Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

 

குறள் 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
[பொருட்பால், குடியியல், பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை.

ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

விடல் -  விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள் 
சாதனைகள் பல புரிந்து பெருமைக்கு உரியவராக இருப்பினும் அதற்காக பெருமிதம் கொள்ளாமல் உள்ளத்தில் களிப்பு கொள்ளாமல் இருப்பார் என்றால் அவரே பெருமைக்கு உரியவர். அதுவே சிறுமை வாய்ந்தவர்கள் எக்காரணமும் இன்றிக்கூட பெருமிதத்தில் திளைத்துக்கொண்டு இருப்பார்கள். 

பெருமிதமும் அகங்காரமும் வேறு வேறு. அகங்காரம் என்றென்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. அகங்காரம் இல்லையேல் உத்வேகத்துடன் செயல்புரிய முடியாது. அகங்காரம் இல்லையேல் அற்பங்களை அழிக்க முடியாது. ஆனால் பெருமிதம் பெருமையில் திளைப்பது. அதனால் ஒரு பயனும் இல்லை. பெருமிதத்தை ஒரு செல்வமாக கருதுவது ஆணவம்.

நம் அன்றாட வாழ்வில் சாதனைப்புரிந்த பலர் உதாரணமாக எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், கி.ராஜநாரயணன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம், ஆகியோர் பெருமிதம் கொள்ளாமல் தங்களது அடுத்த செயல்களைப்பற்றியே சிந்தனை செய்துகொண்டு இருக்கின்றனர். அதனால் தான் அவர்களால் சிறந்த படைப்புகளை கொடுத்துக்கொண்டு இருக்க முடிகிறது. பெருமிதத்திற்கு வழி வகுத்து இருந்தால் அவர்கள் படைப்பூக்கம் குறைந்து தேங்கி இருப்பார்கள். 

அதுவே சிறுமை வாய்ந்தவர்கள் ஒரு சிறுப் புல்லை தூக்கி எறிந்துவிட்டு விளம்பரம் தேடிக்கொள்வர். அது இழுக்காகும். உதாரணமாக சொன்னால் "சுந்தர் பிச்சை" அவர்கள் Google CEO ஆனப் பொழுது இந்தியாவில் தமிழகத்தில் அதற்காக சந்தோஷப்படுவதும் பெருமிதம் கொள்வதும் இயல்புதான். தவறில்லை. ஆனால் அதற்கு முழுக்க முழுக்க இந்தியா தான் காரணம் அவருடைய குலம் எல்லாம் காரணம் என்று மார்த்தட்டிக்கொள்வது சிறுமையாகும். சுந்தர்பிச்சை Google-இல் ஒரு முதன்மை பதவியில் அமர்வதற்கு இந்தியாவில் IIT யில் படித்ததை தாண்டி, அவர் Stanford இலும் Whartonஇலும் மேற்படிப்பை படித்துள்ளார், McKinsey-யில் சிலகாலம் ஆலோசகராக பணிப்புரிந்துள்ளார், Google-இல் அவர் செயல்புரிய கட்டமைப்பு இருந்தது மேலும் அமெரிக்கா போன்ற கட்டமைப்புக் கொண்ட நாடும் ஒரு காரணங்களாகும். அவருடைய பிறப்பும் வளர்ப்புமும் மட்டும் காரணமல்ல. இந்தியாவில் ஏன் அப்படி ஒருவர் உருவாகவில்லை என்று யாரும் யோசிப்பதில்லை. சுந்தர் பிச்சையின் சாதனைகளைக்கண்டு சந்தோஷப் பட்டுக்கொள்ளுங்கள், ஊக்கம் பெருங்கள். ஆனால் அவரை ஒரு குறுகியவட்டத்தில் அடைத்துக்கொண்டும் அவருடைய சாதனைக்கு பிறப்பு காரணம் என்றுக்கூறிக்கொண்டு சிறுமை அடையாதீர்கள். 

ஆதலால் ஒருவருக்கு உண்மையான பெருமை தருவது, அவரது தற்செருக்கற்ற தன்மையாகும். இக்குறளின் கருத்தையே “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற குறளும் வேறுவிதமாக உணர்த்துகிறது. அடக்கம், அதாவது தற்பெருமை இல்லாமல் இருப்பதே, தேவர்களுள் ஒருவராக வைக்கப்படும் பெருமையைத் தருவதுதானே?

ஒப்புமை
“பெருமையோ ராயினும் பெருமை பேசலார்” (கம்ப.கலன் காண்: 16)

“சிற்றில்  பிறந்தமை பெருமிதத்தின் அறிப” (முதுமொழிக் 2:6)

சமீபத்தில் வாசித்த வண்ணதாசனின் கவிதை இக்குறளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்


அப்போதுதான்
அந்தப் பூ உதிர்ந்திருந்தது.
நன்றாகத் தரையில்
குப்புற அமரச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டது.
மறுபடியும் அது கிளையைப்
பார்க்கவில்லை.
இதுவரை மலர்ந்திருந்ததற்கான
எந்தத் தற்பெருமையும்
அதனிடம் இல்லை.
இப்போது உதிர்ந்துவிட்டதற்கான கழிவிரக்கமும்.
தன் ஒரு இதழ் மீது ஏறி
அடுத்த இதழுக்குப் போனபடி இருந்த
எட்டுக்கால் பூச்சியின் மீது
எந்தப் பராதியும் கிடையாது.
அது அப்படியே இருந்தது
ஒரு விடையைச்
சரியாக எழுதிவிட்டது போல.
-- வண்ணதாசன்


மேலும் அஷோக் உரை 

அரண்மனை மீண்ட வேனன் அரியணை அமர்ந்து செங்கோல் தாழாது ஆண்டான். எதிரிகளனைவரையும் கொடுங்காற்று சருகுகளை என வென்று ஒதுக்கினான். மண்ணில் புதைந்துள்ள பொன்னெல்லாம் அவன் கருவூலத்திற்கு வந்தன. மானுடர் எண்ணும் நலன்கள் எல்லாம் அவன் கைநீட்ட அருகமைந்தன. நல்லாட்சியால் பெரும்புகழ் கொண்டான். புகழ் சொல்லில் பற்றி எரிந்தேறும் நெருப்பு. நாள்தோறும் அவன் புகழ் அவனை வந்தடைந்துகொண்டிருந்தது. அவன் கொடைத்திறனும் வில்திறனும் நகர்ப்பெருமையும் குடிப்பெருமையும் அவன் செவிகளில் அறுபடாது ஒலித்து அவையே அவன் எண்ணப்பெருக்கென்றாயின. பிறிதொன்றை எண்ணாது அதிலமர்ந்தான்.



அந்த ஆணவத்தால் அவன் அறிவிழந்தான். வெல்பவன் வெற்றிக்கு நிகராக தெய்வங்களின் மறுதட்டில் வைப்பது அடக்கத்தை. முனிவர்களே, வெற்றியின் நிழல் ஆணவம். வெற்றி நாள் என சுருங்கும், ஆணவம் கணமெனப் பெருகும். கொள்பவை எல்லாம் தன் திறனாலேயே என்று வேனன் எண்ணலாலான். கொடுப்பவை தன் கருணையால் என்று மயங்கினான்.

பரிமேலழகர் உரை
பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல'¢ என்பதாயிற்று. 'விடும'¢ என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.).

மணக்குடவர் உரை
பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.

மு.வரதராசனார் உரை
பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

English Meaning - As I taught a kid - Rajesh
Greatness is not boasting not being pompous of oneself or his/her achievements. Greatness is being humble. Whereas trivialness, mediocrity always wonders or overimagines of themselves or their achievements and gets stagnated.

Being humble helps us to keep our past achievements being and helps to do more in the present and future. Hence, it is always Day 1 for great people. Also, it helps them to keep themselves in the equilibrium.  In a way it is good, if one overthinks during achievements, then potentially one might dwell too much during failure which would be unproductive.

Whereas boasting or over imaging of oneself makes them stagnated. Their past becomes a difficult hurdle for them to cross.

Remember, a flower doesn't pride itself for blossoming.

Questions that I ask to the kid
What is greatness? What does trivialness boast? What does boasting result in?

No comments:

Post a Comment