இல்லாரை எல்லாரும் எள்ளுவர்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை குறள் 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
குறள் 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு.
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
இல்லாரை  - பொருள் இல்லாதவர்
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளுவர்  - இகழ்வார், கீழே தள்ளுவார்கள்
செல்வரை - பொருட்செல்வம் உள்ளவரை
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
செய்வர் - செய்வார்கள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
சிறப்புச்செய்தல் - ஒப்பனைசெய்தல்; போற்றுதல்; விழாக்கொண்டாடுதல்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
இக்குறளுக்கு எல்லா உரைகளும் சொல்லும் பொருள் பொருள்/பணம்/செல்வம் இல்லாதவர்களை இவ்வுலகம் இகழும், கீழே தள்ளும். ஆனால் பணம் உள்ளவர்களை போற்றும். மேலோட்டமாக பார்த்தால் இதை சட்டென்று ஏற்றுக்கொள்ளத் தூண்டும். ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, ஊரில் உள்ள பணம் படைத்தவர்களை எல்லோரும் போற்றுவர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு அயோக்கியர் என்று தெரிந்தால் அவர் செல்வந்தவர்களாக இருந்தாலும் அவரை நாம் இகழ்வோம். அதே போல ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவரிடம் பேசி அவருடைய நற்பண்புகளையும் அப்படிப்பட்ட ஏழ்மையிலும் அவர் உழைப்பிலும் நேர்மையிலும் அன்பிலும் தவறாதவர் என்று அறிந்தால் எல்லோரும் அவரை போற்றுவர். ஆதலால் செல்வம் என்பது வெறும் பணம் ஆகாது.

பொருள் என்ற சொல்லுக்கு உண்மை, செயல், மெய்மை, நன்மதிப்பு, அறிவு, கொள்கை, அறம், வீடுபேறு, பொன் என்று பலவற்றை அர்த்தமாக கூறலாம். ஆதலால் இப்பொருள்களை இல்லாதவரை எல்லோரும் இகழ்வர். இப்பொருள்களை உள்ளவரை எல்லோரும் சிறப்பு செய்வர்.

சிறப்பு என்னும் சொல்லிற்கு பகட்டு என்ற பொருளும் உண்டு. அவ்வாறு எடுத்துக்கொண்டால் இக்குறளின் பொருள் ->  பொருள் (பணம்) இல்லை என்றால் எல்லோரும் முகத்து நேரே மட்டும் தான் இகழ்வார்கள். ஆனால் தீயவழியில் செல்வம் ஈட்டியவரை நன்மதிப்பு இல்லாத செல்வந்தரை எல்லோரும் பகட்டு செய்வர். அதாவது பெருமை செய்வது போன்று ஒப்பனை செய்வர். புறம் பேசுவர்.  அது இன்னும் கேவலம்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பிலே பல இலக்கியப் பாடல்களில் ஒத்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டியுள்ளார். நாலடியார், அப்பர் தேவாரம், கம்ப இராமாயணம், பழமமொழி என்று பல இலக்கிய மேற்கோள்கள் இருந்தும், முற்றுக் கருத்தையும் கூறும், கீழ்வரும் பழமொழிப் பாடல் கவனிக்கத்தக்கது, படிக்கும் வழியே பொருள் விளங்க எழுதப்பட்ட பாடல்.

முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல் (பழமொழி 59)

(முட்டின்றி ஒருவர் – உச்சமிது என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகுதியாக, குறைவின்றி;
அட்டு இற்று – சமைக்கப் பட்ட உணவு தீருமட்டும்;
கெட்டார்க்கு – செல்வமிழந்து வறுமையுற்றவர்க்கு;
நட்டார் – நண்பர்கள்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இலாஅர்க் கில்லைத் தமர்” (நாலடி 283)

“வாழாதார்க் கில்லைத் தமர்” (நாலடி 290)

“மாடு தானது இல்லெனின் மானுடர்
பாடு தான்செல்வா ரில்லை” (அப்பர்.கொண்டீச்சரம் 3)

“மறுமை கண்டமெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்டபின் யாவரும் யாரென விரும்பார்” (கம்ப.வருணனை.14)

“அருளுடைய யாரும்மற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை” (பழமொழி 269)

“உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்” (நாலடி 284)

“முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்” (பழமொழி 59)

“பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணின்
போற்றியென் றேற்றெழுவர்
இருள்கொள் துன்பத் தின்மை காணின்
என்னேஎன் பாரும் இல்லை” (திருவாய். 9.1:3)

“செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம் என்றுநுண் ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தா ரொருதடங் குடங்கைக் கண்ணார்” (சீவக.2535)

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே” (ஆதி உலா.136)

பரிமேலழகர் உரை
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

பெருவணிகர் ஒருவர் வந்தால் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அவன் பொருள் இழந்து வறியவனாகி இரந்து பிழைக்கும் தெருவாழ்பவனாகி அங்கு வந்து நின்றால் அதைவிட கூச்சலிட்டு நகைக்கிறார்கள். அவன் மீண்டும் மீண்டும் அங்கு வரும்பொருட்டு அவனுக்கு சிறு செம்பு நாணயங்களை வீசுகிறார்கள். அன்னமளிக்கிறார்கள். அவன் வேண்டும் அளவுக்கு மது அளிக்கிறார்கள். அவன் களிகொண்டு கீழ்மையில் திளைக்கும்போது கொண்டாடுகிறார்கள். அவர்களால் கொண்டாடப்படும் பொருட்டு அவன் தன்னை மேலும் கீழ்மை நோக்கி செலுத்திக்கொள்கிறான். அவனை இளிவரல் உயிரெனப் பேணுகிறார்கள்.

மூத்தவரே, என் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் உணர்ந்து வந்த வலி நீங்கள். என் வெற்றி வெற்றி அல்ல என்று உள்ளிருந்து முணுமுணுக்கும் ஒரு குரல். இதோ முழு வெற்றி அடைந்துவிட்டிருக்கிறேன். இனி இப்புவியில் நான் அடைவதற்கொன்றுமில்லை. அவ்வெற்றியை தங்கள் தோல்வியினூடாகத்தான் ஈட்ட முடியும் என்பதனால்தான் இந்தச் சிறு அமைதியின்மை. இந்த வெற்றி எனக்கு பிடித்திருந்தது, ஆனால் உங்கள் குருதி மேல் அது நிகழ்வதை நான் விரும்பவில்லை என்று உணர்கிறேன். ஆயினும் அதுவே ஊழின் வழி என இன்று அறிகிறேன்.

நீங்கள் அறியாதது உலகியல் மெய்மை. நூல்களால் அவை சொல்லும் பொய்யறங்களால் மறைக்கப்பட்டது அது. அறிக, இப்புடவி அமைந்துள்ளது பொருட்களால். பொருட்களை இணைக்கும் பொருண்மை நெறிகளால். ஒவ்வொரு பொருளுக்கும் இன்னொன்றுடன் ஒப்பிட மதிப்பு உருவாகிறது. அனைத்துப் பொருளையும் ஒப்பிடும் ஒரு பொருள் பொன்னே. பொன்னில் அளவிடப்படுகின்றன அனைத்துப் பொருள்மதிப்புகளும். பொன்னென்பது இப்புவியே. இப்புவியிலுள்ள அனைத்தும் ஆகும் ஆற்றல் கொண்ட பொருள் அது. எனவே பொன்னன்றி இப்புவியில் வேறு விழுப்பொருள் இல்லை.

பொன்னுக்கு அப்பால் பிறிதொன்றை வைத்த பிழையே நீங்கள் செய்தது. தன்னை மதிக்காது பிறிதொன்றைச் சூடிய ஒவ்வொருவரையும் பொன் தண்டிக்கும். வஞ்சம் கொண்டு பின்னால் வரும். விழிநீர் சிந்தி தன் முன்னால் பணிய வைக்கும். அவர்கள் தலைமேல் கால் வைத்து அழுத்தி மண்ணோடு மண்ணாக்கும். பொன் தன்னை வழிபடுபவரை வாழ்த்துவது. அறியாதோரை விழைவு காட்டி இழுப்பது. அறிந்து புறக்கணிப்போரை அழித்து மகிழ்வது. இவ்வெற்றி என்னுடையதல்ல, பொன்னின் வெற்றி. நான் பொன்னின் எளிய பூசகன். அடிபணிந்து வாழும் அடியோன்.

பொன்னே திருமகள். அவளை கனகை என்கின்றனர் கவிஞர். புவியளந்து, விண்ணளந்து, திசை விரிந்து படுத்திருப்போனின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஒளி. மங்கலங்களில் முதன்மையானது. அழகுகளில் தலையாயது. திருமகள் பொன்வடிவிலேயே உறைகிறாள். என் இல்லத்தில் திகழ்கிறாள். என் நாவில் சொல்லெனவும் என் மைந்தர் விழிகளில் ஒளியெனவும் அவள் வாழ்கிறாள். என் குடி இங்கு பெருக வழிவகுப்பாள். இங்கு அமர்ந்து இன்று எண்ணம்கூர்க! எங்கு பிழைசெய்தோம் என்று உணர்க! அன்னம் அன்னம் என இரந்து அமர்ந்திருக்கையில் ஒருகணத்திலேனும் உங்கள் ஆணவத்தை அழித்து பொன்னுக்கு உங்களை அளியுங்கள். கனகை முன் பணியுங்கள். அவளிடம் உங்களை பொறுத்தருளும்படி கோருங்கள்.

அவர் போத்யரை கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் புன்னகைத்து “பொன்மகளுக்குத் தடையாக இருப்பவள் சொல்மகள் என்பார்கள். சொல்மகளே பொன்மகளை பெற்றுதான் வாழ்கிறாள் என்று உணருங்கள். ஒருமுறையேனும் உங்கள் சொல்லுடன் எங்காவது அமர்ந்து நீங்கள் பொன் பெறாது எழுந்துவந்தது உண்டா? உங்கள் சொல்லுக்கு பொன் மதிப்பே இல்லையென்றால் அதை எவரேனும் மதிப்பார்களா? சொல்மகள் பொருள்மகளின் கொழுநனின் உந்திச்சுழியில் உதித்தவனின் மனைவி. எங்கு இருக்கவேண்டுமோ அங்குதான் அவள் இருக்கவேண்டும்” என்றார்.

போத்யரின் பழுத்த விழிகள் அவரை நோக்கிக்கொண்டிருந்தன. அவர் உரக்க நகைத்து “சொல் நன்று. பொன் எழுத்தாணியால் பொறிக்கப்படுமெனில் மேலும் நன்று” என்றபின் திரும்பிச்சென்றார்.

1 comment

  1. உண்மை.....

    நல்விளக்கம்..
© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain