குறள் 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
பொருள்
கனவினும் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.
இன்னாது - தீது; துன்பு
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
மன்னோ - வாழ்வேனா ?
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.
வேறுபடுதல் - வேறாதல் - பிரிதல்; மாறுபடுதல்; மனம்மாறுபடுதல்; முன்னையதன்மைகுலைதல்; சிறப்புடையதாதல்; ஒதுக்காதல்; தனியாதல்.
வேறுபட்டார் - வேறாய் இருப்பவர்கள்தம்
தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.
முழுப்பொருள்
சிலர் நம்மிடம் நன்றாக தேனாக இனிமையாக பேசுவர். ஆனால் அவர்கள் செயல்களோ வேறு மாதிரி இருக்கும். அவர்களின் செயல்களில் நேர்மை இருக்காது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களின் செயல்கள் நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும். அத்தகையோரின் நட்பை என்றென்றும் கொள்ளாதே ஏனெனில் அத்தகைய நட்பு கனவிலும் துன்பத்தையே தரும். கனவிலும் அவர்கள் நமது நம்பிக்கையை குலைப்பார்கள்.
சொல்லும் செயலும் இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று வலியுருத்தும் குறள் இது. இது நட்புறவுகள் என்றில்லை வணிக உறவுகளுக்கும் பொருந்தும். நாணயம் என்பது மிக மிக அவசியம். ஆதலால் ஒருவரின் சொற்களை செயல்களை வைத்து மதிப்பிட்டு அறிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலத்திற்கும் துன்பத்திற்கு வாக்கபட்டதுப்போல் ஆகிவும்.
ஒரு நாலடியார் பாடல் இக்கருத்தையே கூறுகிறது
யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் – சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. (நாலடி 127)
இப்பாடலின் கருத்து: மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாமல் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்.
மேலும், உதாரணமாக என் சொந்தவாழ்க்கையில் ஒன்றை கூறலாம். நான் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு தேடிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என்னிடம் தொலைப்பேசியில் பேசிய நபர் தேனாக பேசினார். தன்னுடன் வசிப்போர் எல்லாம் மிகவும் நல்லவர்கள். இங்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. இங்கு நாங்கள் ஐந்துப் பேர் தான் வாழ்கிறோம். உங்களைப்போல் திட்டமிட்டு வாழ்வோர் தான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம் பேசினார். ஒரு நண்பர்போல் இனிமையாக பேசினார். நண்பர் என்ற உணர்வை நம்பிக்கையை கொடுத்தார். அதை நம்பி நான் அவ்வீட்டிற்கு/அவ்வறைக்கு வாடகைக்கு சென்றேன். ஆனால் அவ்வீடோ மிக மிக அவலமாய் இருந்தது. சுத்தமென்பது எங்கும் சிறிதும் இல்லை. மொத்தம் ஏழு பேர் தங்கிக்கொண்டு இருந்தனர். ஒரே ஒரு ஒன்றிணைந்த குளியலறையும் கழிவறையும் இருந்தது. யோசித்துப்ப்பாருங்கள் ஏழு பேருக்கு ஒரு குளியலறை கழிவறைஎன்றால் எவ்வளவு அவலமாக இருக்கும் என்று. அதுவும் சுத்தம் செய்யவில்லை என்றால். மேலும், வீட்டின் வாடகை சரிசமமாக வகுக்கபடவில்லை. அவ்வீட்டில் சிறிய அறையில் இருப்போரிடம் அதிகம் வாடகை வாங்கபட்டது. இப்படி சொல்லும் செயலும் வேறுவேறாக இருந்தது. ஆனால் மற்றபடி என்னுடன் போனில் பேசிய அந்த ஒருங்கிணைப்பாளர் எப்பொழுதும் தேனாக நண்பர் போல் பேசுவார். ஆனால் அவரது செயல்களோ சற்றும் நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது. அவரை என்றும் நம்ப முடியாது. (ஆதலால் அவ்வறை விட்டு நான் அடுத்த மாதமே வெளியே வந்துவிட்டுவேன்) அத்தகையோருடன் நட்பு வைத்துக்கொள்வது மிக மிக துன்பம் தரும். கனவில் நினைத்தாலும் துன்பமே. ஆதலால் அத்தகையோருடன் உறவு வைத்துக்கொள்ளாதே.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.).
மணக்குடவர் உரை
செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.
மு.வரதராசனார் உரை
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
No comments:
Post a Comment