ஒல்வ தறிவது அறிந்ததன்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், வலியறிதல் குறள் 472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.
குறள் 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள்
ஒல்வது - இயல்வது

ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

அறிவது - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அதன்கண் - அதனிடத்தில்

தங்கிச் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்

செல்வார்க்குச் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லாதது - நிகழ்த்த முடியாதது அடையமுடியாதது

இல் - எதுவும் இல்லை

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன் அச்செயலை பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அறிய வேண்டும். அச்செயலை எப்படி செய்ய வேண்டும் அதில் வரக்கூடிய இடைறுகள் தவறுகள் நஷ்டங்கள் ஆகியவற்றை ஆராய வேண்டும். அச்செயலுக்கு தேவையான காலம் அதனை செய்யவேண்டிய நேரம் ஆகியவற்றை திட்டமிட வேண்டும். அதில் வரக்கூடிய ஆதாயம் நஷ்டம் ஆகியவற்றை கணக்கிட வேண்டும்.

மேற்சொன்னப்படி ஒரு செயலை முழுவதுமாக ஆராய்ந்தப் பிறகு அச்செயலில் இறங்கிய பின் அச்செயலில் தன்னுடைய முழுகவனத்தையும் செலுத்தவேண்டும். தன் உள்ளம் அச்செயலாக மாறிவிட வேண்டும். அவ்வாறு அச்செயலே மூச்சாக கொண்டு அச்செயலை ஆற்றினால் அவர்கள் அச்செயலின் பலனை அடையாமல் போக முடியாது. அவ்வாறு எச்செயலையும் செய்தால் அவர்கள் அடையமுடியாததென  எதுவும் இல்லை.

ஒல்வது என்றால் இயல்வது என்று பொருள். அதாவது இயலாமுடியாதவற்றை எவ்வளவு ஆராய்ந்து திட்டமிட்டாலும் அதனை செய்து அடைவது இயலாது. அவ்வாறான இயலாத காரியத்தை செய்யாதே என்பதை குறிக்கவே ஒல்வது என்று வார்த்தை தேர்ந்து கையாண்டிருக்கிறார் திருவள்ளுவர்.

மேலும் ஒரு செயலிலும் வாழ்விலும் மேன்மைப் பெற வேண்டும் என்றால் ஒருவர் ஒரு செயலில் தவம் செய்தல் வேண்டும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கீழ்க்காணும் குறளை கூறலாம்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை.
('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை. இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain