடிமையை வைத்து எல்லாவற்றையும் அவரே செய்தார். நான் உலகம் தெரியாத சின்னப்பெண். உன்னைப்போல ஆங்கிலக் கல்வி உடையவள் அல்ல. என் துணைக்கு யாருமே இல்லை” பார்வதி பாய் தொடர்ந்தாள்
“ஒரு சின்ன பிழை செய்தால் போதும் நாட்டை வெள்ளைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். மிகமிகக் கவனமாக நான் செயல்பட்டேன். கர்னல் மன்றோவை எனக்கான எதிரியாக அல்ல, என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான களமாகவே நான் எடுத்துக்கொண்டேன்
முதலில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் அவருக்கு எதிரி யார் என்பதை ஒற்றர்கள் வழியாக அடையாளம் கண்டேன். அந்த எதிரிகளின் காதில் அவரைப்பற்றிய எதிர்மறைச் செய்திகளை போட்டுக்கொண்டே இருந்தேன். கர்னல் மன்றோ இங்கே திவானாக இருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கிறார் என்று கெட்டபெயரை உருவாக்கினேன்.
“உண்மையைச் சொல்வதற்கு என்ன, கர்னல் மன்றோ மிகமிகமிக நேர்மையானவர். ஈவிரக்கமற்றவர், ஆனால் ஊழலே இல்லாதவர். ஆனால் அவரை ஊழல்செய்கிறார் என்று முத்திரை குத்தினேன். ஒரு நேர்மையாளன் நேர்மையற்றவன் என்று சொல்லப்படும்போது சமநிலை இழக்கிறான். கர்னல் மன்றோ அவருக்கு கவர்னர் எழுதிய கடிதங்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். மெட்ராஸ் கவர்னர் கர்னல் மன்றோமேல் ஒரு விசாரணையை ஆணையிட்டார். அவர் திவான் பதவியிலிருந்து விலகினார்” பார்வதி பாய் சொன்னாள்.
“நான் மேலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தேன். அவருடைய மகன் இங்கே காப்டன் பதவியில் இருந்தான், அவர் அவனுக்காக நெறிகளை மீறுகிறார் என்று பழிகிளப்பிவிட்டேன். கர்னல் மன்றோ மெல்ல மெல்ல இங்கிருந்து விலக்கப்பட்டார். ஆயிரத்தி எண்ணூற்றி பதினெட்டில் அவர் லண்டன் திரும்பும்போதுகூட அவர் அவமானமடைந்து இங்கிருந்து சென்றதற்கு நானே காரணம் என்று அறிந்திருக்கவில்லை. அதுதான் ராஜதந்திரம்”
“அதை நான் என் சொந்த லாபத்திற்காகச் செய்யவில்லை. அவருக்குப்பின் வந்த ரெஸிடென்ட் மோரிசன் எனக்கு உகந்தவராக இருந்தார். கர்னல் மன்றோவைப்போல அவர் திருவிதாங்கூரை கறவைப் பசுவாக மட்டும் நினைக்கவில்லை. ஆகவேதான் நான் மலைக்குடியேற்றங்களை வளர்க்கமுடிந்தது. கடலோரச்சந்தைகளை உருவாக்க முடிந்தது. திருவிதாங்கூரை கடனில் இருந்து மீட்டேன். இன்று நீ காணும் கல்விவளர்ச்சி, பட்டினியில்லா நிலைமை இரண்டுமே அப்படித்தான் உருவாகி வந்தன” என்றாள் பார்வதி பாய்.
தலைகுனிந்து அமர்ந்திருந்த ராமவர்மாவை பார்த்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள் “கர்னல் மன்றோ இரக்கமற்றவர், ஆகவே நானும் இரக்கமற்றவள் ஆனேன். ஏனென்றால் கூரிய வாளை கூரியவாளால்தான் எதிர்க்கமுடியும். அதுதான் அரசாட்சி” மெல்லிய சிரிப்புடன் “நீ என்ன நினைத்தாய், உன் ஆட்சியை உனக்கு தட்டில் வைத்து பரிமாறுவார்கள் என்றா? எந்த அரசாவது எவருக்காவது அப்படி அளிக்கப்பட்டிருக்கிறதா?” என்றாள்.
ராமவர்மா பெருமூச்சுவிட்டார். “நான் அரசனாக ஆகும்போது எத்தனையோ கனவுகளுடன் இருந்தேன். கீழ்மட்ட ஊழலை முழுக்க நீக்கம் செய்யவேண்டும், அத்தனைபேருக்கும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வரும்படி நீதி முறையை கொண்டு வரவேண்டும், வணிகப்பாதைகளை முழுக்கமுழுக்க பாதுகாப்பாக அமைக்கவேண்டும்… எத்தனையோ திட்டங்கள் வகுத்தேன்”
“அதற்கு நீ என்ன செய்தாய்?” என்று பார்வதி பாய் கேட்டாள். “உனக்கு ஆசிரியராக இருந்த சுப்பா ராவை திவானாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாய். ஏனென்றால் அவரிடம் உன் கனவுகளை எல்லாம் சொல்லியிருந்தாய். அவர் அவற்றையெல்லாம் ஆதரித்தார். நானும் ரெஸிடென்ட் மோரிசனும் அதை எதிர்த்தோம். ஏனென்றால் எங்களுக்கு சுப்பாராவ் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ரெஸிடென்ட் மோரிசன் மாறுதலாகிப் போனதுமே நீ நான் நியமித்த திவான் வெங்கிட்டராவை பதவிநீக்கம் செய்தாய். உன் ஆசிரியர் சுப்பாராவை திவானாக ஆக்கினாய். அவர் சொன்னார் என்று கொச்சு சங்கரப்பிள்ளையை திவான் பேஷ்காராக நியமித்தாய்…”
“ஆமாம், நான் அரசன். என் அரசை நான் உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்.”
“உண்மை, ஆனால் உன் கனவுகளை நிறைவேற்றும் தகுதி நீ நியமித்த அமைச்சருக்கு இருக்கிறதா என்று பார்த்தாயா? அவர் வெறும் ஆசிரியர். ஒரு நிர்வாகி கீழிருந்து படிப்படியாக மேலேறி வரவேண்டும். பலமுறை இதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். திவான் என்பவர் அரசின் முக்கியமான எல்லா துறைகளிலும் சில ஆண்டுகளாவது வேலை செய்திருக்கவேண்டும்… ” என்றாள் பார்வதி பாய்.
“சுப்பாராவ் முயற்சி செய்தார்” என்று ராமவர்மா சொன்னார்.
“சுப்பராவ் அத்தனை செயல்களையும் அரைகுறையாகவே செய்தார். உன் எண்ணங்களை எல்லாம் வெறும் ஆணைகளாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தாய். மாதம் ஐந்தாறு அரசாணைகள்… அந்த ஆணைகள் நிறைவேறினவா என்று நீ பார்க்கவில்லை. அவை என்ன விளைவை உருவாக்கின என்று நீ கவனிக்கவில்லை. அவை வெறும் சந்தைப் பேச்சுக்களாகவே நீடித்தன..” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.
“பதினேழு ஆண்டுக்குமுன் நான் உன்னிடம் சொன்னேன். ஒன்றை நினைப்பதும் சொல்வதும் அல்ல அதை செய்வதுதான் அரசாட்சியில் முக்கியம். நினைக்கையிலும் சொல்லும்போதும் நம்முன் எவருமே இல்லை. செய்ய ஆரம்பிக்கும்போது அதற்கு எதிரான எல்லா சக்திகளும் எழுந்து வருகின்றன. அவற்றை கையாளத் தெரியவேண்டும்”
“அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்றால் அதிகாரிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா?” என்று ராமவர்மா உரக்க கேட்டார்.
“இல்லை. ஆனால் நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்… ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது” என்றாள் பார்வதி பாய் “ஆமாம், நாம்தான் இந்நாட்டை ஆட்சி செய்கிறோம். ஆனால் நம் ஆணைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆட்சி நடக்கும். ஆணைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில்தான் அரசனின் ஆட்சித்திறனே இருக்கிறது.”
“எனக்கு புரியவில்லை இளையம்மை… நான் எல்லா இடங்களிலும் தோற்றுவிட்டேன்.”
“ரெஸிடென்ட் கல்லனை இரண்டு ஆண்டுகளாக நீ ஏன் சந்திக்கவில்லை? நான் உன்னிடம் பலமுறை சொன்னேன்.”
“நான் சொன்னேனே, அவருக்கு செவி கேட்கவில்லை. என்னால் கத்திப்பேசமுடியவில்லை. என் நெஞ்சு வலிக்கிறது.”
“அசட்டுத்தனமாகப் பேசாதே” என்று பார்வதி பாய் சொன்னாள்.
“அவருடைய காதில் கொஞ்சம் செவிக்குறைவு உண்டு. ஆனால் அவர் அதை என்னிடம் கூடுதலாக நடிக்கிறார். என்னை கூச்சலிடச்செய்கிறார்”
“சரி, நீ ஏன் அதிகாரிகளைச் சந்திப்பதில்லை? ஏன் திவானைக்கூட சந்திப்பதில்லை?”
“ஏன் சந்திக்கவேண்டும்? இங்கே நான் சொல்வது நடக்கிறதா என்ன? இளையம்மை உங்களுக்கு தெரியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ரெஸிடென்ட் கல்லன் எல்லா மனுக்களையும் அவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆணையிட்டுவிட்டார். எல்லா ஆணைகளையும் அவரே போடுகிறார். நான் அவருடைய ஆணைகளை ஏற்று கைச்சாத்திடவேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் எதற்கு?”
“சரி, அதைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். நீ சென்ற ஆண்டு நாஞ்சில்நாடு போனாய். அங்கே பதினெட்டு பிடாகைக்காரர்களும் உன்னை பார்க்க விரும்பினார்கள். இந்த திருவிதாங்கூரே நாஞ்சில் நாட்டின் அன்னத்தை உண்டு வாழ்வது. நம்முடைய சோற்றுக்கலம் அது. நமக்கு முழுக்கமுழுக்க விசுவாசமானவர்கள் நாஞ்சில்நாட்டு பிள்ளைமார். நீ அவர்களுக்கு சந்திப்பு அளிக்க மறுத்தாய்”
“நான் கன்யாகுமாரிக்கு போய்க் கொண்டிருந்தேன். அங்கே தனியாக இருக்க நினைத்தேன்.”
பொறுமையை தருவித்துக்கொண்டு “நீ என்னதான் நினைக்கிறாய்? உனக்கு என்னவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.
“நான் அரசன்… அரசனாக நான் பணியாற்றவேண்டும்… அதற்கான உரிமையும் சுதந்திரமும் எனக்கு வேண்டும்”
“அதை நீதான் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் உன் இளமைநாட்கள் முதல் நான் உன்னிடம் சொல்கிறேன். உன்னை அதற்காக பயிற்சிகொடுக்கத்தான் நான் முயன்றேன். நீ அதையெல்லாம் சித்திரவதைகளாக நினைத்தாய்…”
“இளையம்மை, நீங்கள் அளித்த எல்லா பயிற்சிகளையும் நான் அடைந்தேன். என்னால் ஆயுதப்பயிற்சி பெறமுடியவில்லை. என் மனம் அதில் நிற்கவில்லை.”
“அரசன் முதலில் பயிலவேண்டியது ஆயுதங்களைத்தான். போர்க்கலை வழியாகத்தான் மற்ற கலைகளை புரிந்துகொள்ளவேண்டும்”
ராமவர்மா வெடித்துச் சிரித்து “சங்கீதத்தைக்கூடவா?” என்றார். பார்வதி பாய்யின் முகம் சிவப்பதைக் கண்டு “இல்லை, சிரிக்கவில்லை. வேடிக்கையாக இருந்தது, அவ்வளவுதான்” என்றார்.
“நீ ஒருபோதும் என் சொற்களை செவிகொண்டதில்லை” என்றார் பார்வதி பாய்.
“இளையம்மை அப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய? நான் திருமணம் செய்துகொண்டதுகூட உங்கள் ஆணைப்படி. என் ஆசை வேறு என்று உங்களுக்கே தெரியும்…”
“ஆமாம், நீ விரும்பிய மாவேலிக்கரை ராமனாமடத்தில் ஓமனத் தங்கச்சியை திருமணம் செய்துகொண்டால் அரசனாக உனக்கு என்ன நன்மை? திருமணம் வழியாக நீ நாஞ்சில்நாட்டின் முழு ஆதரவையும் பெற்றிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாயரும் வேளாளரும் உன்னுடன் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடே உன் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான் திருவட்டார் அம்மச்சி வீட்டில் நாராயணிப்பிள்ளையையும் நீலம்மைப்பிள்ளையையும் உனக்கு மணமகள்களாக்கினேன். வேளாளர்களில் வடசேரி அம்மவீட்டில் சுந்தரலட்சுமிப் பிள்ளையை உனக்கு தேர்வுசெய்தேன்…”
“தெரிவுசெய்து வாக்கு கொடுத்தபின் எனக்குச் சொன்னீர்கள். உரியநாளில் சென்று நான் பட்டும் கச்சையும் கொடுத்தேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருந்திருக்கிறேன்” என்று ராமவர்மா புன்னகைத்தார்
“சுதந்திரம் என்பது ஆற்றலால் வருவது. நான் சொன்னபடி அவர்களை நீ கூடவே வைத்திருந்தால் உன்னைப் பார்த்து ரெஸிடென்ட் கல்லன் பயந்திருப்பார்.”
“அதைவிட நான் இந்த மூன்று பெண்களையும் பார்த்து பயந்தேன் இளையம்மை” என்று ராமவர்மா சொன்னார்.
“என்ன பயம்? அவர்களை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லை”
“அவர்கள் தைரியமானவர்கள், உலகியல் கணக்கு ஊறியவர்கள், உங்களைப்போல” என்று ராமவர்மா சொன்னார் “பாடத்தெரியாத பெண்ணுடன் ஒரு வார்த்தைகூட என்னால் பேசமுடியாது.”
பார்வதி பாய் பெருமூச்சுவிட்டாள். “எல்லாவற்றையும் நீயே சீரழித்துக்கொண்டாய். உன் மனம் சங்கீதத்தில் மூழ்கிகிடந்தது. அரசனுக்கு சங்கீதம் வேண்டும், அது குளியல்போல. நீ இரவுபகலாக குளத்திலேயே ஊறிக்கிடந்தாய்…”
......
......
......
......
“எனக்கும் அரசியல் விளையாட்டு தெரியும். ஜார்ஜ் ஹே துரை தற்காலிகமாக லண்டன் போனபோது ஹென்றி டிக்கின்ஸன் மெட்ராஸின் ஆக்டிங் கவர்னர் ஆனார். உடனே அவருக்கு ஒரு பரிசை அளித்து கிருஷ்ணராவை பதவிநீக்கம் செய்ய அனுமதி பெற்றேன். அவரை திருவனந்தபுரத்திலிருந்தே துரத்தினேன்” என்றார் ராமவர்மா.
பார்வதி பாய் புன்னகைத்து, “ஒரு சிறுவெற்றி. சரி, அதனால் என்ன ஆயிற்று?. ரெஸிடென்ட் கல்லன் அது அவருக்கு எதிரான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டார். அதற்கு பதிலடியாக உன் ஆசிரியர் சுப்பாராவை வெளியேற்றுவதற்கு அவர் முயன்றார். மீண்டும் கார்ஜ் ஹே மெட்ராஸ் கவர்னராக வந்தார். கர்னல் அவரிடம் பேசி சுப்பாராவை டிஸ்மிஸ் செய்யவைத்தார். அவரை திருவனந்தபுரத்தில் இருந்து துரத்தினார். உன் அவைக்கு வந்து கதறி அழுத சுப்பாராவை உன்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தஞ்சாவூருக்கு போனார்”
“ஆமாம், ஆனால் அவரை மீண்டும் அழைத்துக்கொண்டேன்” என்றார் ராமவர்மா.
“எப்படி? ஒன்றரை ஆண்டுகள் கழித்து. ஜார்ஜ் ஹேக்கு பதினெட்டு கடிதங்கள் அனுப்பினாய். தனிப்பட்ட பரிசாக மட்டும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாய். கடைசியில் வெற்றி கிடைத்தது. சுப்பாராவ் இங்கே வந்தார். மதிப்பில்லாத ஓர் அரசப்பதவியில் அமர்ந்தார்… இந்த மொத்த அரசியலுக்கும் நீ செலவிட்டது மூன்று ஆண்டுகள்…” என்றார் பார்வதி பாய்.
ராமவர்மாவின் உடலில் ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்தது. அவள் அவருக்கு எதையாவது கற்பிக்க முயலும்போதெல்லாம் எழும் அசைவு அது. உடலில் விழுந்த நீர்த்துளியை உதறுவதுபோல. அவளைச் சினமூட்டும் ஒரு சொல் போல.
அவள் குரல் ஓங்கியது. “அந்த மூன்றாண்டும் இங்கே என்னென்ன நிகழ்ந்தது என்று உனக்கு தெரியுமா? அங்கே மெட்ராஸ் ராஜதானியில் மீண்டும் பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இங்கே பல்லாயிரம்பேர் ஒவ்வொரு நாளும் பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்து ஆரல்வாய்மொழி கணவாயில் குவிந்து கிடந்தனர். அவர்களுக்கு மலைப்பகுதிகளில் நிலம்கொடுத்து குடியேற்றவேண்டிய அதிகாரிகள் அந்தப் பஞ்சப்பரதேசிகளிடமே லஞ்சம் வாங்கினார்கள். சிலர் அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு சென்று தூத்துக்குடியில் விற்பவர்களிடம் கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.
“இங்கே நம் மண்ணுக்குள் அடிமைமுறை பத்மநாபசாமிக்கு எதிரான குற்றம். நான் இட்ட ஆணை அது. ஆனால் நாகர்கோயிலில் இருந்தும் பத்மநாபபுரத்தில் இருந்தும்கூட பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஆசைகாட்டியும் பிடித்துகட்டியும் கொண்டுசென்று விற்றார்கள் நம் அதிகாரிகளான நாயர்கள். நம் கடல்முழுக்க போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தலாயினர். நமக்கு விசுவாசமாக இருந்த மீனவக்குடிகள் போர்ச்சுக்கலுக்கு கப்பம்கட்டி நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம் சந்தைகள் அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் கூட்டங்கள் உருவாயின. போர்ச்சுக்கல்காரர்கள் தாக்கியதனால் மணக்குடி முதல் ஆலப்புழை வரை துறைமுகங்கள் பொலிவிழந்தன.”
“மூன்றே ஆண்டுகளில் நான் பத்தாண்டுகளில் உருவாக்கிய செல்வத்தை அழித்துவிட்டாய். ராமா, இந்த திருவிதாங்கூரின் செல்வம் இரண்டே ஊற்றுக்களில் இருந்துதான். மலைக்குடியேற்றக்காரர்கள் அளிக்கும் தீர்வை, சந்தைகளும் துறைமுகங்களும் அளிக்கும் சுங்கம். மலைக்குடியேற்றக்காரர்கள் உருவாக்கும் விளைபொருட்கள் ஆறுகள் வழி சந்தைகளில் வந்துசேரவேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இந்தப்பாதை பாதுகாக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் அழிவோம்…. நான் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் கண்விழித்து கணக்கிட்டு காத்து உருவாக்கிய பயிர் இது, உன்னால் அது கருகியது” என்றாள் பார்வதி பாய்.
“நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் திவானை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு நம்பிக்கை இல்லாத ஒருவரை நீக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பணிந்து போகவேண்டுமா?” சட்டென்று ராமவர்மா ஆவேசம் கொண்டார். “கண்முன் விஷவிருட்சம் வளர்கிறது. அதை வெட்டிவீச நம்மால் முடியவில்லை என்றால் நாம் ஏன் அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளவேண்டும்? இந்த வெற்றுவேஷம்தான் அரசனின் அடையாளமா? அந்த கிரீடமும் செங்கோலும் உடைவாளும் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் வைத்திருந்தது. அதை தொடுவதற்கே எனக்கு தகுதி இல்லை.”
“அந்த தகுதியை ஈட்டிக்கொள், நான் சொல்லவந்தது அதைத்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள்.
“நான் சும்மா இருந்திருக்கவேண்டுமா? கிருஷ்ணராவை அப்படியே இந்த நாட்டை ஆளவிட்டிருக்கவேண்டுமா?”
“வேண்டாம், ஆனால் இதை வைத்துக்கொண்டு சதுரங்கம் விளையாடியிருக்கக்கூடாது. அந்த கிருஷ்ணராவ்தான் பிரச்சினையா? அவன் சிக்கலானவன் என்று தோன்றினால் அவனை அப்போதே கொன்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே?”
......
......
......
......
“ஆமாம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ரெஸிடென்ட் கல்லனிடம் போரிட என்னால் முடியாது. நான் சலித்துவிட்டேன்.”
“அதாவது நீ அரசனான பிறகு செய்த ஒரே போராட்டத்தையும் கைவிட்டுவிட்டாய்.”
“ஆமாம்.”
“ஆனால் நீ பணத்தை மண்ணையும் கல்லையும்போல செலவழிக்கிறாய். ஆண்டுக்கு அரண்மனைக்கு பட்டு வெல்வெட் துணிகள் வாங்குவதற்காக மட்டும் மூன்றுலட்சம் ரூபாய் செலவழித்தாய். அரண்மனையில் ஓவியங்கள் வாங்குவதற்கு மட்டும் அறுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இசைக்கலைஞர்களுக்கான செலவுமட்டும் எழுபத்தாறாயிரம் ரூபாய்… அவர்களுக்கான பரிசுகள், ஊதியங்கள், இசைவிழாக்கள்…”
ராமவர்மா ஒன்றும் சொல்லவில்லை.
“ராமா நீ எப்படி அரசனாக ஆனாய் தெரியுமா?”
ராமவர்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீ உன் அம்மாவின் கருவில் உருவானபோது திருவிதாங்கூரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்க்கும் எண்ணம் சென்னை கவர்னருக்கு இருந்தது. ஜார்ஜ் பர்லோ அதற்காக எல்லாவற்றையும் செய்தார். ஆகவே நீ கருவிலிருக்கையிலேயே உனக்கு முடிசூட்டினோம். அரசன் என்று எல்லா ஆவணங்களிலும் உன்பெயரை சேர்த்தோம். அரசன் இருந்த நாடு ஆதலால் திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை.”
“ஆனால் இன்று நீ நோயுற்றிருக்கிறாய் என்றும் திருவிதாங்கூரின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது என்றும் ரெஸிடென்ட் கல்லன் மெட்ராஸ் கவர்னருக்கு செய்தி அனுப்பமுடியும். உன்னால் நாட்டை ஆட்சிசெய்து உரியமுறையில் கப்பம் கட்டமுடியாது என்று ஒரு வார்த்தை அவர் எழுதினால் போதும், மெட்ராஸ் கவர்னர் நம் நாட்டை இணைத்துக் கொண்டுவிடுவார். பூதம் வாய்திறந்து காத்திருக்கிறது” என்றார் பார்வதி பாய்.
“அதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கிருக்கின்றன. நீ ரெஸிடெண்டை சந்தித்தே இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று கோரி எழுதிய பதினேழு கடிதங்களுக்கு நீ பதில் அளிக்கவில்லை. ரெஸிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த நாநூற்றுக்கும்மேல் கடிதங்களுக்கு உன்னிடமிருந்து பதிலே போகவில்லை” என்று பார்வதி பாய் சொன்னாள்.
......
.......
......
......
பார்வதி பாய் “ராமா நான் உன்னிடம் கேட்கவந்தது ஒன்றே. இதை கேட்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி தவிர்த்தேன். என்னால் இதை உன்னிடம் கேட்கமுடியாது. நீ என் முதல்மகன் போல. உன்னை மடியிலிட்டு வளர்த்திருக்கிறேன்… என் அரசியல் வாழ்க்கையில் நான் எதற்குமே தயங்கியவள் அல்ல, இதற்காக தயங்கினேன்.
“நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம் இளையம்மை” என்றார் ராம வர்மா.
“நீ அரசனாக நீடிக்கவேண்டுமா?”
ராமவர்மா திடுக்கிட்டவர்போல பார்த்தார். அவருடைய நெஞ்சு துடிப்பது தெரிந்தது. கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் அதிர்ந்தன.
“வரவிருக்கும் காலம் கொடுமையானது ராமா. நீ உன் செயலின்மையால் பல்லாயிரம்பேரை பட்டினிச்சாவு நோக்கி தள்ளிவிடுவாய்.”
“இளையம்மை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் நடுங்கும் குரலில் கேட்டார்.
“நீ உன் இளையவனை அரசனாக்கிவிட்டு மருத்துவம் செய்து கொள்வதற்காக லண்டனுக்கு போ. உன் நோய் அங்கே குணமாகும். அங்கே நீ விரும்பிய இசையை முழுமையாக கற்கவும் முடியும்…”
ராமவர்மா பெருமூச்சுவிட்டு தளர்ந்தார்.
“நீ மென்மையானவன்” என்றாள் பார்வதி பாய். “முன்பெல்லாம் இங்கே வீடுகளின் கதவுகள் எடைமிக்கவை. அந்தக் கதவுகளை நிறுத்தும் இடத்தில் ஒரு நிலைக்கல்லை வைப்பார்கள். அந்தக்கல்லை கல்லாசாரிகள் தேடிப்பிடித்துக் கொண்டுவருவார்கள். நெய்க்கருப்பன் கல் என்று அதைச் சொல்வார்கள். அது இரும்பைவிட உறுதியானது. உடையாது, எளிதில் தேயாது. அதில் எடைமிக்க கதவு ஒருநாளுக்கு நூறு இருநூறுமுறை சுழல வேண்டியிருக்கிறது…”
“அரசன் நெய்க்கருப்பன் கல்லாக இருக்கவேண்டும். நீ மென்மையான மாக்கல். அதில் சிற்பங்கள் செய்யலாம். நிலைக்கல்லாக அமையமுடியாது. நெய்க்கருப்பங்கல்லில் சிற்பம் வடிக்கமுடியாது, அது உளியை உடைத்துவிடும். அது நிலைக்கல்லாக வைக்க மட்டுமே உதவும்… உன் இளையவன் அப்படிப்பட்டவன்” அவள் அவனை நோக்கி குனிந்து “உன்னை நீயே மதிப்பிட்டுக்கொள்” என்றாள்.
ராமவர்மா நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
“திருவிதாங்கூரின் நலம் மட்டுமே என் நோக்கம். நீ அதை எண்ணிப்பார்.”
“இளையம்மை, மென்மையான அரசன் ஒருவன் இருக்கமுடியாதா? கலைகளையும் இலக்கியத்தையும் அறிந்தவன், நெறிகளில் நம்பிக்கைகொண்டவன் அரசனாக ஆளவே முடியாதா?”
“ராமா, புராணங்களில்கூட அப்படிப்பட்ட ஓர் அரசரைப்பற்றிய செய்திகள் இல்லையே” என்றாள் பார்வதி பாய்.
“ம்” என்றார் ராமவர்மா.
“அலக்ஸாண்டர் சக்கரவர்த்தி புல்லாங்குழல் வாசித்தபோது அவர் தந்தை வந்து பிடுங்கி வீசிவிட்டு அவர் வாயில் சூடுபோட்டார் என்று உன் ஆங்கில ஆசிரியர் சொன்னார், நினைவிருக்கிறதா?” என்று பார்வதிபாய் சொன்னாள் “புல்லாங்குழல் இசைப்பவனால் கொல்லமுடியாது. கொல்லாதவன் அரசன் அல்ல.”
ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.
“ஒட்டுமொத்தப் பெருங்கருணையால் ஒவ்வொன்றிலும் கருணையே இல்லாமலிருப்பவனே அரசன் என்று ஸ்மிருதிகள் சொல்கின்றன” என்று பார்வதிபாய் சொன்னாள்.
ராம வர்மா தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்.
“நீ சாப்பிட்டு ஓய்வெடு… நான் மாலையில் வந்து உன்னைப்பார்க்கிறேன்” என்று பார்வதிபாய் எழுந்தாள்.
.......
.......