தீயினால் - நெருப்பினால்
சுட்ட - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு.
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
ஆறும் - ஆறுதல் - தணிதல்; சூடுதணிதல்; அமைதியாதல்; புண்காய்தல்; அடங்குதல் மனவமைதி.
ஆறாதே - ஆறாது - தணியாது ; சூடுதணியாது ; அமைதியாகாது; அடங்காது; மனம் அமைதியடையாது
நாவினால் - நாக்கு - நாக்குஎன்னும்உறுப்பு; சொல்; நடு; துலைநா; மணியின்நாக்கு; தீயின்சுடர்; பூட்டின்தாள்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; அயல்; தானியக்கதிர்; படகுவலிக்கும்தண்டு.
சுட்ட - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
வடு - தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்.
முழுப்பொருள்
வடு என்றால் ஒரு தழும்பு. அது ஒருவித அடையாளம். அது ஒரு நினைவின் சின்னம். நல்ல நினைவுகள் நல்லவற்றை கொடுக்கும். உந்துசக்தியாக அமையும். ஆனால் கேட்ட நினைவுகள் ஒரு கோல் போல உள்ளே ஆறாத வடுவில்(புண்ணில்) தொட்டு தொட்டு (மனதை) ரணமாய் கொல்லும்.
இக்குறளில் திருவள்ளுவர் கூறுவது தீ நம்மை சுட்டு நமது உடம்பில் புண் ஏற்பட்டாலும் அது சிலநாட்களில் ஆறிவிடும். ஆனால் நாவினால் வந்த சொற்களால் ஒருவர் மனதை சுட்டால் அப்புண் புறத்தே ஆறி வடுவாக மாறினாலும் அகத்தே ஆறாது. அது நன்மை பயக்காது. ஆதலால் பிறரை சொற்களால் வருத்தாதே. நாவடக்கம் / சொல் அடக்கம் வேண்டும் ஒருவற்கு.
திருவள்ளுவர் இங்கே கடுஞ்சொற்கள் தீச்சொற்கள் என்று கூறவில்லை. ஏனெனில் கடுஞ்சொற்களையும் தீயசொற்களையும் பழிச்சொற்களையும் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தாமலும் மிக சாதாரணமான சொற்களாலும் சொற்களை கூறும் விதத்தாலும் உடல் மொழியாலும் விழிகளாலும் இதழ்களாலும் கூட பிறரை வருத்த முடியும். அதனால் தான் திருவள்ளுவர் பொதுவாக நாவினால் சுட்ட வடு என்று கூறியுள்ளார்.
கி.ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்" நாவலில் ஒரு வரி வரும் "நாட்கள் மன புண்ணை ஆற்றினாலும் நினைப்பு என்னும் கோல் படும்போது அதில் மீண்டும் இரத்தம் கசிகிறது"
ஒருவர் சொன்னால் அதன் வலி உள்ளூர ஆறிவிடும். காலம் மறக்கச்செய்யும். ஆனால் நாவினால் உள்ளத்தை நோகடடித்தவரை காணும் பொழுதெல்லாம் கூறியது ஞாபகத்துக்கு வந்துக்கொண்டே இருக்கும். புண் நம்மிடம் இருக்கிறது. ஆனால் வடு இன்னொருவராய் அல்லது இன்னொரு சொல்லாய் இருக்கிறது. தீ ஆயுதமாகும் போது ”வடு” அந்த ஆயுதத்தின் மீது படிவதில்லை. ஆனால், நாக்கு ஆயுதமாகும் போது, புண்பட்டவரை விடுத்து ”வடு” ஆயுதத்தின் உரிமையாளர் மீதே படிந்துவிடுகிறது. அந்த வடுவைப் பார்க்கிற போதெல்லாம் அல்லது எண்ணுகிற போதெல்லாம் காயம்பட்டவருக்கு வலி ஏற்படுகிறது. ஆம் உடலில் ஏற்பட்ட வலியை உள்ளம் மறக்கலாம். உள்ளம், தான் கொண்ட வலியை எப்படி மறக்கும்?
வன்சொல் வன்மத்தையே வளர்க்கும். இது காரணம் பற்றியே, “யாகாவராயினும் நாகாக்க” என்று எச்சரிக்கையாக முன்னரே சொல்லப்பட்டது. நாலடியாரும், அறநெறிச்சாரமும் ஒத்தகருத்திலே பாடல்களைக் கொண்டுள்ளன. இப்பாடல்கள் எளிதில் பொருள்கொள்ளாத்தக்க வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் – மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம் (அறநெறிச் சாரம் 100)
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து (நாலடியார் 63)
மஹாபாரதத்தில் பேரறத்தான் கர்ணனை இவ்வுலகம் தேரோட்டியின் மகன் என்றும் பின்பு தந்தை பெயர் தெரியாதவன் என்றும் அவனை எவ்வளவு இழிவு செய்தது. அது அவன் மனதில் எவ்வளவு பெரிய ரணத்தை கொடுத்து இருக்கும். ஒவ்வொரு முறையும் நினைக்கும் பொழுதும் அவமானங்களை சந்திக்கும் பொழுதும் அதில் இருந்து எவ்வளவு இரத்தம் கசிந்து இருக்கும்.
வெண்முரசு நாவல் தொடரில் (மஹாபாரதம் நவீன நாவல் வடிவில் தமிழில்) வெய்யோன் நாவலில் மயனீர் மாளிகை அத்தியாயத்தில் மயனீர் மாளிகையில் (மாயக்கூடத்தில்) துரியோதனன் திரௌபதியிடம் (மற்றும் அர்ஜுனன், பீமன், மற்றும் அவையில் இருந்தோர் முன்பு) அவமானப்படும் ஒரு தருணம் வரும். அது எப்படிப்பட்ட பின்பு ஏற்படும் பேரிழப்புகளை உண்டாக்கும் குருஷேத்திரத்துக்கு ஒருவித துவக்கப்புள்ளி என்பதை பின்னாட்களில் தான் உணர முடியும்.
================================================
துரியோதனன் அத்தருணத்தை பயன்படுத்திக் கொள்ளப்போகிறான் என கர்ணன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் அவர்களை நோக்கவில்லை. மகளிர்பகுதியை நோக்கி கைசுட்டி “அங்கரே, அவள் அணிந்திருப்பது தேவயானியின் மணிமுடி!” என்றான். அவன் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்து “ஆம்” என்றான் கர்ணன். “நான் சொன்னேனல்லவா? அரசர்களின் குடியவையில் அவள் அம்மணிமுடியை அணிந்துதான் வருவாள் என்று” என்றான். கர்ணன் தலையசைத்தான். அவள் அந்த மணிமுடியை எப்போது அணிந்தாள் என்று அவன் எண்ணம் ஓடியது. ஜராசந்தன் துரியோதனனிடம் “கௌரவரே, நாங்கள் பசுங்குருதிச் சுவைகொண்ட உணவை அருந்தப்போகிறோம். வருகிறீர்களா?” என்றான். “மல்லர்களுக்குரிய உணவு… திமிலெழுந்த வேசரநாட்டுக் காளை.”
துரியோதனன் “வந்துவிடுகிறேன்” என்று புன்னகையுடன் சொன்னபின் கர்ணன் கைகளைப்பற்றி “முறைப்படி அவளிடம் ஒரு முகமன் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றான். கர்ணனின் உள்ளம் ஏனோ படபடக்கத் தொடங்கியது. “அவளிடம் அம்மணிமுடி தனக்குரியவளை கண்டுகொண்டது என்று சொல்லப்போகிறேன். நான் அவளுக்கு அதை அளித்தேன் எனச் சொல்வதுதான் அது. அதை நான் சொல்லியாகவேண்டும்… இல்லையேல்…” என்று தயங்கினான். கர்ணன் “அரசியரிடம் நேரில் முகமன் சொல்லும் வழக்கம் இங்கில்லை” என்றான். “நான் அவளுக்கு அயலோன் அல்ல. அவள் என் குலமகள்” என்றான் துரியோதனன்.
கர்ணன் மெல்லிய எரிச்சலுடன் “தாங்கள் அஸ்தினபுரியின் அரசர், இவர்களால் உபசரிக்கப்படவேண்டியவர்” என்றான். “இல்லை அங்கரே, அக்கணக்குகளுக்கு அப்பால் நான் சென்றுவிட்டேன். இன்று இது ஒரு குடிவிழாவாக ஆகிவிட்டது. மூத்தவனாக நான் நின்றிருக்க வேண்டிய இடம் பாண்டவர்களின் நடுவேதான்” என்றான் துரியோதனன். “இக்கணம், இதை நான் கடந்தாகவேண்டும்…”
கர்ணன் “அரசே…” என்று சொல்லவர அவனை கேளாதவன் போல “அவளிடம் என் அன்னையின் வாழ்த்தை தெரிவித்துவிட்டு வருகிறேன். யாதவப் பேரரசியையும் நான் வணங்கியாக வேண்டும்” என்றபடி அரசர்களின் நிரையிலிருந்து அரசியரின் நிரையை நோக்கி வெண்பளிங்குத் தரையில் காலெடுத்து வைத்து நடந்தான். இரண்டாவது காலடியில் அது நீர்ப்பரப்பென மாறி அவனை உள்ளிழுத்து சரித்தது. திகைப்பொலியுடன் அவன் நீரில் விழுந்து எழமுயல கால்சறுக்கி மீண்டும் விழுந்தான். மொத்த அவையும் அவ்வொலி கேட்டு திரும்பி நோக்கியது. தனித்தனியாக என்றில்லாமல் அக்கூடமே மெல்ல நகைத்தது. தன்னையறியாமல் “மூத்தவரே” என்றபடி பிடிக்கப்போன துச்சாதனன் கால்வைத்த நீர்ப்பரப்பு பளிங்கென இருக்க அவன் தடுமாறி துரியோதனன் மேலேயே விழுந்தான்.
அக்கணத்தில் உண்டாட்டுக்கூடமே பெருங்குரலில் சிரித்தது. துரியோதனனின் முகம் எதிர்பாராதபடி மூத்தவரால் அடிக்கப்பட்ட கைக்குழந்தையினுடையதுபோல கணக்காலத்தில் உறைந்து கர்ணனின் விழிகளில் நின்றது. அவன் நீரில் இறங்கி வெண்பளிங்கில் கால்வைத்து மீண்டும் நீரில் நடந்து துரியோதனனை தோள்பற்றி தூக்கினான். அவ்விசையில் திரும்பி அவன் திரௌபதியை விழிதொட்ட அதே கணத்தில் துரியோதனனும் அவளை பார்த்தான். விழிகள் நகைக்க இதழ்கள் ஏளனத்துடன் மெல்ல வளைய அவர்களை ஒருகணம் விழிதொட்டுவிட்டு அவள் திரும்பி விஜயையிடம் சொல்லிக்கொண்டிருந்த மொழியாடலை தொடர்ந்தாள்.
துச்சாதனனை பிறிதொரு கையால் தூக்கி இருவரையும் இரு கைகளில் ஏந்தியபடி நீரிலிருந்து மேலேற்றினான் கர்ணன். இருவரும் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்ட விலங்குகள்போல வெறும் எடைமட்டுமாக இருந்தனர். அந்த ஒற்றைக்கணம் அப்படியே நீடிப்பதை அவன் உணர்ந்தான். ஒரு விழியொளி அம்புமுனை போல. ஒரு சிரிப்பு அணையாத தீ போல. ஒரு காலத்துளி மலையுச்சிக்கூர் போல. சுருளவிழ்ந்து எழும் நாகம். கோட்டெயிற்று அம்பு கரந்த நச்சுத்துளி. இக்கணம். இக்கணம். இக்கணம்.
துரியோதனன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் கால்கள் தரையில் இழுபட்டவை போல தளர்ந்து அடிவைத்தன. சிசுபாலன் கைதட்டி உரத்த குரலில் “அரசே, எண்ணி கால்வையுங்கள். அது தரையல்ல வானம்” என்றான். அறியாது துரியோதனன் தயங்க மீண்டும் உண்டாட்டவை வெடித்து நகைத்தது. துச்சாதனன் இடறிய குரலில் “நாம் சென்று விடுவோம் மூத்தவரே. இனி இங்கிருக்க என்னால் இயலாது” என்றான். “ஆம், சென்று விடுவோம்” என்றான் கர்ணன். துரியோதனன் சிறுவனைப்போல முனகினான். கர்ணன் விழிதிருப்பி நோக்க கனகர் அவர்களை நோக்கி ஓடி வந்தார். “அரசர்கள் ஆடை மாற்ற வேண்டும்” என்றான். “ஆம், ஆவன செய்கிறேன்” என்றார் கனகர்.
துச்சாதனன் தளர்ந்த குரலில் “என்ன இது மூத்தவரே?” என்றான். கர்ணன் திரும்பி திரௌபதியை பார்த்தான். அவள் சுபத்திரையிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பெண்கள் எவரும் அவர்களை பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் உடல் பார்த்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. “என்ன இது மூத்தவரே?” என்றான் துச்சாதனன் மீண்டும். அவையிலிருந்து விலகிய கௌரவர்கள் நிழல்களைப்போல அவர்களை நோக்கி வந்தனர். கர்ணன் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் விலக்கினான். அவர்கள் அனைவருமே திகைத்தவர்கள் போலிருந்தனர். மீண்டும் திரும்பி கர்ணன் விழிதுழாவி பீமனின் கண்களை கண்டடைந்தான். மறுகணம் அப்பால் அர்ஜுனனின் கண்களை சந்தித்தான். இரு நோக்குகளில் இருந்த பகைமையைக் கண்டு நெஞ்சதிர விழிவாங்கினான்.
துரியோதனன் “செல்வோம்” என முனகினான். கர்ணன் அவர்களை இரு தோள்களிலும் தாங்கியபடி கூடத்தைவிட்டு வெளியே செல்ல கனகர் முன்னால் ஓடினார். மூவர் ஆடைகளும் நீர் சொட்டி உடலில் ஒட்டி இழுபட்டு ஓசையிட்டன. துரியோதனன் தலைகுனிந்து முகத்தில் விழுந்து மறைத்த குழலுடன் நடந்தான். கூடத்தின் பக்கவாட்டு வாயிலை அவர்கள் கடந்ததும் குளிர்ந்த காற்று வந்து முகத்தை அறைந்ததுபோல் உணர்ந்தான். நீள்மூச்சுடன் உடலை எளிதாக்கினான். கனகர் ஓடிவந்து “தேர்கள் சித்தமாக உள்ளன அரசே” என்றார். “நாம் அரண்மனைக்குச் செல்கிறோம்” என்றான் கர்ணன்.
இடைநாழியை அடைந்ததும் துரியோதனன் விழப்போகிறவன் போல கால் தளர கதவை பற்றிக்கொண்டான். அவன் எதையும் நோக்கவில்லை என்று கர்ணன் எண்ணிய கணமே “அவர்களின் விழிகள்!” என்றான் துரியோதனன். நடுநடுங்கும் கைகளால் கர்ணனின் கைகளை பிடித்தபடி “என் அறை வரை என்னை தாங்கிச் செல்லுங்கள் அங்கரே. என்னால் நடக்க முடியாது, மீண்டும் விழுந்துவிடுவேன்” என்றான்.
================================================
உண்மையில் பிரிந்து செல்வதற்கான உளநிலை எப்போதும் அவர்களிடமுள்ளது. ஒரு பண்பாட்டியல்பு அல்லது பழக்கம் வேறுபட்டால்போதும் அதையே பிரிந்து செல்வதற்கான நெறியென உடனே எடுத்துக்கொள்வார்கள். ஒரே குலத்தை, ஒரே குடியைச் சேர்ந்த யாதவர்கள் உண்ணும்போது ஒருசாரார் முதலில் மதுவை உண்ணவேண்டும் பிறிதொரு சாரார் முதலில் இனிப்பு உண்ணவேண்டும் என வகுத்து ஐந்தாண்டுகாலம் அதை கடைப்பிடித்தால் சில ஆண்டுகளுக்குள் அவர்கள் இரு பிரிவினராக ஆவது உறுதி. அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
பிரிந்து செல்லும்போது அவர்கள் செல்வங்களை ஈவிரக்கமில்லாது பகுத்துக் கொண்டாகவேண்டும். அதைவிட நினைவுகளை பகுத்துக்கொள்ளவேண்டும். அது எளிதல்ல, அதற்கு அவர்கள் கண்டறிந்த வழி என்பது பூசல். மிகச்சிறிய தருணங்களைக்கூட எளிதில் பூசலாக்கிக்கொள்ள முடியும். அதிலும் ஒரு பொதுவிழாவில் பூசல் எளிதில் வெடிக்கும். ஏனென்றால் அங்கு அத்தனைபேரும் தங்கள் இடம்குறித்த பதற்றத்துடன் இருப்பார்கள். தங்களை தங்கள் உண்மையுருவைவிட மேலாகக் காட்ட முயன்றுகொண்டிருப்பார்கள். ஒருவனை சற்றே புண்படுத்தினால்போதும், அவனுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள அத்தனைபேரும் கிளர்ந்தெழுவார்கள்.
ஒருமுறை ஒருவன் சிவப்புத் தலைப்பாகை வைப்பதைப்பற்றி ஒரு வசையை சொன்னான். சிவப்புத் தலைப்பாகை அணிந்த அத்தனைபேரும் அவனுக்கு எதிராகத் திரண்டனர். பிறவண்ணத் தலைப்பாகை அணிந்தோர் அவனை ஆதரித்தனர். இரு கூட்டமாக எதிரெதிர் நின்று வசைபாடினர், பூசல் தொடங்கியது.” என்றார் இளைய யாதவர். புன்னகையுடன் “ஒரு குமுகச் செயல்பாட்டை அல்லது பண்பாட்டு நுட்பத்தைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த வழி அதை முடிந்தவரை பொருளற்றதாக விளக்கிக்கொள்வதே என்று படுகிறது” என்றார்.
ஷத்ரியர்களின் பூசலை பார்த்திருக்கிறேன், அது கொலையிலேயே முடியுமென அனைவரும் அறிவார்கள். ஆகவே அனைவரும் அதை தொடக்கத்திலேயே நிறுத்திவிட உள்ளம்கொண்டிருப்பார்கள். மூத்தவர்கள் உரியதருணத்தில் தலையிடுவார்கள். ஆனால் யாதவர்களின் பூசல்களில் உச்சமே தடியால் அடித்துக்கொள்வதும் கல்வீசுவதும்தான், எவரும் இறப்பதில்லை. அதை ஒரு உளஎழுச்சிகொண்ட களியாட்டாக அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்றே தோன்றும். மூத்தவர்கள் வெறுமனே நோக்கி நிற்பார்கள்.
அரசே, யாதவ மூத்தவர்களைப்போல பூசல்களை ஒடுக்கத் தெரியாத குடித்தலைவர்களை நான் கண்டதே இல்லை. ஏனென்றால் அவர்கள் உள்காடுகளில் தனித்து வாழ்பவர்கள். ஆண்டுக்கொருமுறையோ இருமுறையோதான் அவர்கள் திரளை பார்க்கிறார்கள். அயலாரிடம் பேசவே அவர்கள் தயங்குவார்கள். கூட்டம் அவர்களை முற்றிலும் செயலற்றதாக்கிவிடும். அவர்கள் பூசல்களில் நத்தையென உட்சுருங்கிவிடுவதை கண்டிருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “இறப்பு இல்லையென்பதனாலேயே யாதவர்களின் பூசல்கள் மேலும் வன்முறை கொண்டவை. ஷத்ரியர்களின் பூசல் இறப்புகளில் எப்படியோ முடிந்துவிடுகின்றது. இறப்பு அப்பூசல்களின் பொருளின்மையை உடனடியாக பேருருக்கொண்டு காட்டிவிடுகிறது. அது உருவாக்கும் துயர் அப்பூசல் உருவாக்கிய கசப்புகளை உருகச் செய்துவிடுகிறது.
யாதவர்களின் பூசல் முற்றிலும் சொல்சார்ந்தது. குருதியும் வலியும் இல்லை என்பதனாலேயே அது நிறைவுகொள்வதில்லை. மேலும்மேலுமென தாவுகிறது. உடல் செல்வதற்கு எல்லையுண்டு, அது பொருள். சொல் செல்வதற்கு எல்லையில்லை, அது வெளி. சிறுமைகளின் உச்சம், இழிவுபடுத்தலின் இயலும் எல்லை. அதன்பின் ஒருபோதும் அவை மறக்கப்படுவதில்லை. நாவினால் சுட்டவடு ஆறுவதில்லை. உண்மையில் ஆற அவர்கள் விடுவதுமில்லை. ஏனென்றால் அச்சொற்களினூடாகவே அவர்கள் தங்களை வேறுபடுத்திக்கொள்கிறார்கள். தங்கள் தன்னடையாளத்தை அவ்விலக்கம் வழியாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். அக்கசப்பை இழந்துவிட்டால் அவர்களிடம் எஞ்சுவது ஏதுமில்லை.
தலைமுறைகளுக்கு அவற்றை கைமாற்றுகிறார்கள். சொல்லிப்பெருக்கி தொன்மங்களாக்கிக் கொள்கிறார்கள். பிறவெறுப்பும் தன்னிரக்கமும் ஒன்றின் இருபக்கங்கள். இரு உச்சநிலைகளிலாக மாறிமாறிச் செல்லும் ஒருவரிடம் பேச நம்மிடம் ஏதும் இருப்பதில்லை. அரசே, சென்ற சிலமாதங்களாக நான் யாதவர்குடிகள் தோறும் சென்றுகொண்டிருந்தேன். கொந்தளிப்பின்றி நான் கண்ட எவருமில்லை. முதலில் அவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெருங்குலங்களாகச் சேர்ந்து வாழாமையால் அவர்கள் அதற்கான உளநிலைகளை கற்றுக்கொள்ளவில்லையா? அல்லது, பெருநிலம் நிறைந்து வாழ்பவர்களால் எப்போதும் ஒதுக்கப்பட்டு காடுபுகுந்து வாழநேர்ந்தமையின் தன்கசப்பா?
பின்னர் எப்போதோ தோன்றியது, அவர்கள் வாழும் அக்காட்டுத்தனிமையில் அவ்வண்ணமல்லவா மானுடர் உடனிருக்கமுடியும் என்று. அவர்களுக்கு உலகம் தேவைப்படுகிறது, அதனுடன் வீச்செழுந்த உளத்தொடர்பு வேண்டியிருக்கிறது. அது அன்போ வெறுப்போ. அன்பு அனைவர்மேலும் இயல்வதல்ல. அதற்கு அணுக்கம் தேவையாகிறது. எளியோருக்குக் குருதியே இயல்பான அணுக்கம். யாதவர்கள் தங்கள் மைந்தர்மேல் கொண்டிருக்கும் பேரன்பு திகைப்பூட்டுவது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் என அவர்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேரன்பு அக்குருதிவட்டத்திற்குள்தான். அதற்கு வெளியே விரிந்திருக்கும் மானுடவெளியுடன் அவர்கள் வெறுப்பால்தான் ஆழ்தொடர்புகொள்கிறார்கள்.
அத்தனை பேரன்புகொண்டவர்கள், விருந்தினர் மேல் குளிர்மழையாகப் பெய்பவர்கள், கள்ளமற்ற எளிய உள்ளமும் நேரடியான பேச்சும் கொண்டவர்கள் எப்படி அந்த அளவுக்கு வெறுப்புகொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விடை அதுவே. எளிய உள்ளம் கொண்டவர்கள் புரிந்துகொள்ளவும் எளிதானவர்கள் என்பதைப்போல பிழை பிறிதில்லை. அவர்களின் வெளிப்பாடுகளே எளிமையானவை. ஏனென்றால் அவற்றை சிக்கலாக ஆக்கிக்கொள்ளும் அறிவுத்திறன் அவர்களிடமில்லை. அவர்களின் ஆழுள்ளம் இப்புவியின் இயல்பான எதைப்போலவும் சிக்கலான பெருவலை. அதைத் தொட்டு நீவி புரிந்துகொள்வதற்குத் தேவையானது தெய்வங்களின் விழி.”
பரிமேலழகர் உரை