குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை
வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.
மயக்கம் - அறிவின்திரிபு; அவித்தை; பிழைபடஉணர்கை; விரகநோய்; மூர்ச்சை; படைப்பில்அலித்தன்மைமுதலியகலப்பு; கூடல்; கலப்பு; எழுத்துப்புணர்ச்சி; சாவுச்சடங்கினுள்ஒன்று; சோம்பேறித்தனம்.
இவை - அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டு தற்குரியசொல்
மூன்றன் - மூன்று
நாமம் - திருமண்கட்டி; அச்சம்; நிறைவு; புகழ்; திருமாலின்பன்னிரண்டுபெயர்களைக்கூறிஉடலில்இடும்திருமண்காப்பு; பேர்; தும்பைச்செடி; முள்தராசின்நடு; காண்க:நாரத்தை; பாசி
கெட - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு
முழுப்பொருள்
நாமம் என்ற சொல்லுக்கு பலர் ”பேர்” என்ற அர்த்தத்தைக் கையாண்டு உள்ளனர். இக்குறளில் நாமம் என்ற சொல்லுக்கு நிறைவு என்னும் பொருளே பொருத்தமாக இருக்கும் என்றென்பது எனது கருத்து. அது ஏன் என்று கீழ்காணும் குறளின் பொருளைப்படித்து உணர்ந்தால் புரியும்.
காமம் என்றால் விருப்பு, ஆசை, விழைவு. ஆசைகள், விழைவுகள் நிறைவேறாதப்பொழுது ஏமாற்றங்கள் வருகிறது. அதுவே கோபங்களாக உருமாறுகிறது. கோபம், சினம், வெறுப்பு இருந்தால் பகை பிறக்கிறது. முகத்தில் புன்னகை/சிரிப்பு மறைகிறது மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அழிகிறது. இக்கோபங்கள் அறிவை ஒரு மயக்க நிலையில் சிந்தனையை மேலும் மழுங்கடித்துவிடும். இந்த மயக்க நிலையில் இருக்கும் பொழுது நாம் துன்பத்தில் சிக்கித் தவிக்கிறோம். அதுவே மெய்யினை உணர்ந்து இருந்தால் இம்மூன்றிலும் சிக்கித் துன்பத்தில் தவிக்க மாட்டோம்.
ஆதலால் காமம், வெகுளி (சினம், கோபம்), மயக்கம் ஆகிய மூன்றும் அழிவிற்கான காரணங்கள். இம்மூன்றும் முழுதும் (நிறைவாக) ஒருவரை விட்டு நீங்கினால் அதாவது காமம், வெகுளி, மயக்கம் ஆகியவறை ஒருவர்மனதில் இருந்து முற்றாக அழித்தால் அவரிடம் இருந்து துன்பங்கள் நீங்கும்/அழியும்.
அநாதியாய அவிச்சையும் (அஞ்ஞானம், spiritual ignorance) 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார் - என்று பரிமேலழகர் குறிப்புகளை எடுத்துரைத்துள்ளார்.
இம்மூன்று பகைவர்களைப் பற்றியும் சொல்லிய இலக்கியப்பாடல்கள் ஏராளம். எல்லாவற்றையும் பட்டியலிட்டு மேற்கோளாகச் சொல்லாவிட்டாலும், இதோ சில.
”தருவனத்துள் யானியற்றும் தவவேள்விக் கிடையூறாத்
தவஞ்செய் வோர்கள்
வெருவரச்சென் றடைகாம வெகுளியென” (கம்ப.கையடைப் 10)
“யாம்மேல் உரைத்தப் பொருள்கட்கெல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் லுணர்வால் செற்றமற் றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி யுய்த்து மயக்கம் கடிக” (மணி.30:252-9) என்றே மணிமேகலைக் கூறுகிறது.
“காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்த்
தேமம் பிடித்திருந்தேனுக்கு” என்கிறது திருமந்திரப்பாடல் (2436).
“காமமும் வெகுளியும் களிப்பும் கைத்தெழு, கோமுனி” (கம்ப.திருஅவதாரப்.48)
“காமம் முதலா முக்குறும்பற வெறிந்த வினை” (கம்ப.விராதன் 3)
என்று அம்மூன்றையும் குறும்பு என்கிறான் கம்பன்.
“முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கிவிடும்” என்கிறது நாலடியார் (190).
“ஐந்தொ டாகிய முப்பகை மருங்கற வகற்றி
உய்ந்து போயினர்” (கம்ப.மந்திரப் 64)
“கொடுநாலொ டிரண்டு குலப்பகை குற்ற மூன்றும்
சுடு ஞானம் வெளிப்பட வுய்த்த துயக்கி லார்போல்” (கம்ப.கடல்தாவு.51)
மேலும்: அஷோக் உரை
எழுத்தாளர் ஜெயமோகன்
திரிந்த காமம்போல் நஞ்சு பிறிதில்லை
ஒருமுறை காசியில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் ரயிலில் என்னருகே ஒருவர் அமர்ந்திருந்தார். பழைய அழுக்குக் காவி உடை. தலைப்பாகை. கையில் உடைமை என ஒரு சிறிய பை மட்டுமே. நீண்ட நரைத்த தாடி. தோளில் சரிந்த கூந்தல். இருக்கையில் காலைத் தூக்கிவைத்து அமைதியாக வெளியே நோக்கிக்கொண்டு வந்தார். ஏதோ சாமியார் என நான் நினைத்தேன்.
அன்றெல்லாம் பிரெஞ்சுக்காரரான ஜீன் பால் சார்த்ர் மிகப்பிரபலமான தத்துவ ஆசிரியர். இலக்கியவிமர்சகர், அரசியல்போராளி, நாடக ஆசிரியர் என்னும் நிலைகளில் சார்த்ர் உலகமெங்கும அறியப்பட்டிருந்தார். இருத்தலியம் [Existentialism] என்னும் கோட்பாடு சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு உலகசிந்தனையை உலுக்கிக் கொண்டிருந்த காலம். சார்த்ரின் இருத்தலும் இன்மையும் [Being and Nothingness] என்னும் நூல் அத்தத்துவத்தின் மூலநூலாக கருதப்பட்டது. அக்கொள்கையைச் சார்ந்து எழுதிய காஃப்கா, காம்யூ போன்றவர்கள் இளைஞர்களால் பரபரப்புடன் வாசிக்கப்பட்டனர்
நான் சார்த்ர் எழுதிய நாசியா [Nausea] என்னும் சுயகுறிப்புநூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாகத் திரும்பிய அந்தச்சாமியார் அதை கண்டு கைநீட்டினார். நான் தயக்கத்துடன் அதை நீட்டினேன். வாங்கி புரட்டிப்பார்த்துவிட்டு புன்னகையுட்ன் திருப்பித்தந்தர். “Being and nothingness” என்றார். வெடித்துச் சிரித்துக்கொண்டு “Do you know there is a way called nothingness and being?” [ஒன்றுமில்லாமல் இருப்பது என்னும் நிலை ஒன்றுண்டு, தெரியுமா?]
நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “பாவம் சார்த்ர், நல்ல மனிதர்” என்றார் அவர். நான் கொஞ்சம் எரிச்சலுடன் “அவரைத்தெரியுமா?” என்றேன். “நன்றாகவே தெரியும். நான் சார்போனில் அவரது மாணவனாக இருந்தேன். அவர் வீட்டில்தான் இருப்பேன்” என்றார். என்னால் திகைப்பை மறுக்கமுடியவில்லை. சாமியார்களிடம் பூர்வாசிரமத்தைப்பற்றிக் கேட்பது தவறு என்று தெரியும் என்பதனால் நான் மேலே பேசவில்லை.
அவரே மெலே சொன்னார். “ஒரு கூரியஎண்ணம் நமக்குள் வந்ததும் நாம் பரவசம் அடைகிறோம். நம்முள் அது வந்தது என்பதனாலேயே அது அரியது, மகத்தானது, அதை உலகுக்குச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என பரபரக்கிறோம். ஆகவே கடுமையாக உழைத்து அதை ஒரு கொள்கையாக ஆக்கிக்கொள்கிறோம். அப்படி கொள்கையாக ஆக்கும்தோறும் நாமே அதை நம்புகிறோம். நம் வாழ்க்கையை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அது மிகப்பெரிய நடிப்பு. மெல்ல நடிப்பே வாழ்க்கையென்றாகிவிடுகிறது”
“சார்த்ர் நடித்தார் என்கிறீர்களா?” என்றேன். “ஆம். அவரும் அவர் தோழியும் சேர்ந்து நடித்தார்கள். உலகம் கைதட்டியது”. சார்த்ரின் தோழி சிமோங் த பூவா உலகமெங்கும் இன்று பரவியிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை உருவாக்கியவர். அவரது இரண்டாம் பாலினம் [The second sex] என்ற நூல் பெண்களின் தன்னுரிமை, விடுதலை, ஆணைச்சாராமல் நின்றிருக்கும் ஆற்றல் ஆகியவற்றை முன்வைப்பது
நான் சீற்றத்துடன் “இருத்தலியலை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால் அவர்களை பொய்யானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்றேன். “அவர்கள் பொய்யானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவில்லை. தங்கள் கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். அதை மட்டுமே சொன்னேன்” என்றார்.
இருத்தலியலை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். காலம் எல்லையற்றது. இங்கே நிகழும் அனைத்துமே தற்செயல்கள். இதில் மனிதவாழ்க்கைக்கு என தனியான அர்த்தம் ஏதும் இருக்கமுடியாது. அனைத்து அர்த்தங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை அறியாமல் நம்புபவன் வாழ்க்கையை இயல்பாக வாழ்கிறான். அவற்றின் பொருள் என்ன என்று தேடுபவன் வெறுமையையே சென்றடைகிறான்.
“இங்குள்ள அனைத்தும் வெறுமை அல்ல. நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறியமுடியவில்லை என்பதனால் பொருள் இல்லை என்றாவதில்லை” என்றார் அவர். “பொருள் உள்ளது. அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது. சார்த்ர் தேடியது ‘எனக்கான பொருள் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை. இதற்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார்.
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். “மிகமிக எளிது. ஒரு கூழாங்கல்லை எடுத்துப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பார்ப்பதற்கான தடையை அகற்றவேண்டும். அது நான் என்னும் எண்ணத்தின் தடை. அதிலிருந்து உருவாகும் காமம் குரோதம் மோகம் ஆகிய மூன்று அழுக்குகளின் பூச்சு. அதைக்களைந்து உண்மையை அறிவதே ஆன்மீகமான பயணம். இத்தனை அலைச்சலும் இத்தனை பயிற்சிகளும் அதற்கே”
“அது என்ன?” என்றேன். “ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்” என்ற உபநிடதவரியை அவர் சொன்னார். [இங்கனைத்திலும் இறை உறைகிறது] ”ஒரு வரியாக மிக எளியது. உண்மையனுபவமாக உணர்வதற்கு தவம் தேவை” அதன்பின் அவர் பேசவில்லை. பேசுவார் என நானும் நெடுநேரம் காத்திருந்தேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார். நான் அவர் சென்ற பின் எஞ்சிய வெட்டவெளியை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தது
நெடுநாட்களுக்குப்பின் சார்த்ரின் அணுக்கமான மாணவி ஒருத்தி அவரைப்பற்றி ஒரு நூலை எழுதினாள். சார்த்ர் கட்டற்ற காம உணர்ச்சி கொண்டவர் என்றும் அவரது ஆய்வுமாணவிகள் அனைவரிடமும் அவர் உறவுகொண்டிருந்தார் என்றும், அதற்காக கட்டாயப்படுத்தி மன்றாடுவார் என்றும் அவள் சொன்னாள்.
அதைவிட முக்கியமானது அவள் சிமோங் த பூவா பற்றி சொன்னது. ஆணைச்சாராது பெண் வாழவேண்டும் என்று வாதிட்டு அவ்வளவு பெரிய நூலை எழுதிய சிமோங் த பூவா அதன்பொருட்டே சார்த்ரை மணம் செய்துகொள்ளாமல் தோழியாக வாழ்ந்தவர். அவர் உண்மையில் சார்த்ரின் விசுவாசமான மனைவியாகவும், அவரது ஆணைக்குக் கட்டுப்பட்ட அடியாளாகவுமே இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தாள் அம்மாணவி. தன் மாணவிகளையும் பேசி மடக்கி சார்த்ருக்கு பாலியல் தேவைக்காகக் கொண்டுசெல்வது சிமோங் த பூவாவின் வழக்கமாம். பிற மாணவிகளும் அதை உறுதிப்படுத்தினர்
எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அகங்காரத்தின் மறுபக்கம் காமமே என நான் அதற்குள் எழுதி எழுதிக் கற்றிருந்தேன். அவை மறைத்து நிற்கும் விழிகளால் அப்பாலுள்ள பிரம்மாண்டத்தைக் காணமுடியாது. அதன்பின் செய்யவேண்டியது எதைக் காண்கிறோமோ அதை கோட்பாடாக ஆக்கி வாதிடவேண்டியதுதான். “பாவம் சார்த்ர்” என அந்த சாமியாரை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டேன்.
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’இன் பத்தவாது நாவல் பன்னிரு படைக்களம் - 33 இப்படி ஒரு வரி வருகிறது (சுட்டியை தட்டுக)
“நான் தவம்செய்கிறேன். மெய்மையை பற்றுகிறேன்” என்றான் கௌசிகன். “அரசே, காமத்தை குரோதத்தை மோகத்தை கடந்தவர்களே தவத்தின் முதல்படியில் கால்வைக்கிறார்கள்
ஆக, வாழ்வில் ஒருவர் மெய்மையை நோக்கி தவம் செய்தாலும் சரி அல்லது தனது செயலை ஒரு தவமாக செய்தாலும் சரி, அல்லது ஒரு குறிக்கோளுடன் தவமாக ஒரு செயலை செய்தாலும் சரி காமம்,, குரோதம், மோகம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கல் ஆகாது.
விருப்பங்கள் பற்று வளர்ப்பவை. நீங்கள் வெறுப்பவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டாம். அவை மும்மடங்கு பற்றை வளர்ப்பவை
சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.
நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.
அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றது. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றது. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றது.
ஐம்புலன்களையும் ஆளும் காமமும் சினமும் விழைவும், கால்களும் விழிகளும் அற்றவை. ஆணவமே அவற்றின் ஊர்தி. ஆணவத்தை வென்றவன் அம்மூன்றையும் ஆள்கிறான். காற்றிலா கருவறையில் நிலைகொள்ளும் சுடர் என அகம் கொண்டிருப்பான். அவன் காண்பவை துலங்கும்
முன்பு இலங்கையின் தலைவனாகிய ராவணன் பெருவேள்வி ஒன்றை இயற்றினான். அதில் அவன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஆகுதியாக்கினான். தன் உறவை, துணையை அவியென அளித்தான். பின்னர் தன் தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து அனலோம்பினான். காமம், சினம், விழைவு எனும் மூன்று தலைகளை அளித்தான். மறுபக்கத்திலிருந்து கல்வி, புகழ், பற்று என்னும் மூன்று தலைகளை மீண்டும் வெட்டியிட்டான்.
பின்னர் ஆகூழ், போகூழ், அறம் என்னும் மூன்று தலைகளையும் வெட்டி அவியூட்டினான். வேள்விமுழுமை பெறாமை கண்டு திகைத்தபின் தன் பத்தாவது தலையையும் வெட்டி எரிபலி அளித்தான். அந்தத் தலையே தன்னிலை. அது நீங்கிய பின்னரே வேள்வித்தீயில் அவனுக்குரிய தெய்வம் எழுந்தது.
மானுடன் தான் ஆற்றும் செயலை புரிந்துகொள்வது எப்படி? இங்கு வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் காற்றில் சுழலும் காற்றாடிகள்போல செயலாற்றுபவர்கள். அறியாப் பெருவிசைகளுக்கு தங்களை முற்றாகக் கொடுத்துவிட்டவர்கள். மிகச் சிலரே தங்கள் செயல்நோக்கத்தின் தொடக்கத்தை, தங்கள் செயல்விளைவின் நெறியை அறியவிரும்புகிறார்கள். பாய்மரம்போல காற்றுக்கு தங்களை அளித்தாலும் சுக்கானை தாங்களே ஏந்த விழைகிறார்கள். மானுடர் இந்த இருவகையினர் மட்டுமே.
இளைய யாதவர் அவரை நோக்கி புன்னகைத்து “அருமணியை கண்டடைந்தீர்களா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “அது அந்த அறைக்குள்தான் உள்ளது, நீங்கள் விரும்பிப் பயிலும் சுவடிக்கட்டுக்குள்.” விதுரர் திகைப்புடன் “ஆம், நான் கட்டுகளை பிரிக்கவேயில்லை” என்றார். பின்னர் “தேவிஸ்தவத்திற்குள்ளா?” என்றார். “இல்லை, விவாதசந்திரத்திற்குள்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்கும் வாய்ப்புண்டு” என்றார் விதுரர். “தேவிஸ்தவம் பின்னர் நீங்கள் பயின்ற நூல், விதுரரே. தொடக்கம் முதல் உடனிருப்பது லகிமாதேவியின் நூல்தான்.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “அவ்விரு நூல்களுக்குள் ஆடுவது உங்கள் ஊசல்” என்றார் இளைய யாதவர்.
இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்த விதுரர் “என் வினாவை நான் எங்கும் சந்திக்கவேயில்லை” என்றார். இளைய யாதவர் “உடல் மண்நீங்குவதற்கு முன்னரே இவ்வுலகில் விழைவாலும் சினத்தாலும் விளையும் விசைகளை தாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவனே மாறாதனவற்றை அறிய இயலும். அசைவற்ற கலத்திலேயே அமுதத்தை கறந்தளிக்கிறது அப்பசு. தனக்குள் இன்பத்தை அடைந்தவன், ஒளியை தன்னுள் கொண்டவன், வெளியே தேடவேண்டியதில்லை. இருமைகளை வெட்டிவிட்டவன் மட்டுமே இருத்தலுக்கு அப்பால் சென்று எதையேனும் அறியக்கூடும்” என்றார்.
காமம் மோகம் குரோதம். எவராலும் மறைத்துவைக்க இயலாதது. மறைக்க மறைக்க பெருகுவது.
இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.
முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.
“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”
“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”
ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”
“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”
...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”
“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.
அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.
அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.
அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.
அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.
ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.
அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.
எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.
புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.
பரிமேலழகர் உரை
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா. (அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கொடுத்தார் காரியமாகிய வினைகளைச்செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும்இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.).
மணக்குடவர் உரை
ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம். வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.
மு.வரதராசனார் உரை
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
சாலமன் பாப்பையா உரை
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
Thirukkural - Management - Personality Development - Self Discipline
Kural 360 warns us of the three diseases of the mind that damage the name and fame of a person and bring disgrace to him.
Where lust, wrath and delusion are
Sorrow shall not be.
The diseases are: 1) Lust, 2) Anger, and 3) Indulgence. Mental disease one is lust. Lustful thoughts interfere with one's lofty thoughts. Lust is a pleasure principle. Pleasure principle prevents a person from pleasant and possibility thoughts. Mental disease two is anger.
Anger does twofold damage. Anger destroys the holder and damages the receiver of it. It is known that anger is a letter short of danger.
The third mental disease is self- indulgence. Self-indulgence with respect to mind and body makes one blind to consequences. The word binge, means over indulging or overeating, is an often- used word in today's health counseling.
There is no suffering for a person, if a person can protect himself from all these three diseases. Enormous self-control is required to keep these diseases away. However, the efforts to prevent negative consequences are worth the efforts.
English Meaning - As I taught a kid - Rajesh
Desire, anger, illusion that comes from being lethargic rather being alert/conscious in understanding the reality are 3 qualities that are like diseases. They lead to downfall of a person, kills him/his life, and prevents him from attaining his/her goal and even moksha. Hence, one should stay away from them.
Questions that I ask to the kid
What are the 3 things that are considered as disease and prevent us from attaining Moksha?