Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label W - ஜெயகாந்தன். Show all posts
Showing posts with label W - ஜெயகாந்தன். Show all posts

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

 

குறள் 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நண்பு - அன்பு; உறவு; நட்பு.

ஆற்றார் - செய்யாது இருப்பவர்; இல்லாதவர் 

ஆகி -  ஆகுதல் - ஆதல்.

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

இல  - இல் - இல்லை, வறுமை

செய்வார்க்கும் - செயலை செய்பவர் / நடத்துபவர்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

ஆற்றாராதல் - இல்லாமல் இருத்தல்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
பிறர் நம்மிடம் அன்பல்லாதவராக இருப்பினும் நட்பும் உறவும் பாராட்டாதவராக இருப்பினும் நன்மைகளும் செய்யாது தீயவை செய்தவராக இருப்பினும் மகிழ்ச்சிதராதவராக இருப்பினும் நம்மிடம் மலிவாக நடந்துக்கொண்டிருந்தாலும் அவரிடம் விரோதம் பாராட்டாமல் பண்புடையவராக இருத்தல் வேண்டும் மாறாக பண்பில்லாதவராக இருந்தால் அது நமக்கு கீழ்மையே ஆகும். 

எங்கோ கேட்ட ஞாபகம்,  உனக்கு ஒருவன் தீயது செய்கிறானா? அல்லது விரோதம் பாராட்டுகிறானா? அல்லது சிறுமையானவற்றை செய்கிறானா? அவனுக்கு பெரிய மனதுடன் நல்லது செய்து காண்பி. அதுவே சிறந்து என்று. உதாரணமாக, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் (அவரைப்பற்றிய ஆவணப்படம் The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - D.Jayakanthan @1:15:48) ஒன்றில்) சொன்னது இது, கர்நாடக்காவில் தமிழ் படிக்க கூடாது என்றால் தமிழ்நாட்டில் கன்னடம் படிக்கலாம் என்று சொல்லுக என்கிறார். அது தான் வழி. தாராளமாக நாமிருந்தால் தாராளம் என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். நாகரீகத்தை நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு. They are immature. தெரியலயா உங்களுக்கு? இதற்கு ஆராய்ச்சி வேண்டுமா? அல்லது அவன் ஒத்துக்கொள்ள வேண்டுமா? நாம் தான் உணர வேண்டும். நீ(நாம்) உலக மனிதன் என்பது பெருமை அல்ல. நமது பெருமை என்ன? புலம் சார்ந்தவர்கள் நாம். இந்த புலம் என்பது பூமி. இதைத்தான் பாரதி கூறினார் “வையத் தலைமை கொள்” என்று. இந்தியா அதனால் தான் கூறுகிறது நாங்கள் என்றும் அலேக்ஸாண்டார் ஆகமாட்டோம் என்று. 

என்பதையும் இங்கு நினைவில் கொள்க. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.).

மணக்குடவர் உரை
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.

மு.வரதராசனார் உரை
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.

Thirukkural - Management - Relationship
To be good to someone just because he is good to you is reactive behavior. Anyone will be good to the other person in that situation as that is the minimum quality expected of a human being. To be good to someone who is good to you does not need any effort. It is basic courtesy also. However, to be good, courteous, and polite even to someone who is discourteous to us is needed  for sustained relationships and that is possible only when we give importance to relationship, says Kural 998.

It is base to be discourteous
Even to one's enemies.

We are cheaply mean, if we are mean to someone who is mean to us. There is no defense against that behavior. It is said revenge is a wild justice. We are not in the wild or in a jungle. We are human beings living in the presence and company of other human beings. Effective relationships demand personal initiatives to connect  and stay with others.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இலர் -  இல்லை ;  who are not

பலர் - அநேகர்; சபை.

ஆகிய - ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

நோற்பார் - ōṟpār   n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48).

சிலர் - சிலபேர்

நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை.

நோலாதார் - தவம் செய்யாதவர்கள்  

பலர் - அநேகர்; சபை.

முழுப்பொருள்
அருளும் பொருளும் இல்லாமல் இருப்பவர்கள் பலராக இருப்பதற்கு காரணம் என்ன? ஏனெனில் தவம் செய்வோர் சிலர் தவம் செய்யாதவர்கள் பலராக இருப்பதே அதற்கு காரணம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் தவம் செய்கிறவன் இம்மையிலும் இன்பத்தை பெறுவான் மறுமையிலும் இன்பத்தை பெறுவான். தவம் செய்யாதவன் இம்மையிலும் இன்பத்தை பெறமாட்டான் மறுமையிலும் இன்பத்தையும் பெறமாட்டான். 

துறவறத்தில் தவம் அதிகாரத்தில் செல்வத்தை /பொருளை பற்றி கூறினாரா? திருவள்ளுவர் அருளை தான் கூறினார் என்றாலும், அது பொருளுக்கும் பொருந்தும். உழைத்தால் தானே ஊதியம். எவர் ஒருவர் தன்னுடைய தொழிலையும் தவம் போல் செய்கிறாரோ அவர் தொழிலில் சிறந்து விளங்குகிறார். அதன் பயனாக புகழையும் பொருளையும் பெறுகிறார். 

இது அறிவுக்கும் பொருந்தும். அறிவாளிகள் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் கற்பதை ஒரு தவமாக செய்யமாட்டார்கள். ஆனால் அறிவாளிகள் சிலராக இருப்பதற்கு காரணம் சிலரே அறிவை தவமாக செய்கிறார்கள் என்பதாகும். 

பொதுவாக சொன்னால் ஒரு தொழிலிலோ துறையிலோ செயலிலோ இல்லாமல் போனவர்கள் பலர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? இது தான் வேலை, இது தான் செயல் என்று அதனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் சிலர் தான். மற்றவர்கள் ஏதோ வந்தோ போனோம் என்று இருப்பவர்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னைப் பற்றிய ஒரு நேர்காணலிலோ அல்லது ஒரு மேடைப் பேச்சிலோ கூறுவார், நீங்கள் செய்யும் தொழிலில் தவம் செய்யுங்கள் என்று. அப்பொழுது தான் செயல்திறனும் செயலதரமும் கூடும் என்று. அது இங்கு நன்கு பொருந்தும்.

நாலடியார் பாடலொன்றும் இலர் பலராகிய காரணத்தை இவ்வாறு கூறுகிறது: “புறங்கடைப் பற்றி மிகத்தாம் வருந்தியிருப்பரே மேலைத் தவத்தால் தவம் செய்யாதவர்” (நாலடியார்:31)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-மாமலர் -49 இல் ஒரு வரி இப்படி வருகிறது
 “தவம் செய்க… தவத்தால் அடைவதே அரிதென்றாகும்.”

அப்பால் மெல்லிய சரடொன்றில் இறங்கிவந்த சிலந்தி “அதனினும் பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது” என்றது. “காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன, தூய உவகை பெருகுகிறது.”


"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.


அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!


அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!


சிகண்டியின் அசையா விழிகளை நோக்கியபடி இளைய யாதவர் சொன்னார் “பாஞ்சாலரே, எது செயல் எது செயல் அல்ல என்ற வினாவுக்கு முன் ஞானியரும் உளமயக்கு கொள்கிறார்கள். அறிபவர்களுக்கு செயலின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். அதற்கும் மேலாக செயற்கேட்டின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். செயலின்மையை மேலும் நுணுகியறிந்திருக்கவேண்டும். செயலின் வழி மிகவும் இடர்மிக்கது. எளிதில் எண்ணி எய்தமுடியாதது.”

இந்த நைமிஷாரண்யத்திலமர்ந்து இரண்டு நாட்களாக செயலைப் பற்றியே சொல்லாடிக்கொண்டிருக்கிறேன். செயலின் விளைவை அஞ்சியவராக அங்கநாட்டரசர் இங்கு வந்தார். அவருக்கு செயல் எனும் போரைப் பற்றி சொன்னேன். செயல்மேல் தயக்கம் கொண்டவராக பீஷ்மர் நேற்று வந்தார். அவருக்கு செயலெனும் யோகத்தைப் பற்றி சொன்னேன். எய்துவனவற்றை அங்கருக்கும் இயற்றுவதன் முழுமையைப்பற்றி பீஷ்மருக்கும் கூறினேன். பாஞ்சாலரே, செயல்மேல் ஐயம் கொண்டவராக நீர் வந்திருக்கிறீர். செயலெனும் அறிதலைப் பற்றி வினவுகிறீர்.

தழல் தான் தொடும் அனைத்தையும் தானென்றே ஆக்கிவிடுகிறது. அறிவு அனைத்தையும் அறிவென்றாக்குகிறது. தழல் தூயது, ஒளிகொண்டது. அனைத்தையும் தழலாக்குவதையே வேள்வி என்கிறோம். ஞானத்திலமைந்தவன் செயலனைத்தையும் வேள்வியாக்குகிறான். சிலர் அனலில் வேள்விசெய்கிறார்கள். சிலர் அலகிலா அனலை ஓம்புகிறார்கள். அவர்களையே ஞானிகள் என்கிறோம்.

எது பிற அனைத்தும் தானே எனக் காட்டுகிறதோ, பிற அனைத்துக்கும் மாற்றென தான் நின்றுகொள்கிறதோ அதுவே அறிவு. விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. நோக்குபவனாக தான் ஆகும் ஆடி. அறிபவன் அறிவே அனைத்துமென்றும் அதில் தான் ஒரு துளியே என்றும் உணர்கிறான். அறிபவனை அறிவென்றாக்குவதே அறிவு. முழுமையற்றது அறிவல்ல. அறிவனைத்தும் முழுமையின் ஒரு துளியே. அனைத்து நீர்த்துளிகளும் கடல்நோக்கியவையே.

முழுமைதேடும் செயல்களெல்லாம் வேள்விகளே. ஆனால் பொருட்களால் ஆற்றப்படும் வேள்விகளைவிட அறிவால் இயற்றப்படும் வேள்வி சிறந்தது. அனைத்துச் செயல்களும் அறிவுச்செயல்பாடுகளே. நதியைவிட முகில் விரைவுகொண்டது. விண்ணில் அலையும் கடல்கள் எடையற்றவை. அறிவின் பாதை பயின்று மேம்பட்டு அடையவேண்டியது. நீந்தியபடியே பிறக்கின்றன மீன்கள். பிறந்ததுமே ஓடுகின்றன கால்கள் கொண்டவை. பறவைக்குஞ்சு அன்னையிடமிருந்தே சிறகுகளைப் பற்றி அறிகிறது. சிறகுகளினூடாக வானை பயில்கிறது. நீந்தியும் ஓடியும் தாவியும் கற்றவற்றைக் கொண்டே உயிர்கள் பறவைகளாயின.

வணங்கியும் எட்டுத்திசையும் வினாவெழுப்பியும் தொண்டுசெய்தும் அறிந்துகொள்க! உண்மை காணும் ஞானிகளே உமக்கு ஞானத்தை அளிக்கவியலும். ஞானத்தை அடைந்தபின்னர் இந்த ஐயங்கள் இயல்பாக அழிந்துவிடும். அனைத்து உயிர்களையும் உம்முள்ளே காணச்செய்வதே அறிவு. எனவே அனைத்துக்கும் விடையென்றாகி நின்றிருப்பதே அதன் இயல்பு. பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம். வெளிவிரியும் புலன்களை உள்நோக்கி தொகுத்துக்கொண்டு, துயிலிலும் ஒலிக்கு அசையும் பூனைச்செவியென உளம் கூர்ந்திருப்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானம் அமைதியை அளிக்கிறது.

ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”


அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்


திரௌபதி குவளைகளில் ஊற்றி அவர்களுக்கு அளித்தாள். அதைச் சுவைத்தபடி “எங்கெல்லாம் சென்றீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். “நான்கு திசைகளிலும் நெடுந்தொலைவு” என்றான் அர்ஜுனன். “மேற்கே நிலைக்கடல் முதல் கிழக்கே பறக்கும் மலைகள் வரை. திசைத்தேவர்களை வென்று நிகரற்ற படைக்கலங்களுடன் வந்துள்ளேன்.” அறைவாயிலில் தோன்றிய தருமன் “உன்னை வென்றாயா?” என்றார். அர்ஜுனன் தெளிந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுநோக்கி “ஆம்” என்றான். அவர் “நன்று” என்றார். கைகளைக் கட்டியபடி நின்று அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “நன்கு மெலிந்துள்ளாய்.”


அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
‘உலகத்தை உய்விக்க வந்தவர்கள்’ என்று மாமனிதர்களை அடையாளங் காண்கிறோம். மனிதராகப் பிறப்பெடுத்தவர்கள் மற்றவர்கள் படும் இன்னல்களைத் தம்முடையதாகக் கருதி அவற்றைக் களையும் வழியில் நடக்கத் தலைப்பட்டவர்கள். 

அரண்மனையில் யுவராஜனாக வாழ்ந்த சித்தார்த்தன் உலகத் துயர்களைக் காணாமல் வளர்ந்தவன். நகர்வலத்தின்போது அவன் கண்களில்பட்ட மனித அவலங்கள் மூன்று அவனை நிலைகுலையச் செய்தன. ஒருவர் தீர்க்கவியலாப் பிணியுற்றிருந்ததைக் கண்டான். மற்றொருவர் மூப்படைந்து குற்றுயிராகக் கிடந்தார். இன்னோரிடத்தில் சவ ஊர்வலத்தைக் காண நேர்ந்தது. பிணி மூப்பு சாக்காடு என்னும் மூன்று கொடுமைகளைக் கண்டான் சித்தார்த்தன். அதற்குமேல் இளவரசனாய் இன்ப வாழ்வில் ஈடுபடமுடியவில்லை. எந்நேரமும் தாம் கண்டவை குறித்துச் சிந்தித்தான். அவற்றுக்குத் தீர்வு காணும் முகத்தான் நள்ளிரவில் மாளிகையைவிட்டு வெளியேறுகிறான். பெரும் தேடலின் முடிவில் போதி மரத்தடியில் துன்பங்களுக்குக் காரணம் என்னவென்று புலப்பட்டது. தான் உற்றுணர்ந்ததை புத்தனாக உலகோர்க்குச் சொல்கிறான். பேரரசர்கள் மண்ணாசை தணிந்து போர்த்தொழில் துறந்து புத்தர் வழியில் அன்பு வழிக்குத் திரும்பினார்கள் என்பது வரலாறு.

அவர் எளிமையான வக்கீல். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியரான அப்துல்லா என்னும் வணிகரின் சிறு வழக்குகளை எடுத்து நடத்த அந்நாட்டுக்கு வந்தவர். முதல் முறையாகத் தமக்குக் கிடைத்த வழக்கில் ஆஜராகி, நீதிமன்றத்தில் நீதிபதிமுன் நின்றபோது பேச்சே வராமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, பேந்த பேந்த விழித்த அப்பாவி மனிதர். இப்போது புகைவண்டி ஒன்றில் முதல் வகுப்பிற்கான பயணச் சீட்டு பெற்று பயணம் செய்துகொண்டிருக்கிறார். அங்கே வந்த சக பயணியான ஆங்கிலேயன் ஒருவன் ‘கறுப்பனே... இங்கே என்ன செய்கிறாய் ? உன் மூன்றாம் வகுப்புக்குப் போடா’ என்று கத்துகிறான்.

பயந்து பணிந்து வாழ்ந்தே பழக்கப்பட்ட நம் வக்கீல் ‘ஐயா... நான் இந்த வகுப்பில் பயணிக்க உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளேன்’ என்று விளக்குகிறார். ‘ஓ... உங்களைப் போன்ற ஆள்கள் முதல் வகுப்புச் சீட்டு வாங்குமளவுக்குத் துணிந்துவிட்டீர்களா...?’ என்று சீறியவன் அவர் கழுத்தைப் பிடித்துத் தூக்குகிறான். புகைவண்டியில் இருக்கும் பரிசோதகரும் வெள்ளையர். பயணிக்கு உதவ மறுத்ததோடு மட்டுமன்றி அவரும் நம் வக்கீலைத் தள்ளுமுள்ளுவுக்கு ஆட்படுத்தி மூர்க்கமாக வெளியேற்றத் துணிகிறார். 

செயின்ட் மாரிட்ஸ்பர்க் என்னும் நிலையத்தில் ஓர் அழுக்குத் துணியைப்போல் வண்டியிலிருந்து கழித்தெறியப்படுகிறார் அந்த இளம் வக்கீல். பெட்டி

படுக்கைகள் அவர்மீது வன்மத்தோடு வீசியெறியப்படுகின்றன. நிலைகுலைந்து விழுகிறார். ராஜ்கோட் சமஸ்தானத்தில் அமைச்சருக்கு நிகரான பதவியில் இருந்தவர் அவர் தந்தை. குடும்பத்தில் செல்லப் பிள்ளை. தாய்ச்சொல் மீறாதவர். தமையன்கள்மீது தலைநிமிராப் பாசமும் அன்பும் மிக்கவர். 

தந்தையின் எதிர்பாராத மரணத்தால் குடும்பம் வறுமைக்காளானது. குடும்பத்தை நிமிர்த்த, தாம் கல்வி பயின்று கடமையாற்றுவதே வழியென்று முடிவெடுத்து, இலண்டன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து நாள்தோறும் எட்டு மைல்கள் நடந்து சென்று படித்தவர். தென்னாப்பிரிக்காவில் ஒரு நிலையத்தில், விலங்கைப்போல் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்டு, அவமானத்தின் அத்தனை கத்திகளையும் மார்பில் ஏந்தியவராய் நிற்கிறார். அங்கே அவர் நோற்றார் ‘இன்று நான் உற்ற இப்பேரிழிவை இனியொருவர் - என் தேசத்தவர் - உற அனுமதியேன். இதற்கெதிராய் என் இறுதி மூச்சுள்ளவரை போராடுவேன். என் அனைத்தையும் அர்ப்பணிப்பேன். பிறழேன்’ என்று. அந்த நினைப்பும் சூளுரையும் நோற்பும் ஈந்த கனியைத்தான் நாம் ‘அரசியல் விடுதலை’ என்ற பெயரில் உண்கிறோம். அதற்குப் பிறகு அவர் புகைவண்டிகளில் மூன்றாம் வகுப்பில் மட்டுமே பயணித்தார். முப்பத்தெட்டு வயதில் இந்தியாவுக்குத் திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை எப்படி எதிர்த்து வென்றார் என்பதை அறிவோம். 
 
நம் காலத்தில் இத்தகைய மனிதர்களைத்தாம் காண முடியவில்லை. அடுத்தவர் துன்பங்கண்டு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஈக வாழ்க்கைக்கு இங்கே யாராவது தயாராயிருக்கிறார்களா என்று தேடுகிறோம். குறைந்தபட்சம் ‘நீ படும் துன்பத்திற்கு இதுதான் காரணம்’ என்று யாரேனும் சுட்டிக்காட்டுகிறார்களா ? ஒருவர் எங்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சர்வநிவாரணம் பெறலாம் என்கிறார். மற்றொருவர் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் மாறும் என்கிறார். திரும்பிய திசையெங்கும் பித்தலாட்டம். என் நிலை என்னவென்று, அதைப்போக்குவதற்கு இது வழிமுறையென்று - என்னை ஊன்றிக் கவனித்த ஒருவர் எடுத்துரைத்தால் எத்தனை உதவியாக இருக்கும் ? அதைச் செய்ய இன்று ஆளில்லை. 

புலவர்களும் அறிஞர்களும் தாம் வாழும் காலத்து மாந்தர்களுக்கு ஒரு விடிவைச் சொல்லவேண்டும். ஒரு கண்திறப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த உண்மை எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பது அதை எழுதியவரின் மேதைமைக்குச் சான்று. 

சனங்கள் படுகின்ற துன்பத்திற்கு என்ன காரணம் ? நோற்பு இல்லை. நோற்பு என்றால் தவம் செய்தல்.

ஒன்றைத் தவம்போல் எண்ணிச் செய்கின்ற எல்லாமே நோற்புதான். தவம் என்றால் பற்று நீங்கியவராய், எடுத்த செயலில் நூல்கனத்தளவும் பிறழாமல் ஆற்றும் பெருஞ்செயல். அதற்கு லௌகீகத்தில் ஓர் அர்த்தம். ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். 

நாட்டில் இல்லாமை அதிகமிருக்கிறது. கல்வி இல்லை, அறிவு இல்லை, ஞாபகம் இல்லை, கையில் செல்வமில்லை, ஊக்கம் இல்லை, என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு கூட இல்லை. 

இப்படி இல்லாதப்பட்டவர்கள் பலர் பலராக இருக்கிறார்களே, என்ன காரணம் ? இருக்கப்பட்டவர்கள் வெகு சிலராக இருக்கிறார்களே, என்ன காரணம் ?

வள்ளுவர் தெள்ளத் தெளிவாக அடிக்கிறார். 
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் 
சிலர்பலர் நோலா தவர்.
 (அதிகாரம் 27 : தவம், குறள் எண் ; 270) 
இலர் பலர் ஆகிய காரணம் = இல்லாதவர்கள் பலர் என்று பல்கிப் பெருகி ஆனதற்குக் காரணம் 

நோற்பார் சிலர் = தவம்போல் கருதிச் செயலாற்றுகின்றவர்கள் சிலர் மட்டுமே 

பலர் நோலாதவர் = இல்லாமல் இன்மையில் உழலும் அந்தப் பலர் ஒன்றையும் நோற்றுச் செய்யாதவர்.

சோம்பித் திரிபவர். தம்மை வருத்திப் பாடுபடாதவர். நோலாதவர். 
இல்லாதவர்கள் உலகில் பல்கியிருக்கக் காரணம் எதையும் தவமெனக் கருதித் தம்மை வருத்திக்கொள்பவர்கள் சிலராக இருப்பதுதான். பலர் தம்மை வருத்திக்கொள்ளாதவர்கள். 
இலர் பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர் ; பலர் நோலாதவர்.

பரிமேலழகர் உரை
இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

மு.வரதராசனார் உரை
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

English Meaning - As I taught a kid - Rajesh
The reason why there is high number of people who started penance towards moksha ended up attaining nothing is because the people who truly did the penance the way penance has to be done is very less whereas the people who didn't do penance is high.  The same applies not just for penance But also for the number of people who are successful in this work, profession and life as such. The people who do a stuff a like a penance for long term grow and attain its peak. Since the number of people who do that are small, the number of people who attain the peak is also small. vice versa.

Questions that I ask to the kid
Why the people who reach Moksha or high achievers or being rich are low in number? Why poor or mediocrity is high in number? Because people who do Tapas or who do their work/mission as a tapas are less.


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

குறள் 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மிகுதி - அதிகம்; எழுத்துஇரட்டிக்கை; நிறைவு; திரள்; பொலிவு; மீதி; சிறப்பு; செருக்கு

யான் - யான்மை - அகங்காரம்.

மிக்கவை - மிகுதியானவை; தீயவை; சோறு; ஊன்; நிறைகை.

செய்தாரைத் - செய்தார், செய்தவர்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

தகுதி - பொறுமை; பொருத்தம்; தகுதிவழக்கு; மேன்மை; நல்லொழுக்கம்; நடுவுநிலைமை; ஆற்றல்; அறிவு; கூட்டம்; தடவை; குணம்; நிலைமை.

யான் - தன்மையொருமைப்பெயர்

வென்று - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்
விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்
விடும் - ஆகும் 

முழுப்பொருள்
பிறர் மனதின் செருக்கால் (உள்ள பிறழ்வால்) துன்பத்தை நமக்கு செய்தாலும் அவரை தண்டிக்காதே. அவரையும் அவர் செய்த செயலையும் பொறுத்துக்கொள். ஏனெனில் அவருக்கு தான் உள்ளம் பிறழன்று விட்டது. உனக்கு அப்படி இல்லை என்றால், அவரை உன்னுடைய மேன்மையாலே வென்று விடு. மேன்மை என்பது ஒழுக்கத்தாலும் அறம் செய்வதாலும் நற்குணங்களாலும் வருவது. பழிக்கு பழி என்று பிறருக்கு தீமை செய்வது அறமல்ல. அக்காரணமாயினும்  பிறருக்கு தீமை செய்வது நற்குணம் அல்ல. ஆதலால் பழி மேன்மையானது அல்ல. பொறுத்தலே மேன்மையான ஒன்று.

நம் அமைதி நமக்கு தீமை செய்தவரை கூசச்செய்யும். ஒருநாள் அல்ல ஒருநாள் அவர் மனம் அவரை சுடும். அப்பொழுது அவர் தான் செய்த செயலுக்கு வருந்திக் கூசுவார். நம்மிடம் வந்து மன்னிப்பு கேட்கக் கூடும். அதுவே வெற்றி.

திருவாசகம் மிகவும் அழகாக, எளிதாக, “பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” என்கிறது. மேலும், “பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே”என்று சற்று சினந்தும் சொல்லுகிறார் மாணிக்கவாசகர். எட்டுத்தொகை சங்க நூலான நற்றிணை குறிஞ்சிப்பாடலில் கந்தரத்தனார் “தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் தாம் அறிந்து உணர்க என்பமாதோ” என்கிறார்.

காந்தி அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தது அஹிம்சை முறையில். ஏனெனில் கண்ணுக்கு கண் என்று பழிவாங்கினால் உலகம் மக்கள் அனைவரும் குருடர்களாக இருப்பர் என்று உணர்ந்தவர். பிரிட்டிஷார்கள் இந்தியர்களுக்கு செய்த கொடுமைக்கு எல்லாம் பதிலாக தீமை செய்யாமல் அமைதியான வழியில் போராட்டங்கள் நடத்தி பிரிட்டிஷாருடன் உரையாடி ரத்தம் சிந்தாமல் வெற்றி பெற்றார். (400 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரை உரையாடலுக்கு அழைத்து வரவழைத்ததே முதல் வெற்றி). பிரிட்டிஷாரை வென்றார். உலக மக்கள் மனதையும் வென்றார். அதுவே காந்தியின் மேன்மை. அதுவே இந்திய மக்களின் மேன்மை ஏனெனில் அவர்கள் பலநூற்றாண்டுகளாக இம்மண்ணில் சமூதாயமாக வாழ்பவர்கள். போர் சேதத்தை விளைவிக்கும் என்று மஹாபாரதம் போன்ற இதிகாசங்களால் உணர்ந்தவர்கள். பௌத்தம் சமணம் போன்ற மதங்களின் சாராம்சத்தை உணர்ந்து அதன் மைய கருத்தான அஹிம்சையை (உயிர்களை கொல்லாது இருத்தல், பிறரை வருத்தாது இருத்தல்) ஆகியவற்றை ஏற்றவர்கள். ஆதலால் அஹிம்சையின் மேன்மையை உணர்ந்தவர்கள். ஆதலால் உலக வரலாற்றில் முதல் முறையாக ஆயுதங்கள் அற்ற வழியில் ஒரு மாபெரும் சுதந்திரம் பெற்றது அதுவே முதல் முறை. அம்முறையே உலகிற்கு இன்று வழிகாட்டி. 

எங்கோ கேட்ட ஞாபகம்,  உனக்கு ஒருவன் தீயது செய்கிறானா? அல்லது விரோதம் பாராட்டுகிறானா? அல்லது சிறுமையானவற்றை செய்கிறானா? அவனுக்கு பெரிய மனதுடன் நல்லது செய்து காண்பி. அதுவே சிறந்து என்று. உதாரணமாக, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் (அவரைப்பற்றிய ஆவணப்படம் The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - D.Jayakanthan @1:15:48) ஒன்றில்) சொன்னது இது, கர்நாடக்காவில் தமிழ் படிக்க கூடாது என்றால் தமிழ்நாட்டில் கன்னடம் படிக்கலாம் என்று சொல்லுக என்கிறார். அது தான் வழி. தாராளமாக நாமிருந்தால் தாராளம் என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். நாகரீகத்தை நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு. They are immature. தெரியலயா உங்களுக்கு? இதற்கு ஆராய்ச்சி வேண்டுமா? அல்லது அவன் ஒத்துக்கொள்ள வேண்டுமா? நாம் தான் உணர வேண்டும். நீ(நாம்) உலக மனிதன் என்பது பெருமை அல்ல. நமது பெருமை என்ன? புலம் சார்ந்தவர்கள் நாம். இந்த புலம் என்பது பூமி. இதைத்தான் பாரதி கூறினார் “வையத் தலைமை கொள்” என்று. இந்தியா அதனால் தான் கூறுகிறது நாங்கள் என்றும் அலேக்ஸாண்டார் ஆகமாட்டோம் என்று. 

என்பதையும் நினைவில் கொள்க

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
"தீமை கண்டோர் திறுத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க என்ப மாதோ” (நற் 116:1-2)

“பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” (திருவா 70)
“பொறுப்பரன் றேபெரி யோர் நாய்கள்தம் பொய்யினையே’ (திருவா 100)

பரிமேலழகர் உரை
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

மு.வரதராசனார் உரை
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

English Meaning - As I taught a kid - Rajesh
Even if someone does something excessively bad to us, we should still win them by our character. We can display our character/maturity by forgetting others mistakes, by not showing anger, by not pin pointing past mistakes, by not gossiping or back biting and by doing good to them in return

Questions that I ask to the kid
if someone does excessively bad to you, what should you do? why you should not do bad back to him? can you gossip /speak at the back about the bad things done to you ?

What is maturity? What is character?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தம்மின் - தன்னை விட 

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

அறிவுடைமை - உண்மை அறிவுடையவனாதல்.

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லாம் - முழுதும்

இனிது - iṉitu   இனி-மை. n. 1. That which is sweet, pleasing, agreeable; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ 303). 2. That which is good; நன்மையானது.--adv. Sweetly, favourably; நன்றாக புலியூர்ப் புக்கினி தருளினன்(திருவாச. 2, 145).  

முழுப்பொருள்
தன்னுடைய பிள்ளைகள் தன்னைவிட அறிவுமிக்கவர்களாக இருந்தால் அது இந்த உலகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆதலால் அதனை கண்டு மன்னில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடையும் பயன்பெறும். 

தன்னை விட ஒருவன் அறிவு பெறுவதை ஒருவன் விரும்பவில்லை என்றால் என்ன நன்மை? ஏனெனில் தந்தை 5 என்றால் மகன் 4. அவனுடைய மகன் 3. அவனுடைய மகன் 2. அவனுடைய மகன் 1. அவனுடைய மகன் 0. கடைசியில் பூஜ்யத்துக்கு சென்று முடியும். இன்னும் தேய்ந்து -1,-2 என்று போய்க்கொண்டே இருக்கும். உலகம் கெடும். அவன் மேலும் இரண்டுபேரை கெடுப்பான். அது உலகத்திற்கு நல்லது அல்ல.

அதுவே தந்தை 5, மகன் 6, அவனுடைய மகன் 7 என்று போய்க்கொண்டு இருந்தால் அது நன்மையே பயக்கும். ஏனெனில் அவனால் இந்த சமுதாயத்திற்கு கேடு வராது. இப்படியே எல்லோரும் செய்தால் உலகம் மேம்படும். அதுமட்டும் அல்லாது அவன் மேலும் ஓர் இருவரை மேம்படுத்தக்கூடும். அவனை பார்த்து அவன் பின்பற்றிய வழி (குணங்களை) பார்த்து சில பேர் தன்னை மேம்படுத்துக்கொள்வர். ஆதலால் உலகம் இன்னும் மேம்படும்.  

எனவே, ‘மாநிலத்து மக்களுக்கெல்லாம் தம்மை விட இனிமையைத் தரும்’ என்று ஒரு பொதுநல நோக்கிலே கூறப்பட்டிருப்பதாகக் கொள்ளவேண்டும். இதில் ஒரு பெற்றோர்க்கு தம்முடைய நலத்தைவிடவும், சமுதாயநலத்தில் அக்கரை இருக்கவேண்டும் என்பதை உள்ளுரையாகச் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும்.

அதனால் தான் "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்று  புறநானூறு-இல் கூறினார்கள் போலும். 

ஏன் கல்வியை விட அறிவை சொன்னார் திருவள்ளுவர்? ஏனெனில் கல்வி என்பது பாடசாலைகளிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளும் கற்பவை. ஆனால் அறிவென்பது நாளும் கற்று அனுபவத்தால் பெற்று வளர்த்துக்கொள்ளாது. "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்" என்பது வள்ளுவன் வாக்கு. 

பிள்ளைகளுக்கு பெற்றோர்களை விட சிறந்துவிளங்குவது அழுத்தமா? இல்லை. ஏனெனில் நல்ல சூழ்நிலைகளில் பிறந்தபிள்ளைகளுக்கு அவர்களுக்கு தேவையான பெரும்பாலானவை /எல்லாம் கிடைக்கிறது. அவர்கள் செய்யவேண்டியது செயல் மட்டுமே. சோம்பி திரிவது அல்ல. மேலும் Fixed Mindset இருக்கக்கூடாது. ஊதியத்திற்கு ஒரு நிம்மதியான வேலை, இருப்பதற்கு ஒரு வீடு என்று சுயநலமாக இருக்கக் கூடாது. Growth Mindset கொண்டிருக்கவேண்டும். பெருங்கனவு கண்டு நல்ல பெருஞ்செயல் வாய்ப்புகளை நோக்கி செல்ல வேண்டும். ”குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் Bar-Raiser ஆக இருக்க வேண்டும். பிள்ளைகளும் வருங்காலத்தில் அப்படித் திகழ வேண்டும். இவ்வாறு எல்லோரும் இருந்தால் இவ்வுலகம் நன்மை பெறும். 

கேள்வி: தலைமுறை இடைவெளி அதிகரித்து வருகிறது?
ஜெயகாந்தன்: இப்போது மட்டுமா? எல்லா தலைமுறைகளிலும் உண்டு. அது இயல்பானது. என் பிள்ளை என்ன மாதிரி இருக்கணும்னு எதிர்ப்பார்க்கக் கூடாது. அதனால அவன்கிட்ட நான் சண்டை போட்டுக்கொண்டு இருக்க கூடாது. எங்கெங்கெல்லாம் என்ன விட மாறுபட்டு இருக்கிறான் என்று பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும். என்னிடம் இல்லாதவை எது அவனிடம் இருக்கு? தம்மின் தம்மக்கள் அறிவுடையர் என்று உணர்தல் வேண்டும். அது இல்லாத பொழுது இரண்டு தலைமுறைக்கு நடுவே இடைவெளி ஏற்ப்படதான் செய்யும். நல்லப் பெற்றோர்கள் அதை செய்வதில்லை.

விசுவாமித்திரர் ராமருக்கு அம்புகளை கொடுக்கிறார். அஸ்திர ப்ரியோகங்கள் கற்றுக்கொடுக்கிறார். பிறகு தாடகை வதம் நிகழ்கிறது. மற்ற வதங்கள் நடைபெறுகிறது. பிறகு மிதிலைக்கு கூட்டிக்கொண்டு போகிறார் விசுவாமித்திரர். ராமரை அறிமுகம் செய்கிறார். அப்பொழுது விசுவாமித்திரர் கூறுகிறார் "ராமனுக்கு நான் தான் அஸ்திர ப்ரியோகங்கள் எல்லாம் கற்றுக்கொடுத்தேன். ஆனால் அந்த அஸ்திரங்கள் எல்லாம் நான் கொடுத்தது. இவன் அந்த அஸ்திரங்களை எல்லாம் ப்ரியோகம் செய்யும் பொழுது எனக்கு பொறாமையாக இருக்கிறது. ஏனெனில் இவை நான் கொடுத்த அஸ்திரம்தானா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. "ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால்" என்று விசுவாமித்திரர் கூறுவதாக கம்பர் இராமாயணத்தில் கூறுகிறார். 

கம்பராமாயணத்தின் முழுப்பாடல் 
ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.

கம்பராமாயண பாடலின் பொருள் 
ஆசிரியர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால், அந்த ஒன்றில் இருந்து பத்தாக, நூறாக படித்துக் கொள்ள வேண்டும். எல்லாமா ஆசிரியர் சொல்லித் தருவார். மாணவன்தான் தேடி பிடித்து படிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது, செய்து பார்க்க வேண்டும்.

இராமனுக்கு வில் வித்தை எல்லாம் சொல்லித் தந்தவர் விஸ்வாமித்ரர். ஜனகனிடம் , இராமனை அறிமுகப்படுத்தும் போது, அவர் சொல்கிறார்

"நான் தான் இந்த அஸ்திர பிரயோகங்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அந்த படைக் கலன்களை இராமன் கையாளும் போது, எனக்கே பயமாக இருக்கிறது..அப்படி ஒரு வேகம், இலாகவம் " என்று கூறுகிறார்.

அம்புகளை கொடுத்தது நான் தான். மந்திரங்களை சொல்லிக் கொடுத்தது நான்தான். ஆனால், இராமன் அவற்றை விடும்போது, எனக்கு மனம் நடுங்குகிறது என்கிறார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்

மு.வரதராசனார் உரை
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

English Meaning - As I taught a kid - Rajesh
The generation after our generation should have more knowledge as it will be good for the world and the organisms because knowledge put into action leads to progress and betterment of the world.

Questions that I ask to the kid
How should our next generation be (Than us) ?
Why should our next generation be better than us?
What is the benefit of next generation be better than us? Who all benefits from that?

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொருள்
தற் - தன் - தான் என்னும் சொல்வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும்திரிபு.

காத்து - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

தற் - தன் -  தான் என்னும் சொல்வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும்திரிபு.

கொண்டாற் - உடைய 
கொண்ட - ஓர்உவமச்சொல்.

பேணி - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

சான்ற - சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.

சொற் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

காத்து - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்

இலாள் - இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

முழுப்பொருள்
ஒரு திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் மனைவிக்கு கடமைகள் என்ன? 


1) தற்காத்து - ஒரு குடும்பத்தலைவி தன்னை கற்பு நெறிதவறாமல் காத்துக்கொள்ள வேண்டும். இது மனவுறுதியை, திண்மையைக் காட்டுவது. கற்பு இருந்தால் தெய்வத்தையே ஏவுகிற ஆற்றல் வந்து விடும். 

முதலில் பெண் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். நல்ல உணவு, உடை, மருத்துவம், கல்வி , உடற்பயிற்சி என்று அனைத்து விதங்களிலும்  ஒரு பெண் தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். பெண் வலிமை குன்றி படுத்து விட்டால், வீடு படுத்து விடும். பெண்ணை சுற்றியே வீடு சுழல்கிறது. எல்லோரையும் பார்க்கிறேன் என்று அவள் தன்னை பார்க்காமல்  இருந்துவிடக் கூடாது.  சாப்பிடக் கூட நேரம் இல்லை, மருத்துவரிடம் போகணும், போகணும் என்று நினைக்கிறேன், எங்க நேரம் இருக்கு இருக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. அதுவும் இந்த காலத்தில் பெண்கள் வேலைக்குப் போக தொடங்கிய பின், அவர்களுக்கு நேரமே கிடைப்பது இல்லை.

நாம் ஆகாய விமானத்தில் செல்லும் போது , அங்குள்ள பணிப்பெண் சொல்லுவாள் , "விமானத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைந்தால், முகத்தில்  பொருத்திக் கொள்ள முக மூடி மேலே இருந்து வரும். முதலில் உங்கள் முகத்தில் பொருத்திக் கொண்டு பின், அருகில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள் " என்று.

நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

பெண் முதலில் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.

சில பெண்கள், தங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது இல்லை. வயசான இப்படித்தான் இருக்கும் என்று ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள். அல்லது , கணவனோ மகனோ அழைத்துக் கொண்டு போனால்தான்  மருத்துவமனைக்கு போவார்கள். அப்படி இருக்கக் கூடாது.

அவள் தன்னைத் தானே முதலில் காத்துக் கொள்ள வேண்டும்.

"தற்கொண்டான் பேணி" - கணவனை பேண வேண்டும். அவனை பாதுகாக்க வேண்டும். கணவனை இதில் இருந்து காக்க வேண்டும் ? கணவனின் உடல் நலம், மன நலம், அவன் புகழ் இவற்றை காக்க வேண்டும்.

பெண்ணின் நலனை காக்கும் பொறுப்பை ஆணிடம் தரவில்லை வள்ளுவர்.

பெண், தன்னைத் தானே காத்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவள் கணவனையும் காக்க வேண்டும் என்று சொல்லும் போது பெண்ணின் பொறுப்பு எவ்வளவு என்று வள்ளுவர் எடை போடுகிறார். அவளால் தான் இரண்டும் முடியும்.

2) தற்கொண்டாற் பேணித்மனைவி அவள், தன்னை மனம் கொண்ட (திருமணம் கொண்ட) தலைவன் எவ்வித குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு காக்கவேண்டும். தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து செயல்படவேண்டும். 

கணவனின் உடல் நலம் - ஆரோக்கியம் அதை அவள் காக்க வேண்டும்.

அதை விட முக்கியம், அவனின் மன நலம். இன்று பாதி சிக்கல் மன நிலை சம்பந்தப் பட்டதாகவே இருக்கிறது.  வேலைப் பளு, போட்டி, மற்றவரோடு தன்னை ஒப்பிட்டு  அதனால் வரும் சிக்கல் என்று பல மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன.

அதையும் விட முக்கியம், கணவனின் நல்ல பெயரை காக்க வேண்டும். "எங்க வீட்டு காரரா, அதுக்கு ஒண்ணும் தெரியாது " என்று மனைவியே கணவனை  மட்டமாக பேசக் கூடாது. கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், அவரை போல உண்டா என்று கூறி அவன் புகழ் காக்க வேண்டும்.

ஏன் ? பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கூடுதல் வேலைப் பளு ?

ஒரு பெண் தன் கணவனை மதிக்காமல் , அவனை ஏளனமாக பேசத் தலைப்பட்டால், அவளின் பிள்ளைகள் தந்தையை மதிக்காது. தகப்பன் சொல் கேளாத பிள்ளை, அப்பாவுக்கு பயப்படாத பிள்ளை , ஒழுக்கமாக வளர்வது கடினம். எதற்காக இல்லாவிட்டாலும் பிள்ளைகளின் எதிர் காலம் கருதியாவது, அவள் கணவனின் புகழை காக்க வேண்டும்.

"தகைசான்ற சொற்காத்துச் 

3) குடும்பத்தின்/ குடியின் பெருமையை (நற்பெருமைகளை) காக்க வேண்டும். 
தகை என்றால் உயர்ந்த என்று பொருள். தகை சார்ந்த என்றால் உயர்வினை சார்ந்து நிற்கும். அப்படிப்பட்ட சொல் எது ?புகழ்ச்சி. அந்த புகழை காக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அந்த மதிப்பையும் மரியாதையும் காத்து உயர்த்த வேண்டியது ஒரு பெண்ணின் கடமை. ஒரு குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் ஒரு பெண்ணின் கையில் இருக்கிறது.

நண்பர்கள், சுற்றம் எல்லாம் ஒரு குடும்பத்தை மதிப்பது அந்த குடும்பத்தின் பெண்ணை வைத்துதான்.

ஒரு நண்பர் வந்திருக்கிறார். அவருக்கு ஒரு குவளை தண்ணீர் தர வேண்டும். அந்த வீட்டு பெண்மணி, அந்த குவளை நீரை "நங்" என்று வைத்தால், அந்த நண்பர் அந்த வீட்டு பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார். நட்பு அன்றோடு அறுந்து விடும்.

வீட்டின் பெருமை எப்போது காக்கப் படும் என்றால், வீட்டில் உள்ள அனைவரின் நலமும்  காக்கப்பட்டால் தான். ஒரு வீட்டில் , ஒரு குடும்பத்தில் ஒரு நபர் சரி இல்லை என்றாலும், மொத்த குடும்பத்தின் பெருமை சீர் கெட்டு விடும். "அந்த வீட்டுல எல்லாம் சரி தான், அந்த கடைசி பையன் மட்டும் கொஞ்சம் சரி இல்லை. ஏதோ தப்பு தண்டா பண்ணிட்டு இப்ப சிறையில்  இருக்கிறான் " என்றால் அந்த குடுபத்தின் பெருமை குலையத்தான் செய்யும்.

எனவே ஒரு பெண் என்பவள் தன்னையும், தன் கணவனையும் மட்டும் பார்த்துக் கொண்டால்  போதாது. அந்த மொத்த குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய  பொறுப்பு அவளிடம் இருக்கிறது.

அப்படி என்றால், நாம் சிலவற்றை யோசிக்க வேண்டும்.

முதலாவது, ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மருமகள்கள் வருவார்களாயின்  அவர்கள் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்.

இரண்டாவது, ஒரு பெண் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்துகிறாள் என்றால் அவளுக்கு உரிய மரியாதையும், உதவியும் செய்யப் பட வேண்டும்.  அது அவ  வேலை என்று வீட்டில் உள்ளவர்கள் பொறுப்பற்று இருக்க முடியாது.  அவள் சொல்வதைக் கேட்டு, அவளுக்கு உரிய மரியாதை தந்து, அவளின் கடமைகளில் உதவி செய்ய வேண்டும்.

மூன்றாவது, ஒரு வீட்டில் உள்ள அனைத்து பெண்களின் கடமை இது. மாமியார், மருமகள், மகள், என்று அனைத்து பெண்களும் சேர்ந்து செய்ய வேண்டிய கடன் இது. ஒருவர்க்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் வீட்டின் பெருமை எங்கே சிறக்கும்.

4) சொற்காத்து - கல்யாணத்தில் தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் திருமண உறுதிமொழி பரிமாற்றத்தினை கடைபிடிக்கவேண்டும்.  பொதுவாக சப்தபதி (7 அடிகள் எடுத்து வைத்து எடுக்கப்படும் உறுதிமொழி) என்ற ஒரு உறுதிமொழியை எடுப்பர். அவ்வுறுதியைக் காப்பாற்றும் பொறுப்பும் தலைவிக்கே உண்டு. தலைவன்/கணவன் சற்று பாதை விலகி நடந்தாலும் கூட அவனை நல்வழிபடுத்தகூடிய சக்தியின் வடிவம்தான் பெண். சப்தபதி இக்கட்டுரையில் கடைசியில் படிக்கவும்

5) சோர்விலாள் பெண் -- மேற் சொன்னவற்றை ஒருபொழுதும் சோர்வில்லாமல் (இழுக்கு இல்லாமல்) கடைப்பிடித்து செயல்களை ஆற்றுபவளே பெண் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

இது ஏதோ நாள் கிழமைக்கு, கல்யாணம் போன்ற முக்கிய தினங்களில் செய்ய வேண்டிய ஒன்று அல்ல. நித்தம் நித்தம் செய்ய வேண்டியது. அப்படி செய்யும் போது நிறைய சிக்கல்கள் வரும். சவால்கள் வரும். நெருக்கடிகள் வரும். அவள் சோர்ந்து போய் விடக் கூடாது.

கணவன் கொஞ்சம் ஒரு மாதிரி இருப்பான். மாமியார் குணம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வீட்டில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு புறம் இழுப்பார்கள். எக்கேடும் கேட்டு போங்கள் நேற்று விட்டு விடக் கூடாது. சலிக்காமல், சோர்வு இல்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

ஒரு பெண்ணின் திறமையின் மேல், அவளின் ஆற்றலின் மேல் நம்பிக்கை இருந்தால் வள்ளுவர் இத்தனை விஷயங்களை அவளிடம் இருந்து எதிர் பார்ப்பார்.

இது ஏதோ ஒரு சில படித்த பெண்களிடம் இருந்து மட்டும் அல்ல. எல்லா பெண்களுக்கும் சொன்னது இது.

அவர் காலத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும் அல்ல, இன்றும் நாளையும் வரும் பெண்களுக்கும் சொன்னது.

பெண்கள் தங்கள் பொறுப்பை உணரந்து செயல்பட வேண்டும்.

ஆண்கள், பெண்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும், உரிமையையும்,  உதவியையும் தர வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். வீடு சிறக்கும். அது ஒரு இனிமையான சோலையாக மாறும்

ஒப்புரை 

திருமந்திரம்: 438
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே
.(1). கியங்கி யயந்திரு

திருமந்திரம்: 439
ஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
.(1). சித்தின்

திருமந்திரம்: 440
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

ஔவையார். ஆத்திச்சூடி:
சோம்பித் திரியேல். 53
தக்கோன் எனத்திரி. 54
தூக்கி வினைசெய். 59
தேசத்தோடு ஒத்து வாழ். 61.
நன்மை கடைப்பிடி. 65
நாடொப்பன செய். 66
நேர்பட ஒழுகு. 72
நோய்க்கு இடங் கொடேல். 75.
பீடுபெற நில். 79
பெரியாரைத் துணைக்கொள். 82
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
வைகறைத் துயில் எழு. 106

ஔவையார். கொன்றைவேந்தன்: 15
காவல்தானே பாவையற்கு அழகு

ஔவையார். மூதுரை :3
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனிமையவும் - இன்னாத
நாளல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

மேலும்: அஷோக் உரை

அறம் என்பது ஏற்கப்படுவது. ஆனால் என்றுமே அதன் துலாமுள் நிலையற்றுமிருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை பெரும் பெருக்கு. அந்த அறச்சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் எப்போதும் கையாள்கின்றன.. நான் விரும்பி சொல்லும் ஜெயகாந்தன் கதை ஒன்று உண்டு. ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ” என்ற கதை.

அதில் கணவர் கிட்டத்தட்ட தியாகராஜ சுவாமிகள் போன்ற ஒருவர். உஞ்சவிருத்தி செய்து வாழ்பவர். மறுவேளைக்கு உணவை வைத்துக்கொள்ளாதவர். இசையையும் பக்தியையும் தன்வாழ்க்கையாகக் கொண்டவர். அவருக்கு ஒரு மனைவி. அவள் கணவனது நலம் மட்டுமே நாடும், கணவனுக்கென்றே வாழும், அந்தக்காலத்துப் பதிவிரதை. ஆனால் அவளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. ’இவர் இறந்துபோனால் யாரும் என்னை பார்க்க மாட்டார்கள். இவர் இருக்கிற வரை நான் இவரை நம்பி இருந்துவிடுவேன். நாளைக்கு இவர் இறந்து போனால் இப்பேர்ப்பட்ட மகானுடைய மனைவி போய் கையேந்தினால் பிச்சை எடுத்தாள் என்று ஆகிவிடக்கூடாது. இதுவும் இவரே நாளைக்கு படுத்துட்டார் என்றால் இவருக்கு ஒரு மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட இவர்கள் யாரும் வரமாட்டார்கள்.. அப்போது  அவருக்காக நான் கையேந்தினால் அது இன்னும் அவமானம். அப்போது என்ன செய்வது’.

அவள் ஒரு லாட்டரி சீட்டு எடுக்கிறாள். அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. லாட்டரிச்சீட்டை எடுத்துக் கொண்டு போய் கணவனிடம் கேட்கிறாள். இதை ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?”. அவர் சொல்கிறார். ”நீதானே ஆசைப்பட்டு வாங்கினே? நேக்கு ஒண்ணும் வேண்டாம். நீயே வெச்சுக்கோ” அவள் திகைத்துவிடுகிறாள். “உங்களுக்கு இல்லாத ஒண்ணை நான் வெச்சுக்க முடியாது. நான் வாங்கினதே உங்களுக்கும் சேர்த்துதான். நீங்க வேண்டாம்னு சொன்னா நான் வெச்சுக்க மாட்டேன்.” அவர் இயல்பாக ”சரி அப்ப கிழிச்சு எறிஞ்சுடு” என்கிறார். அவள் பதைப்புடன் ”அது எப்படி கிழிச்சு எறியறது? மகாலட்சுமி இல்லையா?” என்கிறாள். ”சரி ஏதாவது பண்ணு” என்று அவர் சென்று விடுகிறார்.

கதைமுடிவில் அவள் திரும்பி நம்மிடம் கேட்கிறாள் ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ”. இதில் இரண்டுமே அறம் தான். ஒன்று வான்பறவைகள் போல தெய்வத்தை நம்பி வாழ்பவனின் அறம். இன்னொன்று அக்கறையான குடும்பப்பெண்ணின் அறம். இந்தக் குரலை இந்தச் சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் தொடந்து கையாண்டு கொண்டிருக்கின்றன.

பரிமேலழகர் உரை
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.

மு.வரதராசனார் உரை
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

சாலமன் பாப்பையா உரை
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.


சப்தபதி

Literally this means the “seven steps”. Courts in India have ruled that this is the most important ritual of a Hindu Marriage. They consider that unless this ritual is completed the marriage itself is not over. According to Vedas, once this is over the bride and groom become wife and husband. This ritual consists of the groom taking the right foot of the bride in his left hand and making her take seven steps either in the direction of east or north. The following prayers are recited: -

First Step: Let God Maha Vishnu who is spread throughout the world, give you food in plenty
Second step: Let Him come with you for a second step and give you sufficient strength
Third step: Let Him come with you for a third step to make you observe all religious rituals.
Fourth step: Let Him come along with you for the fourth step to give you pleasures
Fifth step: Let Him be with you when you take the fifth step to give you lot of wealth (cow)
Sixth step:Let Him lead you the six stages of life with happiness and welfare
Seventh step: Let him help you in performing Soma Yaga and other prayers when you take the seventh step

The following requests are to be recited by the groom to the bride after she takes the seven steps:-

“You who has taken the seven steps with me should become my friend. We who have taken the seven steps together would live as friends.

I should get your friendship, Oh maid.
Oh maid, I should never get parted from your friendship.

We who have attained each other, should get lustrous health, serenity, peaceful mind, and should enjoy together the food and all other tastes.

We would plan all things that are to be done in future together. Let us both make our two minds into one.

Let us enjoy together all the physical and mental pleasures together from now onwards.

Let us do all religious observations together.”

Then again the groom tells the bride:-

“You are the Rig Veda and I am the Sama Veda
I am the Sama Veda and you are the Rig Veda (recited twice for emphasis)

Like these two Vedas we should never separate from each other. We also will not get separated.

I am the world Dyu and you are the earth (dyu is the world above. This indicates that she is below him and should obey his wishes).

I am the material called Shukla (semen) and you are the wearer of this in your womb.

I am the mind and you are the word
I am Sama Veda and you are the Rig Veda

I am telling this because I have lot of care for you. Please bear me male children in future,

Hey Maid come with me.”

Once the prayer and the grooms request is recited the bride becomes groom’s wife and joins his family (Gothra)

ஸப்தபதீ
ஸத் என்றால் ஏழு, பதீ என்பது பாதம் என்ற சொல்லைத் தழுவியது, அதாவது ஏழு அடிகள் எடுத்து வைப்பதை ஸப்த பதீ என்கிறோம்,இது தான்

விவாஹத்தின் மிக முக்கிய அம்சம் மணமகன் பெண்ணின் வலது பாத கட்டை விரலை தன் வலது கரத்தால் பிடித்துக் கொண்டு ஏழு முறை சிறிது சிறிதாக நகர்த்த வேண்டும்,அதற்கான மந்திரம்  மந்திரம் மந்திரம்

(ஏகமிஷே விஷ்ணுஸ்த்வாந்வேது,தவே ஊர்ஜே விஷ்ணுஸ்த்வாந்வேது

த்ரீணி வரதாய விஷ்ணுஸ்த்வாந்வேது,சத்வாரி மயோப வாய

விஷ்ணுஸ்த்வாந்வேது,பஞ்ச பகப் ய; விஷ்ணுஸ்த்வாந்வேது,

ஷண்ருதுப் ய;விஷ்ணுஸ்த்வாந்வேது,ஸப்த ஸப்தப்யோ ஹோத்சாப்யோ

விஷ்ணுஸ்த்வாந்வேது) இந்த முதல் அடியை வைக்கும்போது( தான்ய விருத்தியும்,அன்னபானாதிகளின் விருத்தியின் பொருட்டும் 2,ல் உடல் வலிமையின் மனவலிமையின் பொருட்டும் 3,ல் விரதாதிகளுக்கு

உதவும் பொருட்டும், 4,ல் சுகத்திற்காகவும்,நன்மைகள் பொருட்டும்5,ல் பசு

முதலானவைகளுக்கு உதவும் பொருட்டும் 6,ல் பருவங்களின் நன்மை பெறும் பொருட்டும், கடைசியில் 7,ம் அடியில் யாகயக்ஞங்களை குறைவறச் செய்ய அருளுமாறும் விஷ்ணுவின் அனுக்ரஹம் நமக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும் இல்லறத்தில் உணவு உடல் நலம் மனநலம்

தனதான்ய பசு,பால் விருத்தி பருவகாலங்களின் அனுகூலம், பெரியோர்களின் ஆசிர்வாதம் இவைகள் மிக முக்கியம் இவை பெற கொஞ்ச தூரம் நாம் இருவரும் சேர்ந்து வந்தால் சகா அதாவது சினேகிதர்களாகுவிட்டோம், நீ என்னை விட்டு விலகாதிருப்பாய்,நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்யலாம்,என்று அடுத்த மந்திரம் கூறுகிறது பாணினீய சூத்ரத்தில் ஸாப்தபதீனம் ஸக்யம் என்று வரும் அதாவது இரண்டு பேர் ஏழு அடிகள் ஒன்றாகச் சேர்ந்து போனால் இருவரும் சினேகிதர்கள் ஆகும்

(ஸகா ஸப்தபதா ப வ ஸகாயௌ ஸப்தபதா ப பூ வஸக் யந்தே க மேகம் ஸக் யாத்தே மாயோஷம் ஸக் யாந்மே மாயோஷ்டா; ஸமயாவ ஸங்கல்பா வஹை ஸம்பிரியௌ ரோசிஷ்ணு ஸுமனஸ்யாநௌ)

இந்த மந்திரங்கள் கணவனும் மனைவியும் ஸ்னேகிதர்களாக வாழ்நாட்கள்

பூராவும் பகவதனுக்ரஹத்துடன் வாழ ப்ரார்த்திக்கின்றன இப்படி மனதிற்கு இனிமையானதும் ஸ்ரேஷ்டினமானதும் ஆகிய மந்திரங்களை ஓதி இருவரும் முன்போல் கரங்களைப் பற்றியவாறு அக்னியை வலம் வர வேண்டும்,பிறகு பத்நீ விரல்களால் தொட்டுக் கொண்டிருக்க மாப்பிள்ளை பத்து ஹோமங்களைச்(பதினாறு ஆஹுதிகளை) செய்கிறான் இனி பெண்ணை பத்நீ என்று சொல்லலாம்,வைதீக தர்மப்படி விவாஹம் ஆன பெண்ணிற்கு மட்டுமே பத்நீ என்றபதவி கிடைக்கிறது,தர்ம காரியங்களில்

கணவனுடன் கூட இருக்க அதிகாரம் பெற்ற பத்னியுடன் செய்யும் காரியங்களுக்குத்தான் பலன் உண்டு அதனாலேயே அவள் தர்மபத்நீ என்று

அழைக்கப்படுகிறாள்   (ஹோமங்களுக்கான மந்திரங்களில் சிலவட்ரை)

1,இந்த கன்னிகையை அடைந்த ஹோமனுக்காக(ஸோமாய ஜனிவிதே ஸ்வாஹா)=இந்த நெய்யை ஆஹுதீ செய்கிறேன்

2, கந்தர்வாய ஜனிவிதே ஸ்வாஹா> கந்தர்வனுக்கு

3,அக்நயே ஜனிவிதே ஸ்வாஹா> அக்னிக்கு

4,இவளின் கந்யாபருவத்தில் ஏதாவது(கந்யளா பித்ருப்யோ யதீ பதிலோகமவதீ க்ஷமதாஸ்த ஸ்வாஹா>குறை ஏற்பட்டிருப்பின் அவைகள் நீங்குவதற்காக,

5,ஆகட்டும், பிதாவிந் குலத்திலிருந்து என்(ப்ரேதோ முஞ்சாதி நாமுதஸ்ஸுப்த்தா மமுதர்கரத் யதேயம் மிந்த்ர மீட்வஸ்ப்த்ரா ஸுபகாசதி)

குலத்திற்கு இவள் வந்து என்னை அனுசரிப்பவளாக  இது போன்று அர்த்தமுள்ள மந்திரங்களைச் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும், ஸப்தபதி முடிந்தபிறகு தான் தம்பதிகளை(கை குலுக்கி)அக்ஷதையுடன் செய்ய வேண்டும் ஆசீர்வாதம்

ஸப்தபதீ (2)
சமீபத்தில் திருமணம் செய்து வைக்கும் சாஸ்திரிகள் பலர் திருமண சடங்கில் சப்தபதியின் முக்கியத்துவத்தை உரைக்கின்றனர். திருமணம் தாலிகட்டுவதுடன் முடிந்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாலிகட்டிவிட்டதால் இருவர் கணவன் மனைவியாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. சப்தபதி என்ற சடங்கே திருமணத்தை பூர்த்தி செய்கிறது. 'தாலி' என்ற வழக்கமே பிற்பாடு தோன்றப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். 'பொன்' சேமித்தல் தம்பதியரின் அவசர-அவசிய காலகட்டங்களில் சேமிப்பாக இருக்க உதவும் என்பதால் தாலி வழக்கம் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டதாய் இருக்கலாம். ஆனாலும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்ய லஹரியிலும் அம்பாள் திருமாங்கல்யம் அணிந்திருபதாய் பாஷணைகள் இருக்கின்றன. சௌந்தர்ய லஹரியில் , அம்பாள் கழுத்தில் மாங்கல்யமாக மூன்று நூல்கள் மூன்று ரேகைகளாக இருக்கின்றன என்று ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இருக்கின்றதாம். அதனால் 'தாலி' பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் தெளிவாகக் கூறுவது கடினம். அடுத்து சப்தபதியைப் பார்ப்போம்.

சப்தபதி என்றால் 'ஏழு அடிகள்' என்று பொருள். ஒரு ஆடவனும் பெண்ணும் சப்தபதி எடுத்துவைத்தால் அவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். ஏழு அடிகளை ஒன்றாக எடுத்து வைப்பதன் மூலம் அவர்களின் தோழமை உறவு கொண்டாடப்படுகின்றது. யமனுடன் ஏழு அடிகள் சாவித்திரி எடுத்து வைத்ததனால், அவளை விலகச் சொல்லும் யமனிடம், சப்தபதி உன்னுடன் நடந்ததனால் "நீ என் நண்பன், நட்பின் பெயரிலாவது என் மணாளனை மீட்டுக் கொடு' என்று சாவித்திரி கேட்கிறாள்.

ஏழடிகள் நீ என்னுடன் நடந்ததனால் இன்று முதல் நீ என் தோழி,
நான் வானம் என்றால் நீ பூமி
நான் மனம் என்றால் நீ வாக்கு
எல்லோருடனும் அன்பு பூண்டு இல்லறத்தை இனிதாக்குவாயாக

என்று அவன் கூறி அவளை தோழியாக ஏற்பதன் மூலம் மனையாளாகவும் ஏற்கிறான் என்பதே சப்தபதியின் உட்கருத்து.

உணவு நிறைவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
உடல் வலிமை பெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
சுகத்தை அளிப்பதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்
பசுக்களையும் செல்வத்தையும் அளிப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நாட்டில் நல்ல பருவங்கள் தவறாது இருப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
யாகங்களை செய்து வைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்

என்பது ஒவ்வொரு அடியிலும் சொல்லும் மந்திரங்களின் பொருள்.