குறள் 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
மேலும்: அஷோக் உரை
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]
பொருள்
கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.
கரப்பவர்க்கு - வஞ்சனை செய்பவர்க்கு, களவு செய்பவர்க்கு, பொய் செய்பவர்க்கு
யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம்.
ஒளிக்கும் - ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குதல்.
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை
கொல்(லு)-தல் - kol- 3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பவர் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.), யாசகம் செய்பவன்
சொல்லாட - சொல்லாடு-தல் - col-l-āṭu- v. intr. id.+. To speak, talk; பேசுதல் சொல்லாடச்சோர்வு படும் (குறள், 405). , col-l-āṭu- v. intr. id.+. To be current in colloquial usage; பேச்சில்வழங்குதல். இப்படி ஒன்று சொல்லாடுகின்றது. Tj.
போம் - ஓர்அசைச்சொல்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
முழுப்பொருள்
வறுமையில் வந்து யாசிப்பவருக்கு இல்லை என்று சொன்னால் அவர் பசியின் கொடுமையாலும் இத்தகைய வறுமையிலும் இல்லை என்று கேட்க நேரிட்டதாலும் மானத்திற்கு அஞ்சி உயிர் துறக்க நேரிடும். அவ்வுயிர் எல்லோருக்கும் ஒன்று தானே? யாசிப்பவருக்கு வாய்க்கூசாமல் இல்லை என்று சொன்ன கஞ்சர்கள் எங்கே அவர்களது உயிரை ஒளித்துக்கொள்ள போகிறார்கள்? ஒருநாள் அவ்வுயிரும் போகத்தான் போகிறது. எல்லாம் கொஞ்சக்காலம்.
கீழ்காணும் நாலடியார் பாடல் இவ்வாறு கூறுகிறது.
புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின் (நாலடி 307)
தனது வறுமையானது புறமாகிய தன் உடலை வருத்த, அதற்காகத் தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை நிறுத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, ‘ஒன்றைத் தரவேண்டும்’ என இரப்பானாகில், அச்செல்வன் ‘இல்லை’ என்று மறுக்க, அதைக் கேட்டபோதே அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானோ? மானத்தால் உயிர் துறப்பான்!
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? (உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ. இது பிணத்தை யொப்பரென்றது.
மு.வரதராசனார் உரை
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.