குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
பொருள்
குடம்பை - கூடு; முட்டை; ஏரி; உடல்
தனித்தல் - ஒன்றியாதல்; நிகரற்றிருத்தல்; உதவியற்றிருத்தல்.
தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி
தனித்து - தனியாக
ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல்.
ஒழிய - தவிர; நீங்க; கெட.
ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']
புள் - பறவைப்பொது:வண்டு; கணந்துட்பறவை; பறவைநிமித்தம்; அவிட்டநாள்; கைவளை; மதுபானம்; கிட்டிப்புள்.
பறந்து - பறத்தல் - பறவை, பஞ்சுமுதலியனவானத்தில்பறத்தல்; வேகமாகஓடுதல்; விரைவுபடுத்தல்; அமைதியற்றுவருந்துதல்; சிதறியொழிதல்.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்
பறந்தற்றே - பறந்து செல்வது போலாம் (கூட்டின் தேவை முடிந்து அதை உடைத்துக்கொண்டு)
உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.
உடம்பொடு - உடம்புடன் ;உடலுடன்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.
உயிரிடை - உயிர் இடத்தில
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
முழுப்பொருள்
இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு என்பது எதைப்போன்றதுத் தெரியுமா?
ஒரு பறவை முட்டையில் இருந்து உருவானாலும் அதனுள் வளர்ந்தாலும் முட்டையின் பாதுகாப்பைப் பெற்றிருந்தாலும் முட்டையுடன் அதனுள்ளே வாழ்நாள் முழுவதும் தங்கிவிடாது. முட்டையின் ஒட்டிற்கு காலம் முழுவதும் நன்றிகொண்டு அடிமையாக இருக்காது. முட்டையில் இருக்கும் பறவை ஏற்றகாலம் வந்த உடன் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும். முட்டை ஓடு தனித்து நிற்கும். அதுப்போலவே உடலுக்குள் இருக்கும் உயிரும் ஒரு தருணத்தில் உடலைவிட்டு பிரிந்து சென்றுவிடும். உடல் தனித்துவிடப்பட்டு இருக்கும். உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் உறவு நிலையில்லாதது.
சரி, இதையேன் திருவள்ளுவர் கூறவேண்டும்? முன்பே இவ்வுலகம் நிலையாமை என்னும் பெருமைகொண்டு உள்ளது என்று கூறிவிட்டாரே. பின்பு யேன் மறுபடியும் கூறவேண்டும்?
ஏனெனில், நம்மில் சிலர் நினைக்கக்கூடும், நான் என் உடலை நன்கு பேணுகிறேன். என் எண்ணங்களை நன்கு பேணுகிறேன், ஆதலால் எனக்கு ஒன்றும் ஆகாது. என் உயிர் எனக்கு விசுவாசமாக இருக்கும் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் நினைக்காதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். முட்டை பறவையை வளர்க்க ஒரு கூடாக இருப்பது அதன் கடமை. அதுப்போலவே, இவ்வுடல் உன்னுள் வாழ அனுமதிப்பது உன் உடம்பின் கடமை. அதனை பேணுவதும் உனது கடமை, பேணவில்லையென்றால அதன் பலனை நீ அனுபவிப்பாய். உடம்பை பேணியதற்காக தனியாக ஒரு பலன் கிடையாது. இறப்பு நிச்சயம்.
“ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்பு கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன்” என்று சென்ற நூற்றாண்டின் இசைப்பாடலாசிரியர் பாபநாசம் சிவன் அவர்களும் இக்குறளின் கருத்தையொட்டிப் பாடியிருக்கிறார்.
சும்மா கூடு மரத்தில் கிடக்க, அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல மக்கள் ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, பேசாமலே இறந்து போய் விடுவார்கள் என்னும் கருத்தைக்கூறும் நாலடியார் பாடல் கீழே.
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. (நாலடி 30)
பழந்தமிழ்ப் பாடல்களில் குடம்பை என்ற சொல் கூடு என்ற பொருளிலேயே வழங்கிவந்திருக்கிறது, பரிமேலழகர் காலத்துக்கு முந்தைய பிங்கலந்த நிகண்டு மட்டுமே குடம்பைக்கு முட்டை என்ற பொருளக்கூறுவதாகவும் தெரிகிறது. இதற்கும் காரணம், குடம் போன்ற உருவில் உயிர்தாங்கும் பை என்பதனால் இருக்கலாமோ? இன்றும் கர்ப்பக்குடம், அல்லது கர்ப்பப்பை என்ற சொற்கள் வழங்கி வருவதை அறிவோம். அகநானூற்றுப்பாடலொன்று உயிர் உடலை விட்டுப்பிரிவதை பறவை கூட்டிலிருந்து பிரிவதாக உருவகம் செய்துள்ளது.
“.........................பராரை
அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புள்ளெனப்
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு
மெய்யிவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கிற் செலீஇயர் இன்உயிரே. – (அகம் 113:23-7)
கூடு என்ற சொல் உடலென, பல சங்க இலக்கியங்களில் வழங்கி வந்திருக்கிறது.
“உடம்பொடுயிரிடை நட்பறி யாதார்” (திருமந் 2148)
”இங்கோர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறு அறி யேன்புலன் போற்றியே” (திருவா.48)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.).
மணக்குடவர் உரை
கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு.வரதராசனார் உரை
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.