குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
பொருள்
வலியார்க்கு - வலியார் - வலியன் - வலிமையுடையான்; திறமையானவன்; உடல்நலமுடையவன்; கரிக்குருவி; இறுகியநிலையுடையது.
மாற்று - வேறுபடுத்துகை; ஒழிக்கை; கொடியமருந்து, நஞ்சுமுதலியகுற்றத்தைநீக்கக்கொடுக்கும்மருந்து; பண்டமாற்று; விலை; வண்ணான்வெளுத்தஉருப்படி; மாற்றிஉடுத்தும்சீலை; பொன்வெள்ளிகளின்உரைமாற்று; தங்கம்; எதிர்; உவமை; வலிமை; வண்ணம்.
ஏற்றல் - இசைவாதல்; இணங்கல்; ஏற்றுதல்; இரத்தல்; எதிர்த்தல்; எதிர்த்துப்போர்செய்தல்; அடுக்கல்; வாங்குதல்; ஏந்தல்; நடத்தல்; பெருந்தச்செய்தல்.
ஓம்புக - ஒம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
ஓம்பா -ஓம்பாதே
மெலியார் - meliyār n. id. Weak,powerless persons; பலவீனர். மெலியார்மேன் மேகபகை (குறள், 861); வலியிலார்
மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.
மேக -
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
ஒரு நாட்டை ஆட்சி புரியும் அரசனுக்கு, மற்ற நாட்டரசர்களிடம் பகை ஏற்படுவது இயல்பு. பகை ஏற்படாமல் காப்பதும், பகை ஏற்பட்ட பிறகும் அதை தவிர்ப்பதும் சிந்தனையறிவு மிக்க அரசன் தகைமையாகும். இதையே பகைமாட்சி என்று கருதப்படுகிறது. முரட்டுத்தனத்தாலோ, பிடிவாதத்தாலோ பகை வளர்ப்பதும், போருக்கு வித்திடுவதும் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரையை
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
என்ற குறள் மூலம் திருவள்ளுவர் வழங்குகிறார்.
இரு அரசர்களிடையே ஏதோ காரணத்தால் பகையுணர்வு தோன்றி விட்டது. இப்பகை வளர்ந்தால் என்ன ஆகும். வலிவு குறைந்தவனை வலிவு மிக்கவன் வீழ்த்தி வெற்றி கொள்வான். மெலிந்த அரசனும், குடி மக்களும் சீரழிந்து விடுவார்கள். அந்நாடும் வீழ்ச்சியடையும்; இது திண்ணம். தன் வலியும், எதிரி வலிவும் உணர்ச்சிவயம் நீங்கி விரிந்த கண்ணோட்டத்தில் ஒருவன் நன்றாக யூகித்து உணர்ந்து கொள்ள முடியும்.
எதிரி வலிவு மிக்கவன் என்று தெளிவாக உணர்ந்தபின் மெலிந்தவன் என்ன செய்ய வேண்டும் ? எதிரி வலியைப் பாராட்டி அவனுக்குப் பணிந்து சமரசம் செய்து அமைதி காக்க வேண்டும். இதனையே வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக என்ற அடியில் கூறப்படுகிறது.
அவ்வாறு வலியவனிடம் அவன் நிலையை பாராட்டி உயர்வை ஒப்புக்கொண்டு பணிந்து போகாவிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று அடுத்த அடியாக "ஓம்பா மெலியார் மேல்மேக பகை" என்று கூறுகிறார். மேகம் பகைத்தால் என்னவாகும் ? அதிகமாக பேய்ந்தும் கெடுக்கும் அல்லது மழையே பொழியாமல் காய்ந்தும் கெடுக்கும். மேகப்பகையால் நாடு பல்வளங்களையும் இழந்து சீர் கெடும்.
அது போல வலிவுள்ள நாட்டோடு, அரசனோடு அல்லது மனிதனோடு பகை எழுந்து, அப்பகை பணிந்து போகும் முறையால் சமரசம் செய்து கொள்ளப்படாவிட்டால், எப்போதும் அது அச்சத்தை விளைத்துக் கொண்டே இருக்கும். அழிவையும் தரும் என்று எச்சரிப்பதே இக்குறளின் கருத்தாகும். சந்தர்ப்ப வசத்தால் ஒரு மெலிந்தவன் வெற்றி கொண்டாலும் அது நிலைக்காது.
தொடர்ந்து பின் விளைவாகத் துன்பத்தைத் தரவல்லது. பகை மிகுந்து போர் எழுந்து, மெலிந்தவன் வெற்றி கொண்டாலும், பின்னர் எழவிருக்கும் தொடர் பகையால் தீமையுண்டாம், தோல்விகண்டாலும் இழப்பேயாம்.
மழை அதிகமாகப் பெய்தாலும், பெய்யாமலே காய்ந்து விட்டாலும் விளைவு தீமையேயாகும் என்று மேகப்பகையென்று உவமை கூறுகிறார், எச்சரித்தும் அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.
வலியவர் முன் பணிவு காட்டல் இழிவு ஆகாது. விளைவறிந்த விழிப்பில் பின்பற்றப்படும் ஒரு சிறந்த நெறியே ஆகும். எனவே இது மெலியார்க்கு கூறியுள்ள பொதுவான அறிவுரை.
ஒப்புமை
”மிக்குடையார் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறல் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிவரைமேல்
கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்” (பழமொழி 36)
‘ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரின் அகப்பட்டான்
நோற்ற பெருமை யுடையாரும் கூற்றின்
புறம்கொம்மை கொட்டினார் இல்” (பழமொழி 126)
“வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை” (பழமொழி 157)
“அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரொன்றின் மேல்விடுதல் ஏதம்...
கல்லொடு கைஎறியு மாறு” (பழமொழி 382)
பரிமேலழகர் உரை
வலியார்க்கு மாறு ஏற்றல் ஒப்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.
விளக்கம்
('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின், அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்க நோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக- தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மெலியார்மேல் பகை ஓம்பா மேக- மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக.
துணைவலியுடைமையால் மெலியார் வலியாராதலும் அஃதின்மையால் வலியார் மெலியாராதலும் உண்மையால், மெலியார் என்னுமிடத்துத் துணைவலியின்மையுங் கொள்ளப்படும்.
இது பொருட்பாலாதலாலும், "வினையே ஆடவர்க்குயிரே" (குறுந். 135) என்பதாலும் , வணிகர் பொருளீட்டும் வினை போன்றே அரசர் பிறநாடுகளைக் கைப்பற்றச் செய்யும் போர் வினையும் அவர் கடமையாகப் பண்டைக் காலத்திற் கருதப்பட்டதினாலும், "மெலியார் மேல் மேக பகை" என்றார். மேலும், இங்ஙனம் வலியப் போர்க்குச் செல்லுதலோடு,
'எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே
(தொல். 1008)
"மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப"
(தொல். 1009)
என்ற முறைப்படி வந்த போரை விடாமையும் அவர் கடமையாயிற்று.
சாலமன் பாப்பையா உரை
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
மணக்குடவர் உரை
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
No comments:
Post a Comment