குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]
பொருள்
கொடிய - koṭiya pollaata பொல்லாத harmful, cruel
கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர்
கொடுமை - கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல்.
உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.
தொடியொடு - கைவளையல்களுடன்
தொல் - பழைய; இயற்கையான
கவின் - அழகு
வாடிய - வாடுதல் - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.
தோள் - புயம்; கை; தொளை.
முழுப்பொருள்
தலைவன் தலைவியைவிட்டு வேலை நிமித்தமாகப் பிரிந்துச் சென்றுள்ளான். அப்பிரிவுத் தலைவிக்கு ஆற்றும் துன்பம் எவ்வாறு அவள் உடலையும் வருத்துகிறது என்கின்றது இக்குறள்.
முன்பு காதல் இன்பம் தந்த தலைவன் இப்பொழுது தலைவியை பிரிந்துள்ளதால் அப்பிரிவு துன்பத்தை தலைவிக்கு தந்துள்ளதால் இப்பொழுது தலைவிக்கு பொல்லாதவனாகவும் கொடியவனாகவும் ஆகிவிடுகிறான். பிரிவு தந்த துன்பத்தால் மனதால் வாடுகிறாள். மனதின் வருத்தம் அவள் உடல் மெலிய காரணம் ஆகிவிடுறது. அவள் முன்னர் இயற்கையாக அழகினை கொண்ட தோள்கள் இப்பொழுது மெலிந்து விட்டதால் கைவளையல்கள் அவள் கைகளை விட்டு நழுவுகின்றன.இவ்வுடல் மெலிவு தலைவன் புரிந்த கொடுமையான செயலான பிரிவை (தலைவியை பிரிந்து சென்றதை) இவ்வுலகுக்கு பறைசாற்றிவிடும் என்று தலைவி கூறுகிறாள்.
குறுந்தொகை (239:1) வரி, “தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே” என்கிறது.
ஐங்குறுநூறு (28:3-4) வரிகள், “ஒண்தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன்கொல் அன்னாய்”.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? ('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும். இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.
மு.வரதராசனார் உரை
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.
Comments
Post a Comment