குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]
பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை; கழிகாமம்
நமக்கு - நமக்கு
ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல்.
ஒழிய - தவிர; நீங்க; கெட.
ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']
நமக்கொழியச் - நமக்குக் கிடையாது
சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.
சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
சென்றார் - சென்றவர்
சேட்சென்றார் - அகல தொலைவிற்கு சென்றவர்
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.
உள்ளி - நினைத்து
நறுமை - நன்மை; நன்மணம்.
நறுமணம்- நல்ல வாசனை,சுகந்தம்,மணப்பு,நறவு,குரவு
நறுமலர் - வாசனை கொண்ட மலர்
நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.
நாணின - நாணுதல், உடல் கூச்சங்கொள்ளுதல், To be influenced unfavorably as some trees or plants by nearness to the cocoa; to be uncongenial, to each other, as the red and white lotus, பிணங்க
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
முழுப்பொருள்
கண்ணே உன் கண்களை காணும் மலர்கள் அனைத்தும் நாணம் கொள்ளும். அவ்வளவு அழகு நீ! அவ்வளவு அழகு உன் கண்கள். ஆனால் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து தொலைவாகச் சென்றுவிட்டார். அதனை நினைத்துக்கொண்டு (உள்ளி) இருந்தால் நீ நோய் கொள்வாய் துன்பம் கொள்வாய். ஆதலால் உன் கண்கள் அழகிழக்கும். அதனால் உன்னைப் பார்த்து நாணம் கொண்ட மலர்களைப் பார்த்து நீ நாணம் கொள்ளும் நிலைமை வரும். ஆதலால் அத்தகைய துன்பம்(சிறுமை) நமக்கு (பெண்களுக்கு) தகாது (ஒழிய). ஆதலால் நீ அழலாமோ ? (என்று தோழி கூறுகிறாள்)
முழுப்பொருள்2: இக்குறளுக்கு முன்பு ஒருமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று தாமதமாகவே கண்டு உள்ளேன். ஆதலால் அதை இங்கே பதிவு செய்து பழைய பதிவை நீக்கிவிட்டேன்.
கணவர்(தலைவர்/காதலர்) மனைவியை (தலைவி/காதலி) விட்டுத் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று உள்ளார்.
அப்படி சென்று இருக்கையில் மன வருத்தமும், துன்பமும், (மன)நோயும் மனைவியான எனக்கு மட்டும் தான். அவருக்கென மன வருதம் ஏதுமில்லை
(ஏன் என்றால் அவர் தான் வேறு வேலையாக அங்கு இருக்கிறாரே. என்னை பிரிந்த எண்ணம் அவருக்கு இல்லை - என்று நாம் புரிந்து கொள்ளலாம் - நமக்கொழியச் என்று குறியமையால்).
அப்படி துன்பத்தில் வாடும் எனது மனது அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படி நினைத்துக்கொண்டு அவரை ஏங்கி துன்பத்தில் அழுது வாடுகையில் என் கண்கள் ஒளி இழந்து, பொலிவிழந்து இருக்கின்றன.
அத்தகைய அழுது வாடிய கண்கள் இன்று ஒரு நறுமலரை காண கூட கூசுகிறது, நறுமலரை அழகு என்று நினைகிறது. நறுமலரில் மயக்கும் வாசனை உள்ளது என்று நினைகிறது. இது எத்தனை பெருங்கொடுமை அவளுக்கு ?
ஏன் நறுமலர் மேல் நாணம் கொள்வது ஒரு பெருங்கொடுமையாக சொல்லபடுகிறது என்றால், முன்பு ஒரு காலத்தில் நறுமலர்கள் இவள் அழகை கண்டும் இவள் மேல் உள்ள வாசனையை நுகர்ந்தும் இவளை கண்டு வெட்கபட்டன. ஆனால் இன்றோ அப்படியே தலைகீழாக நடக்கிறது. இவள் நறுமலரை கண்டு ஆச்சர்யப்படுகிறாள். இவள் கண்கள் வெட்கபடுகின்றன, கூசுகின்றன.
இவ்விளக்க உரை ஆசிரியரின் கேள்வி :
இப்படி பெருங்கொடுமை ஆற்றி வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள கணவன்மார்களை என்ன செய்யலாம் ?
பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.]
(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)
சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)
மணக்குடவர் உரை
நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.
மு.வ உரை
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
சாலமன் பாப்பையா உரை
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.
காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க
ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து
உனை நினைத்து கலங்கிய...
என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய...
கண்கள் அழகிழந்து
விட்டதடா ...!!!
உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!