குறள் 715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
என்றவற்றுள்ளும் - என்பதின் உள்
நன்றே - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
முதுவருள் - முதுவர் - மூத்தோர்; அறிவால்உயர்ந்தோர்; புலவர்; மலைச்சாதியார்; மந்திரிகள்.
முந்து - முற்காலம்; ஆதி; முன்பு; வெண்ணாரை.
கிளத்தல் - புலப்படக்கூறுதல்; விதந்துகூறுதல்.
கிளவாச் - புலப்படாத
செறிவு - நெருக்கம்; மிகுதி; கூட்டம்; உறவு; பொந்து; கலப்பு; உள்ளீடு; தன்னடக்கம்; எல்லைகடவாநிலைமை; நெகிழிசையின்மையாகியசெய்யுட்குணம்.
முழுப்பொருள்
கற்றோர் சான்றோர் கூடியுள்ள அவையினில் அவர்கள் நம்மை பேச அனுமதிக்கும் பொழுது பேச வேண்டும். சான்றோர்கள் பேசுவதற்கோ அல்லது நமக்கு வாய்ப்பு கொடுப்பதற்கோ முன்பே முந்தி பேசாமால் இருப்பது சிறந்தவற்றுள் எல்லாம் சிறந்தது. முந்திக்கொண்டு பேசாத இப்பண்பு / இவ்வொழுக்கம் அடக்கம் / பணிவு எனலாம்.
அன்றும், இன்றும், என்றும், அவையொழுக்கிலே அறியப்படவேண்டிய இன்றியமையாத பண்பு இது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.
மு.வரதராசனார் உரை
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
சாலமன் பாப்பையா உரை
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.
No comments:
Post a Comment