குறள் 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
நிலைதளர்ந்தல் - நிலைகுலை-தல் - nilai-kulai- v. intr. id. +.1. To be ruined in circumstances; நிலைமைதவறுதல். 2. To swerve from the path of virtue;நெறிவழுவுதல். 3. To be discouraged; to loseself-command; to be disconcerted, perplexed;தயங்குதல். 4. To lose hold; to be unstrung நிலைமை தளர்தல் வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்துவிழுதலின் (கம்பரா. முதற்போர். 55). 5. To berouted, as an army; சிதறுண்ணுதல்.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றே - அத்தமையானது, அப்படியானால்
வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை.
புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.
ஏற்று - (வி)எழும்பு; உணர்த்து; பாரமேற்று; உள்ளேற்று; கற்பி; புகழ்.
உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்
உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)
முன்னர் - முன்பு; முற்காலத்தில்.
இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு
முழுப்பொருள்
பலதுறைகளில் இருந்து பலதரப்பட்ட நூல்களைக் கேட்டு உணரும் கூர்மதி உடைய பலர் கூடியுள்ள அவையில் ஒருவர் தவறாக பேசினால் அது குற்றாமாகும். அதனால் அவர் சொல்லால் சிறுமைப்படுத்தபடுவார். அது மேலான நெறியிலிருந்து நிலைதவறி சிதறி விழுவதைப் போல ஆகும்.
ஒழுக்க நிலைப்பாட்டில் நின்றவரின் மாண்பு அது பிறழ்ந்தபோது தாழுதல் எவ்வளவு இழிவாகுமோ, அந்த அளவுக்கு இழிவு என்று சொல்லி, அவையறியாப் பேசுதலின் இழிவை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்¢.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.
No comments:
Post a Comment