குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
நாள் தோறும் - ஒவ்வொரு நாளும்
நாடுக - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.
மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
செய்வான் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
கோடாமைக் - நடுவுநிலைமை; நீதி; மத்தியநிலைமை; நியாயம்; சைவத்திற்குயோகபூசைவகை
கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள்.
கோடாது - வளையாது
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
நாள் தோறும் தன் கடமைகளை ஆராய்ந்து தன் செயல்களை நடுவுநிலைமை/ நீதி தவறாது ஒரு அரசன் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு அரசன் செய்வான் ஆயின் அந்நாட்டு மக்களும் அவர்கள் பணிகளை சரியாக செய்வர். அரசன் தனது நீதியில் இருந்து தனது கடமையில் வளையவில்லையென்றால்/தவறவில்லை என்றால், மக்களும் அவர்களது கடமையில் இருந்து வளையமாட்டார்கள்/ தவறமாட்டார்கள். ஒரு அரசன் அவன் நாட்டிற்கு தன் செயல்களில் நேர்மையாக முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ”அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்”, ”அரசன் எப்படியோ அப்படியே குடிகள்” ஆகிய பழமொழிகளையும் நினைவில் கொள்க.
”நாடோறும் நாடுக” - ஒரு மன்னன் நாள்தோறும் மக்களை நாடி மக்களுக்கான செயல்களை செய்யவேண்டும். பிறர் சொல்லவேண்டும் என்றில்லாது தன்முனைப்புடன் செய்பவனே தலைவன் அவனே அரசனாவன். எல்லாவற்றையும் தனது பொறுப்பு என்று எடுத்து செயல்களைப் புரிபவன். அத்தகையவன் கீழ் பணிப்புரியும் அமைச்சர்களும் அத்தகைய தலைவனின் கீழ் இருக்கும் மக்களும் வினைசெய்வார்கள் நடுநிலைதவறமாட்டார்கள்.
ஏன் தலைவர்கள் தன்முனைப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் அறிவுடையார் ஆவது அறிவார். “குறள் 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்று முன்னரும் பார்த்தோம்.
ஏன் நாள்தோறும் செய்யவேண்டும்? ஏனெனில் ”குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” என்பதே வள்ளுவன் வாக்கும். ஒரு மன்னவன்/தலைவன் தினம் தன் கடமையை ஆற்றினால் அவனை அது தேவையான காலத்தில் காக்கும்.
“குடி உயரக் கோன் உயரும்” என்ற வாக்கினை இங்கு, கீழே இருக்கும் பணிபுரிவர்களின் நேர்மையிலே பொருத்திப் பார்க்கலாம்.
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர். அரசனும் காக்கும் தொழிலாகிய வினையைச் செய்கிறவன்தானே! அவனே நேர்மையாயிருந்தால், அவனுடைய குடிமக்களும் அவரவர் ஆற்றும் வினைகளிலே நேர்மையாகத்தான் இருப்பர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.
(அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
English Meaning - As I taught a kid - Rajesh
A king or a leader should be the one who goes and does work everyday on his own without any instructions from others. Under a king/leader who has such a self-leadership in doing things ministers/sub-ordinates under him as well as the people under him will do things prompty and effectively. That country will flourish and prosper. People in that country will not do things against truth.
Questions that I ask to the kid
What should a king do every day? What is the result?