உறங்கு வதுபோலுஞ் சாக்காடு

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை குறள் 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
உறங்குவது - உறங்குதல் - தூங்குதல்; ஒடுங்குதல்; சோர்தல்; தங்குதல்; மயக்கமுறுதல்

போலும் - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

சாக்காடு - இறப்பு; கெடுதி.

உறங்கி  உறங்குதல் - தூங்குதல்; ஒடுங்குதல்; சோர்தல்; தங்குதல்; மயக்கமுறுதல்

விழிப்பது -விழித்தல் - கண்திறத்தல்; தூக்கம்தெளிதல்; எச்சரிக்கையாயிருத்தல்; கவனித்துநோக்குதல்; மருண்டுநோக்குதல்; ஒளிர்தல்; தெளிவாதல்; உயிர்வாழ்தல்.

போலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

முழுப்பொருள்
தூங்குவது போன்றது மரணம் என்றென்பது. உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. ஒவ்வொருநாளும் உறங்கி விழித்தால் அது ஒவ்வொருநாளும் பிறப்பு கொள்வது போன்றது தான். ஒவ்வொருநாளும் உறங்கச்செல்வதும் மரணம் போன்றது. வாழ்வில் பிறப்பு என்பது முடிந்துபோன்ற ஒன்று. ஆனால் மரணம் என்பது எதிர்காலம். அது எப்போது வரும் எப்படி வரும் என்று யாராலும் முடிவு செய்ய முடியாது. ஆதலால் வாழ்வென்பது நிலையில்லாதது.

ஒவ்வொருநாளும் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன எத்தனையொ உயிர்கள் இறக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில உயிர்கள் தான் மற்ற உயிர்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து இறக்கின்றன. அதுவே வாழ்க்கை. உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் வாழ்வு வாழ்வல்ல.

விழித்திருக்கும் நிலையே பிறப்பெனப்படுவது. விழித்திருத்தல் என்றால் செயலாற்றிக்கொண்டு இருப்பது. விழிப்பு என்றால்  சிறந்து விளங்குகை.

உறங்குதல் என்றால் சோர்ந்து இருத்தல், மயக்கத்தில் இருத்தல், செயலற்று இருத்தல்.

ஆதலால் ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் ஏதோ ஒரு நற்செயலில் சோர்வில்லாமல் அயற்சியடையாமல் செயலாற்றிக்கொண்டு அதில் சிறந்து விளங்குகிறார். அதுவே வாழ்விலே எப்பொழுதும் சோர்வுடன் பயனற்றவற்றை செய்து கொண்டு இருப்பவர் உறங்கிக்கொண்டு இருக்கிறார் என்று பொருள். அதாவது மரணத்தில் இருக்கிறார் என்று பொருள்.

ஆதலால் சோர்வுடன் இருப்பது அல்லது செயலாற்றாமல் இருப்பது மரணத்தில் இருப்பது போன்றதாகும். சோர்வில் இருந்து நீங்கி செயலாற்றிக்கொண்டு இருப்பது விழித்திருப்பது போன்றதாகும்.

இந்த கருத்தையொட்டிய பாடல்களை, நாலடியார், மணிமேகலை, சீவகசிந்தாமணி இவற்றில் பார்க்கலாம். 
“விழித்திமைக்கும் மாத்திரையன்றோ ஒருவன் 
அழித்துப் பிறக்கும் பிறப்பு” (நாலடி 302) என்கிறது நாலடியார். 

சுந்தரர் தேவாரம், 
“உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி” (சுந்தரர்.நெல்வாயில்.4) என்கிறது. 

“பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் 
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்” என்கிறது மணிமேகலை (16:86-7).

கட்டுயில் அனந்தர் போலக் கதிகளுள் தோன்று மாறும்
விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறும்” (சீவக.1097)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது

சாலமன் பாப்பையா உரை
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை 
பிறப்புக்கும் இறப்புக்கும் ஒத்திகையாக உறங்கி எழுகிறோம்.


உச்சகட்ட கவிமொழிகள் அனைத்துமே ஆப்தவாக்கியங்கள் அல்லது தியானமந்திரங்களும் கூட. அவற்றை ஒரு வாசகன் தனக்குள் சொல்லிக்கொண்டே இருப்பானாகில் அவன் மனதின் ஆழ்தளங்கள் திறந்துகொண்டே செல்வதைக் காண்பான். சுருதிகள் என்னும் நூல்களில் உள்ள  மொழிச்சேர்க்கைகளே அவ்வாறு ஆப்த வாக்கியங்களாக அல்லது தியான மந்திரங்களாக ஆகும் வல்லமை கொண்டவை. திருக்குறள் அத்தகைய ஒரு நூலாக எப்போதும் கருதப்பட்டுவந்திருக்கிறது. அதன் சொற்சேர்க்கைகளை அவ்வாறு உபதேசித்த ஞானாசிரியர்களை நான் அறிவேன்.

குறள் அத்தகைய உச்சகட்ட வெளிப்பாடாக ஆகும் பல வரிகளை நமக்களிக்கிறது. அவை சிலசமயம் பொருள் என்ற வகையில் எளிமையான உடனடித்தளம் மட்டுமே கொண்டவை. நாவில் ஒரு சொற்சேர்க்கையாகக் கிடந்து தியானிக்கும்தோறும்  வளர்பவை. உதாரணம்
‘துஞ்சுவது போலும் சாக்காடு’
தூங்குவதே மரணம் என இச்சொல்லாட்சியை விளக்கலாம். ஆனால் ‘தூங்குவது போன்றது மரணம்’ ‘தூங்குவதுதான் மரணம் போலும்’ ‘தூக்கமும் ஒரு மரணம்’ என்று இந்த வரியின் அர்த்த தளங்கள் பெருகும்.

பலகுறள்கள் தூய அனுபவத்தின் தளத்திலிருந்து கவித்துவத்துடன் மேலெழுகின்றன.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain