குறள் 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
பொருள்
அங்கணம் - சேறு; முற்றம் இருதூண்நடுவிடம்; சாக்கடை மதகு நீர்த்தாரை
அங்கணத்துள் - அங்கணத்திற்குள்; சேறு, சாக்கடை போன்ற நீர்த்தாரையினுள்
உக்க - ukku- 5 v. intr. உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.
அமிழ்து - உணவு; ஆவின்பால்; நெய் மோர் நீர் மழை தேவருணவு வேள்விப்பொருள்களில்மிஞ்சியவை; இரவாதுவந்தபொருள்; நஞ்சுபோக்கும்மருந்து; இனிமை அழிவின்மை; வீடுபேறு நஞ்சு பாதரசம்
அற்று - aṟṟu அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது.
அற்றால் - போன்றது
தம் - tam part. தாம் Flexional increment generally used along with the nouns ofthird pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191).
கணத்தர் - கணத்தார் - ஊர்க்காரியநிருவாகிகள்.
அல்லார் - அல்லாதவர்கள்
முன் - முன் நின்று
கோட்டி - துன்பம்; பைத்தியம்; பசுடி; நிந்தை; சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு; ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.
முழுப்பொருள்
நாம் ஒரு தகவலை அல்லது தர்க்கத்தை அல்லது அவிப்ராயத்தை பற்றி மற்றவரிடத்தில் பேசுகிறோம் அல்லது ஒரு குழுவிலே விவாதிக்கிறோம் என்றால் குறைந்தபட்சம் அந்த தகவலை/ தர்க்கத்தை திறந்த மனதுடன் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் நபர்களை நம் முன்னே பெற்று இருக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் அதனை புரிந்துக்கொள்ளகூடிய அறிவும் ஆற்றலும் உடைய கற்றோரிடத்தில் தான் கூற வேண்டும். அப்படி அல்லாமல் கற்றோர் அல்லாதவரிடத்திலும் இதனை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் எண்ணமும் இல்லாதவரிடம் உரையாடிக்கொண்டு இருப்பது என்பது நம் வீட்டின் முற்றத்தில் உள்ள சாக்கடையில் (தனக்கும் பிறருக்கும் பயன் படக்கூடிய) அமிர்தத்தை கலப்பது போல் ஆகும். அந்த அமிர்தம் வீண் தான் ஆகும். அப்படி கலப்பது நமக்கும் அவப்பெயரை விளைவிக்கும். ஏன் என்றால், நம்மை பார்க்கும் பிறர், ஏன் இப்படிபட்ட கற்றோர் ஒரு மூடரிடம் போய் இதெல்லாம் சொல்லி தன்னுடைய நேரத்தையும் அறிவையும் வீண் செய்துக்கொள்கிறார் என்று ஏசுவார்கள். அது மட்டும் இன்றி நாமும் இந்த நேரம் விண் ஆகிவிட்டதே என்று வருந்துவோம்.
எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.
நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம்.
தகுதியில்லாரிடத்து சிறந்த பொருளைச் சேர்ப்பதை பலரும் கூறியுள்ளனர்.
“புல்லிடை உகுத்த அமுதேயும் போல்” என்பார் கம்பர், மந்தரைப் படலத்தில்.
“கல்வியினாய கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்” என்கிறது பழமொழிப் பாடல். நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமை அறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறு பிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்; அன்றியும், ஒரு மலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற் செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர் செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும் என்கிறது கீழ்வரும் நாலடியார் பாடல்.
பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.
என்பதையும் நினைவில் கொள்க
பரிமேலழகர் உரை
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை
அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.
அறிவதற்கு முயலாத மூடர் முன்னே
அறிவுடையார் பேசாமை பெருமை தரும்
அதை விடுத்து அவர் முன்னர் பேசல் என்றல்
அறிவுடையார் பெருமையெல்லாம் குலைத்துவிடும்
அறிவுடையார் மூடர்கள் முன் பேசல் என்றல்
அங்கணத்தில் அமிழ்தம் அதைக் கொட்டினாற் போல்
அறிவுடையார் அதை அறிவார் பேச மாட்டார்
அதுவே தான் அவர் தமக்குச் சிறப்பளிக்கும்
அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன்
நால்வர் ஐவராகக் கூடிப் பேசும் பழக்கமுள்ளவர்கள் என்றால் நீங்கள் குழுமிப் பேசுவது சபை கூடிப் பேசுவதற்கு நிகரானது. பெருத்த சபை கூடி அங்கே நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு எப்போதும் அமையாது. குடும்பத்திற்குள், நண்பர்களுக்குள், விருந்தாடிச் சென்றவிடத்தில், அலுவலகத்தில், விட்டேத்தியான விடுமுறை தினங்களில் நாம் பலரோடு கூடியிருக்கிறோம். உலகப் பொருள் முதல் சொந்த இடர்வரை அனைத்தைப்பற்றியும் தொட்டுப் பேசிச்செல்வோம். உறவுகளால் நண்பர்களால் அல்லது மற்ற அந்நியர்களால் கூடும் சபையில் நீங்கள் ஒன்றை விவரித்துச் சொல்லும்போது உங்களுக்கே புரிபடாத ஒன்றின்மீது புதிய திறப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட சபையில் நீங்கள் அங்கத்தவர் என்றால் கொடுத்து வைத்தவர்.
என் பள்ளித் தோழன் சந்திரமோகன்பற்றி முன்னர் எழுதிய பதிவுகள் சிலதில் கூறியிருக்கிறேன். எதைப்பற்றியும் அவனிடம் சொல்லலாம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நம் பிரச்சனையின் வேர் என்னவென்று நமக்கே புரியும்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிடுவான். நான் பணிக்குச் செல்லத் தொடங்கிய புதிதில் ‘ஒரு வீடு கட்ட வேணும்டா’ என்று அவனிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன். ‘வீடு கட்டனும்னா என்ன பண்ணனும் தெரியுமா ?’ என்று திருப்பிக் கேட்டான். நான் விழித்தேன். ‘முதல்ல ஒரு இடத்த வாங்கனும். கோவணத்தூண்டு எடமானாலுஞ் சரி. அதை வாங்கிப் போட்டுடனும். எடத்தை வாங்கிப் போட்டுட்டா எப்ப வேணாலும் வீட்டக் கட்டிக்கலாம். சவுரியப்படறபோது ஒவ்வொரு செங்கல்லா அடுக்கி மெதுவா வீட்டக் கட்டு. யாரு கேட்பா ?’ என்றான். அவன் சொன்ன கணத்தில் எனக்கு எல்லாம் விளங்கியது. உடனடியாக மனையொன்றை வாங்கினேன். மற்றவை எல்லாம் தானாய்க் கனிந்தன.
எங்கள் இலக்கிய நண்பர்களுக்குள்ளே ஓர் அருமையான சபை இருக்கிறது. தமிழினி பதிப்பக எழுத்தாளர்கள் அதில் அங்கத்தவர்கள். நண்பர் க.மோகனரங்கன் அக்குழுவில் கட்டாயம். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் இறுதியாக என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம். எதிர்பாராத ஒரு திசையிலிருந்து தம் தரப்பைச் சொல்லுவார். ஆயிரம் பக்கங்களுக்கு எழுதுவது எப்படி இயல்கிறது என்று ஒருமுறை கேட்டேன். ‘யானையை ஒரேயடியா முழுங்கப் பார்த்தா அது எப்பவும் முடியாது. ஆனா, கொஞ்சங் கொஞ்சமா கடிச்சு சாப்பிட்டா சுத்தமாச் சாப்பிட்டுடலாம்’ என்றார். தினமும் முடிகின்ற அளவுக்கு எழுதிக்கொண்டிருப்பதில்தான் அந்தச் சாதனை உருவாகிறது. ‘ஈன்ற நாள்முதல் கன்றுக்குட்டியைத் தோளில் தூக்கிப் பழகிவந்தால் அது வளர வளர ஒரு காளையைத் தோளில் தூக்கும் பலம் பொருந்தியவர் ஆகிவிடுவோம்’ என்பார்.
அதனால்தான் ‘அவையறிதல்’ என்ற அதிகாரத்தையே திருவள்ளுவர் அமைத்திருக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் தரம் மிக முக்கியம். எல்லாரிடமும் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. கேட்கும் செவியும் கேட்கும் மனமும் எல்லாருக்கும் வாய்க்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கேட்பதைப்போல் கேட்பார்கள், நீங்கள் அகன்று சென்றதும் நீங்கள் சொன்னவற்றிலிருந்தே அவதூறு உருவாக்குவார்கள்.
நன்றாக யோசித்துப்பாருங்கள், தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நபரிடம் உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டியதுதான் இன்று நீங்கள் படும் பல பாடுகளுக்குக் காரணம்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
அங்கணம் என்றால் சேறு, பண்ட பாத்திரங்களைக் கழுவுகிற வீட்டுப் பகுதி, சாக்கடை.
உக்க என்றால் ‘பதமழிந்த, கெட்டுப்போன.’
அமிழ்து அற்றால் - அமிழ்தத்தைப் போன்றது.
தம் கணத்தார் - தம்மைப்போன்ற இணையான நிறையறிவு பெற்றிருப்பவர்கள்.
கோட்டி என்பதற்குக் ‘கூடியிருக்கும்போது பேசும் பேச்சு’ என்று பொருள். (அதனால்தான் தனியாகப் பேசுகின்றவனை அவனுக்குக் கோட்டி பிடித்துவிட்டது, கோட்டிக்காரன் என்கிறோம். அதாவது அவன் முன் சபை கூடியிருப்பதைப்போன்ற பிரம்மை தோன்றி பேசிக்கொண்டேயிருக்கிறான்.)
தன்னையொத்த நிறையறிவு இல்லாதவர்கள் முன் பேசுவது சேற்றில் அமிழ்தத்தை ஊற்றி அதன் பதத்தை அழிப்பதைப் போன்றது.