குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]
பொருள்
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.
வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
நல்குதல் - கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு], To rejoice -> உவத்தல்
நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர்
காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.
யாம் - தன்மைப் பன்மைப் பெயர்
வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
கௌவை - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.
எடுக்கும் - எடுத்தல் - நிறுத்தலளவு; எடுத்தலோசை; உயர்த்துதல்; சுமத்தல்; தூக்குதல்; நிறுத்தல்; திரட்டுதல்; உரத்துச்சொல்லுதல்; குரலெடுத்துப்பாடுதல்; மேம்படுத்திச்சொல்லுதல்; பாதுகாத்தல்; எழுப்புதல்; தொடங்கல்; ஏற்றுக்கொள்ளுதல்; எடுத்துவீசுதல்; வீடுமுதலியனகட்டல்; இடங்குறித்தல்; கைக்கொள்ளுதல்; தாங்குதல்.
இவ் - இந்த
ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
முழுப்பொருள்
இவ்வதிகாரத்தில் சில குறள்களில் அலரை விரும்பாதவர்களாகவும் அலரை விரும்புபவர்களாகவும் காதலர்கள் இருக்கிறனர் கூறப்பட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலையில் காதலர்கள் அலரை விரும்புவோர் என்று இக்குறளில் கூறப்பட்டுள்ளது.
நான் என் காதலரை விரும்புவது போன்றே என் காதலர் என்னை விரும்புகிறார் ஆதலால் நாங்கள் இருவருக்கும் நினைப்பது என்னவென்றால் இந்தக்கௌவை அதாவது அலர்ப்பேச்சினை இவ்வூரார் எடுத்து உரைக்கலாம். எங்களுக்கு அதனால் துன்பமில்லை. அலர்ப்பேச்சால் இவ்வூர்மக்கள் அனைவருக்கும் எங்கள் தெரிவதால் எங்கள் காதல் இன்னும் பலப்படுகிறது.
பி.கு: இதனை இப்படியும் சொல்லலாம், நாங்கள் விரும்பியே மழையில் நனைந்தோம். ஆதலால் மழையில் முழுக்க நனைந்தப்பிறகு முக்காடு எதற்கு?
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.).
மணக்குடவர் உரை
யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார். ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலார்க்கு.
மு.வரதராசனார் உரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா உரை
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.