சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.
நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.
அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றது. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றது. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றது.
ஐம்புலன்களையும் ஆளும் காமமும் சினமும் விழைவும், கால்களும் விழிகளும் அற்றவை. ஆணவமே அவற்றின் ஊர்தி. ஆணவத்தை வென்றவன் அம்மூன்றையும் ஆள்கிறான். காற்றிலா கருவறையில் நிலைகொள்ளும் சுடர் என அகம் கொண்டிருப்பான். அவன் காண்பவை துலங்கும்
முன்பு இலங்கையின் தலைவனாகிய ராவணன் பெருவேள்வி ஒன்றை இயற்றினான். அதில் அவன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஆகுதியாக்கினான். தன் உறவை, துணையை அவியென அளித்தான். பின்னர் தன் தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து அனலோம்பினான். காமம், சினம், விழைவு எனும் மூன்று தலைகளை அளித்தான். மறுபக்கத்திலிருந்து கல்வி, புகழ், பற்று என்னும் மூன்று தலைகளை மீண்டும் வெட்டியிட்டான்.
பின்னர் ஆகூழ், போகூழ், அறம் என்னும் மூன்று தலைகளையும் வெட்டி அவியூட்டினான். வேள்விமுழுமை பெறாமை கண்டு திகைத்தபின் தன் பத்தாவது தலையையும் வெட்டி எரிபலி அளித்தான். அந்தத் தலையே தன்னிலை. அது நீங்கிய பின்னரே வேள்வித்தீயில் அவனுக்குரிய தெய்வம் எழுந்தது.
மானுடன் தான் ஆற்றும் செயலை புரிந்துகொள்வது எப்படி? இங்கு வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் காற்றில் சுழலும் காற்றாடிகள்போல செயலாற்றுபவர்கள். அறியாப் பெருவிசைகளுக்கு தங்களை முற்றாகக் கொடுத்துவிட்டவர்கள். மிகச் சிலரே தங்கள் செயல்நோக்கத்தின் தொடக்கத்தை, தங்கள் செயல்விளைவின் நெறியை அறியவிரும்புகிறார்கள். பாய்மரம்போல காற்றுக்கு தங்களை அளித்தாலும் சுக்கானை தாங்களே ஏந்த விழைகிறார்கள். மானுடர் இந்த இருவகையினர் மட்டுமே.
இளைய யாதவர் அவரை நோக்கி புன்னகைத்து “அருமணியை கண்டடைந்தீர்களா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “அது அந்த அறைக்குள்தான் உள்ளது, நீங்கள் விரும்பிப் பயிலும் சுவடிக்கட்டுக்குள்.” விதுரர் திகைப்புடன் “ஆம், நான் கட்டுகளை பிரிக்கவேயில்லை” என்றார். பின்னர் “தேவிஸ்தவத்திற்குள்ளா?” என்றார். “இல்லை, விவாதசந்திரத்திற்குள்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்கும் வாய்ப்புண்டு” என்றார் விதுரர். “தேவிஸ்தவம் பின்னர் நீங்கள் பயின்ற நூல், விதுரரே. தொடக்கம் முதல் உடனிருப்பது லகிமாதேவியின் நூல்தான்.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “அவ்விரு நூல்களுக்குள் ஆடுவது உங்கள் ஊசல்” என்றார் இளைய யாதவர்.
இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்த விதுரர் “என் வினாவை நான் எங்கும் சந்திக்கவேயில்லை” என்றார். இளைய யாதவர் “உடல் மண்நீங்குவதற்கு முன்னரே இவ்வுலகில் விழைவாலும் சினத்தாலும் விளையும் விசைகளை தாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவனே மாறாதனவற்றை அறிய இயலும். அசைவற்ற கலத்திலேயே அமுதத்தை கறந்தளிக்கிறது அப்பசு. தனக்குள் இன்பத்தை அடைந்தவன், ஒளியை தன்னுள் கொண்டவன், வெளியே தேடவேண்டியதில்லை. இருமைகளை வெட்டிவிட்டவன் மட்டுமே இருத்தலுக்கு அப்பால் சென்று எதையேனும் அறியக்கூடும்” என்றார்.
இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.
முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.
“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”
“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”
ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”
“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”
...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”
“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.
அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.
அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.
அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.
அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.
ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.
அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.
எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.
புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.