குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]
பொருள்
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.
பெண்ணினான் - பெண்ணினால் – பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்)
பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.
உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது
என்ப - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
கண்ணினான் - தம்முடைய கண்ணசைவாலேயே
காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
காமநோய் - s. Love-sickness, மதன நோய்.
சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்
இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை
முழுப்பொருள்
ஒரு பெண்ணாலே தனக்கு பெண்மை இருக்கிறது என்பதை உணர்த்த முடியும். எப்படி? தலைவன் பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவியின் கண்களை பார்த்தாலே அவள் காமநோயாம் பசலைநோயை கொண்டு இருக்கிறாள் என்பதை மற்றவர்களால் அறிந்துணர முடியும். மேலும், என்னைவிட்டு பிரிந்து செல்லாதீர் என்று தலைவனுக்கு கண்களாலேயே குறிப்பறிவுறுத்த முடியும் எனில் அதுவே எப்பெண்ணிற்கு பெண்மை இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.).
மணக்குடவர் உரை
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.
மு.வரதராசனார் உரை
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.