Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்

குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.

இன்னாச்  - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

நான்கும் - ஆகிய நான்கும் 

இழுக்காறு - தீநெறி, தீயொழுக்கம்

இழுக்கா - இழக்காமல் 

இயன்றது - இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

முழுப்பொருள்
1) அழுக்காறு - பிறர் பொருள்களின் மீதும் ஆக்கங்களின் மீதும் வளர்ச்சியின் மீதும் பொறாமை
2) அவா - ஆசை, பேராசை; நம் புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் / விருப்பங்களில் மூழ்குதல்
3) வெகுளி - கோபம், பிறர் மீது வெறுப்பு 
4) இன்னாச்சொல் - கீழ்மையான சொற்கள், துன்பத்தை தரும் சொற்கள், தீங்கு விளைவிக்கும் சொற்கள்; பிறர் மனதை காயப்படுத்தும் சொற்கள் 

மேற்சொன்ன நான்கும் தீயொழுக்கத்தை விளைவிக்கும். ஆதலால் இவை எதையும் பின்பற்றாமல் இவற்றை விலக்கிவிட்டு நாம் நமது வாழ்வை நடத்திச்சென்றால் அது நம்மை அறவழியில் கொண்டுசெல்லும். இவற்றை விலக்குவதும் அறமாகும் (ஒரு விதத்தில் கடமையாகும்). 

ஒப்புமை
“அழுக்காறு அவா முதலியவற்றைக் கைவிட்டு அறநூல்
முதலியவற்றை அறிந்து” (சிலப் 10:16, அடியார்)
“பொய்குறளை வௌவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்” (ஆசாரக் 38)
“அச்சம் வெகுளி அவாஅழுக்கா றிங்ஙனே மாண்டன்” (பொன்வண்ணத் 99)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

Thirukkural - Management - Thoughts
Valluvar recommends through Kural 35 to keep away from the four vices to become a virtuous person. The vices are:
1) Envy — longing for things that belong to others 2) Greed — to have more, 3) Anger, and 4) Abusive words.

Envy, greed, wrath and harsh words- 
These four avoided is virtue.

A person cannot be virtuous if he desires for things that belong to others. Remember the philosophical question. ‘How much is enough?' There is no ceiling for our desires.  Whatever the other person has is more attractive. We always long for more. Longing for a thing that someone possesses leads to frustrations.

Greed makes a person lose his virtuous quality. We cannot be content when we are greedy. When greed stops, grace begins. When greed stops, peace begins. A person, after giving up greed, becomes peaceful with himself. Many people  have lost their names, popularity, and recognition just because of their greed.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

குறள் 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம்.

அவித்தான் - அவித்தல் - வேகச்செய்தல்; அணைத்துவிடுதல்; அடக்குதல்; கெடுத்தல் துடைத்தல் நீக்குதல்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

அகல் - விளக்குத்தகழி; சட்டி , விரிவு, ஓர்அளவு; வெள்வேல்மரம்.
அகல் - akal   n. அகல்-. 1. Inland townor village; உள்ளூர். (பொதி. நி.) 2. The interioror inner part of a town or village; ஊரின் உட்புறம். (பொதி. நி.) 3. Extent of space; பரப்பு.(W.) 4. Country, province; நாடு. (பொதி. நி.)5. Pudendum muliebre; அல்குல். (W.)

விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

விசும்புளார் - தேவலோகத்தின்

கோமான் - அரசன்; பெருமையிற்சிறந்தோன்; மூத்தோன்; குரு; பன்றி.

இந்திரனே - இந்திரன் -

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஐந்து புலன்களையும் அடக்கி வலிமையை பெற்ற துறவிகளை கண்டால் பரந்த வானுலகத்தின் தலைவனான இந்திரனே அவர்களை வணங்குவான். ஆதலால் புலன்களை நீத்தவர்களுக்கு அப்படிப்பட்ட பெருமையும் சிறப்பும் மேலுலகிலேயே உண்டு என்பதை அறியலாம். அதனால் தான் அவர்களுக்கு இவ்வுலகில் கடந்தகாலங்கிலும் இக்காலங்களிலும் அரசர்களும் மதிக்கும் இடத்தில் வைத்து அவர்களிடம் ஆலோசித்தனர்.

இந்திரன் சில துறவிகளை மதிக்காததால் சாபம் பெற்றவன். இந்திரனுக்கே சாபம் கொடுக்கும் ஆற்றல் துறவிகளுக்கு இருந்தது. அதனால் தான் துறவிகளின் வலிமையை கூற இந்திரனை சான்றாக திருவள்ளுவர் இங்கு  கூறுகிறார்.

ஐராவத்தில் இந்திரன் (Bantey Srai, Angkor area, Siam Reap, Cambodia)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”ஐந்து புலங்களைக் கட்டவர் போற்ற” (சம்பந்தர்.திருப்புகலியும் திருவீழிமிழலையும் 8)

நாகபாப்பாக்கள் பற்றி ஜெயமோகன் (நீர்க்கூடல்நகர் – 5 இல் இருந்து. சுட்டியை தட்டவும்)
ஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள்.  ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.

நாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம்  சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.

நாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைப்பார்கள்.  கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.

நாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.

இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.

இன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை  அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.

நாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.

குளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.

நாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.

அவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.

என்ன அடைந்தோம்? அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்

பரிமேலழகர் உரை
ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

மணக்குடவர் உரை
நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

மு.வரதராசனார் உரை
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
விசும்பின் - விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

துளி  - திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல்.

வீழின்  - வீழ்தல் -  ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

அல்லால் - மற்றபட்டி, இல்லாமல்

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஆங்கே - அங்கே

பசும்புல்  - பச்சைப்புல்; விளைபயிர்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

காண்பு - காட்சி, காணுதல்.

அரிது - aritu   s. Difficulty, unattainable ness, rareness, preciousness, அருமை.

முழுப்பொருள்
வானத்தில் இருந்து மேகங்களின் துளிகள் மழையாக பூமியின் நிலத்தில் விழாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலத்தில் பசும்புல்கள் கூட முளைக்காது. ஆதலால் நாம் அவற்றை நிலத்தின் மேல் பார்ப்பது அரிதாகிவிடும். பசும்புல்லிற்கு தேவையான தண்ணீர் சிறிதளவு தான் வேண்டும். அது நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சில அங்குலம் இருந்தால் கூட போதும். அப்படிப்பட்ட பசும்புல்லிற்கு தேவையான நீரே கிடைக்கவில்லையென்றால் நிலத்தடி நீரினை நம்பியுள்ள மரங்கள் செடிகள் எல்லாம் எப்படி உயிர்வாழும்? குளங்களிலும் ஆறுகளிலும் எப்படி தண்ணீர் நிரம்பும். அதனை நம்பியுள்ள விலங்குகள் எப்படி தண்ணீர் பருகும் ? 

இந்த பசும்புல்களும் செடிகளும் மரங்களும் நீர்நிலைகளும் இல்லையென்றால் விலங்குகள் எப்படி நிழலார வாழும், உணவு உட்கொள்ளும்? பறவைகள் மரத்தில் காய்க்கும் பழங்களையம் விலங்குகளின் ஊனையும் நம்புகின்றன. அவை எப்படி உயிர்வாழும்? செடிகளையும் விலங்குகளின் மாமிசத்தையும் உணவுக்காக நம்பும் மனிதர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் ?

ஆதலால் எல்லா ஜீவராசிகளும் மழையை நம்பியே உள்ளன. மழை அரிதானால் பசும்புல் உட்பட எல்லா ஜீவராசிகளும் அரிதாகும். 

1) ”இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ”

2) மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்.....

3) மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ

ஒப்புமை
”பயிர் காட்டும் புயல்” (சம்பந்தர்.திருவெண்காடு 1)
“பைங்கூழ்க்கு வானே யன்ன” (பெரிய.சண்டேச 24)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறத்தாறிது கட்டுரையில் இருந்து
குலஅறம் என்பது அடுத்த கட்டத்துக்கு போகும் தருணங்களை நான் தரிசித்திருக்கிறேன். இரண்டு நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அய்யப்பண்ணன் வேளிமலை அடிவாரத்தில் விவசாயம் செய்வதற்காக போவார். சாலையிலிருந்து அங்கு போவதற்கு கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் வரை இருக்கும். தண்ணீர் தவிர அங்கு வேறு எதுவும் கிடைக்காது. தூக்கு பாத்திரத்தில் சோறோடு போவார். அங்கு வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி வேலை பார்ப்பார். சோறுதான் இருக்கிறதே, சாப்பிடலாம் என்று எண்ணி சோறு இருப்பதனாலேயே பசியை ஒத்திப்போடும் மனநிலை வரும். விவசாய வேலை அப்படிப்பட்டது முடிக்கவே தோன்றாது. சாப்பிடலாம் சாப்பிடலாம் என்று ஒத்திப்போட்டு பசி ஏறிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட கொலை வெறி பசி அடையும்வரை விட்டுவிட்டார். பசி தாங்க முடியாமல் ஆனபின் மண்வெட்டியை வைத்துவிட்டு வந்தார்.

ஒருநாய் அவருடைய தூக்குபோணியில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவர் மண்வெட்டியை காலால் மிதித்தபடி குச்சியை எடுத்தார் அடிப்பதற்கு. ஆனால் மனம் நெகிழ்ந்துவிட்டது. அவர் என்னிடம் சொன்னார். “தம்பி க்ளக் க்ளக்ன்னு சத்தம் கேட்டுது. அம்புட்டு பசி அதுக்கு. நமக்கு தெரிஞ்ச பசிதானே அதுக்கும் தெரியுது அந்த பசி சத்தத்துக்கு கண்ல தண்ணி வந்து போட்டுது பாத்துக்குங்க. சாப்டுட்டு போ மக்கான்னு சொல்லிட்டேன்”

இது தான் குல அறத்திலிருந்து அடுத்த கட்டமாக ஒரு பெரிய அறம் நோக்கி போகும் பயணம். மானுட அறம். உயிர்களைத் தழுவி விரியும் அறம் இது. இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் அய்யப்பண்ணன்தான். அந்த வருடம் மழை தவறிவிட்டது. அவர் சொன்னார் “எப்படி மழை பெய்யும்? மழையை நாம விக்க தானே செய்யுறோம்?” நான் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

அவர் விளக்கினார். உணவுக்காக வாழ்வுக்காக விவசாயம் பண்ணும்போது மழைக்கு நாம் நியாயம் செய்கிறோம். ஆனால் அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வணிகப்பொருளாக மாற்றி ரப்பராகவோ இன்னொன்றாகவோ ஆக்கி விற்கும்போது மழையை விற்கிறோம். மழையை விற்றால் மனிதனுக்கும் மழைக்குமான ஒர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. எதன் பொருட்டு மண்ணில் விழவேண்டுமோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறாய் நீ. விற்க ஆரம்பிக்கிறாய். அதனால் அது பெய்யாது. பெய்யவில்லை என்றால் நீ போய் தெய்வத்திடம் கேட்கக்கூடாது. இது ஒரு அறம். இப்படிப்பட்ட அறங்களால் தான் வாழ்க்கை உருவாகிவந்திருக்கிறது.

இதிலிருந்து தான் பெரிய அறங்கள் உருவாகி வந்திருக்கின்றன. சமூக அறம், தவறுகள் சரிகள் சார்ந்த அறங்கள், உருவாகி வந்துள்ளன. ஆனால் திருப்பி திருப்பி நமக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பேரறத்தான் ஒருவன் தருமத்தின் குரலில் பேசும்போது நம் அன்றாட தர்க்க புத்திக்கு அது அபத்தமாக இருக்கிறது ஆனால் அது சரியாகவும் இருக்கும்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தியாவின் மதக்கலவரங்கள் நடந்த காலத்தில் ஒருவன் வந்து காந்தியிடம் சொல்கிறான். ‘ “என் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள். நான் ஐந்து இஸ்லாமியர்களைக் கொலை செய்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் கொல்வேன். நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று. அப்போது காந்தி சொல்கிறார் “இன்னும் நூறு இஸ்லாமியர்களைக் கொன்றாலும் உன் தீ அடங்காது. ஒரு இஸ்லாமியக் குழந்தையை எடுத்து நீ வளர். உன் குழந்தையாக அதை நினை. அப்போது தான் உன்னுடைய தீ அடங்கும்”.

நடைமுறையில் அபத்தமான ஒரு பதில் அது. ஆனால் அதைவிட சரியான பதில் இருக்கமுடியாது. அவ்வளவுதான் அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் இக்காட்சி வருகிறது. உண்மையிலேயே அவர் அப்படிச் செய்து பிற்காலத்தில் புகழ்பெற்ற சமூக சேவகராகவும் ஞானியாகவும் அறியப்பட்டார் என்று ஒரு செய்தி உண்டு..

எப்போதும் அறத்தின் குரல் கிளம்பி வரும்போது அது சமகால பிழைப்புவாத சிந்தனைக்கும் நாம் யோசித்திருக்கும் நூற்றுக்கணக்கான அன்றாட விஷயங்களுக்கும் முரண்பாடாக தெரியும். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக வீட்டு வாசலுக்குப் பதிலாக கூரையில் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டதாக தோன்றும். ஏனெனில் அது மிகவும் தொன்மையானது. மிகவும் பழைமையானது. எப்போதாவது நம் புனைகதைகளில் அந்தத் தருணம் வரும்போதுதான் நமக்கு ஒரு மெய்சிலிர்ப்பு வருகிறது.

நாஞ்சில் நாடனின் ஒரு பிரபலமான கதை உண்டு. இவர் கோவையில் ஒரு பஸ்ஸில் ஏறுகிறார். அந்த பஸ் மானந்தவாடிக்கு போகிறது. அந்த பஸ் ஏறும் காட்சியே அவர் பிரமாதமாக சொல்கிறார். பஸ்ஸில் நூறு பேர்தான் போக முடியுமெனில் முந்நூறு பேர் காத்திருக்கிறார்கள். பஸ் வந்தவுடன் நானூறு பேர் ஏறிவிட்டார்கள். எப்படி ஏறினார்கள் என்று தெரியாது. முழுவதும் ஆட்கள்.

டிரைவர் வந்து உட்காரும்போதே அந்தக் கூட்டத்தை பார்த்து கடுப்பாகிவிடுகிறான். வண்டியே ஒரு பக்கம் சரிந்திருக்கிறது. அவனே ஒரு பக்கம்சரிந்து உக்கார்ந்துதான் ஓட்டுகிறான். பிறகு கெட்ட வார்த்தையாக திட்டிக் கொண்டே இருக்கிறான். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.. எரிச்சலின் உச்சத்தில் அந்த வண்டி போய்க்கொண்டிருக்கிறது. மானந்தவாடியை தாண்டும்போது ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையை மிக மெதுவாக கடந்து போகிறது. எதையாவது சாப்பிட்டிருக்குமோ அல்லது கர்ப்பிணியோ தெரியவில்லை என்கிறார் ஆசிரியர். மிக மெதுவாக கடந்து போகிறது அது. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு தலையை வெளியே நீட்டி மலையாளத்தில் ‘ஒந்நு போ மோளே வேகம்’ என்கிறான். மகளே கொஞ்சம் வேகமாப்போ என்று.

இந்த இடத்தில் அவன் ஒரு டிரைவராக அல்லாமல் ஒரு ஆதிவாசியாக மாறி பல்லாயிரம் வருட பழமையான ஒரு பண்பாட்டுக்குள்ள போய்விடுகிறான். இந்த மாற்றத்தை இந்த தொன்மையை மாறாத ஒன்றை சுட்டிக் காட்டும்போது தான் இலக்கியப்படைப்புகள் அமரத்துவம் கொள்கின்றன.

நான் சில ஆண்டுகளுக்கு முன் நமீபியா போயிருந்தேன். என்னை டேவிட் கெம்பித்தா- என்கிற கருப்பினத்தை சேர்ந்த வழிகாட்டி இளைஞன் அழைத்துச் சென்றான். ஓர் இடத்தில் மணல்மேல் ஒரு டிசைனை பார்த்தேன். ”இது என்ன?” என்று கேட்டேன். ”இது வைட் லேடி, காட்டுகிறேன்” என்று மணலில் தோண்ட ஆரம்பித்தான். அங்கு எச்சிலால் ஆன ஒரு குழாய் போல மணலுக்குள் இறங்கிச் சென்று அங்கு ஒரு சிறிய குடுவை மாதிரி சென்று முடிந்தது. அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு சிலந்தியை எடுத்து எனக்கு காட்டினான். ”இதன் பேர்தான் வைட் லேடி. இவள் இரவில் தான் வேட்டையாடுவாள்.பகலில் உள்ள உக்காந்திருப்பாள். அழகானவள். அதனால தான் இவளுக்கு வைட் லேடி என்று பெயர்” என்று விளக்கம் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் கிளம்பினோம். அவன் அதே ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அதைப்போட்டு மண்ணை மூடினான். ”ஏன்?” என்று கேட்டேன். “இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது. இறந்துவிடுவாள். உள்ளே போட்டால் குளிராக இருக்கும். அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும்” என்று சொன்னான். நான் சொன்னேன் ”நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே? இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன?”

அவன் சொன்னான். ”அதை நான் சாப்பிட முடியும் என்றால் ஒன்றுமில்லை. வெறுமே கொன்று போட்டுவிட்டு போவதை ஒரு ஆப்பிரிக்க பழங்குடி செய்யக்கூடாது”. அதைக் கொன்று போட்டுவிட்டு போவதற்கு வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் போன்ற நாகரீக மனிதர்களால் தான் முடியும். அவர்களால் முடியாது. அவர்களுடையது பல்லாயிரம் வருடத் தொன்மைகொண்ட வேட்டைப்பண்பாடு.

நெடுங்காலமாக ஒரு பண்பாட்டிலிருந்து நாம் விலகி விலகி வந்துவிட்டோம். மீண்டும் குல அறத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் அறம் என்பதின் அடிப்படை. இங்கிருந்துதான் அறம் தொடர்பான எல்லா வார்த்தைகளும் வந்திருக்கிறது இங்கிருந்து தான் எல்லாமே தொடங்குகிறது. அறம் வலியுறுத்தல் என்ற பெயரில் வள்ளுவர் எழுதிய எல்லா பாடல்களையும் இன்றைய நவீன மாணவனுக்கு சொல்லி புரியவைப்பது கடினம் ஆனால் ஒரு பழங்குடியிடம் சொல்லிபுரியவைப்பது சுலபம்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

மிக சாதாரணமாக பொருள் அளிக்கும் ஒரு குறள் அது. ஆனால் விசும்பு என்பது வானம் அல்ல. பெருவெளி. ஸ்பேஸ். அது கனிந்துவிழுந்தால்தான் பசும்புல். உணவின் முதல் வடிவம் உருவாகிறது. புல் என்பது ஜடப்பொருள் உனவாகும் முதற்பரிணாமம். அன்னத்தின் கண்கண்ட வடிவம். ஆகவே தான் புல் வணக்கத்துக்குரியதாக வேதத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில் நெல்லும் ஒரு வகையான புல்தான். இந்த பூமியை முழுக்கத் தழுவியிருக்கும் ஒன்று புல். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோசமான இடத்திலிருந்தும் புல் வந்துவிடும். புல்லில் இருந்து தான் அனைத்தும் ஆரம்பிக்கிறது. ஒன்று புல்லை சாப்பிடுவோம். அல்லது புல்லை சாப்பிடுவதைச் சாப்பிடுவோம். அது முளைக்க விசும்பிலிருந்து ஓர் ஆணை வரவேண்டும். அய்யப்பண்னன் சொன்னது அதுதானே?

அறம் என்கிற வார்த்தையை தமிழில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் அது மாறிக்கொண்டு வருவதைப்பார்க்கலாம். சங்க காலத்து அறம் என்பது பொதுவாக ஒரு குடியோ ஒரு குடும்பமோ மரபுக்கடமையாகக் கொள்ளும் ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது. இல்லறம், துறவறம் என அறங்கள் இரண்டு. அதன் பிறகு பௌத்தம் வந்தது, சமணம் வந்தது. அவர்கள் அறம் என்பதை பிரபஞ்ச அறமாக மாற்றினார்கள். இங்கிருக்கும் ஒரு பசும்புல்லில் இருந்து விசும்பை திறந்து காட்டினார்கள். அதன் பின் அறம் என்பது மிகப்பெரிய வார்த்தை. அது பிரபஞ்ச நெறி.

பரிமேலழகர் உரை
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா உரை
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி

குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]
(For English meaning, scroll to the bottom of this post)

பொருள்
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]; வெறுப்பு; அவாவின்மை.

இலான் - இல்லாதவன்

அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி.

சேர்ந்தார்க்கு - அடைந்தார்; அடைக்கலமடைந்தவர்; நண்பர்; உறவினர்.

யாண்டும் - எப்பொழுதும் , எவ்விடத்தும்

இடும்பை  - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

இல - இல்லை 


முழுப்பொருள்
இது வேண்டும் இது வேண்டாம் என்ற விருப்பு வெறுப்புகள் இல்லாதவன் இறைவன். எல்லா ஜீவராசிகளும் எல்லா மனிதர்களும் சமம் என்று நினைப்பவன் இறைவன். அவனுடைய பாதங்களை உளமார சரணடைந்தவர்களுக்கு எப்பொழுதும் துன்பமே இல்லை.

எப்பேர்ப்பட்ட துன்பம் வந்தாலும் இறைவன் என்னை காப்பாற்றுவார் என்று நினைப்போர் துன்பம் வந்தாலும் தேவையில்லாத கவலையில் உழலமாட்டார்கள். அவர்களுடைய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.  தானாக துன்பத்தில் இருந்து வெளிவருவர். அதேப்போல் வெற்றிகள் வரும் பொழுதும் அதனை இறைவனுக்கு சமர்ப்பித்து அதனை கடந்து செல்வர்.

இறைவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை என்று திருவள்ளுவர் ஏன் சொல்லுகிறார்? ஏனெனில் தீமையே செய்தாலும் அவரை மன்னிக்கும் குணம் கொண்டவர் திருவள்ளுவர். இரண்யன், இராவணன், கம்சன், சூரபத்பமன்,  போன்ற அசுரர்களுக்கும் வரம் கொடுத்தது இறைவனே ஆகும். ஆதலால் மனதார வழிபட்டு இறைவனிடம் சரணடைந்தால் அவர்களின் துன்பங்களை துடைப்பார்  இறைவன். 

என்பதையும் நினைவில்க்கொள்க
 
 
மேலும்
குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை “நோயை எதிர்கொள்ளல்” என்ற பெயரில் யதி:தத்துவத்தில் கனிதல் என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் கீழ்க்காணும் ஒரு பத்தி வருகிறது.

நான் பக்கவாதத்தை அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு என்றும் அது ஒரு நன்மை என்றும் கருதி அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.  தற்போது நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்.  அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்று கருதுகிறேன்.  கடவுள் நோயைக் கொடுத்து மனிதர்களை தண்டிக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.  ஆனால் அது இந்தியக் கருத்தாக்கம் கிடையாது.  நாராயண குரு துன்பத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் உண்மையான கடவுளாக (ariya) வந்து உங்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் (sayujya) கொள்கிறார் என்று சொல்கிறார்.  நீங்கள் கடவுளுடன் ஒன்றிணைந்துவிட்டபோது மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் உங்களுக்குக் கிடைக்கிறது.  ஒரே சமயத்தில் கடவுளுடனும் இவ்வுலகத்துடனும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
 
மேற்சொன்ன பத்தியில் இருக்கும் வரிகளை கருத்திக்கொண்டு, நாம் நம்மை கடவுள் என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டால் நமக்கு மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் நமக்கு கிடைக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை” (அப்பர். திருவாவடுதுறை 9)

“கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்” (திருவாய்மொழி 1.6:5)

“வேண்டுதல் வேண்டாமை இல்லாத வீரன்” (திருக்கலம் 58)

“ஆழ்த்துதி ஆர்வமும் செற்றமும் நீக்கிய அச்சுதனே” (திருநூற் 20)

“எங்கும் ஏத்திநின்றின்புறும் அடியரை
இடும்பைவந் தடையாதே” (சம்பந்தர் கடிக்குளம் 3)

ஒரு கவிதை
இயற்கையின் ஆதி இயல்பில்
இது என்பதும்
அது என்பதும்
கிடையாது.
அந்த
மகா வலயக் கண்ணாடிக்கு
விருப்பும் வெறுப்பும் கிடையாது
- ஸ்யுங் ஸான்


“இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.”


நாகபாப்பாக்கள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் (நீர்க்கூடல்நகர் – 5 இல் இருந்து. சுட்டியை தட்டவும்)
ஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள்.  ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.

நாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம்  சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.

நாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைப்பார்கள்.  கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.

நாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.

இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.

இன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை  அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.

நாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.

குளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.

நாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.

அவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.

என்ன அடைந்தோம்? அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்.

“ஆம், வடக்குமுகம் கொள்ளவேண்டியிருக்கிறது” என்றார் இளைய யாதவர்.

அகம் அதிர்ந்து பீஷ்மர் திரும்பி நோக்கினார். இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. பீஷ்மர் புன்னகைத்தார். “ஸ்வேதவீரரே, மடியிலேறி விளையாட வரும் மைந்தர்களுக்கும் உங்களை கொல்லவருபவர்களுக்கும் வேறுபாடில்லை என்னும் உளநிலை போரில் உங்களிடம் அமையட்டும்” என்றார். பீஷ்மர் மேலும் புன்னகைத்த பின்னர் திரும்பி இருளில் நடந்து அகன்றார்.

விதுரர் “ஆம், நான் துறக்க விரும்புவது இதைத்தான்” என்றார். இளைய யாதவர் “வெறுத்தலும் விரும்புதலும் இல்லாதவன் எங்கிருந்தாலும் துறவியே. அகம் அசையா நிலையே யோகம். உலகியலையும் யோகத்தையும் வெவ்வேறெனக் கருதுபவர்கள் அறியாதவர்களே. உலகியலில் யோகத்திலமைபவன் இரண்டின் பயனையும் அடைகிறான். செயல்களில் ஒட்டாதவன் செயல்களின் பயனால் சிறப்புறுகிறான். மெய்யறிந்தவன் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தவன்” என்றார்.


கீழ்க்காணும் வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சன் தனது கட்டுரையில் கூறியது. அவ்வரிகளை படிக்கும் பொழுது இக்குறள் நினைவிற்கு வந்தது. ஆதலால் அதை அங்கிருந்து கத்தறித்து இங்கே ஒட்டி இருக்கிறேன் :)

சூஃபியாக மிகு புகழ் - நியாயமான புகழ் - கொண்ட பெண்மணி ராபியா பற்றிய அறிமுகமான பகுதி. மிக அழகியது. அவர் எழுதுகிறார்.

‘இறைவா.. நரகத்துக்குப் பயந்து உன்னை நான் வணங்கினால் என்னை நரகில் எரித்துவிடு. சொர்க்கத்தின் நம்பிக்கையில் உன்னை நான் வணங்கினால் எனக்கு சொர்க்கம் தராமல் விட்டுவிடு. உனக்காகவே உன்னை நான் வணங்கினால் உனது அழகை எனக்கு மறைக்காதே...’

பரிமேலழகர் உரை
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).

மணக்குடவர் உரை
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

மு.வரதராசனார் உரை
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
God doesn't have likes and dislikes, desires and hatred among people. Those who surrender to God will not have any form of unhappiness or sufferings in life.

We can see this in a different light. The God'ly state is not having likes and dislikes, desires and hatred among people and materialistic stuffs in life. One who is in such  state will not have any suffering because if one doesn't likes or desires then he will not suffer when desires are not met or not fulfilled. Similarly, one doesn't suffer when he doesn't dislike or doesn't hate anyone because hate or dislike itself is a suffering in the heart as it creates lot of negative emotion inside the mind and heart thereby consuming lot of mental energy.

So,One can lift oneself to a God like stature if one practices and doesn't have likes or dislikes and desires or hatred in general and for materialistic stuffs and dislikes or hatred among people/money etc. . 
Also, remember God can perform limitlessly and has no boundaries. So, if one elevates himself to the level of God, one can perform all that is possible in a human life.

But, one should not confuse with ambition or goals. Goals and Ambitions are necessary for doing a WORK. because as discussed before, one's mettle / fame is measured by their work."

Questions that I ask to the kid
Who is GOD?
How can you become a God?
What is the result of being surrendered to GOD?

சமர்ப்பணம்

தமிழ்க்கடல்  நெல்லை கண்ணன்

பேரன்பிற்குரிய நெல்லை கண்ணன் ஐயா அவர்களே,

வணக்கம்.   

என் பெயர் ராஜேஷ். சுமார் 2009-2010 ஆண்டு வாக்கிலும் 2013-இலும் நான் அலுவல் நிமித்தமாக தில்லியிலும் பெங்களூரிலும் வசித்தபோது விஜய் டிவியில் நீங்கள் பங்கேற்று நடத்திய "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியை தொடர்ந்து ஆர்வமுடன் கண்டுகளித்தேன். அந்த நிகழ்ச்சியையும் உங்களது youtube காணொளிகளையும் கண்டுப் பயனுற்ற பல பேர்களில் நானும் ஒருவன். அது என்னுள் வாசிப்பு தாகத்தை விதைத்து தேடலின் சுகத்தையும் காண்பித்தது. 

அதன் பிறகு பல புத்தகங்களை தொடர்ந்து வாசித்து என் அறிவையும் என்னையும் செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறேன். இன்றைய நாட்களில் ஒரு அரைமணிநேரம் புத்தகம் வாசிக்காமல் உறங்குவதில்லை. 

2013 ஆண்டு நான் நாளும் ஒரு திருக்குறள் என்ற ஒரு project ஐ துடங்கினேன். ஒவ்வொரு குறளையும் எடுத்து அதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பல பொருள்களை அகராதியில் ஆராய்ந்து ஒவ்வொரு குறளின் மெய்யான குரலை உணர முற்பட்டு வருகிறேன். நான் உணர்ந்த பொருளை ஒரு பத்து வரிகளில் எழுதி https://dailyprojectthirukkural.blogspot.com/ என்னும் வலைப்பதிவில் பதிவு செய்துக்கொள்கிறேன். அதன் வழியாக என்னையும் சுயபரிசோதனை செய்துகொண்டு வளர்த்துக்கொண்டு வருகிறேன்.  

இதுவரையில் அவ்வண்ணம் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஐந்து குறள்களுக்கு எழுதி முடித்துள்ளேன். இந்த பயணத்தில் பாதி கடந்துள்ளேன்.இதுவரை நான் செய்த செயலை உங்களை வணங்கி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

புதிதாய் பிறந்த என் மகள் உமையாளையும் எங்கள் குடும்பத்தையும் வாழ்த்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்தியா வந்து திருநெல்வேலி வருகையில் உங்களை வந்து சந்திக்கிறேன். 

பி.கு : உங்கள் அஞ்சல் முகவரியும் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் தெரியவில்லை. அதனால் இந்த ஊடகம் வாயிலாக இதனை தெரிவிக்கிறேன். இது உங்களுக்கு வந்து சேரும் என்று நம்புகிறேன் 

வணக்கத்துடன்,
ராஜேஷ்  
பாண்டிச்சேரி   (இப்பொழுது கனடாவில் )


ராஜேஷ்