நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை குறள் 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்
குறள் 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
நாச் - nā   n. prob. நால்-. 1. Tongue; நாக்கு யாகாவா ராயினு நாகாக்க (குறள், 127). 2. Word;வார்த்தை. நம்பிநாவினு ளுலகமெல்லா நடக்கும்(சீவக. 316). 3. Middle, centre; நடு (திவா.)4. Index of a balance; துலைநா துலைநா வன்ன

செற்று - செற்று-தல் - ceṟṟu-   5 v. tr. 1. To kill;கொல்லுதல். (பிங். MSS.) 2. To destroy; அழித்தல் 3. To cut, chisel; செதுக்குதல் (ஈடு, 9, 9,1.) 4. To set, as a jewel; பதித்தல் மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை 5).--intr. 1. Togather in crowds; செறிதல் பெருங்களிறுகள்செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 2. Tosink deep; அழுந்துதல் உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8).  

விக்குள் - vikkuḷ   n. id. [K. bikkul.]Hiccup; விக்கல்.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

வாராமுன் - வருவதற்கு முன்பாக

நல் - நல்ல; வறுமை; nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

நல்வினை - அறச்செயல்; முற்பிறப்பிற்செய்தபுண்ணியச்செயல்.

மேற் - மேற் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்யப் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள்
ஒருவரின் நாக்கு அடைத்து விக்கல் வந்து இறக்கும் முன்னெ அவர் நல்வினையான அறம்/அறங்கள் முன்னெடுத்து செய்ய வேண்டும். ஏனெனில் இவ்வாழ்வு, இவ்வாழ்வில் உயிர் என்பது நிலையில்லாதது. ஒருவர் எந்நேரத்திலும் இறக்கக் கூடும். யாரும் இன்னும் 10 ஆண்டு காலம் அல்லது 20 ஆண்டு காலம் அல்லது 10 மாதம் 5 மாதம் உயிருடன் இருப்பேன் என்று சொல்லமுடியாது. எப்படிப் பிறப்பை முடிவு செய்யமுடியாதோ அதுப்போல் இறப்பையும் முடிவு செய்யமுடியாது. ஆதலால் இறப்பிற்கு முன்னே நல்லது செய். ஆதலால் இப்பொழுதே அறம் செய். நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடாதே.

எனக்கு இன்னொரு அர்த்தமும் தோன்றுகிறது. விக்கல் என்பது தினமும் வருவது அன்று. அதுப்போல் நல்ல எண்ணங்களும் சிலசமயம் தான் வரும். அது உடனே வேறு ஒரு காரணத்தால் நசுக்கப்படவோ அல்லது பின்பு செய்துக்கொள்ளலாம் என்றோ மாறக்கூடும். அதற்கு வாய்ப்புகள் உண்டு. அதாவது காலமும் சூழலும் நிலையில்லாதது. அதுமட்டும் இன்றி நமது மனமும் மாறக்கூடும். நம்மது எண்ணங்களும் நிலையில்லாதது. ஆதலால் தற்பொழுது இருக்கும் காலத்திலும் சூழலிலும் தன்னால் இயன்ற (அல்லது அதற்கு சற்று மீறியாவது) அளவு அறத்தை/நல்வினையை ஒருவர் முனைப்புடன் எடுத்து செய்துமுடிக்கவேண்டும். நல்லவற்றைத் தள்ளிப்போடக்கூடாது. 

வளையாபதிப் பாடலொன்று: 
இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல 
வளமையும் அஃதே போல் வைகலும் துன்பவெள்ளம் 
உளவென நினையாதே செல்கதிக் கென்றும் என்றும் 
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்” 
என்கிறது. படிக்கவும் பொருள் விளங்கிக்கொள்ளவும் எளிதானது. 

பக்தி இலக்கியங்களும் இறைவனை நினைந்து அவன் பதம் அடைய வலியுறுத்துகின்றன நிலையாமையைச் சொல்லி. சம்பந்தர் தேவாரம்,

கனைகொள் இருமல் சூலைநோய் .....
எய்திவந்து நலியாமுன்… கோவலூர் 
வீரட்டானம் சேர்துமே…” என்கிறது. (சம்பந்தர்.கோவலூர் 4)

சுந்தரர் தம்முடைய புறம்பயம் (3) தேவாரத்தில், 
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீ யுரையால் தளர்ந்து 
அறம்புரிந்து நினைப்ப தாண்மை அரிதுகாண்” என்பார்.

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான் திரு வேங்கடம்” (திருவாய் 3.3:10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இறப்பதற்குள் நற்செயல்களைச் செய்துவிடு.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain