குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]
பொருள்
சாயல் - மென்மைத்தோற்றம்; அழகு; ஒப்பு; நிறம்; மேனி; மென்மை; சாய்வு; இளைப்பு; நிழல்; மாதிரி; நுணுக்கம்; துயிலிடம்; சார்பு; மஞ்சள்; மேம்பாடு; மேம்பாடாகியசொல்; அருள்.
நாண் -> பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று
நாணம் -> எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு, கூசுதல்
அவர்கொண்டார் - அவர் கொண்டு சென்று விட்டார்
கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி
கைம்மாறா - அதற்கு பதிலாக / கைம் மாறாக (உடனடியாக)
நோய் - வியாதி, துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு, நோ
பசலை - அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.
தந்து - தருதல்
முழுப்பொருள்
என்னை பிரிந்து செல்லும் பொழுது என் காதலர் என் மேனி அழகினையும், நாணனத்தினையும் கொண்டு சென்றார். அவர் இல்லாமல் எனக்கு ஏது அழகு ? அவரை காணாமல் நான் எப்படி வெட்கபடுவேன் ? என் நினைவாக என் அழகினையும் அவர் முன் நான் நாணி வெட்கம்கொண்ட சித்திரங்களை மனதில் எடுத்து கொண்டு சென்றாரோ ?
அதற்கு பதிலாக அவர் எனக்கு கொடுத்தது காமநோயும் (துன்பம்), பசலையும் தான். இந்த காமநோய் என்பது அவரது பிரிவினில் அவரை நினைத்து நான் கொண்ட மன வருத்தம். அவர் இல்லாமல் என் மேனியில் வேறுபட்ட (காம) நிறம் ஒன்று பூண்டு உள்ளது.
இங்கு கைமாறு என்று கூறப்பட்டுள்ளது. கைமாறு என்பது கொடுத்த உடன் திரும்ப பெருவது. ஆதலால் இங்கு தலைவனை பிரிந்த உடனேயே தலைவிக்கு பசலையும் நோயும் அவளை ஆட்கொண்டதாக பொருள்.
தலைவியின் பசலை நோயை தலைவன் வந்து தொட்டாலே ஒழிய தீராது.
அழகும் வெட்கமும் நோயிற்கும் பசலைக்கும் ஈடாகாது (எதிர்நிரை அணி). ஆதலால் அவர் மறுபடியும் வந்து எனது அழகினையும் நாணத்தினையும் தந்தால் தான் (என்னை தொட்டால் தான்) இந்த நோயும் பசலையும் தீரும் என்று குறிப்பு அறியலாம்.
- நோய் என்று வார்த்தைக்கு குற்றம் என்று பொருள் கொண்டால் - பிரிந்தவர் இன்னும் வரவில்லை - ஆக அவரை பிரிய விட்டது எனது குற்றம் என்றும் கூட கொள்ளலாம். ஆதலால் தான் இந்த நோயில் அவள் வாடுகிறாள்.
ஒப்புமை
”பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலையார்ந்தன குவளையங் கண்ணே” (குறுந் 13:3,5)
”ஆய்மலர் உண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே” (ஐங்குறு 242:4-5)
”அரிமதர் உண்கண் பசப்பநோய் செய்யும், பெருமான்” (கலி 82:20-21)
”பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” (சம்பந்தர்.செங்காட்டங்குடி)
குறட் கருத்து காமத்துப் பால் (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரார் பழிக்கின்றார் என்னவரைப் புரியாமல்
உண்மை நிலை தெரியாமல் எங்கேயும் எப்போதும்
வாராது போயிடுவார் என்றெங்கும் கூறுகின்றார்
வழக்குணரார் உணர்வாரா என்னவரின் பெருந்தன்மை
நேராய் என் நாணமும் அழகும் அவர் கொண்டார
நினைத்துணரக் காம நோயும் பசலையுமே எனக்களித்தார்
சீராய் இரண்டெடுத்தார் சிறப்பாய் இரண்டளித்தார்
ஊரார் அறியார் இவ்வுண்மை நிலை பழிக்கின்றார்
குறட் கருத்து 2 (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கண்கள் இது அவர் காணக் காதலித்தேன்
காதலரும் வந்து என்னை ஆதரித்தார்
பண்ணிசைத்தோம் பல விதமாய்ப் பாடி நின்றோம்
பாடலைப் போல் கூடலையும் தேர்ந்து வென்றோம்
மன்னவரும் எனைப் பிரிந்தார் அழகினோடு
மங்கை யெந்தன் நாணமதும் கொண்டு சென்றார்
தென்னவரோ கைம்மாறாய் நோய்கள் தந்தார்
தீராத காமமதும் பசலையதும்
மேலும்: தமிழ் நண்பர்கள்
பரிமேலழகர் உரை
'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
விளக்கம்
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அழகும் நாணும் அழியாமல் நீயாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)
நோயும் பசலையும் கைம்மாறாத் தந்து- நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும் போதே இக்காம நோயையும் பசலையையும் எதிரீடாகத் தந்துவிட்டு; சாயலும் நாணும் அவர் கொண்டார்-என் மேனியழகையும் நாணையும், தம்முடன் கொண்டுபோய் விட்டார்.
அவர் திரும்பி வந்தாலொழிய என் மேனியழகும் நாணும் திரும்பாவென்பதாம்.சாயலுக்குப் பசலையும் நாணுக்கு நோயும் ஈடாதலால் எதிர்நிரனிறை.
மணக்குடவர் உரை
மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.
சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
மு.வ உரை
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
பரிவருத்தனை அணி (நன்றி: Wiki)
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே
--(தண்டியலங்காரம், 87)
பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
--(திருக்குறள், 1183)
இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.
பாடல்பொருள்
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
அணிப் பொருத்தம்
இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.
எதிர் நிரல் நிறை அணி (நன்றி: துரை தாசன்)
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து (1183)
சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி ஆகும்.
குறுந்தோகையும் பசலையும் சினிமாவும்
1) காதல் கோட்டை
பாடல்: மொட்டு மொட்டு மலராத மொட்டு
2) என் ஸ்வாசகாற்றே
பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
நூல்: குறுந்தொகை (#27)
பாடியவர்: வெள்ளிவீதியார்
சூழல்: பாலைத்திணை : காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன். ‘இந்தத் துயரத்தை இவள் எப்படித் தாங்குவாளோ!’ என்று தோழி கவலைப்படுகிறாள். அவளுக்குக் காதலி சொல்லும் பதில் இது
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
நல்ல பசுவின் இனிமையான பால். அந்தப் பாலைப் பசுவின் கன்று குடிக்கவேண்டும், அல்லது அது பாத்திரத்தில் கறக்கப்பட்டு மற்றவர்களுக்காவது பயன்படவேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் அது தரையில் சிந்தினால் வீண்தானே?
அதுபோல, தேமல் படர்ந்த என் பெண்மையும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.
(மேலே உள்ள கன்றும் பாடலுக்கு மற்றுமொரு விளக்கம். நன்றி: மாதவிப் பந்தல்)
நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)
ஏதோ, "காமம்" பிடிச்சிப் போயிப் பாடிட்டாங்க-ன்னு நினைக்காதீங்க!:)
இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!
பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!
நன்றி அருட்பெருங்கோ
நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன் ?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம் ?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்
நன்றி: ரிஷ்வன்
பிரிவுத் துயரத்தையும்
பசலை நிறத்தையும்
காதல் பரிசாய் தந்தவர்
நாணத்தையும் - என்
ஊணழகையும் ஒருசேர
கையோடு கொண்டுசென்றார்.
No comments:
Post a Comment