Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இலர் -  இல்லை ;  who are not

பலர் - அநேகர்; சபை.

ஆகிய - ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

நோற்பார் - ōṟpār   n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48).

சிலர் - சிலபேர்

நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை.

நோலாதார் - தவம் செய்யாதவர்கள்  

பலர் - அநேகர்; சபை.

முழுப்பொருள்
அருளும் பொருளும் இல்லாமல் இருப்பவர்கள் பலராக இருப்பதற்கு காரணம் என்ன? ஏனெனில் தவம் செய்வோர் சிலர் தவம் செய்யாதவர்கள் பலராக இருப்பதே அதற்கு காரணம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் தவம் செய்கிறவன் இம்மையிலும் இன்பத்தை பெறுவான் மறுமையிலும் இன்பத்தை பெறுவான். தவம் செய்யாதவன் இம்மையிலும் இன்பத்தை பெறமாட்டான் மறுமையிலும் இன்பத்தையும் பெறமாட்டான். 

துறவறத்தில் தவம் அதிகாரத்தில் செல்வத்தை /பொருளை பற்றி கூறினாரா? திருவள்ளுவர் அருளை தான் கூறினார் என்றாலும், அது பொருளுக்கும் பொருந்தும். உழைத்தால் தானே ஊதியம். எவர் ஒருவர் தன்னுடைய தொழிலையும் தவம் போல் செய்கிறாரோ அவர் தொழிலில் சிறந்து விளங்குகிறார். அதன் பயனாக புகழையும் பொருளையும் பெறுகிறார். 

இது அறிவுக்கும் பொருந்தும். அறிவாளிகள் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் கற்பதை ஒரு தவமாக செய்யமாட்டார்கள். ஆனால் அறிவாளிகள் சிலராக இருப்பதற்கு காரணம் சிலரே அறிவை தவமாக செய்கிறார்கள் என்பதாகும். 

பொதுவாக சொன்னால் ஒரு தொழிலிலோ துறையிலோ செயலிலோ இல்லாமல் போனவர்கள் பலர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? இது தான் வேலை, இது தான் செயல் என்று அதனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் சிலர் தான். மற்றவர்கள் ஏதோ வந்தோ போனோம் என்று இருப்பவர்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னைப் பற்றிய ஒரு நேர்காணலிலோ அல்லது ஒரு மேடைப் பேச்சிலோ கூறுவார், நீங்கள் செய்யும் தொழிலில் தவம் செய்யுங்கள் என்று. அப்பொழுது தான் செயல்திறனும் செயலதரமும் கூடும் என்று. அது இங்கு நன்கு பொருந்தும்.

நாலடியார் பாடலொன்றும் இலர் பலராகிய காரணத்தை இவ்வாறு கூறுகிறது: “புறங்கடைப் பற்றி மிகத்தாம் வருந்தியிருப்பரே மேலைத் தவத்தால் தவம் செய்யாதவர்” (நாலடியார்:31)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-மாமலர் -49 இல் ஒரு வரி இப்படி வருகிறது
 “தவம் செய்க… தவத்தால் அடைவதே அரிதென்றாகும்.”

அப்பால் மெல்லிய சரடொன்றில் இறங்கிவந்த சிலந்தி “அதனினும் பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது” என்றது. “காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன, தூய உவகை பெருகுகிறது.”


"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.


அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!


அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!


சிகண்டியின் அசையா விழிகளை நோக்கியபடி இளைய யாதவர் சொன்னார் “பாஞ்சாலரே, எது செயல் எது செயல் அல்ல என்ற வினாவுக்கு முன் ஞானியரும் உளமயக்கு கொள்கிறார்கள். அறிபவர்களுக்கு செயலின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். அதற்கும் மேலாக செயற்கேட்டின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். செயலின்மையை மேலும் நுணுகியறிந்திருக்கவேண்டும். செயலின் வழி மிகவும் இடர்மிக்கது. எளிதில் எண்ணி எய்தமுடியாதது.”

இந்த நைமிஷாரண்யத்திலமர்ந்து இரண்டு நாட்களாக செயலைப் பற்றியே சொல்லாடிக்கொண்டிருக்கிறேன். செயலின் விளைவை அஞ்சியவராக அங்கநாட்டரசர் இங்கு வந்தார். அவருக்கு செயல் எனும் போரைப் பற்றி சொன்னேன். செயல்மேல் தயக்கம் கொண்டவராக பீஷ்மர் நேற்று வந்தார். அவருக்கு செயலெனும் யோகத்தைப் பற்றி சொன்னேன். எய்துவனவற்றை அங்கருக்கும் இயற்றுவதன் முழுமையைப்பற்றி பீஷ்மருக்கும் கூறினேன். பாஞ்சாலரே, செயல்மேல் ஐயம் கொண்டவராக நீர் வந்திருக்கிறீர். செயலெனும் அறிதலைப் பற்றி வினவுகிறீர்.

தழல் தான் தொடும் அனைத்தையும் தானென்றே ஆக்கிவிடுகிறது. அறிவு அனைத்தையும் அறிவென்றாக்குகிறது. தழல் தூயது, ஒளிகொண்டது. அனைத்தையும் தழலாக்குவதையே வேள்வி என்கிறோம். ஞானத்திலமைந்தவன் செயலனைத்தையும் வேள்வியாக்குகிறான். சிலர் அனலில் வேள்விசெய்கிறார்கள். சிலர் அலகிலா அனலை ஓம்புகிறார்கள். அவர்களையே ஞானிகள் என்கிறோம்.

எது பிற அனைத்தும் தானே எனக் காட்டுகிறதோ, பிற அனைத்துக்கும் மாற்றென தான் நின்றுகொள்கிறதோ அதுவே அறிவு. விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. நோக்குபவனாக தான் ஆகும் ஆடி. அறிபவன் அறிவே அனைத்துமென்றும் அதில் தான் ஒரு துளியே என்றும் உணர்கிறான். அறிபவனை அறிவென்றாக்குவதே அறிவு. முழுமையற்றது அறிவல்ல. அறிவனைத்தும் முழுமையின் ஒரு துளியே. அனைத்து நீர்த்துளிகளும் கடல்நோக்கியவையே.

முழுமைதேடும் செயல்களெல்லாம் வேள்விகளே. ஆனால் பொருட்களால் ஆற்றப்படும் வேள்விகளைவிட அறிவால் இயற்றப்படும் வேள்வி சிறந்தது. அனைத்துச் செயல்களும் அறிவுச்செயல்பாடுகளே. நதியைவிட முகில் விரைவுகொண்டது. விண்ணில் அலையும் கடல்கள் எடையற்றவை. அறிவின் பாதை பயின்று மேம்பட்டு அடையவேண்டியது. நீந்தியபடியே பிறக்கின்றன மீன்கள். பிறந்ததுமே ஓடுகின்றன கால்கள் கொண்டவை. பறவைக்குஞ்சு அன்னையிடமிருந்தே சிறகுகளைப் பற்றி அறிகிறது. சிறகுகளினூடாக வானை பயில்கிறது. நீந்தியும் ஓடியும் தாவியும் கற்றவற்றைக் கொண்டே உயிர்கள் பறவைகளாயின.

வணங்கியும் எட்டுத்திசையும் வினாவெழுப்பியும் தொண்டுசெய்தும் அறிந்துகொள்க! உண்மை காணும் ஞானிகளே உமக்கு ஞானத்தை அளிக்கவியலும். ஞானத்தை அடைந்தபின்னர் இந்த ஐயங்கள் இயல்பாக அழிந்துவிடும். அனைத்து உயிர்களையும் உம்முள்ளே காணச்செய்வதே அறிவு. எனவே அனைத்துக்கும் விடையென்றாகி நின்றிருப்பதே அதன் இயல்பு. பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம். வெளிவிரியும் புலன்களை உள்நோக்கி தொகுத்துக்கொண்டு, துயிலிலும் ஒலிக்கு அசையும் பூனைச்செவியென உளம் கூர்ந்திருப்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானம் அமைதியை அளிக்கிறது.

ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”


அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்


திரௌபதி குவளைகளில் ஊற்றி அவர்களுக்கு அளித்தாள். அதைச் சுவைத்தபடி “எங்கெல்லாம் சென்றீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். “நான்கு திசைகளிலும் நெடுந்தொலைவு” என்றான் அர்ஜுனன். “மேற்கே நிலைக்கடல் முதல் கிழக்கே பறக்கும் மலைகள் வரை. திசைத்தேவர்களை வென்று நிகரற்ற படைக்கலங்களுடன் வந்துள்ளேன்.” அறைவாயிலில் தோன்றிய தருமன் “உன்னை வென்றாயா?” என்றார். அர்ஜுனன் தெளிந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுநோக்கி “ஆம்” என்றான். அவர் “நன்று” என்றார். கைகளைக் கட்டியபடி நின்று அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “நன்கு மெலிந்துள்ளாய்.”


அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
‘உலகத்தை உய்விக்க வந்தவர்கள்’ என்று மாமனிதர்களை அடையாளங் காண்கிறோம். மனிதராகப் பிறப்பெடுத்தவர்கள் மற்றவர்கள் படும் இன்னல்களைத் தம்முடையதாகக் கருதி அவற்றைக் களையும் வழியில் நடக்கத் தலைப்பட்டவர்கள். 

அரண்மனையில் யுவராஜனாக வாழ்ந்த சித்தார்த்தன் உலகத் துயர்களைக் காணாமல் வளர்ந்தவன். நகர்வலத்தின்போது அவன் கண்களில்பட்ட மனித அவலங்கள் மூன்று அவனை நிலைகுலையச் செய்தன. ஒருவர் தீர்க்கவியலாப் பிணியுற்றிருந்ததைக் கண்டான். மற்றொருவர் மூப்படைந்து குற்றுயிராகக் கிடந்தார். இன்னோரிடத்தில் சவ ஊர்வலத்தைக் காண நேர்ந்தது. பிணி மூப்பு சாக்காடு என்னும் மூன்று கொடுமைகளைக் கண்டான் சித்தார்த்தன். அதற்குமேல் இளவரசனாய் இன்ப வாழ்வில் ஈடுபடமுடியவில்லை. எந்நேரமும் தாம் கண்டவை குறித்துச் சிந்தித்தான். அவற்றுக்குத் தீர்வு காணும் முகத்தான் நள்ளிரவில் மாளிகையைவிட்டு வெளியேறுகிறான். பெரும் தேடலின் முடிவில் போதி மரத்தடியில் துன்பங்களுக்குக் காரணம் என்னவென்று புலப்பட்டது. தான் உற்றுணர்ந்ததை புத்தனாக உலகோர்க்குச் சொல்கிறான். பேரரசர்கள் மண்ணாசை தணிந்து போர்த்தொழில் துறந்து புத்தர் வழியில் அன்பு வழிக்குத் திரும்பினார்கள் என்பது வரலாறு.

அவர் எளிமையான வக்கீல். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியரான அப்துல்லா என்னும் வணிகரின் சிறு வழக்குகளை எடுத்து நடத்த அந்நாட்டுக்கு வந்தவர். முதல் முறையாகத் தமக்குக் கிடைத்த வழக்கில் ஆஜராகி, நீதிமன்றத்தில் நீதிபதிமுன் நின்றபோது பேச்சே வராமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, பேந்த பேந்த விழித்த அப்பாவி மனிதர். இப்போது புகைவண்டி ஒன்றில் முதல் வகுப்பிற்கான பயணச் சீட்டு பெற்று பயணம் செய்துகொண்டிருக்கிறார். அங்கே வந்த சக பயணியான ஆங்கிலேயன் ஒருவன் ‘கறுப்பனே... இங்கே என்ன செய்கிறாய் ? உன் மூன்றாம் வகுப்புக்குப் போடா’ என்று கத்துகிறான்.

பயந்து பணிந்து வாழ்ந்தே பழக்கப்பட்ட நம் வக்கீல் ‘ஐயா... நான் இந்த வகுப்பில் பயணிக்க உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளேன்’ என்று விளக்குகிறார். ‘ஓ... உங்களைப் போன்ற ஆள்கள் முதல் வகுப்புச் சீட்டு வாங்குமளவுக்குத் துணிந்துவிட்டீர்களா...?’ என்று சீறியவன் அவர் கழுத்தைப் பிடித்துத் தூக்குகிறான். புகைவண்டியில் இருக்கும் பரிசோதகரும் வெள்ளையர். பயணிக்கு உதவ மறுத்ததோடு மட்டுமன்றி அவரும் நம் வக்கீலைத் தள்ளுமுள்ளுவுக்கு ஆட்படுத்தி மூர்க்கமாக வெளியேற்றத் துணிகிறார். 

செயின்ட் மாரிட்ஸ்பர்க் என்னும் நிலையத்தில் ஓர் அழுக்குத் துணியைப்போல் வண்டியிலிருந்து கழித்தெறியப்படுகிறார் அந்த இளம் வக்கீல். பெட்டி

படுக்கைகள் அவர்மீது வன்மத்தோடு வீசியெறியப்படுகின்றன. நிலைகுலைந்து விழுகிறார். ராஜ்கோட் சமஸ்தானத்தில் அமைச்சருக்கு நிகரான பதவியில் இருந்தவர் அவர் தந்தை. குடும்பத்தில் செல்லப் பிள்ளை. தாய்ச்சொல் மீறாதவர். தமையன்கள்மீது தலைநிமிராப் பாசமும் அன்பும் மிக்கவர். 

தந்தையின் எதிர்பாராத மரணத்தால் குடும்பம் வறுமைக்காளானது. குடும்பத்தை நிமிர்த்த, தாம் கல்வி பயின்று கடமையாற்றுவதே வழியென்று முடிவெடுத்து, இலண்டன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து நாள்தோறும் எட்டு மைல்கள் நடந்து சென்று படித்தவர். தென்னாப்பிரிக்காவில் ஒரு நிலையத்தில், விலங்கைப்போல் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்டு, அவமானத்தின் அத்தனை கத்திகளையும் மார்பில் ஏந்தியவராய் நிற்கிறார். அங்கே அவர் நோற்றார் ‘இன்று நான் உற்ற இப்பேரிழிவை இனியொருவர் - என் தேசத்தவர் - உற அனுமதியேன். இதற்கெதிராய் என் இறுதி மூச்சுள்ளவரை போராடுவேன். என் அனைத்தையும் அர்ப்பணிப்பேன். பிறழேன்’ என்று. அந்த நினைப்பும் சூளுரையும் நோற்பும் ஈந்த கனியைத்தான் நாம் ‘அரசியல் விடுதலை’ என்ற பெயரில் உண்கிறோம். அதற்குப் பிறகு அவர் புகைவண்டிகளில் மூன்றாம் வகுப்பில் மட்டுமே பயணித்தார். முப்பத்தெட்டு வயதில் இந்தியாவுக்குத் திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை எப்படி எதிர்த்து வென்றார் என்பதை அறிவோம். 
 
நம் காலத்தில் இத்தகைய மனிதர்களைத்தாம் காண முடியவில்லை. அடுத்தவர் துன்பங்கண்டு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஈக வாழ்க்கைக்கு இங்கே யாராவது தயாராயிருக்கிறார்களா என்று தேடுகிறோம். குறைந்தபட்சம் ‘நீ படும் துன்பத்திற்கு இதுதான் காரணம்’ என்று யாரேனும் சுட்டிக்காட்டுகிறார்களா ? ஒருவர் எங்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சர்வநிவாரணம் பெறலாம் என்கிறார். மற்றொருவர் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் மாறும் என்கிறார். திரும்பிய திசையெங்கும் பித்தலாட்டம். என் நிலை என்னவென்று, அதைப்போக்குவதற்கு இது வழிமுறையென்று - என்னை ஊன்றிக் கவனித்த ஒருவர் எடுத்துரைத்தால் எத்தனை உதவியாக இருக்கும் ? அதைச் செய்ய இன்று ஆளில்லை. 

புலவர்களும் அறிஞர்களும் தாம் வாழும் காலத்து மாந்தர்களுக்கு ஒரு விடிவைச் சொல்லவேண்டும். ஒரு கண்திறப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த உண்மை எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பது அதை எழுதியவரின் மேதைமைக்குச் சான்று. 

சனங்கள் படுகின்ற துன்பத்திற்கு என்ன காரணம் ? நோற்பு இல்லை. நோற்பு என்றால் தவம் செய்தல்.

ஒன்றைத் தவம்போல் எண்ணிச் செய்கின்ற எல்லாமே நோற்புதான். தவம் என்றால் பற்று நீங்கியவராய், எடுத்த செயலில் நூல்கனத்தளவும் பிறழாமல் ஆற்றும் பெருஞ்செயல். அதற்கு லௌகீகத்தில் ஓர் அர்த்தம். ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். 

நாட்டில் இல்லாமை அதிகமிருக்கிறது. கல்வி இல்லை, அறிவு இல்லை, ஞாபகம் இல்லை, கையில் செல்வமில்லை, ஊக்கம் இல்லை, என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு கூட இல்லை. 

இப்படி இல்லாதப்பட்டவர்கள் பலர் பலராக இருக்கிறார்களே, என்ன காரணம் ? இருக்கப்பட்டவர்கள் வெகு சிலராக இருக்கிறார்களே, என்ன காரணம் ?

வள்ளுவர் தெள்ளத் தெளிவாக அடிக்கிறார். 
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் 
சிலர்பலர் நோலா தவர்.
 (அதிகாரம் 27 : தவம், குறள் எண் ; 270) 
இலர் பலர் ஆகிய காரணம் = இல்லாதவர்கள் பலர் என்று பல்கிப் பெருகி ஆனதற்குக் காரணம் 

நோற்பார் சிலர் = தவம்போல் கருதிச் செயலாற்றுகின்றவர்கள் சிலர் மட்டுமே 

பலர் நோலாதவர் = இல்லாமல் இன்மையில் உழலும் அந்தப் பலர் ஒன்றையும் நோற்றுச் செய்யாதவர்.

சோம்பித் திரிபவர். தம்மை வருத்திப் பாடுபடாதவர். நோலாதவர். 
இல்லாதவர்கள் உலகில் பல்கியிருக்கக் காரணம் எதையும் தவமெனக் கருதித் தம்மை வருத்திக்கொள்பவர்கள் சிலராக இருப்பதுதான். பலர் தம்மை வருத்திக்கொள்ளாதவர்கள். 
இலர் பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர் ; பலர் நோலாதவர்.

பரிமேலழகர் உரை
இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

மு.வரதராசனார் உரை
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

English Meaning - As I taught a kid - Rajesh
The reason why there is high number of people who started penance towards moksha ended up attaining nothing is because the people who truly did the penance the way penance has to be done is very less whereas the people who didn't do penance is high.  The same applies not just for penance But also for the number of people who are successful in this work, profession and life as such. The people who do a stuff a like a penance for long term grow and attain its peak. Since the number of people who do that are small, the number of people who attain the peak is also small. vice versa.

Questions that I ask to the kid
Why the people who reach Moksha or high achievers or being rich are low in number? Why poor or mediocrity is high in number? Because people who do Tapas or who do their work/mission as a tapas are less.


No comments:

Post a Comment