Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உற்றநோய் நீக்கி

குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல் (உற்றதெல்லாஞ் சொன்னபின் (கம்பரா. கைகேசி.5)); உண்மை (உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும்.); இடுக்கண்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

உற்றநோய் நீக்கி  - முன்பு வந்த துன்பங்களை நீக்கி

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅமை - பின்பு துன்பங்கல் அமையு(யாது)

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

கா-த்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

முற்காக்கும் - முன்பே காக்கும்

பெற்றி - இயல்பு; தன்மை; குணம்; விதம்; செயல்முறை; பெருமை; நிகழ்ச்சி; பேறு; நோன்பு.
பெற்றிமை - பெருமை; செய்யவேண்டும்முறை; சாதி.

பெற்றியார்ப் - அத்தன்மை உடையவர்கள் - சான்றோர்கள் / மேன்மக்கள் / பெரியார்

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணிக் - நன்குமதி, கவனி, கருது, குறி

கொளல் - அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
நம் வாழ்வில் பல துன்பங்கள் நாம் செய்த வினைகளால் (செயல்களால்) நமக்கு நிகழும். அதுவே உற்றநோய் ஆகும். அத்தகைய துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட நமக்கு மாற்று வழி சொல்லும் சிந்தனையை உடையவாராக ஒருவரை துணைக்கொள்ள வேண்டும்.

அதுப்போல நமக்கு வருங்காலத்தில் நம்மை நற்பாதையில் அதாவது துன்பங்கள் நேராத பாதையில் நம்மை வழி நடத்த ஒருவரை துணைக்கொள்ள வேண்டும். ஆதலால் தான் உறாஅமை முற்காக்கும் என்று சொல்லபட்டது.

நம்மை நற்வழியில் நடத்த தன்மைகளைக் கொண்ட மேன்மக்களை சான்றோர்களை துணை கொள்ள வேண்டும். அவர்களைப் விரும்பி, பேணி அவர்களிடம் உறவு / நட்புக் கொள்ள வேண்டும். அத்தகைய மேன்மக்களிடம் துணை கொள்ளாது நமக்கு ஆயிரம் தீமைகளை நமக்கு நாமே செய்துக்கொள்வது ஆகும்.

ஆக அத்தகைய ஆற்றலையும் அனுபவத்தையும் உடைய பெரியோர்களை, மேன்மக்களை, சான்றோர்களை துணைக்கொள்ளவது நமக்கு நலம் பயக்கும் வலிமை தரும் என்று உணர்வீராக.

நமக்கு வாழ்நாள் எல்லாம் ஒரு குரு இன்றியமையாதவர். கல்விக்கூடங்களுக்கு பிறகு குரு தேவையில்லை என்ற மனப்பான்மை தவறானது என்பது இக்குறளில் இருந்து நமக்கு நன்கு விளங்குகிறது.

மேலும்: அஷோக்

ஒப்புமை
“தன்னை அடைந்தார் வினை தீர்ப்ப தன்றோ
தலையா யவர்தங்கட னாவதுதான்” (அப்பர்.அதிகை.4)

“பெரியார்த் துணைக்கொள்” (ஆத்திச்சூடி)

ஆத்திச்சூடி
சான்றோர் இனத்து இரு
மேன்மக்கள் சொல் கேள்
பெரியாரைத் துணைக் கொள்
தக்கோன் எனத் திரி
சேரிடம் அறிந்து சேர்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

குறள்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கை விடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுளெல்லாம் தலை

பரிமேலழகர் உரை
உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாமை முற்காக்கும் பெற்றியார் . பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக் கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. 

விளக்கம் 
(தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று, தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாமபேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறித்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றான் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம்; ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்ரின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம், கொள்ளுமாறும் கூறப்பட்டன.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உற்ற நோய் நீக்கி -தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; உறாமை முன் காக்கும் பெற்றியார்- அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; பேணிக் கொளல் -அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.

தெய்வத்தால் வருந்துன்பங்கள் மழையின்மை, மிகுமழை, கடுங்காற்று, கொள்ளைநோய், நிலநடுக்கம், கடல்கோள் முதலியன . அவை இறைவனை நோக்கிச்செய்யும் விழாக்களாலும் வேண்டுதல் களாலும் நோன்பினாலும் நீக்கப்படும். மக்களால் வருந்துன்பங்கள் பகைவர் செய்யும் போர், கள்வர் செய்யுங்களவு, கொள்ளைக்காரர் செய்யுங் கொள்ளையடிப்பும் ஆறலைத்தலும், சுற்றத்தாரும் வினைசெய்வாரும் செய்யும் களவுங் கொடுமையும் முதலியன. அவை இன் சொல் (சாமம்) பிரிவினை (பேதம்) கொடை தண்டம் ஆகிய நால்வகை ஆம்புடையுள் (உபாயத்துள் ) ஏற்ற ஒன்றால் அல்லது பலவற்றால் நீக்கப்படும். முற்காத்தலாவது, தெய்வத்தால் வருபவற்றைத் தீக்குறிகளால் அறிந்து விழவு நோன்பு முதலிய சமந்தியால் (சாந்தியால்) தடுத்தலும், மக்களால் வருபவற்றை அவர் குணம், குறிப்பு (இங்கிதம்), தோற்றம் (ஆகாரம்), செயல், சொல் முதலிய வற்றாலறிந்து நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றால் தடுத்தலும், ஆம். குறிப்பு உறுப்பின் தொழில்; தோற்றம் உடம்பின் பார்வை வேறுபாடு.மகிழ்வன செய்தலாவது, முற்றூட்டும் பட்டமுமளித்தலும் கண்ணியமாக நடத்துதலும் கூறிய அறிவுரையைக் கடைப் பிடித்தலுமாம்.

"கடவுளரையுந் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்தி" என்று சிறுதெய்வ வணக்கத்தையும், ஆகவே, "புரோகிதரையும்-----------கூறியவாறாயிற்று " . என்று பிராமணப்பூசாரியரையும், பரிமேலழகர் இங்குக் குறித்திருப்பது தவறாம்.

தானம் என்னுஞ் சொல் தமிழேயாயினும், அது அறப்புறங்கட்குக் கொடுப்பதையே சிறப்பாய்க் குறித்தலின் இங்கு விலக்கப்பட்டது. 'உறாஅமை' இசைநிறையளபெடை.

மணக்குடவர் உரை
அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று. 

மு.வரதராசனார் உரை
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

No comments:

Post a Comment