குறள் 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
பொருள்
பொருள்
கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
கள்வார்க்குத் - களவு செய்வோர்க்கு
தள்ளும் - தள்ளுதல் - விலகுதல்; குன்றுதல்; மறதியால்சோர்தல்; தடுமாறுதல்; கழித்தல்; புறம்பாக்குதல்; ஏற்றுக்கொள்ளமறுத்தல்; அமுக்குதல்; வெட்டுதல்; கொல்லுதல்; மறத்தல்; தூண்டுதல்; தவறுதல்; வலியுடைத்தாதல்; வெளியேறுதல்; முன்செல்லுமாறுதாக்குதல்.
உயிர்நிலை - உடல், உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து
கள்ளார்க்குத் - களவு செய்யாதவர்க்கு
தள்ளாது -விலகாது / விலக்காது
புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர்
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
களவு செய்வோர்க்கு (களவு செய்ய வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் கொண்டோர்க்கும்) அவர்கள் உயிரை கொண்ட உடல்க்கூட ஒத்துழைக்காது. அவர்களின் உடல்க் கூட தன் கடமையில் (கடமை: உயிர்வாழ்தல்) இருந்து தவறிவிடும். களவு செய்வோர்க்கு அவர்களின் உடலே ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு எப்படி இவ்வுலகத்தில் உள்ள மற்றவர்களும் உயர் உலகான தேவர்கள் வாழும் புத்தேள் உலகும் ஏற்றுக்கொள்ளும்? ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதுவே களவு எண்ணம் இல்லாதவர் களவு செய்யமாட்டார். அவர்களை தேவர்கள் வாழும் புத்தேள் உலகமும் தவறாது ஏற்றுக்கொள்ளும். தேவர்கள் உலகமே ஏற்றுக்கொள்வதால் இப்பூவுகத்தில் உள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்வர் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
நல் எண்ணங்களுக்கும் நற்செயல்களுக்கும் எவ்விடத்திலும் ஏற்பும் மதிப்பும் உண்டு. தீய எண்ணங்களுக்கும் தீய செயல்களுக்கும் தன் உடம்பு உட்பட எவ்விடத்திலும் ஏற்பும் மதிப்பும் இருக்காது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளாதார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது. இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.
மு.வரதராசனார் உரை
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
சாலமன் பாப்பையா உரை
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.