குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
பொருள்
பொருள்
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்
கார் - கருமை; கரியது; மேகம்; மழை; நீர்; கார்ப்பருவம்; கார்நெல்; கருங்குரங்கு; வெள்ளாடு; ஆண்மயிர்; கருங்குட்டம்; இருள்; அறிவுமயக்கம்; ஆறாச்சினம்; பசுமை; அழகு; செவ்வி; எலி; கொழு.
அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.
ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்
ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்
புரிந்தார் - புரிதல் - விரும்புதல்; தியானித்தல்; செய்தல்; படைத்தல்; ஈனுதல்; கொடுத்தல்; நுகர்தல்; உற்றுப்பார்த்தல்; விசாரணைசெய்தல்; சொல்லுதல்; நடத்துதல்; மேற்கொள்ளுதல்; முறுக்குக்கொள்ளுதல்; திரும்புதல்; மிகுதல்; அசைதல்; விளங்குதல்; பொருள்விளங்குதல்.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
முழுப்பொருள்
அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஒளி அறிவு. இரண்டு இருண்ட அறிவு. இருண்ட அறிவு உண்மை அறிவை மறைக்கும் தன்மை வாய்ந்தது. அதனால் தான் கற்க கசடற என்று கூறினார் திருவள்ளுவர்.
அளவு எனில் ஞானம். ஆற்றல் எனில் சக்தி, முயற்சி, வாய்மை, அறிவு, ஆண்மை.
அளவு அறிந்து (அதாவது எது ஞானம், எது இயற்கையான தன்மை என்று அறிந்து) அதற்கு ஏற்ப தன் அறிவை ஆற்றலைப் பயன்படுத்தி வாழ்வை நேர்மையாக வாழ்வை நடத்துபவர் (வாழ்கின்றவர்) களவு என்னும் இருண்ட அறிவை தன்னிடம் வைத்துக்கொள்ள மாட்டார். இருண்ட அறிவே இல்லாததால் அவர் பிறரின் பொருளை களவு செய்யமாட்டார்.
எண்ணங்களே செயலை தூண்டுகின்றன. தீய எண்ணங்கள் இல்லையேல் தீய செயல்கள் இல்லை.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“களவின் ஆகிய காரறிவு” (சூளா)
பரிமேலழகர் உரை
களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.
மு.வரதராசனார் உரை
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அளவறிந்து வாழ்பவன் களவாட மாட்டான்.
Comments
Post a Comment