குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
[பொருட்பால், அரசியல், கல்வி]
பொருள்
ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
ஒருமைக்கண் - ஒரு பிறப்பில்
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
கற்ற - கற்கை - படித்தல்
கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.
ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு
எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.
ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.
உடைத்து - உடைதல் - இருக்கும்
முழுப்பொருள்
ஒருவர் தன்னுடைய பிறப்பில் கற்றவை அந்தப் பிறவியில் மட்டும் பயன் தராமல் மேலும் பிறக்கப்போகும் ஏழுபிறவிக்கும் பயன் தரும் தன்மையை சிறப்பை வாய்ந்தது. கற்கைக்கு அவ்வளவு பலன் (சிறப்பு) இருக்கிறது. ஆதலால் கல் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
இயற்கை விவசாயம் பற்றி ”ஒற்றை வைக்கோல் புரட்சி” (The One-Straw Revolution) என்கிற புத்தகத்தை எழுதிய மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka) என்பவர் அப்புத்தகத்தில் ஒரு கருத்தை கூறுவார் - வாழ்வு என்பது ஒருதடவை பிறந்து முடிவது அல்ல. அது ஓர் தொடர் சங்கிலி. நெற்பயிற்கள் எப்படி தொடர்ந்து வளர்ந்து மடிந்து மறுபடியும் வளர்ந்து தொடர்கிறதோ அதுப்போன்றது.
நெற்பயிற்கள் போன்று நம் வாழ்வை நாம் நோக்கினால் நமது சந்ததியாக நமது வாழ்வின் தொடர்ச்சியாக நமது பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, கொள்ளிப்பேரபிள்ளைகளை, எள்ளுப்பேரப்பிள்ளைகளை காணலாம். நாம் கற்றால், நாம் பல இன்னல்களை களைந்து கற்காததை இருந்ததைவிட இன்பமாக வாழலாம். இதனால் நமது பிள்ளைகளும் நன்றாக வாழ்வர். அதுவே நாம் நன்றாக இல்லையென்றால் நமது பிள்ளைகளும் சிரமப்படுவர்.
நாம் பூஜ்ஜியமாக (0) பிறந்து கற்றால் நாம் +1 ஆக முன்னேறுவோம். நமது பிள்ளைகள் கற்றால் +2 வாக முன்னேறுவார்கள், பேரப்பிள்ளைகள் கற்றால் +3வாக முன்னேறுவார்கள். இவர்களை பார்த்து இவர்கள் அருகில் உள்ளோரும் மேம்படுவார்கள். முக்கியமாக என்னவெனில் நாம் செய்த தவறுகளை நமது பிள்ளைகள் செய்யாமல் பார்த்துக்கொள்ளலாம். நமது அறிவும் அனுபவமும் அவர்களுக்கு உதவும்.
அதனால் தான் ஒருபிறவியில் கற்றது ஏழுப்பிறவிக்கும் பயன்படும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஆதலால் கல்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
குறள் 126
பரிமேலழகர் உரை
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.) சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.
மணக்குடவர் உரை
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
மு.வரதராசனார் உரை
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
Thirukkural - Management - Learning
There are questions and debates on life after death. Even the belief that a person has seven ages is debatable. However, Valluvar, through Kural 39 8, highlights the importance of learning by assuring that the learning that one acquires in the present life will serve him and help him for seven lives in future.
The learning acquired in one birth
Helps a man in seven.
Therefore, proper learning is essential as that sort of learning lasts for many ages.