Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
அறத்து - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

அறத்து - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

ஆறு - ஓர்எண்ணிக்கை;  நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு தலைக்கடை

இது - அஃறிணைஒருமைஅண்மைச்சுட்டுப்பெயர்; இந்த

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டா - விரும்பாத 

சிவிகை - பல்லக்கு; எருதுபூட்டியவண்டிவகை.

பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

பொறுத்தானொடு -சுமந்தவன் உடன்

ஊர்ந்தான் - ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

முழுப்பொருள்
அற வாழ்வின் இயல்பு, வழி, பயன் ஆகியவற்றை நூல்களின் மூலம் சொல்லி கற்கவேண்டும் என்றில்லை. பல்லக்கில் சுமந்துசெல்லப்படும் அறச்செல்வோர்களை கண்டு, அவர்கள் வாழ்வில் கடந்துவந்த பாதைகளையும் அவர்கள் அறத்தின் பால் கொண்ட உறுதியயையும் அவர்கள் புரிந்த செயல்களையும் அறிந்து, அதனை மற்றவரிடத்து வேறுபடுத்திப் பார்த்தாலே போதும்.  அறத்தின் பயனையும் சிறப்பையும் அறியலாம். 

பல்லக்கில் சுமந்து சென்றால் மேலோர் பல்லக்கை சும்மப்பவர் கீழோர் பாவம் செய்தோர் என்றில்லை. இன்றையகாலக்கட்டங்களில் பொதுவாக பல்லக்குகளை இரு இடங்களில் காண்கிறோம். ஒன்று கோயில் திருவிழாக்களில், தெய்வ மூர்த்திகளின் நகர் உலாக்களில். இரண்டு கல்யாணங்களில் ஆடம்பரமாக ஒரு பகட்டுக்காக கேளிக்கைக்காக செய்யப்படும் - அதனை விட்டுவிடுவோம். 

கோயில்களில் இறைவனை பல்லக்கில் சும்மாக்கிறார்கள். அதேப்போல் அறச்செல்வர்களை மக்கள் மனதில் பல்லக்கில் சும்மக்கின்றனர். உதாரணமாக மஹாத்மா காந்தி, கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், வினோபா பாவே ஆகியோரை கூறலாம். இவர்கள் மட்டும் அல்ல மக்களுள் மக்களாக தன்னால் இயன்றவற்றை செய்து பேறு பெற்றோரும் உண்டு. உதாரணமாக யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நெ.சுந்தரவடிவேலு ஆகியோரை கூறலாம். 

நூல்களில் அறத்தைப் பற்றி பயில்கிறோம் ஆனால் அது உண்மையா நடைமுறையில் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும் என்றால் நீ உலகில் உள்ள அறச்செல்வோரை இவ்வுலகம் எப்படி தாங்குகிறது என்று பார்த்து அதற்கான காரணத்தையம் அவர்கள் வந்த வழியினையும் செய்த செயல்களை உணர்ந்தாலே போதும்.

பாயசம் சாப்பிட்டால் நமக்கு இன்னொரு குவளை பாயசம் சாப்பிட தோன்றுகிறது. ஏனெனில் அது இனிப்பின் தன்மை. அது போல மேலும் நாம் நல்லோர் சான்றோர் அறத்தோர் பெறும் பயனையும் மதிப்பையும் பார்த்து உணர்ந்தால் நமக்கும் அவ்வழியை பின்பற்ற ஒரு மிகப்பெரிய உந்துதலாக அமையும். மேலும் அறவழில் செல்லாதோர் அனுபவிக்கும் துயரங்களை கண்டால் நமக்கு அவ்வழியில் செல்ல உந்துதல் ஏற்படாது. 

கவிஞர் மகுடேஸ்வரன் (கீழே முழு உரை உள்ளது) கூறுவதுப்போல் துன்பங்களை சுமப்பவனிடம் எது அறம் என்று போதிக்காதே ஏனெனில் அவன் துன்பத்தில் இருக்கிறான். அவன் விடுதலைக்கு அவன் உடன் இருந்து தோள்கொடுத்து உதவு. பல்லக்கின் மேல் உட்கார்ந்து செல்வது அறமன்று என்று கூறுவது பயனில்லை ஏனெனில் பல்லக்கில் இருப்பவன் அவன் அதிகாரத்தை காண்பிப்பான்.  

நீங்கள் குறிப்பிட்ட குறள் மீதான என் வாசிப்பு என்பது இந்த இரண்டு சாத்தியங்களையும் ஒட்டியது. அக்குறள் அதிகமாகப் புகழ்பெற்ற  ஒன்றல்ல. ஏனென்றால் விதிவலிமையைச் சொல்லும் எளிய குறளாக மட்டுமே அது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது மட்டும்தானா?

தமிழில் குறள் மீதான உரைகளில் வடமொழி அறிவு இன்மையின் பெரும் பிழைகளும், இந்தியஞானமரபில் பழக்கம் இல்லாததனால் இந்திய ஞானமரபின் விவாதங்களில் வைத்து குறளைப் பார்க்க முடியாமையின் விடுபடல்களும் நிறைந்திருக்கின்றன.

பரிமேலழகர் ”அறத்து ஆறு இது எனல் வேண்டா. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை- சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானோடு காட்சியளவை தன்னானே உணரப்படும்’ என்று சொல்கிறார்.

இதில் இருந்து எளிமையான ஓர் உரையை பிற்காலத்தவர் தருவித்துக்கொண்டார்கள். அதாவது ‘அறத்தின் வழி இது என்பதற்கு சான்றாக பல்லக்கு தூக்குபவனையும் அதில் ஏறிச் செல்பவனையும் எடுத்துக்கொண்டாலே போதுமே’ என்பதே அக்குறளின் பொருள் என்று கொண்டார்கள். பரிமேலழகர் சொல்லுவதாக இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த உரையையே நாம் இன்றுவரை எல்லா நூல்களிலும் காண்கிறோம். கணிசமான குறள் உரைகள் ஒரு அடுப்பில் தீ வாங்கி ஊரே சமைப்பது போன்றவை.

அக்காலத்து தத்துவ விவாதத்தின் தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய குறள் இது. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா என்கிறார் பரிமேலழகர். ஆகம அளவை என்றால் என்ன?

அளவைவாதம் என்பது மீமாம்சத்துக்கு தமிழில் சுட்டப்பட்ட பெயர். இதை நாம் மணிமேகலையில் காணலாம். இதில் ஆகம அளவைவாதம் என்பது பூர்வ மீமாம்சை. வேதங்களை தன் முழுமுதல் அடிபப்டையாகக் கொண்ட ‘வேதமுதன்மைவாதம்’ அல்லது ‘வேள்விமையவாதம்’  என்று பூர்வ மீமாம்சையைச் சொல்லலாம்.

பூர்வ மீமாம்சையின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று ‘அபூர்வம்’ என்பது. ஒரு செயலைச் செய்தால் அதற்கான பயன் உண்டு என்பதும் அந்தப்பயன் செய்தவனும் செய்யப்பட்டவனும் இல்லாமலான நிலையில் கூட இருந்துகொண்டிருக்கும் என்றும் மீமாம்சகர் சொன்னார்கள். அவ்வாறு திகழும் செயல்பயனே அபூர்வம். இது வேள்விக்கருமங்களை விளக்கும் கருதுகோள்.  வேள்விகளின் மூலம் கிடைக்கும் ‘பயன்’ அல்லது ‘லாபம்’ எங்கோ ஓர் இடத்தில் இருந்து உரிய நேரத்தில் வந்து சேரும் என்று மீமாம்சம் சொன்னது

அபூர்வம் என்னும் கருத்து பிறவிவினை வாதத்துக்குச் சமானமானதாக சிலரால் இப்போது கொள்ளப்படுகிரது. அது பிழை. வேள்விசெய்தால் அதன் பயன் ஒருவனை அடுத்த பிறவியானாலும் வந்து சேரும் என்று பூர்வமீமாம்சம் தன் அபூர்வம் கோட்பாட்டில் சொல்கிறது என்பது உண்மை. ஆனால்  அது பிறவிவினைவாதம் அல்ல.

பிறவிவினைவாதம் என்பது ஒருவனின் எல்லா நன்மை தீமைகளும் அவன் முற்பிறவியில் செய்தவற்றின் விளைவுகளே என்கிறது. அபூர்வவாதம் ஒருவன் எந்தப்பிறவி எடுத்தாலும் வேள்விகள் செய்தால் அப்பிறவியிலேயே எல்லா மேன்மைகளையும் அடையலாம் என்கிறது. அசுரர்களும் ராட்சதர்களும்கூட வேள்விசெய்து பயன்பெற்றார்கள். அது சிலருக்கு வேள்விகளை தடைசெய்ததுகூட அவ்வேள்விகளை அவர்கள் செய்தால் தங்களை விட மேலே சென்று விடுவார்கள் என்பதனால்தான்.

பூர்வமீமாம்சத்தின் அபூர்வம் அல்லது வேள்விப்பயன் வாதத்துக்கு எதிராக வள்ளுவர் பிறவி வினை வாதத்தை முன்வைக்கிறார் என்றுதான் தன் உரையில் பரிமேலழகர் சொல்கிறார். அளவைவாத அடிபப்டையில் பார்க்காதே, முன்னைவினையின் பயன் என்ன என்பதை சிவிகை சுமப்பவனையும் ஏறுபவனையும் கண்ணால் பார்த்தாலே தெரிகிறதே என்பதுதான் குறளின் பொருள் என்கிறார் அவர். இந்த விவாதம் சமணத்துக்கும் சைவத்துக்கும் நடுவே அக்காலத்தில் தீவிரமாக நடந்த ஒன்று.

வள்ளுவர் அப்படிச் சொல்கிறாரா , அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் பிற்கால உரைக்காரர்களுக்கு அளவைவாதம் என்றால் என்னவென்றே தெரியாததன் விளைவே அவர்களின் எளிமையான புரிதல். இன்று வரை ஒரு தட்டையான வரியை இக்குறளின் பொருள் என்று கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

உரைகளுக்குள் போகாமல் ஒரு நவீன வாசகன் வாசிப்பானாகில் அவனுக்குக் கிடைப்பவை இரண்டு விஷயங்கள். ஒன்று இவ்வரிகளின் சொற்கள். இப்பிரதி. இரண்டு திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக் கூடும் என்ற ஊகம். இவ்விரண்டின் அடிப்படையில் அவன் தன் வாசிப்பை நிகழ்த்தலாம். நான் செய்திருப்பது அதைத்தான்.

சமணர்களுக்கு பிறவிப்பயன் என்பது முக்கியமான கோட்பாடு. இப்பிறவியில்  அடையும் நன்மைகள் எல்லாம் முற்பிறவிப்பயனே என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால்  சமணம் தமிழகத்தில் ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக வந்த ஒன்று. அதை சிரமண மதம் என்று சொன்னார்கள். உழைப்பவர்களின் மதம். அந்நிலையில் பல்லக்கு சுமப்பதை மாற்றமுடியாத விதி என்றா அது சொல்லியிருக்கும்?

அவ்வரிகளைப் பார்க்கும்போது ‘அறத்தின் வழி இது என்று நினைத்தல் வேண்டாம்’ என்கிறார் வள்ளுவர். யாருடன்? ‘இதுவே அறத்தின் மாற்றமில்லா வழி’ என்று நம்புகிறவர்களிடம் தானே. அப்படியானால் மாற்றம் உண்டு என்பதைத்தானே அவர் சொல்கிறார்? அவ்வரிகள் அளிக்கும் பொருள் அதுதானே? சிவிகை பொறுப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் நடுவே உள்ள வழியே அறத்தின் வழி என்று எண்ணவேண்டாம் என்பதே அக்குறள் என்பதுதான் கவிதையின் தரிசனம் என்பதே என் வாசிப்பு

ஜெ 

பொருள்மயக்கம் என்பது இன்றுள்ள ஓர் இயல்பு அல்ல, எல்லா காலத்திலும் இலக்கியத்தின் அழகியலாகவே உள்ளது. குறுந்தொகை நற்றிணை பாடல்கள் குறள்பாடல்கள் பல அற்புதமான பொருள்மயக்கங்களுடன் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன. எவ்வளவு உரைகள் எழுதப்பட்டபின்னரும் அவற்றின் பொருள்மயக்கம் புதிய சிந்தனைகளை உருவாக்கியபடி நீடிக்கத்தான் செய்கிறது

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை

இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிறது இந்தக்குறள்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன்
அறம் என்றால் தெரியும். தர்மம். உலக மகா நற்செயல். காலம் மாறினும் கோலம் மாறினும் கொள்கை மாறினும் நன்மைக்கு எதிரான விளைவைத் தராத அருட்பணி. புண்ணியம். உயிருக்கு இதமளிக்கும் நல்வினை. 

ஆறு என்றால் என்னவென்று பார்ப்போம். ஆறு என்பதற்கு ’நதி, வழி, பக்கம், பயன், சூழ்ச்சி, விதம், இயல்பு’ எனப் பொருள்கள் பல. 

அறத்தாறு என்பதற்கு அறத்தின் வழி, அறத்தின் பயன், அறத்தின் சூழ்ச்சி, அறத்தின் இயல்பு என்றுள்ளவற்றில் எதைக் கருதுவது ? குறள்தொடர்ந்து ஒரு முடிவுக்கு வரவுள்ளோம். 

அறத்தாறு இதுவென வேண்டா. சிவிகை என்றால் பல்லக்கு. சிவிகை பொறுத்தான்’ என்றால் பல்லக்கைச் சுமப்பவன். ஊர்ந்தான் என்றால் அதில் பயணிப்பவன். ஊர்ந்ததால் வண்டிகளை ஊர்திகள் என்கிறோம். கடைசிச் சீர் இடை. 

ஒருவன் பல்லக்கில் அமர்ந்து இன்பமாகச் செல்கிறான். மற்றவர்கள் அந்தப் பல்லக்கைச் சுமந்து செல்கிறார்கள். இங்கே மேலும் பொருள் துலக்கத்திற்குத் துணையாக அதிகாரத்தின் பெயரையும் பார்க்கவேண்டும். அறன் வலியுறுத்தல். அறத்தை வலியுறுத்திப் பேசுகின்ற குறள்கள். அப்படியென்றால் இக்குறள் அறத்தின் மேன்மை குறித்து வலியுறுத்தி அழுத்தந்திருத்தமாக எதையோ சொல்ல வருகிறது. அல்லது அறத்தை வலியுறுத்தி எங்கெங்கு எப்படியெப்படிப் பேசலாம் என்பதைப் பற்றி விளக்க வருகிறது.

நமக்கு இன்று தோன்றுகிற கேள்வி இது. ஒருவன் ஒய்யாரமாக அமர்ந்திருக்க அதை நால்வர் தோள்களில் விதிர்விதிர்க்கச் சுமந்து செல்வதா ? இது என்ன நியாயம் ? இது என்ன அறம் ? 

ஒருவேளை இதுதான் அறத்தின் பயனோ ? இதுதான் அறத்தின் வழியோ ? இது அறத்தின் சூழ்ச்சியோ ? இல்லை இல்லை இல்லை. இதுவென வேண்டா. இது அறமில்லை என்கிறார் வள்ளுவர். 

தன்னை நால்வர் சுமந்து செல்ல அதில் ஒய்யாரமாக அமர்ந்து செல்பவனிடம் சென்று ‘இது அறமில்லை... இது அறம் நல்கும் செயலில்லை’ என்று சொல்லாதீர். சொன்னால் தன் மூர்க்கத்தைக் காட்டுவான். அதிகாரத்தைக் காட்டுவான். அவனுக்கும் அறத்திற்கும் தொடர்பில்லை. 

சுமந்துசெல்கிறானே அவனிடம் சொல்லலாமா ? அவனிடமும் சொல்லக் கூடாது. ஏன் ? அவன் அறத்திற்கு எதிராக என்ன செய்தான் ? அவன் அப்பாவி அல்லவா ? அவனிடம் அறம் போதிக்கலாகாதா ? கூடாது என்கிறார் வள்ளுவர். பல்லக்கில் செல்பவன் மூர்க்கன், அவனிடம் அறம் போதிக்க வேண்டா’ என்பது புரிகிறது. சுமப்பவன் என்ன பாவம் செய்தான் ? 

அதற்கு நான் கருதும் பொருள் : அவன் எற்கனவே சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறவன். அவன் தோள்கள் பழுத்திருக்கின்றன. மூச்சு இறைக்கிறது. கால்கள் துவண்டுள்ளன. அவனருகே நீ உன் போதனைகளோடு செல்லாதே. பதிலாக, அவன்படும் துன்பத்திற்கு நீயும் தோள்கொடு. அவன்படும் பாடுகளில் பங்குகொள். அவனிடம் அறம் தர்மம் புண்ணியம் அது இது என்று எதையும் கூறாதே. உன் செயல்வழியே உதவு. சொற்களைக் குறை. அவன் விடுதலைக்கு உதவு. 

தற்காலத்தைப் பார்ப்போம் ! நாம் தாங்க முடியாத துன்பங்களில் உழன்றுகொண்டிருக்கிறோம், நம் மீட்பராகத் தங்களைக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் போதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள், அல்லவா ?

இப்பொழுது பொருள் திரட்டுகிறேன், பாருங்கள் !
‘பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனிடமும் அதைச் சுமந்து செல்கின்றவனிடமும் இடையே போய் அறத்திற்கான வழிகள் இவை என்று வலியுறுத்திக்கொண்டிராதே.’ 
 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை. 
ஏன் என்பதற்கான காரணத்தைத் தெளிவாக விளக்கவல்லவனே நல்ல உரையாசிரியன்.

ஒப்புமை
“சிவிகை பொறுத்தார் எனத் திருத்தினாரும் உளர்” (இ.கொ.சூ. 130)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

மணக்குடவர் உரை
நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

மு.வரதராசனார் உரை
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

1 comment:

  1. வணக்கம்.
    அற்புதமான விளக்கம். தயவு செய்து குன்றக்குடி அடிகளாரின் உரையைப் பாருங்கள். சரியான விளக்கத்தை தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    ரெ பாண்டியன்
    pandian.rethinam@yahoo.com.sg

    ReplyDelete