Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பிறர்நாணத் தக்கது

குறள் 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 

பொருள்
பிறர் - மற்றவர்கள் / மேன்மக்கள், அயலார்

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

தக்கது - தகுதி; தகுதியானது.
நாணத் தக்கது - செய்ய வெட்கப்படும் செயல்

தான் - ஒருவர்

ஆனா - ஆனாமை - An abstract noun be longing to a kind of defective negative verb--that which is inseparable; not leav ing, unceasing, நீங்காமை

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணா னாயின் - வெட்கப்படாமல் செய்வார் என்றால்

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

அறம் நாணத் தக்கது - அறம் கொண்ட நபர்கள் அவரை கண்டு கூச்சபட்டு வெட்கப்படும் விலகி

உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

உடையது  - நிற்பர்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலை செய்வான் என்றால் அது அறம் சார்ந்து இருக்க வேண்டும். அறம் என்றால் நேர்மை, ஒழுங்கு. அவன் செய்யும் செயல், மற்றவர்கள் செய்ய வெட்கப்படும் செயலாக இருக்க கூடாது.

அறம் இல்லாத செயல் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சான்றோர்கள், மேன்மக்கள், நல்லவர்கள் செய்ய அஞ்சுகின்ற, வெட்கப்படுகின்ற, அறமற்ற (தீங்கு விளைவிக்கின்ற) ஒரு செயலை ஒருவர் கருணையின்றி கவலையின்றி வெட்கமேயின்றி செய்வார் என்றால், அவர்களுடைய செயல்களை கண்டு கூசி அத்தகையவரிடம் இருந்து நல்லவர்கள் விலகி நிற்பர்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

“அஞ்சலள் ஐயன தல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாணிலள் என்ன நாண மாமால்” (கம்ப.கைகேசி சூழ்வினைப்ப் 17)

ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு.
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
பழிப்பன பகரேல்.
நன்மை கடைப்பிடி.
நாடு ஒப்பன செய்.
பீடு பெற நில்.
உத்தமனாய் இரு.
வேண்டி வினை செயேல்.
நிலையில் பிரியேல்.
நுண்மை நுகரேல்.
நேர்பட ஒழுகு.
பிழைபடச் சொல்லேல்.
காப்பது விரதம்.
சக்கர நெறி நில்.
சூது விரும்பேல்.
தூக்கி வினை செய்.
குணமது கைவிடேல்.
ஒப்புரவு ஒழுகு
அஃகஞ் சுருக்கேல்.
மண் பறித்து உண்ணேல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
சீரில்லா அறமற்ற செயல்களையே
செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
காரற்ற வானம் போல் கருணையில்லார்
கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்

பரிமேலழகர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து 

விளக்கம் 
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

மணக்குடவர் உரை
உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது. 

மு.வரதராசனார் உரை
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

No comments:

Post a Comment