குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]
பொருள்
அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி.
நாண - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.
ஒல்வதோ - ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.
அஞ்சல் - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால்
ஓம்பு - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
என்றார் - என்று கூறினார்
பலர் - அநேகர்; சபை.
நாண - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.
நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.
கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி
நீத்தக்கடை - அவர் செல்லும்போது
முழுப்பொருள்
”இவ்வூர் மக்கள் நமது காதலைப்பற்றி அலர் பேசுபவர்கள் அதற்காக வெட்கப்பட்டு எங்கள் காதலை மறைத்துவைத்திருந்தேன். என்காதலர் பிரிந்துசென்றுவிடுவாரோ என்ற அச்சமும் அதற்கு ஒரு காரணம் ” என்று தலைவி நினைக்கிறாள்.
இதனை உணர்ந்த தலைவன் தலைவியிடம் கூறினான், ”இவ்வூர்மக்க்ள் அலர் பேசுவார்கள் என்று நாணப்பட்டாதே. பழிகூறும் ஊரார் நாணும் படியாக, உன்னைவிட்டு பிரியமாட்டான். ஆதலால் நீ அஞ்சாதே! நம் காதல் உன்னுள் வளர்வதை நாணத்தால் நீ தடுக்காதே [அஞ்சல் ஓம்பு என்றால் வளர்த்தல், பேணுதல் என்ற பொருளும் அடங்கும்]”.
வேலை நிமித்தமாக தற்காலிகமாக தலைவன் பிரிந்திருந்தாலும், பழிகூறும் ஊரார் நாணும் படியாக, அவன் என்னைவிட்டு நிரந்தரமாக பிரியமாட்டான். ஆதலால் அலரிற்கு பயந்து நான் ஏன் நாணவேண்டும்? என்று தலைவி கருதுகிறாள்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”அஞ்சலோம் பென்னும்
நன்னர் மொழியும் நீமொழிந் தனையெ” (கலி.21:7-8)
“அஞ்சலோம் பென்றாரை” (கலி 41:22)
“அஞ்சலோம் பென்றதன் பயனன்றோ” (கலி 132-9)
“அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான்” (சிலப் 24:3)
பரிமேலழகர் உரை
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
மு.வரதராசனார் உரை
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.
சாலமன் பாப்பையா உரை
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
Comments
Post a Comment