குறள் 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
பொருள்
பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறந்தாரின் - துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்
தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை
உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்
இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்
இறந்தார் - வாழ்வை கடந்தவன்; மரணம் அடைந்தவன்
வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉரு
இன்னாச் - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
நோற்றல் - பொறுத்தல்; விரதமிருத்தல்; தவஞ்செய்தல்
நோற்கிற்பவர் - பொறுத்துக் கொள்பவர்
முழுப்பொருள்
மெய்யான துறந்தவர்கள் மனதில் மாசு இல்லாத தூய்மை உடையவர்கள். அவர்கள் துறவறத்தில் இருப்பவர்கள்.
இல்லறத்தில் இருப்பவரும் துறந்தவர்களின் தூய்மையை உடையவர்களாக கருதப்படுவர் ஆனால் எப்பொழுது தெரியுமா? பிறர் நம்மிடம் நம்மை இழிவு படுத்தும் நெறி கடந்த சொற்களை நம்மை வருத்தும் தீய சொற்களை பயன்படுத்தினால் அதனை பொறுத்துக்கொண்டு போக வேண்டும். பதிலுக்கு பேசினால் நாமும் அவர் அளவு கீழே இறங்கி விடுவோம். நமது சமன்நிலையை குலைக்கவேண்டும் என்றே பிறர் நம்மை இழிவான சொற்களால் தாக்குகிறார். அதற்கு இரையாக/பலியாக கூடாது.
செயல்களை விட சொற்கள் நம்மை அதிகம் பாதிக்கும் அது பல தடவை நமது மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆதலால் நமக்கு அதிகம் கோபம் வரும். நமது சினத்தை தூண்டுவதே பிறரின் குறிக்கோள். ஆதலால் அதற்கு செவிசாய்க்காமல் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
செயல்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பது கடினம். ஆனால் சொற்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பது அதனினும் கடினம். அதனால் தான் துறவிகளின் தூய்மைக்கு ஈடாக பொறுத்தலை கூறுகிறார் திருவள்ளுவர்.
பொறாமை, ஆசை இவற்றை வென்ற முனிவர்களும், இருடிகளும் கூட வெகுளி (கோபம்), இன்னா சொல் இவற்றைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். துர்வாசர் என்னும் முனிவரின் வெகுளியானது நிறைய இடங்களில் புராணங்களில் சொல்லப்படுகிற செய்தி. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று பத்தினியொருத்தி கேட்ட கதையும் அறிந்திருக்கிறோம்.
நாலடியார் தனது “சினமின்மை” அதிகாரத்தில் “ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை” என்கிறது. பகைவர்களைத் தண்டிக்கும் ஆற்றலும் அறிவும் வலியும் உடையவன், தனது சினத்தைக் காட்டாமல் பொறுமையாக இருக்கின்றான் என்றால் அவனுடைய பொறுமையே போற்றத்தக்கது. மற்றொரு நாலடியாரில் (64) “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளா விழுமியோர்” என்கிறது. கல்வி, கேள்வி, அறிவால் தமக்குச் இணையில்லாத கீழோர் தம்மை இழிந்து கூறிவிட்டார்களே என்று, மேலோர் அவரிடத்து கொதித்துச் சினம் கொள்ளார்.
இக்குறளுக்கு இணையாக மற்றொரு பாடல், நாலடியாரில் (66) இவ்வாறு சொல்கிறது: “கல்லெறிந்தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங்காணப் பொறுத்துய்ப்பர்”. கல்லால் அடிப்பதைப் போலத் தீயவர்கள் கடுஞ்சொல் பேசினாலும் கற்றவர்கள் மற்றவர் கண்டு பாராட்டும்படி அதைத் தாங்கிக்கொள்வர்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.).
மணக்குடவர் உரை
மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.
மு.வரதராசனார் உரை
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.