தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

thirukkural meaning விளக்கம் குறள் 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில் பொருட்பால், குடியியல், இரவச்சம்
குறள் 1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரவச்சம் - மானந்தீரவரும்இரத்தலுக்குஅஞ்சுகை.

தெண்ணீர் - தெளிந்தநீர்

அடு - (வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர்
புற்கை - ஒருவிதக்கஞ்சி; சோறு; பற்று

அடுபுற்கை - சமைத்த உணவு

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.

தந்தது - கொடுத்தது

உண்ணலின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம்.

இனியது - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

இல் - வேறு இல்லை

முழுப்பொருள்
தான் சமைத்த கஞ்சி என்ற உணவானாலும் அதில் பெரும்பகுதி தெளிந்த நீராக இருந்தாலும் அது தன்னுடைய முயற்சியால் உழைப்பால் கிட்டியது. (யாசித்தததால் வந்ததல்ல). அந்த உணவை உண்ணுவதுப்போல் இனிமையான ஒன்று வேறு இல்லை. 

கஞ்சி என்றென்பதே ஒருவர் வறுமையில் இருப்பதை குறிக்கிறது. அக்கஞ்சியில் தெளிந்த நீர் இருக்கிறது என்றால் அதில் அரிசி/சோறு எவ்வளவு குறைவு என்பதை அறியலாம். வறுமையின் தீவிரம் குறித்தும் அறியலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட சூழலிலும் பிறரிடம் (கொஞ்சம் காய்கறி, பருப்பு என்று) உணவுக்காக யாசிக்காது இருக்க வேண்டுமென்று உணர்த்துகிறார்  திருவள்ளுவர்.

கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சைப்புகினும் கற்கை நன்றே", என்று பிச்சையெடுத்தலைப் படிப்புக்காகச் செய்யலாம் என்று ஔவையும் கூறியுள்ளதையும் நினைவில் கொள்ளவேண்டும். யாசிப்பதுகூட ஏன், யார், எதற்காக என்பதே என்பதைப் பொறுத்ததாம். “ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி” என்று ஆண்டாள் பாடுவது தக்காருக்கு ஈந்து இடுதலையும், இரந்து கேட்பாருக்குத் தருவதையும் நோன்பின் அறமாகத்தான். திருவெம்பாவையிலும் மாணிக்கவாசகர், “உடலிடு பிச்சையோடு ஐயமும் உண்டியென்று பலகூறி” என்று சிவபெருமானுக்கு பிறர் தாமாக இட்டதையும், சிவபெருமானே, காபால ஓட்டை ஏந்தி பிச்சை எடுத்ததையும் பாடுவார்.

”பெருமுத் தலையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்” (நாலடி.200)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.

மு.வரதராசனார் உரை
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

1 comment

  1. ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்
    நல்லதுதான்
© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain