குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
அறிய - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
அற்க - வேண்டாம்
ஒற்றின்கண் - ஒற்றரிடத்தில்
செய்யற்க - எதுவும் செய்யாமல்
செய்யின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
புறப்படுத்தான் - புறப்படுத்துதல் - வெளிப்படுத்துதல்.
ஆகும் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.
முழுப்பொருள்
ஒரு ஒற்றர் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு தகுந்த பரிசாக, பெருமைப் படுத்ததலாக, மதிப்பாக, பாராட்டாக ஏதாவது செய்வதாக இருந்தால் அதனை பிறர் அறிய செய்யக்கூடாது. மீறி பிறர் அறிய செய்தால் அவர் ஒற்றர் என்றோ அல்லது அவர் மறைவாக ஒற்றர் தொழில் புரிந்தார் என்றோ வெளியுலகிற்கு வெளிப்பட்டுவிடும். அது பல பிரச்சனைகளை உருவாக்கும். பிறர் அறிய சிறப்பு செய்வது ”எங்கள் அப்பன் குதிர்க்குள் இல்லை” என்பதுப்போல் ஆகிவிடும். ஆதலால் சிறப்பையும் மறைவாக செய்க. அப்படி ஒரு சிறப்பு செய்தாலும் அது வெளியுலகம் அறியக்கூடாது. ஒற்றர் மட்டும் அறிந்தால் போதும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.
(மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம். இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது
மு.வரதராசனார் உரை
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.