கல்லாத மேற்கொண் டொழுகல்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை, குறள் 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
குறள் 845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற 
வல்லதூஉம் ஐயம் தரும்.
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
கற்கை - படித்தல், பயிலுதல்
கல்லாத - (முழுமையாக) கற்காத வற்றை (கற்காத நூலினை பற்றி)

மேற்கொண்டு - மேலும்; இனிமேல்.
மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல் பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

மேற்கொண்டு - மேலோட்டமாக அதைப்பற்றி நன்கு தெரிவது போல்  பேசுவது

ஒழுகல் - அவருடைய நடத்தைய பற்றி
ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

கசடற - கசடு + அற

கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு.

அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக.

அற - அறவே 

வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள

வல்லதூஉம் - வலிமையான (நூல்) வற்றின் மீதும்

ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

தரும் - தருதல்

முழுப்பொருள்
ஒருவர் ஒரு பொருளை பற்றி (குறிப்பாக நூல்,  நபர், இடம்) கல்லாமல் பேசினால் அதுவும் அதைப் பற்றி நன்கு தெரிந்தவர்ப் போல் பேசினால், அவருடைய பேச்சு மற்றவருக்கு ஐயம் தரும். அத்தகைய ஐயம் அவருடைய பேச்சு மேல் மட்டும் அல்லாமல், அவர் மேலும், அவர் பேசும் பொருள் (நூல், நபர், இடம்) மீதும் நம்பகமின்மையை உருவாக்கும்.

இங்கே வல்லதூஉம் என்று குறியமைக்கு காரணாம், அந்த நூல் மிக மிக நல்ல நூலாக இருந்தாலும் பேசுவரின் பொருளற்றப் பேச்சினால் அதன் மீது நம்பகமின்மை உருவாகும் என்பதை குறிக்க.

ஆதலால் ஒருவரின் பேச்சை வைத்து ஒரு நூல் (புத்தகம்) மோசம் என்று என்ன வேண்டாம்.

ஆகவே கல்லாத வற்றைப் பற்றி பேசாமல் இருப்பதே சிறந்தது.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
பொய்யா ஒழுக்கத்தின் மேன்மையையும் அதன் சிறப்பையும் அறிவுறுத்துவதும், வலியுறுத்துவதும் இக்கவியின் நோக்கம்.

ஒருவர் ஏதேனும் ஒரு துறையில், செயலில் திறமையில் நன்றாகக் கற்றுத் தேறாமல், அத்துறையில் தேர்ந்த நிபுணர் போலக் காட்டிக் கொண்டு, செயல் புரிந்தால், காலமும் சூழ்நிலையும் அவரது உண்மையறிவை உணர்த்தி விடும். இவர் பாசாங்குக்காரார், பொய்யர் என்ற கருத்து, அவர் மீது மக்களுக்கு உருவாகி விடும். மனிதன் மதிப்பே போய், அவர் மீது இழிவான கருத்தே நிலைத்து விடும். இதனால், அவர் வேறு ஒரு துறையில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தவரானாலும், அதைக் காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவர் ஒரு செயல் திறம் உடைய நிபுணர் என்ற கருத்து எடுபடாது. முன்னர் செய்த பாசாங்கு நடிப்பு இவர் எந்த செயலில் ஈடுபட்டாலும், சந்தேகத்தையே விளைவிக்கும். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் செய்யும் பாசாங்கு, இருப்பனவற்றை மதிப்பிழக்கச் செய்து விடும். ஒருவர் சத்தியம் தவறி நடந்து விட்டால், பொய் சொல்லி அது அனுபவத்தில் வெளியாகிவிட்டால், அவர் ஏதேனும் ஒன்று உண்மைதான் என்று உறுதி செய்வதற்கு நான் சத்தியமாகச் சொல்கிறேன் என்றால், அந்த சத்தியம் என்ற சொல்லுக்கு மதிப்பு ஏது ? உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும், அல்லது காட்டிக் கொள்ளும் பாசாங்கு இழிவைத் தரும் என்று அறிவுறுத்துகிறது இக்குறள்.

ஆத்திச்சூடி
கண்டொன்று சொல்லேல்.
சித்திரம் பேசேல்.
பிழைபடச் சொல்லேல்.
மிகைபடச் சொல்லேல்.
மொழிவது அற மொழி.
ஓரம் சொல்லேல்.
வல்லமை பேசேல்.

பரிமேலழகர் உரை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன் கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.

விளக்கம் 
(வல்லது என ஏழாவது இறுதிக்கண் தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ!' என்பது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல்-புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையுங் கற்றதாகக் காட்டிக்கொண்டு ஒழுகுதல்;கசடு அற வல்லதும் ஐயம் தரும்-அவர் பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும் பிறர்க்கு ஐயுறவை யுண்டு பண்ணும்.

'கசடு' ஐயந்திரிபு குறைவுகள். குறைவாவது , பாம்பைப் பாம்பென்றறிந்தும் உயிருள்ளதா செத்ததா என்றும் , நச்சுப்பாம்பா நற்பாம்பா என்றும், பிறவாறு நிறைவுற அறியாமை. 'ஐயம்' இவர் தேர்ச்சி பெற்றதாகச் சொல்லப்பெறும் துறையறிவும் இத்தகையதுதானோ எனக் கருதுதல். 'வல்லதூஉம்' இன்னிசையளபெடை. உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

மணக்குடவர் உரை
தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது. 

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain