கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல் கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.குறள் 1271
குறள் 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
கரப்பினும் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

கையிகந்து - கையிக-த்தல் - அளவுக்கு மேற்படுதல், மீறுதல்

ஒல்லல் - ஒல்லுதல்; இயலுதல்; பொருந்துதல்; இசைதல்; ஊடல்; தீர்க்கை
ஒல்லா - இயல முடியவில்லை என்றால்

நின் - உன்னுடைய

உண்கண் - மைதீட்டியகண்

உரைக்கல் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

உறுவது - வரற்பாலது; இலாபம்; ஒப்பது (That which resembles); தருவது.

ஒன்று - ஒன்று

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
நீ என்னிடம் சொல்ல கூடாது என்று நினைக்கும் அந்த சொற்களை மறைக்க முற்படுகிறாய். ஆனால் அன்பின் ஆழத்தில் இருந்து வரும் அந்த சொற்கள் அன்பின் மிகுதியால் மறைக்கமுடியாது போகிறது. ஏன் என்றால் நீ சொல்ல வேண்டும் என்ற சொற்களை கண்ணில் மையிட்டுக்கொண்டு மறைக்க முற்படுகிறாய். ஆனால் மைதீட்டிய உன் கண்களோ எனக்கு உண்மையை குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. நீ என்ன சொல்ல முற்படுகிறாய்? சொல் கண்ணே.

இங்கே இரண்டு சூழ்நிலைகள் இருக்க வேண்டும் - ஒன்று பிரிந்த சோகத்தில் ஏக்க நோயால் வாடும் தலைவி களைப்புற்று வரும் தலைவனிடம்  தனது சோகத்தினை காண்பிக்க கூடாது என்று மைதீட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போல பொய் தோற்றம் கொள்ளலாம் - இரண்டு வேலைக்காக பிரிந்து செல்லும் கணவரிடம் பிரிவின் சோகம் தன்னை (தலைவியை) ஆட்க்கொள்ள துவங்கிய பின்னும் அவரை வழி அனுப்பும் பொழுது இன் முகம் காண்பிக்க வேண்டும் என்று நினைத்து மைதீட்டுக்கொண்டு இருக்கலாம்.

ஒப்புமை
”இன்றிவ்வூர் அலர்தூற்ற வெய்யாநீ துறத்தலின்
நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்றவேல் நுதியேய்க்கும் விறல்நலன் இழந்தினி
நின்றுநீர் உகக்கலுழும் நெடும்பெருங்கண் அல்லாக்கால்” (கலித் 124:13-6)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.]

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.)

கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக.

தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.


மணக்குடவர் உரை
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.

மு.வரதராசனார் உரை
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain