ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், வலியறிதல் குறள் 477 ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி
குறள் 477
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள்
ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஈக - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

பொருள்- சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

போற்றி - போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்

வழங்கும் - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்.

நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

முழுப்பொருள்
பிறருக்கு கொடுத்து உதவினாலும் (அந்த உதவி பசியை தணிப்பதற்கென்றாலும், துன்பத்தை துடைப்பதற்கென்றாலும்) தன்னுடைய பொருளாதார அளவு அறிந்தும் பிறரின் தேவை அறிந்தும் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் தன்னுடைய பொருளை தன் தேவைக்கான அளவிற்கு பாதுக்காத்து அது வளர்வதற்கு (வளர்ந்ததில் வருங்காலத்தில் கொடுப்பதற்கு) தேவையான அளவு வைத்துக்கொண்டு கொடுப்பதே முறைமையாகும். 

கொடுப்பதற்கு பெரிய மனது இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்டு இருப்பதையெல்லாம் கொடுத்து ஒன்றும் இல்லாமல் ஆகிவிடகூடாது. தன் வலிமையையும் தேவையும் உணர்ந்து கொடுக்க வேண்டும். அதுவே நெடுங்காலத்திற்கு கொடுத்து உதவும் வலிமையை/ தன்மையை தரும்.

ஏற்கனவே இறைமாட்சி அதிகாரத்திலே “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற குறளை அறிந்திருக்கிறோம்.  ஒருவன் தன் செல்வத்தை நான்கு பங்குகளாகப் பிரித்து, இரண்டு பங்கினைத் தன்னுடை வாழ்க்கைக் குடும்பச் செலவுகளுக்கும், ஒரு பங்கை எதிர்பாரத அவசரத் தேவைகளுக்காக வைப்பு நிதியாகவும், ஒரு பங்கை பிறருக்கு தானம் செய்வதற்கும் வைத்துக்கொள்ளவேண்டும். இதை “வந்த பொருளின் காற்கூறு வருமேல் இடர்நீக்குதற்கமைந்து, மைந்த விருகானினக் காக்கி மற்றைக் காலே வழங்கிடுக” என்ற பாடல் வரிகள் சொல்லுகின்றன.

இனியவை நாற்பது, “வருவாய் அறிந்து வழங்கல் இனிதே” என்று எளிமையாக ஒரு வரியில் இதைத்தான் சொல்லுகிறது. நல்லதனார் எழுதிய திரிகடுகப்பாடலும், “வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்” என்று சொல்லும்.

இந்த திருக்குறள் தான் பிற்காலத்தில் மருவி “ஆத்துல(ஆற்றிலே)  அளந்து  போட்டாலும் அளந்து போடனும்/அளந்துப்போடு

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
(ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain