குறள் 820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
பொருள்
எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு
குறுகுதல் - குள்ளமாதல்; சிறுகுதல்; மாத்திரைகுறைதல்; அணுகுதல்.
ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
மனைக் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.
கெழீஇ - கெழுவு -. பொருந்த, நிறைய
கெழீஇ - நட்பாடி இருந்துவிட்டு
மன்றில் - மன்றம் - அவை:கழகம்; வழக்குமன்றம்; ஊருக்குநடுவாயுள்ளமரத்தடிப்பொதுவிடம்; காண்க:செண்டுவெளி; வெளியிடம்; போர்க்களப்பரப்பின்நடுவிடம்; சிதம்பரம்; வீடு; பசுவின்தொழுவம்; நெடுந்தெரு; மெய்ம்மை; உறுதி; மணம்.
பழிப்பார் - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.
தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.
முழுப்பொருள்
சிலர் நம்முடன் நமது வீட்டில் நட்புறவாடுவர் பொருந்திப்பேசுவர். நம்மை நெகிழவைப்பர். (நம்மிடம் காரியமும் சாதித்துக்கொள்வர்). ஆனால் ஒரு பொதுவெளியில், பலர் கூடியுள்ள சபைதனில் நம்மை இகழுவர். எள்ளுவர். நம்மை நகைப்புக்குரிய பொருளாக சித்தரிபர். நமது செயல்களையும் எண்ணங்களையும் சிறுமை செய்வர். (நண்பர்களுடன் மட்டும் கூடிய சந்திப்புகளில் வரம்புக்குள் கேலிசெய்துகொள்வது வேறு). அத்தகையோருடன் நட்பு சிறிதாயினும் அவர்களை சீர்தூக்கிப்பார்த்து அவர்களிடம் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தீய நட்பை தவிர்த்துவிட வேண்டும். அவர்களை நம்மிடம் அணுகவிடக்கூடாது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க. இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.
மு.வரதராசனார் உரை
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.