Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துப்பு  - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.
துப்பார் - உண்பவர்

துப்பார்க்குத் - உண்பவர்க்கு
துப்பு  ஆய - உணவாக
துப்பு  ஆக்கி - உணவு விளைவிக்க தேவையான பொருளாக
துப்பார்க்குத் - அவற்றை உண்பார்க்கு
துப்பு - உணவாக
ஆயதூஉம் - ஆவதும்
மழை.- வான் பெய்யும் மழை

முழுப்பொருள்
இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் உணவை உண்டே வாழ்கின்றன (சில உயிரினங்கள் உணவு உண்ணாமாலும் இருக்கலாம்).  அவ்வுணவை விளைவிக்க கூடிய மிக தேவையான பொருட்களில் ஒன்று நீர். அந்த நீர் மழையாக பொழிந்து உணவு விளைவிக்க நல்ல விளைநிலங்களை தந்து தக்க பருவத்தில் நல்ல விளைச்சலை தந்து உணவாக ஆகின்றன. மாமிச உணவாக மாறும் விலங்குகளும் நீரையும் நம்பி உயிர்வாழ்கின்றன. பின்பு உணவு உண்ணும் பொழுதும் நீரினை மனிதன் பருகுகின்றான். அந்த நீர் ஆற்றில் இருந்தோ குலத்தில் இருந்தோ ஏரியில் இருந்தோ வருகிறது. அதற்கு மூலமாக இருப்பது மழை நீர். ஆகவே குடிக்கும் நீர் உணவாகவும் ஆகிறது. ஆதலால் உண்ண உணவாகவும் விளைவிப்பதற்கு தேவையான பொருளாகவும் மழைநீர் இருக்கிறது.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” (புறநா 18:21)
“நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய” (புறநா 58:10)
“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” (புறநா 70:9)
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே”  (புறநா 186:1)

பரிமேலழகர் உரை
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே.

இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது.

துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. "துப்பாய துப்பாக்கி"
என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை.

மணக்குடவர் உரை
பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உணவும் நீரும் மழையின் கொடை.

English Meaning - As I taught a kid - Rajesh
For all the humans (/living organisms) that consume food, it (rain water) becomes the food. For the food to become the food it (rain water) is the main ingredient without which it is not possible. Hence, we can say that the humans (/living organisms) consume the rain water. All lives in this world depend on rain water. 

Questions that I ask to the kid
What do humans and all living organisms actually eat?  Explain in detail?

No comments:

Post a Comment