Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பணியுமாம் என்றும் பெருமை

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
[பொருட்பால், குடியியல், பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம், எளிமை, பதுங்குகை

என்றும் - எல்லா காலங்களிலும், என்றைக்கும், எந்நாளும், எப்போதும்.

பெருமை - மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை

சிறுமை  - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

அணி வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

அணிதல் - சூடல்; சாத்துதல் புனைதல் அழகாதல்; அலங்கரித்தல் உடுத்தல்; பூணுதல் பொருந்துதல் படைவகுத்தல்; சூழ்தல்

அணியுமாம் - அலங்காரம் செய்த்துக்கொள்ளும் / பெருமை பேசிக்கொள்ளும் 

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
தன்னை - தன்னைப் பற்றி

வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல்
வியந்து - அதிசயம், பாராட்டு, மேம்பாடு

முழுப்பொருள்
பெருமை என்றென்பது பணியும். சிறுமை என்றென்பது பணியாது தன்னை கண்டு வியக்கும்.

தோல்வியினால் மனமுடைந்து போகிறோம். வெற்றியினால் தலைக்கனம் பிடித்து ஆடுகிறோம். இரண்டுமே பிரச்சினை.வெற்றியின்போது கர்வம் வந்து விட்டால் நாம் மிகவும் அஜாக்கிரதையாக இருந்து விடுவோம். நமக்கு எதிலும், எல்லாவற்றிலும் வெற்றிதான் என்ற நினைப்பு வந்து விடும். அந்த நினைப்பிலேயே எல்லாவற்றையும் கோட்டை விட்டு விடுவோம்.

பணிவுடன் இருந்தால்தான் நாம் மேலும் மேலும் கற்றுக் கொள்ள முடியும். நாம் எல்லாவற்றையும் சாதித்து விட்டோம் என்று நினைத்தால் மேலும் முன்னேறும் வாய்ப்பையும் அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் இழந்து விடுகிறோம். 

எந்த வெற்றியும் நிலையானது இல்லை. நாம் வெற்றிப் பாதையில் மேல் நோக்கிச் செல்லும்போது நாம் சந்திக்கும் மனிதர்களை மதிக்காமல் கர்வத்துடன் சென்று கொண்டிருந்தால், நாளை நாம் கீழே வரும்போது அவர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்! நாம் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டோமோ அப்படித்தான் அவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.

ஒரு முறை கற்றறிந்தப் பலர் இருந்தச் சபையில் “யார் பெரியவர்” என்ற வாக்குவாதம் நடந்தது. அப்போது அங்கு வந்த ஔவையார், “உங்கள் திறமை உங்களுக்குப் பெரியதாகத் தெரியலாம். அதுபோலப் பலர் இருக்கிறார்கள், அவரவர் துறையில். அதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் ஒன்றுமே இல்லையென்று தோன்றும்” என்று சொல்லி ஒரு உதாரணம் சொன்னாராம்.

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது

அருமையான கூடு கட்டும் குருவி வலை பின்னும் சிலந்தி, தேன்கூட்டைக் கட்டும் தேனீ, பெரிய புற்றை உருவாகும் கரையான், இவற்றைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை உள்ளது. யாரும் யாருக்கும் பெரியவரில்லை. என்று எடுத்துரைத்து அப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். 

”வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகத்தில் உண்டு”. நம்மைப் போலப் பலர் பலவிதமான விஷயங்களில் சாதித்திருக்கிறார்கள், சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கடினமான ஒரு குடும்ப சூழ்நிலையில் இருந்தும் நிதி சூழ்நிலையில் இருந்தும் முன்னேறி இருக்கலாம். அதனால் நாம் சாதித்துவிட்டோம் என்ற அகந்தைக்கூடாது. நம்மை விட மோசமான சூழ்நிலைகளில் இருந்தும் ஏழ்மையில் இருந்தும் சாதித்த பலர் இவ்வுலகில் உண்டு.

மேலும், நம் வெற்றிக்கு நாம் மட்டுமல்ல, பலர் காரணமாக இருப்பார்கள். சூழ்நிலைகள் உதவியிருக்கும். இதற்கெல்லாம் நன்றிதான் சொல்ல வேண்டுமே தவிர கர்வம் கொள்ளக் கூடாது. இவ்வுடலும் சக்தியும் நம் தாய் தந்தை தந்தது, அடிப்படை அறிவு இவ்வுலகம் தந்தது. இவற்றைப்பற்றி நிதானமாக யோசித்துப்பார்த்தால் பணிவு தானாக வரும். 

உயர்ந்த மனிதர் எனப்படுவர் யாதெனில் பண்புகள் உடையவர். நிறையாக அன்பு செய்பவர். கனிவான சொற்களிலே பேசுபவர். தாரளமான மனப்பாண்மை கொண்டு ஒருவருக்கு வேண்டியவரை உதவி செய்வார். தன்னைவிட ஞானம் பெற்றவர்கள், கல்வி கற்றவர்கள், தருமம் செய்தவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி தன்னுடைய நிலையுணர்ந்து பணிவாக இருப்பார்கள். அத்தகையவர்கள் பெருமையாக பேசப்படுவார்கள். 

கல்வி பெறும் பொழுதும், ஞானம் பெறும் பொழுதும், தருமம் செய்யும் பொழுதும் ஒருவருக்கு அகந்தை உருவாகும். அத்தகைய அகந்தையை அழிக்க ஒன்றே ஒன்றுதான் தேவை. அதுவே பணிவு. பணிவு என்றால் தாழ்வுணர்ச்சி அல்ல. பெருமிதம் இல்லாத நிலை. குறள் 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்

ஆனால் அகந்தையும் சற்றுவேண்டும் ஏனெனில் இவ்வுலகில் உள்ள சில பதர்கள் / அர்ப்பங்கள் நம்மிடம் வால் ஆட்டும். அத்தகைய அர்ப்பங்களை அகங்காரத்தால் அழித்தேன் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லியதுண்டு.

”எனக்குத் தெரியும்” என்பதற்கும் “எனக்கு மட்டும்தான் தெரியும்” என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. “நான் முடித்துவிட்டேன்/சாதித்துவிட்டேன்” என்பதற்கும் “நான் என்பதனால் முடித்துவிட்டேன்/சாதித்துவிட்டென்” என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

சிறுமையானவர்கள் யாதெனில் திமிராக இருப்பவர்கள். தன் நிலையறியாது உளறி கொண்டு இருப்பவர்கள். திமிர்த் தேங்கிக் கொண்டு இருக்கும் பொழுதும் தன்னை உயர்வாய் நினைத்துக்கொண்டு தன்னை பற்றி கூச்சமே இல்லாமல் பெருமையாய் பேசிக் கொள்வார்கள். இவர்கள் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்றும் தன்னை வியந்து கொள்வர். 

நற்குணம் நற்றறிவு, ஞானம், தருமம் இருக்கும் இடத்தில் என்றும் பணிவு இருந்தால் அது பெருமை. 

பணிவு நம்மை உயரத்திற்குக் கொண்டு செல்லும். உயரச் செல்லச் செல்ல மேலும் மேலும் பணிவு கொள்வார்கள் வெற்றியாளர்கள்.

வாழ்வில் உயர்ந்தவர்கள் பணிவுடன் தாழ்ந்து இருப்பார்கள். வாழ்வில் தாழ்ந்தவர்கள் தங்களை எப்போதும் உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். “உயர உயர தாழும். தாழத் தாழ உயரும்”.

திருவள்ளுவர் “என்றும்” என்று எல்லா காலங்களிலும் பணிவாக இருப்பவர்களுக்கே பெருமை என்று தெளிவுப்படுத்தி உள்ளார். சமய சந்தர்ப்பங்களில் மட்டும் முகஸ்துதி செய்யும் பணிவு பெருமையல்ல என்பதை நாம் இங்கு காணவேண்டும். 

மேலும்: பொன்னியின் செல்வன் - முதல் பாகம் திரைப்படத்தில் புத்த பிக்ஷு தலைவர் “மண்வரை பணிபவனே வானம்வரை எழுவான்” என்று கூறுவார்.  (வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்)

ஆத்திச்சூடி
- உடையது விளம்பேல் (உடையது – தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை) விளம்பேல் – விளம்பரம் செய்யாதே/ தற்பெருமை பேசாதே.)
- வல்லமை பேசேல்.
- மிகைபடச் சொல்லேல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

பணிந்து இனிய சொல்லி நிற்பார்
பண்பு நிறைஅன்பு செய்வார்
கனிந்த மொழி தன்னாலே
கடவுளையும் நண்பு கொள்வார்
விரிந்த மனம் கொண்டுயர்ந்தார்
வேண்டு மட்டும் உதவி நிற்பார்
நிறைந்துணர்ந்த பெரியோர்கள்
நிலையுணர்ந்து பணிந்து நிற்பார்

நிமிர்ந்தெங்கும் திமிர் செய்வார்
நிலையின்றி உளறி நிற்பார்
திமிர்ந்தெங்கும் தனைப் பெரிதாய்த்
தெய்வமென்றே கூறி நிற்பார்
குமையாமல் தனை உயரவாய்க்
கூறி நிற்றல் சிறியர் செயல்
இமையவரே தாம் என்று
இயம்பி நிற்பார் சிறுமையினால்

குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரினிலே மிகப் பெரிய மனிதர் என்றும்
உண்மையொன்றே வாழ்க்கை என்று கொண்ட வீரர்
யாரிடத்தும் எப்போதும் பணிந்து நிற்பார்
எங்கேயும் யார்க்கும் நன்மை செய்தே நிற்பார்
காரிடத்தின் மழை போலே ஏழையர்க்கு
கருணையுடன் எப்போதும் ஈந்தே நிற்பார்
ஊரிடத்தே எங்கேயும் தன் பெயரை
உச்சரிக்க அனுமதிக்க மறுத்தே நிற்பார்

இன்னொருவர் எப்போதும் ஆடி நிற்பார்
எங்கேயும் தான் என்றே கூறி நிற்பார்
மன்னவன் என் அறிவிற்கு ஈடு இணை
மக்களிலே யார் உண்டு என்றே கேட்பார்
தன் நிலையை உணராதார் அய்யோ அய்யோ
தாவிடுவார் கூவிடுவார் ஊர் சிரிக்க
தென்னவராம் வள்ளுவரும் இவருக்கென்றே
திருக்குறளைத் தந்துள்ளார் காண்க நீவீர்

எழுத்தாளர் ஜெயமோகன் பணிதலை பற்றி “காலில் விழுதல்” (சுட்டியை தட்டவும்) என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் (ஒரு வாசகர் கடிதத்தில் எழுதியது) 
மணிவண்ணன் அன்புள்ள மணி
சில வருடங்களுக்கு முன்னர் நான் திரு கருணாநிதி அவர்களின் காலில்
எழுத்தாளர்கள் விழ முற்பட்டதைச்சொல்லி மிகக் கடுமையாக எதிர்வினையாறியிருக்கிறேன். அதிகாரம் பணம் ஆகியவறின் காலில் விழுதல் நம் மரபல்ல. அது கோழைத்தனமாகவே கருதப்படும். ஒருவன் பெறோர் அல்லது பெற்றோரின் இடத்தில் இருக்கும் மூத்தவர், குரு அல்லது குருவின் இடத்தில் இருக்கும் சான்றோர் ஆகியோரின் காலில் மட்டுமே விழவேண்டும். அது ஓர் உயர்ந்த மரபு. இம்மண்ணில் நாம் எத்தனை பெரியவரென்றாலும் நாம் ஒரு பெரிய ஓட்டத்தில் சிறு துளிகளே என்றும் ஒரு பெரிய சங்கிலியின் கண்ணிகளே என்றும் நமக்குணர்த்தும் விஷயம் அது. கல்வி மூலம் ஞானம் மூலம் வரும் மிக தவறான அம்சம் என்றால் அகந்தையே. அகந்தையை வெல்ல ஒரே வழி பணிய வேண்டிய இடத்தில் பணிதலே

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

என்று சொல்கிறார் வள்ளுவர்

ஜெ

அறிவைத் துறக்காதவரை அடிபணிதல் இயல்வதில்லை.

“முனிவரே, முடிவற்ற நெளிவுகொண்ட நாவே சொல்லுக்கு முதல் எதிரி என்றுணர்க! பொருள்கடந்து மொழிகடந்து முடிவிலா ஆழம்வரை செல்வது  நாவென அமைந்த நாகம். அதை பணிக! அவையொன்றில் தலைவணங்குவதனால் எவரும் பெருமையிழப்பதில்லை. பணிந்த அவைகள் வழியாகவே வென்று செல்கின்றது அறிவு” என்றாள்.

பரிமேலழகர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து
விளக்கம் 
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பெருமை என்று பணியும் - பெருமை யுடையோர் எக்காலத்துஞ் செருக்கின்றி அடங்கியொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றச் சிறுமை யுடையோர் எக்காலத்துஞ் தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர்.

மாந்தரின் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'என்றும் ' என்பது இரு தொடருக்கும் பொதுவாய் நின்றது. 'ஆம்' ஈரிடத்தும் அசைநிலை.

மணக்குடவர் உரை
பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா உரை
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

Thirukkural - Management - Values
The difference between a noble person and a mean person is found in the way they conduct themselves, predicts Kural 978.

The great are always humble, and the small
Lost in self-admiration.

A person of nobility is humble, unassuming  and down to earth despite his position and commendable achievements.  A person of low nature is highly conceited, if he thinks high of himself and his achievements. He is a hallmark of vanity.

English Meaning - As I taught a kid - Rajesh
Great people (people who achieved greatness) are humble and bow in front of scholars and greater things than them. Whereas littleness, mundane people exalt themselves in self-admiration and loads itself with praise. Humbleness is essential towards growing oneself. The moment we get arrogant and egoistic our growth stops. At the same time, bowing is in front of scholars. Not in front of average people. Because mundane people are egoistic. We don't have to be humble in front of them.

Questions that I ask to the kid
Whom should great people bow? 
What does mundane people do with praise? 
What should great people not bow to ? 

1 comment:

  1. அருமை திருக்குறள் தொண்டு, நல்ல முறையில் தொகுக்கப் பட்டுள்ளது

    ReplyDelete