Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

அஞ்சாமை - பயப்படாமை, திண்மை (மன உறுதி, வலிமை, கலங்காநிலைமை, பருமன்; உண்மை, நிதானம், பாரம், மெய்), ஒன்றை அஞ்சாமல் எதிர் கொள்ளுதல், ஒன்றை பயம் இல்லாமல் சந்தித்தல்; பயமின்மை, அச்சமின்மை
தைரியம், துணிச்சல், துணிவு

ஈகை - கொடை; பொன்; கற்பகம்; இண்டு; புலிதொடக்கி; காடை; காற்று; மேகம்; கற்பகமரம்; இல்லாமை; ஈதல்; கொடுத்தல்; பகிர்ந்துகொடு

அறிவூக்கம் - அறிவு + ஊக்கம்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

இந்நான்கும் -

எஞ்சாமை -குறையாமை, ஒழியாமை, முழுமை.
எஞ்சு - சுருங்கு, குறை; சேஷமா யிரு;  கட; செய்யாதொழி.

வேந்தர்க் கியல்பு - வேந்தர்க்கு + இயல்பு

வேந்தர் - வேந்தன் - இராசா, எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன், முடிசூடியமன்னர், முதன்மையான

இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது 
- தன்மை; இலக்கணம்; ஒழுக்கம்; நற்குணம்; நேர்மை; முறை; வரலாறு; பிரமாணம்பத்தனுள்ஒன்று.

முழுப்பொருள்
ஒரு மன்னருக்கு (அல்லது தலைவருக்கு) குறைவில்லாத(எஞ்சாமை) நான்கு குணங்களை / கோட்பாடுகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். அவை:

1) அஞ்சாமை - பகைவர்கள், பகைவர்களின் பலம் கண்டு பயப்படாத / அஞ்சாத மன திடம் வேண்டும்.

அஞ்சாமை என்றெனபடுவது நீதி வழங்குவதிலும் இருக்க வேண்டும். எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நீதி வழங்க வேண்டும்.
உதாரணம்: மனுநீதி சோழன். கன்று குட்டியை கொன்ற தன் பிள்ளை அவர் அதே தண்டைனையை கொடுத்து தண்டித்தார்.

2) ஈகை - மக்களுக்கு வாரி வாரி வழங்கும் கொடையுள்ளம். ”மாரி ஈகை” ஏன்று புறநானூறில் சொல்லப்பட்டு உள்ளது.

அஞ்சாமையும் ஈகையும் படைகளையும் ஈகையையும் குறிப்பிடனவாம். 

இன்றைய காலகட்டத்தில் அஞ்சாமை எனப்படடுவது படைகளுக்கு மட்டும் பொருந்தாது என்றென்பது எனது கருத்து. அது மக்களுக்கு (இயற்கைக்கு கேடு விளைவிக்காத, அறம் சார்ந்த) நலம் சேர்க்கும் செயல் திட்டங்களை துணிவுடன் எடுத்து செயல்படுத்தும் மனதிடம் வேண்டும் என்பதையும் குறிக்கும். மற்றும் அண்டை நாடுகளில் ஏற்படும் அநீதிகளை கண்மூடிக்கொண்டு இல்லாமல் தட்டிக்கேட்டும் அஞ்சாமை வேண்டும்.

3) அறிவு  - எல்லா போர் வித்தைகள், அற நெறி நூல்கள், மற்றும் அரசருக்கு தேவையான அனைத்தையும் கற்க வேண்டும். அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். அதனை எப்போழுதும் வளப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். தன்னையும் தன் நாட்டை சுற்றியும் இவ்வுலகத்தில் நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். மக்களை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான வற்றை நிறைவேற்ற வேண்டும். ஒரு மன்னன் நாட்டின் எல்லா துறைகளை பற்றியும் நன்கு அறிந்தவராக அல்லது நன்கு அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அது மட்டுமின்றி இயற்கைக்கு  கேடு விளைவிக்காத திட்டங்களை செயல்படுத்தும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறம் தார்ந்த செயல்களை செய்வதில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அஞ்சாம எனப்படுவது தெளிவு பிறக்கும் பொழுது வரும். தெளிவு என்பது அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது வரும்.

4) ஊக்கம் - எல்லா செயல்களுக்கு ஊக்கம் மிக முதன்மையான் ஒன்று. இது தொடங்கிய செயலினை, வினையினை முழுமையாக முடிப்பதற்கு தேவையா ஒன்று. ஒரு செயலை பாதியில் மலைத்துப்போய் பாதியில் விடக்கூடாது. ஒரு செயலை ஊக்கம் இல்லாமல் செய்யக்கூடாது. ஊக்கம் இருந்தால் மற்றவையெல்லாம் தானாய் நடக்கும். படைகளைக்கண்டு அஞ்சாமல் ஊக்கத்துடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மன ஏழுச்சியுடன் செயல்பட வேண்டும்.

அறிவும், ஊக்கமும் நாம் செய்யும் செயல் சார்ந்தது. அறிவு என்பது செய்யும் செயலில் இருந்து கற்பனவாம். ஊக்கம் என்பது செய்யும் செயலில் கொண்டனவாம்.

ஆக, இந்நான்கு குணங்களும் படையை சந்திக்கும் பொழுது, மக்களுக்கு கொடுக்கும் பொழுது, அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது, எச்செயலை செய்யும் பொழுது குறைவில்லாத அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய குணங்களுடன் இருக்க வேண்டும். இவை அவர்களுக்கு இயற்கை அமைந்த வண்ணம் இருக்கும் அளவிற்கு தங்களை தகுதிப் படுத்தி கொள்ள வேண்டும். இல்லை இப்படி சொல்லலாம், இக்குணங்களை இயற்கையாய் பெற்றவர்ப் போல தன்னை வளர்துக்கொண்ட, செயலாற்றிய மன்னர் வெற்றிகளை குவிக்கும், மக்கள் வணங்கும் வேந்தர் ஆவார்.

ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை என்று திருவள்ளுவர் மூன்று குணங்களுக்கும் தனித் தனி அதிகாரம் வைத்து இலக்கணம் வகுத்துள்ளார்.

மேலும்: அஷோக்

நன்றி புகாரி
பகைமை கண்டு அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
அறம் போற்றும் தெளிந்த நல் அறிவு
சிகரம் தொடும் தளராத ஊக்கம்
இவை நான்கும்
சிறந்ததோர் ஆட்சியாளனின்
இயல்புகளாம்


பரிமேலழகர் உரை
வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - தீமையும் கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். 

விளக்கம் 

(ஊக்கம்: வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.) 

மணக்குடவர் உரை
அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

சாலமன் பாப்பையா உரை
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வேந்தற்கு இயல்பு-அரசனுக்கு இயல்பான தன்மையாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை-அஞ்சாமையும் கொடைத்தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் குறையாதிருத்தலாம்.

இவற்றுள் அறிவு ஏழுறுப்புக்களையும், ஈகை படையையும் குடியையும் நோக்கியனவாம். ஏனையிரண்டும் வினைக்குரியனவாம். ஊக்கம் என்பது வினைசெய்தற்கண் உண்டாகும் மனவெழுச்சி. இவற்றுள் ஒன்று குறையினும் பகையினாலேனும் படையினாலேனும் குடியினாலேனும் கேடுநேருமாகலின், 'எஞ்சாமைவேந்தற்கியல்பு' என்றார். வள்ளுவர் காலத்தமிழகம் மூவேந்தராட்சிக் குட்பட்டதாகலின் அரசன் வேந்தன் எனப்பட்டான். முடியணியும் உரிமையுடைய சேர சோழ பாண்டியர் மூவரே வேந்தர். வேய்தல் முடியணிதல். வேய்ந்தான்-வேந்தன். உம்மை முற்றும்மை.

நன்றி அம்மன் தரிசனம்
அரச பதவிக்கு வருகிறவர்களுக்கு மிகவும் துணிச்சல் தேவை. கொடை கொடுக்கும் குணம் தேவை. அறிவு தேவை. ஊக்கம் தேவை.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

என்கிறது அடுத்த குறள். ஒரு நாட்டின் உள்ளேயிருந்தும், வெளியே இருந்தும் மிரட்டல்கள் எப்போதும் ஒரு மன்னனுக்கு இருக்கவே செய்யும். அஞ்சியவன் அந்நாட்டிற்குத் தக்க நல்லமுடிவை எடுக்கத் தயங்குவான். சிறந்த திட்டங்களையும் செயல்களையும் நிறைவேற்ற அஞ்சாமை தேவை. ஈகை என்பது வெறும் கொடை மட்டுமல்ல. மக்களுக்கு வழங்கும் சலுகைகளும் இதில் அடங்கும். இது உள்நாட்டில் மன்னனின் சக்தியைப் பெருக்க உதவும். இதையெல்லாம் கடந்து தெளிந்த அறிவு வேண்டும்.

ஒரு நாட்டு மக்களின் இயல்பறிந்து செயல்படுத்தாத திட்டங்கள், நல்ல திட்டமாகவே இருந்தாலும் அது கேடுகளைத் தந்துவிடும். இந்திய மக்களின் மனோதர்மங்களையும் மனப்போக்குகளையும் தெளிவாய் அறிந்த மகாத்மாவின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்திருக்குமேயானால், நாட்டில் புதிதாய்த் தோன்றி பல பிரச்னைகள் தோன்றாமலே வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். ஆட்சி செய்வோருக்கு அது மிக அவசியம்.

இன்று இந்த நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன? நாட்டின் வருவாய் என்ன? செலவு என்ன? என்பதை சற்றும் அறியாதவர்கள் கூட பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆகிவிடமுடிகிறது.

ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார், தேசிய கீதத்தைக் கூடத் தவறாகப் பாடுகிறவர்கள் மேலே வந்துவிடுகிறார்கள் என்று. தேசிய கீதம் தெரியாதவர்களுக்கு தேசத்தைப் பற்றி என்ன தெரியும்? தேசத்தைப் பற்றித் தெரியாதவர்கள் அதன் நலத்திற்கு என்ன முடிவெடுப்பார்கள்?

அறிவு தேவை. சகலவிதமான விஷயங்களிலும் தெளிந்த பார்வை அரசனுக்குத் தேவை. இன்று கட்டவுட்களில் மட்டுமே சிங்கமே, புலியே, அஞ்சாமையே, அறிவே என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

கட்டவுட்களில், பேனர்களில் வள்ளல்கள் என்று சித்திரிக்கப்படுகிறவர்கள் நடைமுறையில் ஓட்டை நாணயத்தைக் கூட பிறருக்கு உதவக் கூடியவர்களாக இருப்பதில்லை. வள்ளுவர் சொல்லும் இலக்கணப்படியே ஆள்வோர்கள் அமைந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று மனக்கோட்டைதான் கட்ட முடிகிறது நம்மால்.

நன்றி: Indian Finance Bazaar
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தைரியம், ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு பண்புகளும் சிறிதும் குறைவில்லாமல் இருப்பது நன்மை தரும். அதுபோல் முதலீட்டாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய மூன்று பண்பு, முதலீட்டை பற்றிய நல்ல அறிவு, அதை அணுகின்ற தைரியம் மற்றும் செயல்படுத்துகின்ற ஊக்கம் மிகவும் அவசியமானதாகும். இந்த குணங்கள் எந்த நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் அம்சமாகும். பெரும்பாலானோர் இந்த குணங்களை பின்பற்றாமல் தவறு செய்து விட்டு, பெரும் மண உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளபடுகிறார்கள். இந்த போக்கை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

No comments:

Post a Comment