குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
(For English meaning scroll to the bottom of this post)
பொருள்
நுனிக் - முனை; நுண்மை
கொம்பர் - மரக்கொம்பு
ஏறினார் - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.
அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்
ஊக்கின் - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.
உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
இறுதி - முடிவு; சாவு வரையறை
ஆகி - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
விடும் - ஆகும்
முழுப்பொருள்
ஒரு மரத்தின் உச்சியில் இருக்கின்ற நுனிக்கொம்பில் எறி நின்ற பிறகு அதீத ஊக்கத்தினால் மேலும் உயர முற்பட்டு ஏறினால் அவர் கீழே விழுந்து தன்னுடைய உயிரையும் இழக்க நேரிடும். ஏனெனில் அதற்கு மேல் ஏற தளமோ அதற்கான கருவியோ அல்லது வலிமையோ இல்லை. அசட்டுத்தனமாக அல்லது ஆணவத்தில் செய்தால் அதற்கான விளைவு மரணமாக கூட இருக்கும்.
அதுப்போல ஒருவர் தான் செயல்புரிகின்ற செயலில் அதன் எல்லைக்கு உட்பட்டும் தன்னுடைய வலிமையின் எல்லைக்கு உட்படும் செயல்பட வேண்டும். அதீதமாக முற்பட்டால் விளைவுகள் பயங்கரமாய் அமையும். ஒன்று அது நம்மை அழித்துவிடும் அல்லது நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். கீழே விழுந்தால் மேலே எழுந்து வர மிக மிக அதிக நேரமாகும்.
மேலும் நாம் ஒரு 20 அடி உயரம் ஏற வேண்டும் என்று இலக்கு வைத்திருக்க கூடும். ஆனால் அம்மரம் 18 அடி உயரம் மட்டுமே வளர்ந்திருக்கும். நமது இலக்கு 20 அடி என்று நுனிக்கொம்பிற்கு மேல் ஏறினாலும் கீழே விழுந்து உயிரை இழப்போம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் துன்னுடைய வலிமையை ஆராய வேண்டும்.
ஆதலால் நாம் எங்கு ஒரு செயலை நிறுத்தி திரும்ப வேண்டும் என்றும் தெரிந்து இருக்க வேண்டும். ஆக ஒருவர் தன்னுடைய வலிமையை அறிந்துகொள்வது இன்றியமையாதது.
(கீழ்க்காணும் உதாரணம் சரியான இலக்கு முக்கியம் என்பதற்கானது ஆனாலும் வலிமைக்கும் உதாரணமாக கூறலாம்)
உதாரணமாக ஒருவர் Mount Everest எனப்படும் உலகின் உயரமான மலையை ஏறினால் அவருடைய இலக்கு மலையின் சிகரத்தை ஏறுவது இல்லை. அவர் உயிருடன் அடிவாரத்திற்கு வருவதாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் எவ்வளவு திறம் பட இமயமலை எற எல்லாவிதமான பயிற்சி செய்து இருந்தாலும் அங்கே ஏறுவது என்பது சூழ்நிலைகளை பொருத்து அமையும். பனிப்பொழிவுகள் அதிகமாக இருந்தால் பனி பாறைகள் நம்மை வந்து தாக்க வாய்ப்பு உண்டு. அதில் நாம் உயிர் இழக்க கூடும். குளிர் அதிகமாகவும் இருக்கலாம். பனி அதிகமானால் மேலே செல்ல நாட்கள் அதிகமாகும் ஆனால் நம்மிடம் நமக்கு தேவையான உணவு இருக்காது. உணவில்லாமல் உயிர் இழப்போம். சிலர் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சூழ்நிலைகளை புரிந்துக்கொள்ளமால் தன்னுடைய விடாமுயற்சியை காண்பிக்கிறேன் என்று மேலே சென்று உயிர் இழக்க நேரிடும். சிலர் வறட்டு கௌரவத்திற்காவும் தன் வலிமை அறியாது செல்ல கூடும். அவ்வாறு சென்றால் உயிர் இழக்க நேரிடும். சில சமயம் மேலே இலக்கை அடைந்து விட்டு அங்கே குதித்தால் தவறி கீழே விழக்கூடும்.
இன்னா நாற்பது, “நெடுமரம் நீள் கோட்டுயர் பாய்தல் இன்னா” என்று இக்குறளின் கருத்தை வழிமொழிகிறது
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை¢ கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரைஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.
மு.வரதராசனார் உரை
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.
அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன்
என் வீட்டிற்குப் பின்புள்ள தெருவில் தொழிலதிபர் ஒருவர் இருக்கின்றார். அவர் மதுரையைச் சேர்ந்தவர். மனைவி அரசு அதிகாரி. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பின்னலாடைத் தொழிற்கூடமொன்றுக்கு சாதாரண அலுவலகப் பணியாளராக இவ்வூருக்கு வந்தார்.
தம்முழைப்பின் மூலம் அந்நிறுவனத்தின் மேலாளராக உயர்ந்தார். அவர் பணிக்குச் சேர்ந்த தருணத்தில் தொடக்க நிலையிலிருந்த அந்நிறுவனம், பிறகு படிப்படியாக, ஊரிலேயே அசுர வளர்ச்சி பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.
அந்நிறுவன வளாகத்திற்குள் வரும் நூல்கண்டு, ஆடையாக வெளியேறும் அளவுக்கு ஒரே கூரையின்கீழ் அனைத்துப் பணியகங்களும் அமைக்கப்பட்டன. அந்நிறுவனத்தின் பெயரைக் கேட்டாலே மற்றவர்களுக்குப் புருவம் உயரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முதலாளிக்கும் நம் மேலாளருக்கும் நல்ல ஒத்திசைவு.
இந்த முன்னேற்றத்தை உடனிருந்து பார்த்த மேலாள நண்பருக்குத் தாமும் தொழிலதிபராக வேண்டும் என்ற கனவு தோன்றிவிட்டது. வேலையை உதறினார். சொந்தமாகப் பின்னலாடைத் தொழிற்கூடம் அமைத்தார். எங்கள் பகுதியில் வீடு கட்டினார்.
வீட்டுக்கு அருகிலேயே தம் தொழிற்கூடம் இருக்கவேண்டுமென்று விரும்பி தொலைவிலிருந்த தொழிற்கூடக் கட்டடத்தை விற்றார். வீட்டருகிலேயே நிறுவனக் கட்டடத்தைக் கட்டிக்கொண்டார். அப்போது என்னிடம் பணியாற்றிய கட்டுமானப் பணியாளர்களைத் தமக்கும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் அனுப்பிவைத்தேன்.
அவர் ஈடுபட்டிருக்கும் தொழிற்செயலுக்கு இது ‘தேவையற்ற தொழிலிட மாற்றம்’ என்றே எனக்குத் தோன்றியது. அடிக்கடி வாகனத்தை மாற்றுவார். ஒருவரையும் விடாமல் குறை கூறுவதில் வல்லவர்.
பிறகு ஆளையே காணவில்லை. வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். புதிதாகக் கட்டப்பட்ட அவர் நிறுவனக் கட்டடத்தில் வேற்றாள்களின் நடமாட்டம் காணப்பட விசாரித்தேன். அதைக் காதோடு காதாக விற்றுவிட்டார் என்று தெரிந்தது. விற்று என்ன செய்யப் போகிறாராம் என்று வினவினேன். மதுரையில் வணிக வளாகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.
ஆண்டுகள் கடந்தன. திரும்பவும் இங்கேயே குடிமாற்றமானார். நெடுநாள் கழித்து என்னை வீதியில் எதிர்கொண்டவர் பேசவேண்டியவரானார். மதுரையில் வணிக வளாகத்தைக் கட்டும் முயற்சியில் ‘கண்ணாமுழி’ திருகிவிட்டது தெரிந்தது. விற்றுச் சென்ற தொழிற்கூடக் கட்டடம் இக்கால இடைவெளியில் பன்மடங்கு மதிப்பு கூடியிருந்ததை எண்ணிப் பெருமூச்செறிந்தார். இப்பொழுதுள்ள தொழிற்போக்குகளுக்குப் பொருந்தாத பழைய ஆளாகக் காலம் அவரைக் கைவிட்டிருந்தது.
அவர் முன்பு பணியாற்றிய, அந்தப் பெரும் பின்னலாடை நிறுவனம் கடனில் மூழ்கி இருந்த சுவடு தெரியாமல் கரைந்துவிட்டது. அந்நிறுவன முதலாளியின் பெண் பிள்ளைகள் தந்தைக்கு நேர்ந்த தீராத நெருக்கடிகளால் கவனிப்பற்றவர்களாகி முதிர் கன்னியரானதாகச் சொன்னார். அதைச் சொல்ல சொல்ல அவர் கண்களில் அச்சத்தின் நிழல்கள் பரவின.
தன்னிலை உணராமல் எப்பொழுதும் தாயமே விழும் என்று மனம்போன போக்கில் ஆடுகின்றவர்கள் கடைசியில் அவரைப்போல் ஆகிறார்கள்.
ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். இப்போது, தான் இருப்பது எங்கே ? குழியிலா ? தரையிலா ? நடுமத்தியிலா ? இல்லை உச்சத்திலா ?
தரையிலோ குழியிலோ நடுமத்தியிலோ இருந்தால் மேலும் மேலும் முயன்று பார்க்க வேண்டும். உச்சத்தில் என்றால் அந்த இடத்தை இறுக்கிப் பற்றிக்கொள்ள வேண்டும்தானே ? அதைச் செய்வதில்லை.
ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவன அதிபர் நரேந்திர முர்கும்பி சர்க்கரை ஆலைத்தொழிலில் அடித்தளத்தில் இருந்து உச்சத்திற்குப் போனவர். ‘வீடு மாளிகை என்றெல்லாம் நான் சிந்திக்கவேயில்லை. இப்போதுதான் ஒரு அடுக்ககக் குடியிருப்புக்குப் பதிவு செய்துள்ளேன்’ என்கிறார்.
நம்மவர்களுக்குத் தன்னிலை உணரும் திறனே இல்லை. ‘தமக்குரிய யோக்கியதை என்னவோ அதற்குரியவை தங்கு தடையின்றிக் கிட்டியிருக்கின்றன’ என்ற அறிவு இல்லை. தாம் உயர்வான இடத்தில் இருக்கின்றோமா, இன்னும் முயல வேண்டிய இடத்தில் இருக்கின்றோமா என்ற தெளிவு இல்லை.
வலி அறிதல்’ என்ற அதிகாரத்தில் வள்ளுவர் இவற்றைத்தாம் அறிவுறுத்துகிறார்.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கி றுதியாகி விடும்.
நுனிக்கொம்பு’ என்றால் உச்சிக்கிளை.
அஃதிறந்தூக்கின் = அஃது இறந்து ஊக்கின் = அந்த நிலை தவறி மேலும் ஊக்கம் பெற்றால்.
நுனிக் கொம்புக்கு ஏறிவிட்ட ஒருவர் அதற்கும் அப்பால் கடந்து ஏற ஊக்கம் கொள்வாரெனில் அது அவர் உயிருக்கே முடிவாகிவிடும்.
English Meaning - As I taught a kid - Rajesh
A person who has reached the peak / tip of a tree or a branch, should not try to climb or jump further. If he does climb or jump, then he will lose his life.
Similarly, a person should analyze ones own strength/weakness and the situation or equipment or location's strength. Based on the strength one should proceed further if it is safe. One should not mind to quit (despite having started a journey with a goal in mind) if the proceeding further is dangerous for life (or if we might loose lot of money in business). For e.g., journey in Mount Everest cannot be driven by just goals. Decision has to be based on situational factors. One cannot be emotional or blind perseverance. Similarly when one is going in a marathon and if he is feeling unwell (e.g., breathlessness), then one must quit marathon else that person might suffer or lose his life. Hence, when there is a risk(for greatness, money or reputation or life or anything significant) you should either quit or come up with a new strategy. Your goals are important to achieve but at the same time you should not at the expense of life or large amounts of money or anything of significant value.
Questions that I ask to the kid
In what cases, you have to stop your work?
what is more important than continuing your work when there is a risk?
Will it not be bad if you stop work?